பக்கம் எண் :

மூன்றாம் திருமுறை

இரண்டாம் தொகுதி

1965.

    பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல் 

    எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான

1

    இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை

    எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்

2

    செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற

    இவ்வொசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்

3

உரை :

        பொன்னாலாகிய பொன் மலைபோல் பொலிவுகொண்டு அசைவின்றி எக்காலத்தும், என் நெஞ்சே, நீ வாழ்வாயாக; பிறந்ததனால் பிற்பட்ட இப்பிறப்போடு, இனி எடுக்கக்கடவ எழுபிறப்பிலும் அன்றியும், ஏனை எப்பிறப்பிலும் என்னைவிட்டு நீங்காது உடன்வருகின்ற என் நெஞ்சமே! கோடாத நிலையில் ஒருசார்ச் செவ்வையாக இருந்து சிறியனாகிய யான் சொல்லுகின்ற இவ்வொரு சொல்லைக் கேட்பாயாக. எ.று.

 

     பதி வாழ்வு பெற்று அதன்கண் இருந்து வாழ விழைந்த வள்ளற் பெருமான், பதிப்பொருள் நலத்தைத் தமது நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றாராதலின், தொடக்கத்தில் நெஞ்சினைத் தம் பக்கல் ஒருமுகப்படுத்துகின்றார். பொறிவழிச் சென்று அலையும் இயல்பிற்றாகிய நெஞ்சு மலை போல் அசைவற்றிருந்து கேட்டல் வேண்டும் என்றற்குப் “பொன்னார் மலைபோல் அசையாமல்” என உரைக்கின்றார். அசைவின்மையினும், பொன்போலும் தோன்றம் நெஞ்சினைக் கவர்தலின், “பொன்னார் மலை போல் பொலிவுற்று” என்றும் இருந்து கேட்டற் பொருட்டாதலின் “அசையாமல்” என்றும் இயம்புகின்றார். அலைவுறும் நெஞ்சு அமைதியுடன் இருந்தது கண்டது வள்ளலார், உவகைமிக்கு “என் நெஞ்சே நீ எந்நாளும் வாழியர்” என வாழ்த்துகின்றார். வாழ்த்துதற்கு உரிமை தோன்ற “என் நெஞ்சே” என்கின்றார். ஒரு நாளும் அசைவற்றிருந்த தின்மையால், இன்றுபோல் “எந்நாளும் வாழியர்” என இசைக்கின்றார். எடுத்தபின் பேசுவதால் இப்பிறப்பை, “பின்னான இப்பிறப்பின்” எனல் வேண்டிற்று. வரையறுக்கப்பட்ட பிறப்பு ஏழாயினும், இடையிடையே வினைக்கேற்ப வேறுவேறு பிறப்பு எய்துதலால், “எழுப்பிறப்புமின்றி எனை எப்பிறப்பும்” என்றும், பிறப்புத்தோறும் நெஞ்சம் உடன் தோன்றுதலால் “எனை விட்டகலா என்னெஞ்சே” என்றும் இயம்புகின்றார். செப்பம் - நேர்மை; ஒருபாலும் கோடாமை. ஒருசார்ச் செவ்வே நின்று எனற்பாலது, செவ்வை நிலையைப் பிரித்துச் சிறப்பிக்கும் ஏகாரம் தொக்குச் “செவ்வொருசார் நின்று” என வந்தது. நின்று கேட்டற் பொருட்டுக் “கேட்டிடுக” என உரைக்கின்றார்.

(1-3)

பொருட்டன்மை


    உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும் 

    இலகும் சிவமாய் இறையாய் - விலகும்

4

    உருவாய் உருவில் உருவாய் உருவுள்

    அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்

5

    நி¢த்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்

    சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்

6

    ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்

    நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்

7

    வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர

    நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்

8

    செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்

    அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு

9

    காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்

    சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்

10

உரை :

        எவ்வெவ் வகையான உலகிலுள்ள உயிர்களெல்லாம் வணங்கும் ஒரு முழுமுதற்பொருளாய், உலகின்கண் எவ்விடத்தும் விளங்கும் இறைவனாய், சிவமாய், விலகும் உருவாய், உருவப் பொருட்கு உருவளிக்கும் உருவாய், உருவுக்குள் அருவாய், அருவத்துள் இயங்கும் அருவாய், அருவுருவாய், நித்தப்பொருளாய், குணமில்லதாய், சலித்தல் இல்லதாய், மலமில்லதாய், உள்ளதாய், உள்ளதன் உண்மையாய், முத்தியருள்வதாகிய ஒன்றாய், பலவாய், முத்திபெறும் உயிராய், உயிர்க்குயிராவதாய், நல்லதாய், புதுமையதாய், நடுநிற்பதாய், நிலைத்துயரும் வேதமாய், வேத முடிவாய், வேத காரணமாய், விளங்குகின்ற மேலான நாத தத்துவமாய், நாதமுடிவின் நாயகப் பொருளாய், நூல்களால் ஓதப்படும் செறிபொருளாய், உரமதாய், ஞானாகாயமாய், ஞானிகள் சொல்லும் அறிவாய், அறிவுக்குள் இருந்து அதனை இயக்குவதாகிய அறிவுக்கறிவாய், நெறிபிறழாது இயலும் காலமாய், காலவியல்பு கடந்த கருத்துப் பொருளாய், நல்லொழுக்கமாய், அறிவின் மேனிலையதாய், அறிவின் வடிவாய் விளங்குவது பரசிவம், என்க.


     “உலகு” என்றது ஈண்டு அண்டத்தின் மேற்று. அவை நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்து வேறுவேறுஇயல்பினவாக உண்மைபற்றி “எவ்வெவ்வுலகும்” என்று இசைக்கின்றார். உலகுகளில் நல்லுயிர்கள் இருந்து பரம்பொருளுண்மை யோர்ந்து வழிபடும் என்ற கருத்தால் “எவ்வெவ்வுலகும் பரவும் ஒருமுதல்” என்று கூறுகின்றார். உலகுகள் வெவ்வேறாய்ப் பலவாயினும் அவற்றிற்கு முதல்வன் ஒருவனே என்பார் “ஒரு முதலாய்” என உரைக்கின்றார். எங்கும் இலகுவது இறையெனவும், இலகி இன்பம் புணர்ப்பது சிவம் எனவும் கொள்க. எங்கும் எல்லாவற்றினும் தோய்ந்திறுத்தற்கு உருவம் ஒரு குறுக்கீடாதலால், “விலகும் உருவாய்” என ஓதுகின்றார். உருவில் பலவேறு உருவும், அவ்வுருவுக்குள்


        அருவமும் அமைவது அறிவுநூற் கூற்றாதலால் “உருவுள் அருவாய்” எனவும், அருவமும் உருவமும் கலந்தது அருவுருவாதல் பற்றி “உருவருவாய்” எனவும் உரைக்கின்றார். உருவில் அருவம் உணரப்படும் முறைமை பற்றி உருவருவாய் எனல் வேண்டிற்று. ஓதும் முறையில் அருவத்தை முற்படவைத்து அருவுருவாய் என்றலும் உண்டு. நிலைப்பொருளின் நிலைத்த தன்மையைக் காலத்தின்மேல் வைத்து “நித்தியம்” என்பர்; இருத்தலைக் குறித்துச் “சத்தியம்” என்றும், இருக்கும் இயல்கருதிச் “சத்துவம்” என்றும், இருப்பின் தன்மை பற்றித் “தத்துவம்” என்றும் நூலோர் வழங்குவர். பொருளிடமாக நிலவுவது குணம்; பரம்பொருள் அத்தகைய குணமுடைய தன்றென்றற்கு “நிர்க்குணமாய்” எனவும், சலித்தல் இல்லாதது என்றற்கு “நிற்சலமாய்” என்றும், இயற்கை செயற்கையாகிய எவ்வகையாலும் அழுக்குறாத தூய்மையுடையது முதற்பொருள் என்றற்கு “நின்மலமாய்” எனவும் உரைத்தருள்கின்றார். உலகுகளைப் படைத்து உயிர்களை வாழச்செய்வதற்கு அவை முத்திபெறல் வேண்டுமென்ற ஒரு குறிக்கோளே இறைவன்பால் உண்மையின், அதுவிளங்க “முத்தியருள் ஒன்றாய்” என மொழிகின்றார். முத்திப்பேற்றுக்குரிய அறிவும் முயற்சியும் உயிர்கட்குண்டாதல் வேண்டியே பரம்பொருள்” பலவாய் உயிராய் உயிர்க்குயிராய் உளதென்று உரைக்கின்றார். நன்மைக்கும் புதுமைக்கும் எல்லையாதலின், சிவத்தை “நன்றாய் நவமாய்” எனப் புகழ்கின்றார். நீதியே இறைவன் வடிவு என்பர்; அதனால் “நடுநிலையாய்” என இசைக்கின்றார். வேதங்கள் தோன்றிப் பல்லாயிரமாண்டு கழியினும், முதல்வனைப் பொருளாகக் கொண்டிருத்தல்பற்றி “நின்றோங்கும் வேதம்” எனக் கூறுகின்றார். வேதாந்தம் - உபநிடதம். சுத்தமாயைக்குள் நிற்கும் நாதம் கடந்து மாயாதீதப் பரவெளியில் உள்ள நாதம் என்றற்கு “விளங்கு பரநாதம்” என விளம்புகிறார். அணுக்கூட்டமாகிய பொருள் கனப்பொருளாதற்குச் செறிவு வேண்டப்படுதலின் “செறிவாய்” என்றும்; அது உரமுண்டாதற் கேதுவாதல் கண்டு, “திரமாய்” என்றும் உரைக்கின்றார். சிதாகாசம் - ஞானாகாயம். முறைபிறழ்வின்றி இயல்வதால் “நெறி மேவு காலமாய்” என்றும், காலத்தை இயக்கும் முதல்வன் காலாதீதன் என்றற்குக் “காலம் கடந்த கருத்தாய்” என்றும் காட்டுகின்றார். சிற்பரம் - மேலாய அறிவு. அறிவுடையோர் அறிவெல்லை கடந்ததாகலின் சிவத்தைச் “சிற்பரம்” எனவும், சிவமும் ஞானமயமென்பது விளங்கச் “சின்மயம்” எனவும் இசைக்கின்றார்.

