மூன்றாம் திருமுறை
இரண்டாம் தொகுதி
3.
நெஞ்சறிவுறுத்தல்
காப்பு
குறள் வெண்பா
திருச்சிற்றம்பலம்
1963.
சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
பேர்சான்ற இன்பம் பெரிது.
1
உரை:
புகழமைந்த கண் மூன்றுடைய சிவபிரான் ஈன்ற யானையைச் சிந்திப்போமாயின் பொருளாய் விளங்கும் இன்பம் பெரிதாம். எ. று.
சிவன் ஈன்ற களிறு, சிவக்களிறாயிற்று. சிவனுக்குப் போல இக் களிற்றுக்கும் முக்கண் உண்மைபற்றிச் “சீர் சான்ற முக்கண்ணை” விதந்து கூறுகின்றார். சேர்தல்-சிந்தித்தல்; “மாணடி சேர்ந்தார்” என்புழிப் போல. 'பேர்' என்றது பொருளை. சிவக்களிற்றைச் சிந்திக்க வரும் இன்பம் ஏனையின்பம் போலாது நிலைபேறுடைய தென்பதுபற்றிப் “பேர்சான்ற இன்பம்” என்று உரைக்கின்றார். இன்பம், பெரிதாம் என இயையும்.
(1)
|