(4-10)

    பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப் 

    பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத

11

    போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள் 

    நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா

12

    ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற 

    சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்

13

    ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய் 

    ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான

14

    சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்  

    சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்

15

    அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா 

    கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்

16

    அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய் 

    எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்

17

    நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள் 

    அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்

18

    பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின் 

    தரமாய்ப் பரப்பிரமம் தானாய் - வரமாய

19

    ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய் 

    அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்

20

உரை :

        நிலவுலகிற் பொருந்திய பொருள்களில் ஒன்றினும் பொருந்தாததாய், அதே நிலையில் உலகிற் பொருந்திய உண்மைப் பொருளாய், பெரிய தாரகமாய் நினைந்து பெறக்கடவ பேறாய், குற்றமான நெறியில் போக்கும் வரவும் இல்லாத பூரணப்பொருளாய், சிவபுண்ணியச் செல்வர்கள் ஞானக்கண்ணில் நோக்கும் வகையில் தோன்றிய நுண்ணுணர் வாய், பொருளைவிட்டு நீங்குதலில்லாத ஆதியாய், ஆதி அந்தம் நடுவாய் அகன்ற பேரொளியாய், ஆராய வேண்டாத சொற்பொருட் பயனாய், நீதியாய், இருள்செய்யும் ஆங்காரமாகிய குற்றத்தைப் போக்கவல்ல பிரணவத்துட்பட்ட அகரவுகரமாய், அகரவுகர மகரம் கலந்த ஓங்காரமாய், அவற்றின் உள்ளீடாகிய பொருளாய், அப் பொருளைக் காண நிற்கும் பாங்கில் அமைந்த சித்தமாய், அதன் சிந்தனை முடிவில் விளங்கும் ஒளியாய், அது பரந்து தோன்றும் திசையும் விண்ணுமாய், அவ்விண்ணில் ஒடுங்கும் சத்தமாய், தூய்மையுடன் எப்போதும் அமைந்த நிலையாய், மூல ஞானமாய், அண்டமாய், அண்டங்களில் அடங்கியிருக்கும் அணுவாய், அருளால் அளவுபடாததாய், அளவுபடுவதாய், ஆனந்த வடிவமாய், அண்டத்துக்கு அப்பாலதாயும் இப்பாலதாயும், அண்மையிலிருப்பதாயும் சேய்மைக்கண் உள்ளதாயும், எப்பாலும் உறைவதாயும் இல்லாததாயும், வாயாலும் மனத்தாலும் உடம்பின் நிலையாலும், அந்நிலைக்குள் அறிகருவியாய் இயலும் கண் முதலிய ஐந்தாலும் காண்டற்கு அரியதாயும் உள்ள சிவபதமாய், குன்றாத மேற்பொருளாய், பகுக்கப்படாத முழுப்பொருளாய், பாலாய், பாலின் சுவை நலமாய், பரப்பிரமமாய், மேன்மையுடைய வடிவம் ஒன்பதாய், ஒளிமிக்க எண்குணமுடைய கடலாய், அன்பாய், அதுநிலவும் மனோநிலையமாய், அற்புதமாய் விளங்குவது பரசிவம், என்க.


     ஞாலத்தில் காணப்படும் பொருள் எவற்றுள்ளும் கண்டுணரப்படாமையால் பரம்பொருளை “ஞாலம் பொருந்தாப் பொருள்” என்றும், ஞாலப் பொருள்களின் தோற்றவொடுக்கம் கொண்டு அதன் உண்மை துணியப்படுதலால், “பொருந்தும் பொருளாய்” என்றும் புகல்கின்றார். பரம் பொருளின் உண்மையுணர்வு நல்வாழ்வுக்கு ஆதாரமாதலால் அதனைப் “பெருந் தாரகம்” எனவும், அதுவும் கற்றோர் சூழலில் சூழ்ந்து கைவரப் பெறப்படுவது பற்றி, “தாரகம் சூழ்ந்த பேறு” எனவும் பேசுகின்றார். “ஞானத்தை நண்ணுதலைக் கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு” ( சிவ. போ.


        அதி. 1 ) என்பர் பெரியோர். “உயிர்கள் போக்குவரவு புரிவது பூரணத்துவம் பெறற்கு; சிவபிரான் அது பெறற்குரிய சிறுமையுடைய னல்லனாதலால் “போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்” என்று கூறுகிறார். உயிர்கட்கு அருளுவது காரணமாக நிகழ்வது அவனது போக்கும் வரத்தும்; ஆதலால், “திருந்தாத போக்கும் வரத்தும் இலாப் பூரணமாய்” என்கின்றார். பொருள் அனைத்துக்கும் ஆதிநடு இறுதி என்ற மூன்றும் பண்புத் தற்கிழமையாதலால் “நீக்கமிலா ஆதியாய்” என அறிவிக்கின்றார். சொற் சோதனை பொருட்பயன் காண்டற் பொருட்டாதலால் “சோதியாச் சொற்பயன்” என இறைவனை இயம்புகின்றார். “நீதிபலவும் தன்னவுருவாமென மிகுத்த தவன்” ( ஞான. வைகா ) என்பதனால், “நீதியாய்” எனல் வேண்டிற்று. பிரணவத்தின் கூறுகளாகிய அகரவுகர மகரங்களில் அகரம் சிவத்தையும், உகரம் சிவையையும் சேர்ந்துவிடத்து, ஆங்கார முதலியன காட்டும் மகரம் கெடுமாதலின், “ஆங்கார நீக்கும் அகாரவுகாரமதாய்” என இயம்புகின்றார். “அகார வுகாரம் இரண்டு அறியில் அகார வுகாரம் இலிங்கம தாமே” ( 1753 ) எனத் திருமூலர் கூறுவது உணர்க. இறைவன் ஓங்கார மாதலை. “ஊனிலகத் துயிர்ப்பாய் உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றானை” ( வலிவலம் ) என்றும், “ஒரு சுடராய் உலகேழு மானான் கண்டாய் ஓங்காரத்துட் பொருளாய்நின்றான் கண்டாய்” ( பழபாடி ) என்றும் நாவுக்கரசர் உரைப்பதால், வள்ளற்பெருமான் “ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய்” என்று இசைக்கின்றார். சிவக்காட்சி பெற்று இன்புறுதற்கேற்ற கருவி சித்தமாதலால் “பாங்கான சித்தமாய்” எனவுரைக்கின்றார். “சித்தத்துள் தித்திக்கும் தேனே” எனப் பெரியோர் கூறுதல் காண்க. சித்தம் இடமாக நிகழ்த்தும் சிந்தனையின் முடிவில் விளங்கும் ஞானவொளியை, “சித்தாந்த தேசாய்” எனச் செப்புகின்றார். திகம்பரமாய் என்பதைத் திக்குமாய் அம்பரமுமாய் எனப்பிரித்து இயைக்க. விண்ணின் குணம் சத்தம் என்பவாகலின், திகம்பரம் கண்ட வள்ளற் பெருமான் சத்த குணத்தை உரைக்கின்றார். எப்பாரும் எப்பதமும் காலப்போக்கில் மாசுற்று நிலைமாற, சிவபதம் மாத்திரம் எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் விளங்கச் “சுத்த சதா நிலையாய்” என்று சொல்லுகின்றார். வித்தம் - வித்தையடியாகத் தோன்றி ஞானப்பொருள் தருவது. அண்டம் ஒவ்வொன்றும் எண்ணிறந்த அணுச்செறிவால் ஆயவையாதலால், அவற்றின் ஆக்கத்துக்கும் முதல்வன் காரணம் என உரைப்பவர் “அண்டமாய் அண்டத் தணுவாய்” என உரைக்கின்றார். அகண்டம் - கண்டம் கண்டமாய்ப் பகுக்கப்படாதது. ஆகாரம் - உருவம். செப்புதற்குக் கருவியாதலால் வாயைச் “செப்பு” என்று குறிக்கின்றார். உடல்நிலைக்குள் அஞ்சாவன மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. வாக்கு, கை, கால் முதலிய ஐந்துளவேனும் “காண்டல்” பொருளாக வருதலால் மெய்வாய் முதலிய அறிகருவியைந்துமே கொள்ளப்பட்டன. மன முதலிய கரணங்கட்கும் கண் முதலிய கருவிகட்கும் “காண்டற் கரும்பதமாய்” என்றமையின் “பரமாய்” என்றும், கருவி கரணங்களால் பகுத்தறிய வாராமை பற்றிப் “பகாப்பொருளாய்” என்றும் ஓதுகின்றார். பெரியவும் சிறியவு மாயவற்றில், சிறியதை நோக்கப் பெரியது பிரமமாம்; இவ்வாறு நிலவும் பிரமப்பொருள் பலவற்றுள்ளும் எல்லாம் தன்னுள் அடங்கத் தான் எவற்றினும் அடங்காத பெருமையுடைமையின், பரம்பொருளைப் “பரப்பிரமம் தானாய்” எனவுரைக்கின்றார். வரம் - மேன்மை; “வரன் என்னும் வைப்பு” ( குறள் ) என்றாற் போல. ஒன்பான் வடிவு - அருவம்


        நான்கு உருவம் நான்கு அருவுருவம் ஒன்று ஆக ஒன்பது. எண் குணம் - தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல். இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றுலுடைமை, வரம்பிலின்ப முடைமை என்பன. இக் குணங்களால் நிறைந்து வரம்பு காணமாட்டாது பெருகிப் பரந்திருத்தலால் “எண் குணக்கடல்” எனப் புகல்கின்றார். புறத்தேயன்றி அகத்தே நின்றும் அன்பர்க்குக் காட்சி தருவதால் “அகநிலையாய்” என்பாராயினர்.

( 11-20 )

    அகமாய் புறமாய் அகம்புறமாய் நீங்கும் 

    சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை

21

    இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும் 

    கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்

22

    நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய் 

    எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற

23

    வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர் 

    தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி

24

    ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்  

    மன்றிடத்தில் என்று வதிவதாய் - ஒன்றியதோர

25

    ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள் 

    எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்

26

    பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய் 

    நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி

27

    வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய் 

    நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்

28

    பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும் 

    அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய

29

    வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின் 

    ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி

30

உரை :

        இன்பமாயும், அகம், புறம் அகப்புறங்களாகவும் நீங்கும் இயல்பிற்றாகிய சகமாயை யாகவும் நீங்காத சகமாயையே யாகவும், சகமாயையன்று எனப்படுவதாயும் சகமாயையாய் என்றும் இருப்பதொன்றென்பதாயும், கொல்லாமைக் கொள்கையுடையார்க்கு இன்பம் தருவதாயும், எல்லாரும் சென்று அடையத்தக்கதாயும் அடையமுடியாத தாயும், நல்வினையாயும் நல்லதல்லாத வினையாயும். எண்ணப்படுவதாயும் எண்ணற்கு இயலாததாயும், எண்ணப்படுகின்ற வான், நிலம், காற்று, நெருப்பு, நீர் என்பனவாயும், அவற்றின் வழிநின்று வாழும் நானாயும், வானம் முதலிய ஒன்றிலும் ஒன்றாததாயும் ஒன்றுவதாயும், ஆனந்தமான ஞானசபையில் எப்போதும் இருப்பதாயும், உலகியற் பொருள்களிடத்தே காணப்படும் ஐவகை நிறமாயும், அந்நிறத்தில் ஒளிரும் ஒளியாயும், அவ்


     வொளியின்கண் எத்தகைய நிறமும் அமையாத இயனிறமுடையதாயும், மூவகை நிறவகையால் படைப்பதாயும், படைத்தவற்றைக் காப்பதாயும், காத்தவற்றைப் போக்குவதாயும், போவனவற்றைப் போகாமல் தேக்குவதாயும், நீங்காதவற்றை நீக்குவதாயும், யாவற்றையும் தன்னுள் நிறுத்துவதாயும், தோன்றுவதின்றிச் சிலவற்றை வாளா இருப்பிப்பதாயும், பொருள்களை எய்தும் இவ்வாதனைகள் தனக்கின்றி அதீதமாயும், நீளா நிலையினதாயும், நீண்ட நிலையினதாயும், மீளமீளப் பெரிதும் சிறிது மாவதாயும், ஆகாத அரியதாயும், அரியதாயும், அரியதில் அரியதாயும், துரியவெளியாயும், அதற்கு அதீதமான பரவெளியாயும், அவ்விடத்தே பரந்து விளங்கும் பரவிந்து ஒளியாயும், அங்கே நுகரப்படும் சிவானந்தமாயும் விளங்குவது பரசிவம் என்க.


        அகக்கூறும் புறக்கூறும் சேர்ந்தது அகம் புறம். இது அகப்புறமுமாய சகமாயை. உலகியல் வாழ்வுபயக்கும் மயக்கம். சகத்தில் வாழும் உயிர்க்கு எத்துணைத் துன்பம் எய்தினும் விடாது பற்றி சகத்தில் முற்ற வாழ வேண்டுமென்ற பற்றினை யுண்டுபண்ணுவது சகமாயை; உரனுடைய பெரியோர்முன் அது நில்லாது நீங்கும் இயல்பிற்றாதலால், “நீங்கும் சகமாயை தானாய்” என உரைக்கின்றார். சகம் - உலகம். நீங்கும் என்பது சகமாயைக்கும் கூட்டப்பட்டது. பிறந்தாரைச் சகத்தில் வாழ்விப்பது கடனாதல் பற்றிக் கலந்து நிற்கும் பரசிவத்தைச் சகமென்றும், சகமாயை என்றும் கூறுகின்றார். சகமாயும் சகமாயையாயும் கலந்து நிற்பினும், பரசிவத்தைச் சகமாயைகள் தீண்டா என்பதுபற்றிச் “சகமாயை இல்லாதாய்” எனவும், “என்றும் இருப்பதாய்” எனவும் இசைக்கின்றார். எத்தகைய கொடியவரும் ஒருகாலத்தே சிவத்தை அடைவர் என்பது கொண்டு “எல்லார்க்கும் நண்ணுவதாய்” என்றும், தீவினை செய்யும் உள்ளமும் உடம்பும் உடையோர் அடைவதில்லை யாதலால், “நண்ணா தாய்” என்றும் கூறுகிறார். செய்யப்படும் வினை முற்றுப்பெற்றுப் பயன் தரற் பொருட்டுச் சிவத்தின் உள்ளீடு உண்மையின், “நல்வினையாய் அல்வினையாய்” என இசைக்கின்றார். சிவத்தின் சிறப்பியல்பு பலவும் எண்ணற்கியலாப் பெருமையுடையதாகையால் “எண்ணின் இயலாதாய்” என உரைக்கின்றார். வான் முதலிய பூதங்களின் பரிணாமமே நான் எனச் சுட்டியறியப்படும் உடலொடு கூடிய உயிர்; அவ்வுயிர் அவற்றின் வழி நின்று வாழ்வுநடத்தற்குச் சிவம் இன்றியமையாமையால், சிவத்தை “வழிபடும் நான்தான் தானாய்” உளது என உரைக்கின்றார். வானம் முதலிய பூதங்களை இடமாகவுடையதன்று சிவம் எனற்கு “வானாதி ஒன்றிடத்தும் ஒன்றாதாய்” எனவும், வான் முதலிய யாவும் அவன் ஆணைவழி நிற்றல் பற்றி “ஒன்றுவதாய்” என்றும் ஓதுகின்றார். நிறம் ஐந்து; பொன்மை, வெண்மை, கருமை, செம்மை, பசுமை. இனி, ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம் சத்தியோசாதம் என்ற முகம் ஐந்தும் முறையே படிகம் பொன்மை, கருமை, செம்மை. வெண்மை நிற முடைமைபற்றி ஐந்துநிறம் கொள்வதுண்டு. பொன்மை முதலிய ஐந்தில் பசுமைநீக்கிப் புகைமை என ஒன்று கோடலும் மரபு. இந்நிறங்களினூடே ஒளியொன்றுற்று விளக்கம் செய்தலின், “அந்நிறத்தினாம் ஒளியாய்” என்றும், சார்ந்ததன் வண்ணமாதல் பளிங்கின் இயல்பாதலால் அதனை விதந்து “அவ்வொளிக்குள் எந்நிறமும் வேண்டா இயல்நிறமாய்” என்றும் இயம்புகின்றார். பூக்களெல்லாம் பெரும்பாலும் வெண்மையும்


        செம்மையும் பொன்மையு முடையவாதலால் “முந்நிறத்தில் பூப்பதுவாய்” என்று பகர்கின்றார். பூவெல்லாம் இரவிற் பூப்பன, பகலிற் பூப்பன என இருவகையே; அவற்றுள் இரவிற் பூப்பன வெண்ணிறமே யுடையவாம்; பகலிற் பூப்பன பன்னிறமுடையன. ‘முந்நிறத்திற் பூப்பதுவாய்’ என்றதற்கு ஆண் பெண் அலி என மூவகை யுருவிற் பிறப்பதுவாய் என உரைப்பதுமுண்டு. மாய்வனவற்றை மாயாது நெடிதிருக்க வைப்பதைத் “தேக்குவதாய்” என்றும், நிறைந்து நின்றவற்றை மாய்ச்செய்வதை “நீப்பதுவாய்” என்றும், உலகில் நில்லாது மாய்வனவற்றிற்கு நிலைத்த இடம் யாதாம் என்பார்க்கு விடை கூறுவார்போலத் “தன்னுள் நிறுத்துவதாய்” என்றும் உரைக்கின்றார். உயிர்வருக்கத்துள் சகலத்துக் கெய்தாது கேவலத்தே பிறப்பாதி யின்றிக் கிடப்பன வுண்டென்று வற்புறுத்தற்குப் “பூப்பதின்றி வாளாது இருப்பதுவாய்” என இசைக்கின்றார். இங்ஙனம் உயிர்களைப் பிறப்பிறப்பென்ற வாதனையிற் சுழல்விக்கிற முதல்வன், தான் அவற்றை அடையான் என்றற்காகவே “வாதனா தீதமதாய்” உளது என்று பாடுகின்றார். அப் பரம்பொருள் இருக்கும் நிலை, உயர் வானம் போல “நீளாது நீண்ட நிலை” எனப்படுகிறது. சிறியது பெருத்தலும் பெரியது சிறுத்தலும் போலச் சிவமும் பெருத்தல் சிறுத்தல் எய்தாதாயினும், இரண்டினும் கலந்து தனது இருப்பைப் புலப்படுத்தும் என்றற்கு “மீளாப் பெரிதாய்ச் சிறிதாய்” என்றும், பெரிதும் சிறிதுமாயவற்றொடு கலப்பினும் தனது அருமைப்பாடு குன்றுவதில்லை என்றற்கு “பெரிதும் சிறிதும் அரிதாய் அரிதில் அரிதாய்” உளது என்றும் உரைக்கின்றார். வைதிக ஞானக் கண் கொண்டு சிவத்தை உடலிடத்தே நாடினோர், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய நானிலையில் முறையே புருவநடுவிலும், கழுத்திலும் மார்பிலும் உந்தியிலும் சிந்தையை வைத்துக் காணலுற்றனர். துரியநிலையில் உந்திக்கண் நின்ற சிந்தை வெளியையே கண்டமையின், அதையே சிவமென்ற கருத்தால், “துரிய வெளியாய்” என்றும், அதற்கு அப்பாலும் ஓர் வெளியுண்டு போலும் என்ற உணர்வுவழிச் சென்று கண்ட சிவவெளியைத் துரியாதீத வெளியாய் என்னாமல், “பரவெளியாய்” என்றும் பகர்கின்றார். அப் பரவெளியில் சிந்தையைச் செலுத்தினோர் மாயா மண்டலத்துக்கு அப்பாலுள்ள ஒளிமயமான பரவிந்துவைக் கண்டு, அதனூடு ஊறிவரும் சிவானந்தச் செழுந்தேனை யுண்டு மகிழ்வது புலப்பட, “மேவு பரவிந்தின் ஒளியாய்ச் சிவானந்த வூற்றாய்” எனத் தெளிவிக்கின்றார்.

( 21 - 30 )

   கற்பமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்

    நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய

31

   முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்

    எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்

32

   நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்

    மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத

33

   சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்

    விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற

34

   யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ

    போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்

35

   கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல

    கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்

36

   காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்

    சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்

37

   செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்

    உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்

38

   அதுவாய் அவளாய் அவனாய் அவையும்

    கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்

39

உரை :

        தெளிந்த உலகுயிர்கள் அனைத்தும் தங்கும் முதலியமாய், காணப்படும் பொருளாய்க் கொள்ளத்தக்கதாய், கொள்ளவும் தள்ளவும் தகநிற்பதாய், பொருளுருவில் வேறுபாடறத் தெளிவதாய், விளக்கமுடைய ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற முச்சுடராய், அம்மூன்றுக்கும் உரிய ஒளியை முன்னே தன்கண் உடையதாய், பின்னும் தன்கண்ணே கொள்வதாய், எத்தகைய சுடரும் ஒவ்வாத இயற்சுடராய், உருவமைப்பில் நிறைவுடையதாய், குறைவுடையதாய், நிறை குறைகள் இல்லாததாய், மறைவதாய், வெளிப்பட விளங்குவதாய், மந்திரமாய், மறைவதே யில்லாத சச்சிதானந்தமாய், தனக்கு நிகராக வேறொன்றில்லாததாய் வித்தைகள் அனைத்தையும் விரித்துக் காட்டுவதாய், நுண்ணறி வுடையோர் வியந்து போற்றுகின்ற யோகப்பொருளாய், யோகியர் செய்கின்ற யோகத்தில் தோன்றுகிற சிவபோகமாய், அதனை நுகரும் போகியாய், அப் போகத்தை நல்கும் ஒரு தனிப்பொருளாய், கேவலம் சகலம் சுத்தம் என்ற மூவகை நிலையதாய், அவற்றுள் கீழ்மேல் என்ற இரண்டனுள் கீழ்நிலைச் சகலகேவலங்கள் சிறிதும் இல்லாததாய் ஞான வன்மையில், காட்சி, காண்பான், காணப்படுபொருள் என்ற மூன்றாய், நுண்ணுணர்வாய், நுண்ணுணர்வாற் கண்டு நுகர்தற்கரிதாய், மாட்சி யுண்டாகச் செய்பவன் செய்தொழில் செய்பொருள் என்ற மூன்றாய், செய் தொழிலை யுய்ப்பவன் உய்விப்பவன் என்ற இரண்டாய், திண்ணிதாகக் கொள்ளும் வகையில் அது, அவள், அவன் என்ற மூன்றாய், அம்மூன்றும் இனிது விளங்காது பொருண்மை மாத்திரம் காண நிற்பதாய், என்க.


     ஆதி கற்பம் - முதற்படைப்பு. தொன்முதல் உலகுயிர்களைப் படைத்தற்குமுன், இல்லன தோன்றா என்னும் சற்காரிய முறைப்படி தெளியப்படும் அவற்றின் மூலமாய இடம் “ஆதிகற்பம்” எனப்படுகிறது. சில நூல்கள் ஆதிகாலத்தையும் ஆதிகற்பம் என்று கூறுகின்றன. சங்கற்பம் - பொருளாகக் கொள்வது; விகற்பம் - கொள்வதாயும்,, கொள்ளாததாயும் அமைவது. உண்டென்பாரும் இல்லையென்பாரும் உண்மை விளங்க “சங்கற்ப விகற்பமாய் நிற்பதாய்” என உரைக்கின்றார். நிற்பது என்ற விடத்து ஆக்க வினை தொக்கது. ஆகார நிருவிகற்பம் - உருவத்தில் ஐயமின்மை. பொற்புடைய முச்சுடர் - ஒளிர்தலையுடைய சூரியன் சந்திரன், நெருப்பு. பொன் - ஈண்டு ஒளிர்தல் மேற்று; ஞாயிறு முதலிய


     மூன்றும் தோன்றற்கு முன்னேயமைந்த பேரொளி; அதனை “முன்னொளி” என மொழிகின்றார். அதனிடத்திருந்து பெற்றதே ஞாயிறு முதலிய மூன்றன் ஒளி என அறிக. முச்சுடரின் தோற்றத்துக்குப் பின்னே காணப்பட்ட ஒளிகளைப் ‘பின்னொளி’ எனப் பேசுகின்றார் ஒளியெனப்படும் பொருட்கு முதற்பொருளாகிய சிவபரம்பொருளின் இயலொளி இங்கே “எச்சுடரும் போதா இயற்சுடற்” என இசைக்கப்படுகிறது. “சோதிக்கப்பால் நின்ற சோதியான்” எனத் திருமுறைகள் கூறுவதும் இது விளக்குதற்கே என அறிக. படைப்பில் தோன்றும் பொருள்களின் உருவம் அச்செனப்படுகிறது. “அச்செல்லாம் ஒன்றாய் அதிலே இருவகையாய் வைச்சதென்ன சோணகிரி வள்ளலே” எனக் குகை நமச்சிவாயர் கூறுவது காண்க. எல்லா வுருவிலும் இறையுண்மை புலப்படுதலின், நிறைவு குறைவுகளின் உண்மையும் இன்மையும் கூறுகிறார். மனு - மந்திரம்; மக்களுருவுமாம். சத்து, சித்து, ஆன்ந்தமென்ற மூன்றும் சேர்ந்து சச்சிதானந்த மெனப்படுகின்றன. உலகியற் பொருளனைத்தையும் விரிப்பதும் தொகுப்பதும் யாவும், பரமன் கருவி கரணம் கொண்டன்றித் தனது சங்கற்பத்தால் செய்யுமாறுபற்றி, “விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய்” என்று கூறுகின்றார். விரிப்பது கூறவே, தொகுப்பது வருவிக்கப்பட்டது. கண்டோர் வியந்து பாராட்டுகின்ற யோகம். “மெச்சுகின்ற யோக” மாயிற்று. இவ்யோகியர் ‘மாயோகியர்’ எனப்படுகின்றார்கள். இரண்டு ஒன்றுவது யோகம்; ஒன்றுமிடத்துப் பிறப்பது போகம். “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” எனக் கம்பர் கூறுவதும் இக்கருத்தேபற்றி என அறிக. போகியர் சிவத்தோடொன்றிப் பெறுவது சிவபோகம். அதனை நுகர்வோர் இருவருமாதலின், “போகியாய்” என்றும், “போகமருள் ஏகமாய்” என்றும் இயம்புகின்றார். போகம் சுரத்தலும் நுகர்தலும் யோகமாம். இரண்டிற்கும் உரியதாயினும், சிவயோகத்தில் போகம் தருவது சிவமொன்றே என்றற்குப் “போகமருள் ஏகமாய்” எனப் புகன்றுரைக்கின்றார்.


     உயிர்கள் உடம்பெடுக்கும் முன் இருக்கும் நிலை கேவலம்; உடம்பெடுத்த நிலை சகலம்; உடம்பெடுக்க வேண்டாத உயர்நிலை சுத்தம். இம் மூவகை நிலையினும் இருத்துவது சிவமாதல்பற்றி, “கேவலமாய்ச் சுத்த சகலமாய்” என்று கூறுகின்றார். கேவலம், சகலம், சுத்தம் என்பது முறை; செய்யுளாதலின் முறை பிறழ்ந்தது. கேவலம் சகலமாதலும், சகலம் சுத்தமாதலும் உண்டேயன்றிச் சுத்தம் எய்தியவை சகல கேவலம் எய்துவதின்மைபற்றிக் “கீழ்ச்சகல கேவலங்கள் கிடையாதாய்” என உரைக்கின்றார். மாவலம் - அறிவுண்மை. காட்சி, காண்பான், காணப்படுபொருள் என்ற மூன்றையும் ஞானம், ஞாதிரு, னேயம் என்றும் ஆக்கித் ‘திரிபுடி’ என்பர். இவையும் அவனருளாலே அறியப்படுதலின், “காட்சியாகக் காண்பானாய்க் காணப்படுபொருளாய்” எனக் கூறுகிறார். சூழ்ச்சி - நுண்ணறிவு; அது சூட்சி என வந்தது. திருவருளாலன்றி, நுண்ணறிவு ஒன்றே கொண்டு சிவத்தில் தோய்வதில்லாமைபற்றிச் “சூட்சியால் தோய்வரிதாய்” என்று சொல்லுகின்றார். “அருளால் எவையும் பார் என்றார் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன், இருளான பொருள் கண்டதல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி” எனத் தாயுமானார் கூறுவது காண்க. செய்பவன், செய்தொழில், செய்பொருள், தொழிற்பலன் உறுபவன்,


     உறுவிப்பவன் என்ற ஐந்தும் சிவநெறியின் அடிப்படைக் கொள்கை. இதனைச் சேக்கிழார் பெருமான், நான்காயடக்கிச் “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்” என்றும், “இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லை” ( சாக்கி. 5 ) என்றும் கூறுவர். செய்தொழிற்பயன் அறிவில்லா தாகலின், அதனைச் செய்பவன்பால் சேர்த்து நுகர்விக்கும் வகையில் நேர்மை பிறழாமைபற்றி “உய்விக்கு முத்தமனாய்” என ஓதுகின்றார். மொய் - உருவலி; அது அவள் அவன் என்ற மூவகையுருவும் தெளிய விளங்காமற் பொருண்மையாகக் கருதப்படுவதை “அவையும் கதுவாது நின்ற கணிப்பாய்” என்று குறிக்கின்றார். ஆண், பெண், அலி எனப் பகுத்துணரவாராது “உரு” எனக் குறிப்பதுண்மை பற்றி ( தொல். சொல் ) இவ்வாறு கூறுகின்றார்.

( 31-39 )

   ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்

    பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற

40

   ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்

    சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்

41

   ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்

    சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய

42

   ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்

    பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்

43

   தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த

    ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா

44

   ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்

    என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்

45

   அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற

    மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி

46

   வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை

    நாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக

47

   எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்

    அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்

48

   ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்

    ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் ஈண்டாது

49

   வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ

    டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்

50

   கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்

    எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய்க் - கட்டுகின்ற

51

   தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற

    சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்

52

உரை :

        மயங்காமல், ஐயம், திரிபு, அறியாமை என்ற மூன்றும் நீங்கிப் பொய்யென்பது சிறிதும் பொருந்தாதவரும், செயல் எனப்படும் ஒருவினையால் இன்பமும் ஒரு வினையால் துன்பமும் ஆதலால் எத்தகைய வினையையும் செய்யாமல் ஓங்கும் சிறப்புடையராய், பாருலகில் வினைசெய் தொழுகும் ஒருதிறத்தார்பால் வெறுப்பும் ஒருதிறத்தார்பால் விருப்பும் கொள்ளும் தன்மையால் மனமயங்கும் தன்மையில்லாதவராய், பரந்த உலகில் சார்ந்த வியல்பால் ஒரு சிலர்பால் தண்ணிய அன்பும் ஒரு சிலர்பால் வெவ்விய சினமும் கொள்ளாத பான்மையுடையராய், நீரின்கண் தட்பம் போலின்றி என்றும் சாந்தத் தன்மையே மிக்குயர்ந்த ஒட்பத்துடன் உண்மையாவ தொன்றையே உணர்ந்த உணர்வுடையராய்; வெளிற்றறிவில்லாமல் தெளிவுபொருந்திய அறிவு தோற்றமுதல் இறுதி வரை எப்போதும் இரண்டுபடல் இல்லாதவராய், தெளிந்த ஒளி திகழும் அம்மூன்று குணங்களுள் ஒன்றினொன்றாக விரிந்த சத்துவத்திற் சத்துவம் சத்துவத்தில் தாமதம், சத்துவத்தில் இராசதம் என அடுக்கிவரும் மும்மூன்றில் மூன்றும் அற்றவராய், தம்மை முதலாய் ஊன்றி மூன்றினிடத்தும் வீடாமல் நின்று, மூன்றாப் பிரிந்தும் ஒன்பதாய் விரிந்தும் நிலவும் விகற்பநடை யாதும் கொள்ளாது நால்வகையாசை ( மண், பெண், பொன், புகழ் ) களையும் போக்கினவராய், இவற்றினூடே மெய் முதலிய ஐந்தினிடமாகப் போக்குவரவு புரியுமிடத்துண்டாகும் சாதி முதலிய அபிமான மைந்தையும் அறுத்தவராய், குறையாமல் இம்மை மறுமைகளில் அருளவல்ல தெய்வங்களை நெறிப்படி சென்று ஆங்காங்குக் கண்டு வழிபட்டு, அறுவகைக் குற்றமும் அகற்றி, வானுலகத்தே வாழ்கின்ற வானோரும் வந்து மூவேழ் தலைமுறையும் வாழத் தந்த வரத்தையும் பொருளாக மதியாதவராய், ஊழ் துணைபுரிய ஒழுக்கநிலையிற் றிண்ணிதின் நின்று உள்ளத்தே அருட்சோதியைக் காணத்தொடங்கும் பெரியோர் திருவருள் முயற்சியிற் காண்கின்ற எண்குணம் பொருந்தியவராய், சுட்டி யுணர்த்தப்படுகின்ற தேனினும் இனிய கருணையுருவாகிய சிவம் கலத்தலால் ஆனந்தத் தேன்பருகித் தேக்கெறியும் சான்றோராய் உள்ள ஞானவான்களின் உள்ளத்தினின்றும் ஒருபோதும் நீங்காததாய் விளங்குகின்ற சிவம் என்க.


     முக்குண மயக்கத்தால் அறிவு பணிபுரியாவிடத்து ஐயமும் திரிபும் அறியாமையும் உண்டாதலால் “கதுவாமல்” எனவும், “ஐயம் திரிபோடு அறியாமை விட்டகற்றி” எனவும் இயம்புகின்றார். திரிபு - ஒன்றைப் பிறிதாகக் காண்டல். அறியாமை - தவறுபடக் காண்டல். கண்டவற்றைக் கூறுமிடத்து மெய்பெறக் கிளவாது பொய்கலந்து உரைத்தல் உண்மை பற்றி, “பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்” என்றும், சொல்லணி கருதிப் புனைந்து கூறலும் பொய்ம்மை யாவதுபற்றி, “பொய்யென்பது” என்றும் புகல்கின்றார். ‘செய்க’ என்பது நல்வினை தீவினை இரண்டினை யுள்ளடக்கி. இரண்டும் பிறவிக்கேதுவாதலின் இரண்டையும் ஒப்பக்கருதி யுவர்த்தமை புலப்பட “இன்பமும் துன்பமும் சார்வினை விட்டோங்கும் தகை” எனவும், நிலச்சார்பால் நீர் திரிதல்போல் மக்கட்சார்பால் மனம் திரிதல் உண்மையின், விருப்பும் வெறுப்பும் உறும் சார்பால் “மயங்காத் தகை” எனவும் உரைக்கின்றார். உள்ளத்தெழும் விருப்பு வெறுப்புக் கேற்பப் பிறர்பால் தண்ணிய அன்பும் வெவ்விய சினமும் கோடல் வேண்டாமை தோன்ற, “தண்மையும் சினமும் கொள்ளாப் பரிசினராய்”


     என இயம்புகின்றார். சாந்தமும் ஒன்றையே யுணரும் ஒண்மையும் சான்றோர்க்குச் சால்பு தருவன வாதலால், “சாந்தம் பழுத்துயர்ந்த ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவர்” என உரைக்கின்றார். ஐயந்திரிபின்றித் தெளிய உணர்வது “ஒன்றை உணர்தலாம்” என உணர்க. ஒன்றை ஒருமுறை கண்ட மாத்திரையே முழுதும் உணர்தல் எனினும் அமையும்.


     வெண்மை - வெளிற்றறிவு; நன்கு அறியாமை. வெண்மையின்றி ஒன்றும் அறிவு, கூர்த்த மதி நுட்பம். அது தானும் ஒருகாலத்திருந்தது ஒருகாலத்துத் திரிதல் கூடாதென்றற்கு “உதயாதி ஈறளவும் என்றும் இரண்டென்ப தில்லவராய்” என இசைக்கின்றார். அறிவின்கண் ஒருகாலைக் கொருகால் ஒண்மையும் அஃது இன்மையும் இலவாதற்குச் சத்துவ முதலிய குணங்களின் இயக்க மயக்கம் காரணமாம். அவை ‘சத்துவத்திற் சத்துவம், சத்துவத்தில் தாமதம், சத்துவத்தில் இராசதம், இராசதத்திற் சத்துவம், இராசதத்தில் இராசதம், இராசதத்தில் தாமதம், தாமதத்தில் சத்துவம், தாமதத்தில் இராசதம், தாமதத்தில் தாமதம் என ஒன்பதாய் விரியும். ஒன்றகன்ற மும்மூன்று - சத்துவம் நீங்கிய ஏனை இராசதம் மூன்று, தாமதம் மூன்று. இக் குணங்கள் குணியாகிய தம்மைப் பற்றிவிடாமல் ஒன்பதாய் விரிந்து பரந்து இயலுகின்ற திறத்தை, “தம் மூன்றின் வீடாது நின்றும் விரிந்தும் ( வரும் ) விகற்ப நடை” என விளம்புகின்றார. நான்கு என்றது நால்வகை ஆசைகளை; அவை மண், பெண், பொன், புகழ் என்ற நான்கின் மேற் செல்லும் ஆசைகள், அஞ்சின் இடம் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற பொறிவாயில் ஐந்து. அஞ்சாதி யைந்து - சாதிமத ஆசார சங்கற்ப விகற்பங்கள் என்ற அபிமானம் ஐந்து; இவ்வைந்தும் சான்றாண்மைக்கு இடையூறாதலால் “அஞ்சும் அறுத்தவராய்” என்று சான்றோரைப் புகழ்கின்றார். ஈண்டு, ஆண்டு என்பன இம்மை மறுமைமேல் நிற்கின்றன. ஆறு அகன்றவர் - காமம் குரோதம் மோகம் மதம் கடும்பற்றுள்ளம் மாற்சரியம் என்ற குற்றவகை ஆறும் நீங்கினவர். இரண்டோடு ஏழியற்ற ஏழ் - மூவேழ் தலைமுறை. இயன்ற ஏழ், இயற்ற ஏழ் என வலித்தது “வானோர் வாழ்த்தும் மூவேழ் தலைமுறைக்கு ஏன்ற வாழ்த்தியல்பற்றி “வானோரும் வந்து தமக்கு இரண்டோடு ஏழ்இயன்ற ஏழ்” என இசைக்கின்றார். ஊழ் இயற்றக் கட்டி நிற்றல் - ஆண்டருளைதலையே தனக்கு ஊழாகக் கொண்டு அதற்கேற்ப உயிரின் உணர்வைச் செலுத்த, அவ்வழியில் கட்டுற்று நிற்பதுபோல் உயிர் திருவருளுணர்வில் ஒன்றி நிற்றல்; நிற்குமாயின் சிவஞானப் பேரொளி தோன்றி உய்விக்குமென்பது பற்றி “உட்சோதியொன்று காணத் தொடங்குகின்றார்” என்று கூறுகின்றார். “என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவாகாண வந்தருளாய்” ( கோயிற் 1 ) என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. திருவருட்பெருஞ்சோதி தோன்றக் கண்டார் எண்குணக் குன்றேறி இன்புறுதல் ஒருதலையாதலால், “எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்” என இசைக்கின்றார். கொம்பிலும் மலையிலும் கட்டப்படும் தேன்கூட்டுத் தேன்போலும் இனிமை சான்றது திருவருள் என்றற்குக் “கட்டுகின்ற தேன்தோய் கருணை” என உரைக்கின்றார். தோய்தல், ஈண்டு உவமப் பொருட்டு. இச் சான்றோராகிய சிவஞானிகளின் திருவுள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவது பற்றி, சிவபரம்பொருளைச் “சிவம் கலந்து தேக்குகின்ற சான்றோர்தம் உள்ளம் தணவாதாய்” என்று பரவுகின்றார்.

( 40-52 )

யோகவினோதன்


   தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பம் தனுவொழிந்து

    வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற

53

   வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து

    சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து

54

   நானுமொழியா தொழிந்து ஞானமொழி யாதொழிந்து

    தானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை

55

   நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்

    நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்

56

   நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து

    சென்றான் எவன்சர்வ தீர்த்தனெனவன் - வன்தீமை

57

   இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்

    வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்

58

   சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்

    விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற

59

உரை :

        மூலலமத் தாக்குதலும், நில முதலிய தத்துவங்களுக்குச் சார்பும் இடமும் ஆகிய உடம்பும் ஒழிந்து, வாக்கும் மனமும் ஒழிந்து, மெய்ம்மை நாடிய ஏக்கமிக உண்டாவதாகிய ஞானசுகம் ஒழிந்து, மண்ணும் விண்ணும் நல்கும் வாழ்வின்கண் நாட்ட மொழிந்து, வாழ்நாளைக் குறைக்கும் இராப்பகல் உணர்வொழிந்து, அவற்றினின்றும் நீங்குதலின்றி நான் என்னும் தன்மை ஒருவாறொழிந்து, அதுகொண்டு பெறத்தகும் ஞானமும் ஓரளவு பெற்றொழிந்து, அந்த ஞானம் தானும் ஒருவாறொழிந்து, அவ்வழி எய்தும் மோனநிலையில் நிற்கும் பெரிய நிரதிசய ஆனந்தமாய் நின்றாடும் மேலான கூத்தன் எவனோ, தனிப்பரமாய் நிற்பவன் எவனோ, அன்பர்களின் அன்பு மனத்தின்கண் விரைந்துசென்று சேர்பவன் எவனோ, ஆகாதன அனைத்தையும் தீர்த்துத் தூய்மை செய்பவன் எவனோ, யாவர்க்கும் ஈசன் எனப்படுபவன் எவனோ, எல்லாம் வல்லவன் எவனோ, அந்தி மாலை போலும் நிறமுடையவன் எவனோ, கல்லாலின் கீழே இருந்து சுட்டியுரைத்தற்கு எட்டாத சிவஞானத்தால் எய்தும் மேலாய சுகம் உண்டெனக் காட்டி, காண்டற்குரிய கருவி காலம் இடம் முதலிய அனைத்தையும் விட்டு யோகமிகுந்து சொல்லாமல் சொல்லும் வினோதன் எவன் - ( எ-று )


     மயக்குதலை இயல்பாக உடைய மலமாதலின் ஆணவமலத்தை, “மான்றமலம்” என உரைக்கின்றார். மான்ற : மால் என்பதனடியாக வந்த தெரிநிலைப் பெயரெச்சம். உயிரைப் பற்றி அதன் அறிவாற்றலை ஒடுக்குதலால், மலத்தின் செயலைத் “தாக்குதல்” என்கிறார். நில முதலிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியாதத்துவம் ஏழும், சிவதத்துவம் ஐந்தும் ஆக முப்பத்தாறுக்கும் உடம்பு சார்பதலால் “தத்துவத்தின் சார்பாம் தனு” எனக் கூறுகின்றார். தனு - உடம்பு. பொறிபுலன்களை இயக்குவதும் அவற்றால் இயக்கப்படுவது மாதலால் மனத்தை “மாணா


     மனம்” எனக் குறிக்கின்றார். இன்றியமையாத பொருள்மேற் சென்ற ஆர்வம் பற்றிய நினைவு மிகுதியால் உடற்கருவிகள் செயலற்றவழி எய்தும் நிலை ஏக்கம். ஈண்டுச் சிவபோகம் பற்றி ஏக்கம், சிவபோகத்தில் ஆர்வம் மிக்கவிடத்து மண்ணும் விண்ணும் நல்கும் போக்கும் வரத்தும் புறக்கணித்தொதுக்கப்படுவதால் “மண்ணொழிந்து விண்ணொழிந்து” என உரைக்கின்றார். இரவும் பகலும் அடுத்தடுத்தெய்தி வாழ்நாளை யறுத்துக் குறைத்தல் பற்றிச் “சாய்க்கும் இராப்பகல்” என்றும், சிவபோக நுகர்ச்சி மேற் சிந்தை படர்ந்தபோது, இரவு பகல் என்ற காலவுணர்வு கெட்டொழிதலால் “சாய்க்கும் இராப்பகலும் தான் ஒழிந்து” என்றும் இசைக்கின்றார். இராப்பகல் என்ற காலவுணர்வு கெடினும், அதன் கட்டினின்றும் நீங்குதலின்மையால் “நீக்கொழிந்து” என்று நினைப்பிக்கின்றார். போகமும் போகநுகர்ச்சியும் இருப்பினும், இரண்டினும் தோய்ந்து நுகரும் வினை முதலாகிய “நான்” என்பது வேண்டப்படுதலின், “நானும் ஒழியாது” என்றும், போகமெய்திய காலத்து அதனை அகங்கரித்தல் கூடாமை பற்றி, “நானும் ஒழியாதொழிந்து” என்றும் நவில்கின்றார். சிவபோகிகட்குச் சிவஞானம் நான்” போல விளங்கியும் ஒடுங்கியும் இருத்தல் பற்றி, “ஞானம் ஒழியா தொழிந்து” எனவும், ஞான விளக்கத்தில் “நான்” என்பதன் நிலையை யுணர்த்தற்கு, “தானும் ஒழியாமல் தான் ஒழிந்து” எனவும் இயம்புகின்றார். சிவஞான யோகத்தாற் பெற்ற சிவபோக நுகர்ச்சிக்கண் அமையும் மோனநிலையின் தன்மையை “மோனநிலை நிற்கும் பிரம நிரதிசய ஆனந்தம்” என்று தெரிவிக்கின்றார். அந்த நிரதிசய ஆனந்தமே தனக்கு வடிவாய்க்கொண்டு ஞானவெளியில் சிவன் பரம நாடகம் ஆடுகின்றமை புலப்பட “நிரதிசயானந்தமதாய் நிற்கும் பரம நிருத்தன் எவன்” என உரைக்கின்றார். ஈடு எடுப்பற்ற பரம்பொருள் என்றற்குத் “தற்பரம்” எனக் கூறுகின்றார்; இது தனக்குப் பரம் தான் என்று பொருள்படுவது. அன்பர் நினைந்த பொழுதில் நினைந்த வடிவில் விரைந்து செல்வது அவற்கு இயல்பு என்பதனால் “அன்பர் நேய மனத்தே விரைந்து சென்றான் எவன்” என்று கூறுகின்றார். சிவானந்தப் பெருவாழ்வுக்கு வேண்டாதன அனைத்தையும் நீக்குபவனாதலால் “சருவ தீர்த்தன்” என்று சாற்றுகிறார். நன்னலத்தின் வடிவம் சிவமாதலால் சிவனை, “வன்தீமை யில்லான்” என உரைக்கின்றார். எத்திறத்தார்க்கும் திருவருளாகிய செல்வத்தை நல்கும் வள்ளல் என்பது பற்றி “யார்க்கும் ஈசன்” என்கின்றார். மணிவாசகரும் “எல்லார்க்கும் தான் ஈசன்” ( திருச்சாழல். 2 ) என்பது காண்க. எட்டியும் சுட்டியும் தாட்டொணாப் பரஞானத்தைச் “சுட்டகன்ற ஞானம்” என்றும், ஞானத்தின் பின் எய்தக்கடவ சுகத்துக்கும் மேலாய சுகம் உணர்வுக்கு அப்பாற் படுவதால், “ஞான சுகாதீதம்” என்றும், சிவனே ஞான குருவாய் வந்து காட்டினன்றிப் பெறப்படாமை தோன்றக் “காட்டி” என்றும், காட்டிய போது பொறிபுலன்களை முற்றவும் போக்கறுத்து யோகமிகுந்து காட்டின செய்தியை, “முழுதும் விட்டகன்ற யோகம்” என்றும், யோக்க் காட்சி நேரிருந்த முனிவர்க்கு விளக்கம் தந்தமை எண்ணி வியந்து, வினோத யோகன் என்று புகலவேண்டிய வள்ளல் பெருமான், யோகவினோதன்” என்று உரைத்தும் மகிழ்கின்றார்.


    

சிவ சித்தன்


   அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்

    திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு

60

   வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்

    தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்

61

   வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்

    தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது

62

   பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்

    சிற்றுருவாய் உள்ளொளிக்குஞ் சித்தனெவன் - மற்றுருவின்

63

   வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்

    செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்

64

   அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்

    செப்பினடவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே

65

   நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்

    செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத

66

   வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே

    செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்

67

   ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்

    திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்

68

   தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை

    தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்

69

உரை :

        அளவிறந்துள்ள அண்டங்கள் எல்லாவற்றையும் ஒருசில அணுவுக்குள் அடைத்துக் கெடாமற் காத்துத் திண்மை தங்குமாறு இருப்பிக்கும் சித்தன் யாவனோ, பண்ணிசை பொருந்திய சொற்களையுடைய சிறு பெண் விளையாட்டிற்போல அண்டங்கள் அனைத்தையும் அணுவின் நீங்கி விரிந்து குறைபாடின்றி வானத்தே கூட்டமாய்த் தோற்றுவிக்கும் சித்தன் யாவனோ, யாதனையும் வேண்டாமையும் வேண்டுவதும் இல்லாத சித்தர்களைப் பற்றாமற் பற்றிநிற்கும் சித்தன் யாவனோ, இங்கே சொல்லப்படுகின்ற பற்றுருவாய்ப் பற்றற்கமையாத பரமாணுவினுள்ளும் சிற்றுருவாய்ப் புகுந்து அதனுள் ஒளித்துறையும் சித்தன் எவனோ, இவ்வுலகப் பொருளிடையே தன்னைத் தோற்றாவண்ணம் வேறு மாற்றங்களை எய்துவிக்குமாற்றால் பெரிய இந்திர சாலங்களைப் பிறர் அறியச் செய்யாமல் செய்தருளும் சித்தன் யாவனோ, நீரிடை நைவதின்றி வைக்கப்பட்டதாகிய உலகில் நிறைந்த உயிர்களைச் சகமாயை என்ற செப்பின்கண் வைத்து ஆட்டிவைக்கும் சித்தன் யாவனோ, ஒன்றுபோல ஒன்று பொருந்த ஓரிடத்திம் நில்லாத உயிராகிய காற்றை நிலையில்லாத குடம்போன்ற உடலுக்குள் அடைத்து அது வெளியே போய்விடாதபடி நிறுத்துகின்ற சித்தன் யாவனோ, நஞ்சுடைமையாற் பொல்லாததாகிய கொடிய பாம்புகளை உடம்பின்மேல் அணிந்துகொண்டு, வெவ்விய உலக


     மாகிய புற்றுக்குள் இருந்து கொண்டே செவ்விய உயிராகிய பாம்பை ஆட்டியலைக்கின்ற சித்தன் யாவனோ, தன் பக்கத்தில் தனது ஔ¢ளிய கையில் ஒன்றும் இல்லாமலே உடற்குள்ளிருந்து உயிர்களை ஊழ் என்னும் திண்ணிய கயிறு கொண்டு ஆட்டுகின்ற சித்தன் யாவனோ, வளமான கையையுடைய தான் தனது கையை அசைத்தால் இச் சகமுழுதும் அசையும் என்று மறை நூல் வழியாகத் தேன்போல் இனிக்க வுரைக்கின்ற சித்தன் யாவனோ- ( எ.று. )


     மட்டு - இங்கு அளவு குறித்த தொகைமேல் நின்றது. அண்டங்களின் ஆக்கம் அனைத்தும் ஓர் அணுவின் ஆக்க முறையில் அமைந்து அடங்குவது பற்றி “அணுவில் அடைத்தருளி” என்றும், அணுவின் அமைப்பை உடைத்துக் காண்பது என்பது பெரிய அணு விஞ்ஞானிகளைக் கொண்டு பெரும்பொருட் செலவில் அமைந்த அரக்க எந்திரங்களைக்கொண்டு செய்ய வேண்டியதாயிருத்தல் தோன்ற “திண் தங்குமாறு இருத்தும் சித்தன்” என்றும் இயம்புகின்றார். திண்மை, ஈறுகுன்றித் திணெணென வந்தது. பண்ணின் இனிமை குறையாத சொல்லையுடைய சிறுபெண் என்றற்குப் “பண்டங்கு வீயாச் சிறு பெண்” என உரைக்கின்றார். மகளிர் விளையாட்டின்கண் சிற்றில் இழைத்தலும் சிறு சோறடுதலும் போல இவ்வண்டங்களை ஆக்கியும் தொகுத்தும் கெடாதபடி நிறுத்துவது விளங்க “அண்டமெலாம் தோயது கூட்டுவிக்கும் சித்தன்” என்று செப்புகின்றார். வேண்டுதல் வேண்டாமைகள் அற்றாலன்றி இறைவனது இன்னருள் எய்தாதென்பது பற்றி, “வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்” என விளக்குகின்றார். சித்தர் சித்தத் துள்ளிருந்து செய்வன செய்விக்கும் திறமுடைமை தோன்ற “தீண்டாது தீண்டுகின்ற சித்தன்” என்று தெரிவிக்கின்றார். பற்றுரு - மெய்யால் தீண்டிப் பற்றும் பொருள். பரவணு - மிக மிக நுண்ணணு; இதனைப் பரமாணு என்பதும் உண்டு. அணுவுக்குள் பலவேறு சக்திகள் புதைந்து கிடத்தலின், “உள் விளங்கும் சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தன்” என்று கூறுகின்றார். உருவும் அருவும் ஆகிய உலகப்பொருள்களில் தான் ஒன்றாய்க் கலந்துகொண்டு காலந்தோறும் இடந்தோறும் எண்ணிறந்த மாற்றங்களைத் தோற்றுவித்தலால் “மாஇந்திரசாலம் செய்யாது செய்விக்கும் சித்தன்” எனத் தெரிவிக்கின்றார். கடல் சூழ்ந்த மண்ணுலகை, “அப்பிடை வைப்பாம் உலகு” எனக் குறித்து, இங்கு வாழும் உயிர்கட்கு இவ்வுலகியலை நீங்காத வகையில் விருப்பூட்டி மயக்குதல் பற்றி, “ஆருயிரை மாயை எனும் செப்பிடை வைத்தாட்டுகின்ற சித்தன்” என இயம்புகின்றார். “உயிரை நில்லாத காற்” றென்றும், உடம்பை “நிலையாக் கடம்” என்றும், உடற்குள் உயிர் நிலவும் திறத்தை “செல்லாது வைக்கின்ற சித்தன்” எனவும் வியக்கின்றார். வெம்புற் றென்பது விருப்பு வெறுப்பு நிறைந்த உடம்பை; அதனுள் உலவும் ஆசைவடிவாய உயிருணர்வைச் செம்பாம்பு எனக் கூறுகின்றார். மறுத்தால் ஒறுத்தற்கு வேண்டும் கருவியின்றி என்றற்கு, “ஒண் கையில்தான் ஒன்றின்றி” என உரைத்து, உயிர்களை ஊழின் நெறியில் இயக்குவது பற்றி, உயிர்களை உண்ணின்று ஊழ்த் திண்கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் என உரைக்கின்றார். ஊழ் - முறைமை; அது பெருவலியுடைய தாகலின், “திண்கயிறு” என்று சிறப்பிக்கின்றார். அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதன் கருத்தை “இறைவன் தான் அசைந்தால்


     மற்றைச் சகம் அசையும்” என இயம்புகின்றார். சகம் அசையும் என்ற கூற்று மறை மொழி என்றற்கு “மறை சொல்கின்ற சித்தன்” என மொழிகின்றார். தேனினும் இனிக்கச் சொல்லுமாறு தோன்றத் “தேன் நசையச் சொல்கின்ற சித்தன்” என்று செப்புகின்றார்.


    

   பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்

    சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக

70

   அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்

    சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்

71

   கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்

    செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை

72

   மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்

    செய்வித்தங் கூட்டுவிக்குஞ் சித்தனெவன் - உய்விக்கும்

73

   வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்

    சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே

74

   உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்

    சிற்பத் தொழில்வல்ல சித்தனெவ - பற்பலவாம்

75

   காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்

    சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத

76

   நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்

    சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி

77

   ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே

    சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற

78

   ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தலைவானின்

    சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்

79

உரை :

        உயிர்களை மீளப் பிறப்பிக்குமிடத்து அவையெல்லா வற்றையும் ஒரு பெண்ணின் வசப்படுத்திச் சேர்த்து அவள் வாயிலாக ஊனமின்றிப் பிறப்பிக்கும் சித்தன் எவனோ, இறுதிக்காலத்தில் இருள் பரந்து உலகை மூடும்பொழுது அகில வுலகங்களையும் ஒடுக்கித் தன் திருவடிச் சிறுவிரலின்கண் அடக்கிக் கொள்கின்ற சித்தன் எவனோ, பல்வேறு வகையில் இனம் இனமாய்க் கலந்து கருப்பையுள் கரு இடம்பெறச் செய்து அதற்கு வேண்டுவன கூட்டியருளும் சித்தன் எவனோ, இடையிடை யுண்டாகும் இடையூறுகளின் உய்ந்து வளரும் கருவை உடலிற் கருவிலும் வேர்வை நீரிலும் மண்ணிலும் முட்டையிலும் வயலிடத்து விதையிலும் உயிரைக் கூட்டித் தோற்றுவிக்கும் சித்தன் எவனோ, தோற்றுவித்தற்குக் காரணமாகிய வித்து ஒன்றுமின்றியே ஒன்றைத் தோன்றுவித்தருள் புரியும் சித்துத்தொழிலை என்றும் செய்யவல்ல சித்தன் எவனோ, சந்தாகிய உயிரொடு கூடி யுருவாய் ஒன்பது துவாரங்களையுடைய பாவை போன்ற உருவுடைய மக்களைச் செய்தளிக்கும் சிற்பத்தொழில் வல்ல சித்தன் எவனோ, மிகப் பலவாகிய கரிய


     கடல்களை யுண்டாக்கிக் கரையின்றியே பல்லூழி காலமாகத் தொடர்ந்து நிற்கவைத்த சித்தன் எவனோ, நீர்மேல் நில்லாத நெருப்பை நிலை பெற வைத்து எவ்வுலகும் சிறப்படையச் செய்கின்ற சித்தன் எவனோ, நிலமுதலிய பூதமைந்தனுள் முறையே ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று குணமென்னுமாறு மனத்தால் எண்ணிவைத்த சித்தன் எவனோ, ஆண் பெண்ணாய், பெண் ஆணாய் இணைந்து மண்ணிலுறையும் அணிமை நிலையைச் சேணிலுள்ள வானுலகத்தும் அதற்கப்பாலும் வைத்தருளிய சித்தன் எவனோ - ( எ.று. )


     உயிர்கள் உலகில் தோன்றுதற்குப் பெண்மை முதலிடம் வாயிலுமாதலின், “உயிர்களெல்லாம் ஓர் பெண் பிள்ளையின் வசமாய்ச் சேர்த்து வருவிக்கும் சித்தன்” என்று கூறுகின்றார். பிறந்த பிறப்புக்கண்டு பேசுதலால் “பேர்த்து” எனப் பேசுகின்றார். அகிலமெல்லாம் போர்த்து அல்விரவும் காலை என மாறுக. அல் - இறுதிக் காலத்தில் ஞாயிறு திங்கள் முதலிய ஒளிப்பொருள்கள் ஒடுங்கி மாய்தலாற் பரவும் பேரிருள். இறுதிக் காலத்தில் எல்லாப் பொருள்களும் இறைவன் திருவடியில் ஒடுங்குதலால் “தன்பதத்து ஓர்சில் விரலிற் சேர்க்கின்ற சித்தன்” என உரைக்கின்றார். பக்கத்தே ஊறும் பல்வகை நீரியற் பொருள்கள் கலந்து எளிதிற் கலங்காத வன்மை பெறுவது கருப்பாசயத்தின் இயல்பு. சுக்கில சுரோணிதக் கலப்பால் செய்யப்படுதலால் கருவைக் “கருப்பாசயப் பையுட் செய்கரு” எனல் வேண்டப்படுகிறது. கருவளர்ச்சிக்கு வேண்டுவன இறைவனால் அருளப்படுவதால் “கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன்” என்று வேண்டப்படுகிறது. உடற்குள்ளிருந்து கசிவதாயினும் மெய்யில் மேல்தோலில் வெளிப்படுவது கொண்டு, “மெய்வைத்த வேர்வை” என வுரைக்கின்றார். செய்வித்தம் என்பதற்கு, செய்யிடத்து வித்திய வித்தினும் எனவுரைக்க. வித்தின்றியே விளைவு செய்யும் திறம் இறைவற் குண்மைபற்றி, “வித்தொன்றுமின்றி விளைவித்து அருளளிக்கும் சித்தன்” என்றும், அச்செயல் சித்தெனப்படுமாறு தோன்ற, “சித்து” என்றும் தெரிவிக்கின்றார். சத்து - உயிர். உடம்பு அசத்தெனவும், உயிர் சத்தெனவும் ஞானநூல் கூறுவதைக் கடைப்பிடிக்க. நீலநிறமுடைய கடல் “காராழி” என்றும், அது கரையின்றி நிற்பது கண்டு “கரையின்றி நிற்கவைத்த சித்தன்” என்றும் கூறுகிறார். ஊழிக்காலம் வரையில் கடல்களைக் கரைகடவா வண்ணம் நிற்பிப்பதுபற்றி “சேர் ஊழி நிற்கவைத்த சித்தன்” என்கிறார். ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், அதனின்று நீரும், அதனின்று நிலமும் தோன்றின என்பது வேத நூல் மரபு. இதனால் நிலத்தின்மேல் நீரும், நீர்மேல் நெருப்பும் இடம் பெறுதலின் “நீர்மேல் நெருப்பை நிலையுற வைத்து” என மொழிகின்றார். பாராதி ஐந்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்பன. இவற்றிற்கு முறையே ஐந்து, நான்கு, முன்று, இரண்டு, ஒன்றெனக் குணம் கூறுவர் இதனைப்,


“பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி,

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி,

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி,

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி,

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

     என வாதவூரடிகள் உரைப்பது காண்க. “ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கருணல்கிச் சேணின்றவர்க் கின்னும் சிந்தை செய வல்லான்” ( நாகைக் ) என ஞானசம்பந்தர் கூறுவது பற்றி, “வானிற் சேண் பண்ண வல்லவொரு சித்தன்” என்று கூறுகின்றார்.


    

   பேடாணாய்ப் பெண்ணாய்ப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்

    சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய

80

   வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்

    திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா

81

   ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்

    சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு

82

   காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்

    தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற

83

   நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்

    சீரணவச் செய்யவல்ல சித்தனெவன - பேரணவக்

84

   கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்

    செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா

85

   வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்

    செம்புலியாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை

86

   அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற

    செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா

87

   ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்

    சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்

88

   முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்

    சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்

89

உரை :

        மாண்பில்லாத ஆண்பேட்டைப் பெண்ணாகவும், அப் பெண் பேட்டை ஆணாகவும், பெருபேடாயவற்றை பெருமையுற்ற பெண்ணாகவும் ஆணாகவும் செய்யும் சித்தன் எவனோ, நல்லறிவுடைய பெரிய வெளிற்றறி வேயுடைய கிழமாய், விருத்தமுற்றும் மந்தபுத்தியனா யுடையவனை மாறாத் திண்ணிய அறிஞனாகச் செய்யும் சித்தனெவனோ, ஒளியில்லாத மண்ணோட்டைச் செம்பொன்னோடாகவும், செம்பொன்னை மண்ணோடாகவும் மண்ணென்றும் பொன்னென்றும் மயங்காவகை செய்யும் சித்தன் எவனோ, காட்டில் வளர்ந்துள்ள எட்டி மரத்தைக் கற்பகமாகவும், கற்பகமரத்தை எட்டி மரமாகவும் இனிமை தடுமாறச் செய்யும் சித்தன் எவனோ, அன்புண்டாக நாரணன் மகனை நான்முகனாகவும், நான்முகன் மகனை நாரணனாகவும் சீர்பொருந்தப் பிறப்பிக்கும் சித்தன் எவனோ, பேர்படைத்த பெருமையுற்ற கோடானுகோடி அண்டங்களையெல்லாம் உடல்மேல் மெல்லிய மயிர்க்காலுள் புகுத்தியொடுக்கும் சித்தன் எவனோ, செம்மைப் பண்பில்லாத கொடிய புலியை வெண்பால் கொடுக்கும் பசுவாகவும், அப்பசுவைச் செவ்விய புலியாகவும் மாற்றவல்ல


     சித்தன் எவனோ, சந்திரனுடைய ஔ¢ளிய கிரணத்தைச் சிவந்த கிரணமாகவும், சூரியனது செங்கரைச் சந்திரனது தண்கதிராகவும் மாற்ற வல்ல சித்தன் எவனோ, உயர்வில்லாத சிறியதோர் அணுவை ஒரு பெரிய மலையாகவும், ஒரு பெரிய மலையை மிகச் சிறியதோர் அணுவாகவும் செய்யவல்ல சித்தன் எவனோ, வீரத்துடன் தன்முன்னே தழைத்து நின்ற முப்புரத்தை அந்நாளில் ஒரு சிறு புன்னகையால் தீயிட்டெரித்த சித்தன் எவனோ - ( எ.று. )


     எப்பாலதாயினும் பேடு பெருமையுறுவ தின்மையின் “மாண் பண்ணாப் பேடு” என்று கூறுகின்றார். ஆடவர் பெண்டிர் இருபாலாருள்ளும் பேடுண்மையின் “பேடாணாய்ப் பெண்ணாய்” என்றும் பெரும்பேடாய் உள்ளதனைச் சீருடைய பெண்ணாகவும் ஆணாகவும் மாற்றவல்லவன் என்றற்குச் “சேடாகச் செய்யவல்ல சித்தன்” எனவும் உரைக்கின்றார். பெருமையும் தெளிவும் உடைய காளை யாவானைப் புல்லறிவுடைய கிழவனாக மாற்றுவன் என்றற்கு, “வெண்மைகிழமாய்” என்றும், வெண்மை யுடையவனை ஒண்மையுடையனாக மாற்றுவன் என்பதைத் “திண்மை பெறச் செய்யும் சித்தன்” என்றும் தெரிவிக்கின்றார். விருத்தமந்த வெண்மை - முதுமையும் மந்தமும் வௌ¢ளறிவும் உடையாரைத் தெளிய அறிவுடையாராகச் செய்வதைத் “திண்மை பெறச் செய்யும் சித்து” என்று இயம்புகின்றார். ஒண்மையிலா ஓடு - ஒளியில்லாத மண்ணோடு. சேட்டை - செயலால் பொன்னுக்கு மாற்றும் ஒளியும், மண்ணுக்கு அஃது இன்மையும் சேட்டை என அறிக. தேம் சிவணல் - இனிமை பொருந்துதல். நாரணற்கு மகன் நான்முகனென்பதை, “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்று நான்முகன் திருவந்தாதி ( 1 ) கூறுவதாற் காண்க. இப்படி மாறிப் பிறப்பித்தலால் இருவர்க்கும் சிறப்புக் குன்றவில்லை என்றற்கு “சீரணவச் செய்யவல்ல சித்தன்” என்றும் தெளிவிக்கின்றார். கொம்மை - பெருமை. மேல்தோலில் காணப்படும் புன்மயிரைச் “செம்மயிர்” எனவுரைக்கின்றார். அம்புலி - சந்திரன். சந்திரனது தண்ணிய நிலவை வெவ்விய வெயிலாகவும், சந்திரனைச் சூரியனாகவும் மாற்றவல்லவன் என்பது கருத்து. பம்புதல் - நிறைந்து நெருங்குதல். அங்கம் - உயர்வு. அகைதல் - தழைத்தல், மிகுதலுமாம். “கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர்” ( புறம் ) என்பது காண்க. முப்புரம் - இரும்பு, செம்பு, பொன் ஆகிய மூன்றாலாகிய மதில் சூழ்ந்த நகரம். சின்னகை - குறுநகை, புன்சிரிப்புமாம். “ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின் வீழ்வித்து” ( திருவண்டப் 158-9 ) என்றும், “எண்ணிலார் முப்புரம் எரியுண்ண நகை செய்தார்” ( ஞான, மழபா. 7 ) என்றும் சான்றோர் கூறுவன காண்க.


    

   மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு

    சிற்றுரும்பை நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்

90

   அல்லா அயனும் அரியும் உருத்திரனும்

    செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத

91

   கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்

    செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப்

92

   பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்

    சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்

93

   ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்

    சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்பொருநாள்

94

   ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்

    சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்

95

   அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்

    சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்

96

   சங்கமதே தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்

    செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற

97

   சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்

    சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்

99

உரை :

        முன் காலத்தில் பிரமனும் திருமாலும் பிணக்குற்றபோது அவர் நடுவே ஒரு துரும்பைத் தாணுவாய் நட்டு இருவரையும் பிடுங்கச் சொல்ல, அவ்விருவரும் தனித்தும் வானவரைத் தம்மோடு கூட்டியும் முயன்றும் மாட்டாவாறு செய்த சித்தன் எவனோ, மற்றவர்களைப் போலன்றி பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் செல்லாத சிவநெறிக்கண் நின்ற சித்தன் எவனோ, பொருந்துதல் இல்லாத கல்லின் கண் சுவையும் கனியின்கண் சுவையில்லாமையும் அமையுமாறு செய்ய வல்ல சித்தன் எவனோ, துன்பமற வேண்டுமென்ற நோக்கத்தால் காண முயன்ற அனைவருக்கும் அவர் மேற்கொண்டு முயன்ற யோகபாவனைகட்கு அப்பாற்பட்டவன் எனத் தெளிய வுரைக்கப்படுகின்ற உண்மை ஞானச் சித்தன் எவனோ, வீடுபெறற்குள்ள மார்க்கங்கள் பலவல்ல ஒன்றே என்று உணர்ந்துரைத்த மேலோருக்கு ‘ஆம் ஒன்றே’ என ஒத்துரைத்து அவரறிவின் கண்ணே ஒன்றி நிற்கின்ற சித்தன் எவனோ, அந்நாளில் மதுரையையாண்ட பாண்டியன் கருத்து வீண்போகாதவாறு கல்லானைக்குக் கரும்பளித்துத் தின்பித்த ஆனந்தச் சித்தன் எவனோ, விளங்கச் சொல்லப்படாத ஒன்றேமேல் இரண்டேமேல் என்னும் ஒன்று இரண்டு எனச் சொல்லப்படுவனவற்றில் நடுநின்று தெளிவிக்கும் சித்தன் எவனோ, ஏவப்பட்ட பொருள் மேற்சென்று பதியும் அத்திரத்தை மென்மலராகவும், அந்த மென்மலரை அத்திரமாகவும், பேசா ஓவியத்தைப் பேசுவதாகவும் செய்யவல்ல சித்தன் எவனோ, எவ்விடத்தும் இயங்கும் பொருளை நிலையாகவும் நிலைப்பொருளை இயங்கு பொருளாகவும் கை முதலிய கருவியாலின்றிச் சங்கற்பத்தால் மாற்றவல்ல சித்தன் எவனோ, எல்லாவற்றையும் நிலைத்த சத்தாகவும் சயம்புவாயும் ஆனந்தம் நல்கும் சித்துப்பொருளாகவும் மாற்றும் சித்தன் எவனோ, அவனே சச்சிதானந்த சிவபரம் பொருள் என உணர்க. ( எ.று. )


     சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது போல, சிறுமையைச் சின்மை என்னும் வழக்குப் பற்றிச் சிறுதுரும்பைச் ‘சிற்றுரும்பு’ என்று குறிக்கின்றார். வானவர் பலரும் கூடி வலிமை நிறைந்து அசைத்தமை நினைவிற் கொண்டு “வாய்ந்து” என்று கூறுகின்றார். மற்றவர் - மற்றத் தேவர்கள். அயன் முதலிய மூவரும் முறையே படைத்தல் காத்தல் அழித்தல் என்று மூன்று தொழில்களையும் செய்பவராதலால், “மற்றவர் போல் அல்லா அயனும் அரியும் உருத்திரனும்” என்றும், அம்மூவரும் தேவதேவர்களாய்ப் பதமுத்தி பெற்றோர் என்பதனால், அவர் நெறியைச் “செல்லா நெறி” என்றும் தெரிவிக்கின்றார். சுவை காண்டற்குரிய பொருள் வகையிற் பொருந்தாதாதலால் “ஒல்லாத கல்” என்றல் வேண்டப்பட்டது. கல்லிற்குச் சுவைதரும் இயல்பும், கனிகட்குச் சுவை யின்மையும் இயற்கைக்கு மாறாயவை; அவற்றைச் செய்வது பற்றி, “செல்லப் பணிக்க வல்ல சித்தன்” என்று இசைக்கின்றார். அல்லல் அறப்பார்த்தல் - பிறவித் துன்பமற ஞானநூற்கண் கொண்டு காணுதல். யோகக்காட்சியும் ஞானபாவனையும் காணும் நெறிகளாகும். அவற்றிற்கு அப்பாற்பட்டிருக்கும் இயல்பைப் “பாவனாதீதன் எனச் சீர்க்கின்ற சித்தன்” என்றும், பாவனைக் கெட்டானாயினும் உண்மை ஞானிகட்குக் காட்சி தந்து உவட்டா இன்பம் தருபவன் என்றற்கு “மெய்ஞ்ஞானச் சித்தன்” என்றும் புகல்கின்றார். ஆறுகள் பலவாயினும் சென்றடையும் இடமாகிய கடல் ஒன்றேயாதல் போலப் பலவாகிய மார்க்கங்கள் ஒன்றையே அடைவிக்குமாறு புலப்பட “ஒன்றென்றுரைத்து அவர்பாற் சென்று ஒன்றி நின்ற சித்தன்” என உரைக்கின்றார். மார்க்கங்கள் பல கண்டவரை விடுத்து அவை யாவும் ஒன்றேயென்று கண்ட சான்றோரை வள்ளலார் “மேலவர்” என்றும், அவர்பால் சிவம் சென்று ஒன்றி நிற்பனென்றும் இங்கே குறித்துரைப்பது நோக்கத் தக்கது. ஆனந்த சித்தராய் வந்த சொக்கநாதன் “வல்லாரில் வல்லேம்” என உரைக்கக் கேட்டு வியப்பு மீதூர்ந்து “நீர் இக்கல்லானைக் கிந்தக் கரும்பையருத்தின் எல்லாம் வல்லரும் நீரே மதுரைப் பெருமானும் நீரே” என்றதும், அச் சித்தர், “கல்லானை கன்னல் கறிக்கின்றது காண்டி” என்று சொல்லிக் கரும்பைத் தந்ததும், அது வாங்கித் தின்றதும் கருத்திற் கொண்டு, பாண்டியன் விருப்பம் வீணாகாமை புலப்பட “வீண் செல்லாது அளித்த மகாசித்தன்” என்று பரவுகின்றார். வழிபடப்படும் மூர்த்தங்களில் சிவலிங்க மூர்த்தம் ஒன்று; சிவமும் சத்தியுமாகிய மூர்த்தம் இரண்டு; நூல்கள் கூறாவிடினும் சொல்பவர் சிவமாகிய ஒன்றே மேல் என்றும், சிவம் சத்தியாகிய இரண்டுமே மேல் என்றும் கூறுகின்றார்கள். இரண்டையும் நீக்காமல் மாதொரு கூறனாய் நிற்றலும் உண்மை தோன்ற “சென்றே நடு நின்ற சித்தன்” என்று இயம்புகின்றார். சங்கமம் சிவனடியார்களையும், தாபரம் சிவலிங்கத்தையும் குறிக்கும். சிவனடியாரைச் சிவமென்றே கருதி வழிபடுவது சிவநெறியாதல் பற்றிச் “சங்கமதே தாபரமாய்த் தாபரமே சங்கமதாய் ஆற்றவல்ல சித்தன்” என உரைக்கின்றார். பட்டினத்தார் முதலிய பெருமக்கள் முடிவில் சிவலிங்க வடிவாயின வரலாறு திருவொற்றியூரவர் கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கது. சத்தும் சித்துமாய பொருள்வகை இரண்டனுள் சத்துவகை யாவும் எஞ்சாமல் அடங்குதற்குச் “சத்தெல்லாம்” எனவும், இயற்கையும் செயற்கையுமாய இருவகையுள் இயற்கையாயவை சயம்புவாதலின் அவற்றைச் “சயம்புவாய்” எனவும் கூறுகின்றார். சுயம்பு என்பது சயம்பு


     என வருகிறது. இன்பம் பயக்கும் சித்து வகைகளை ஆனந்தச் சித்து என்றும், அச் சித்து வகையே செய்வதுபற்றிச் சிவசித்தன் எனவும் தெரிவிக்கின்றார்.


    

கண்ணாலழிக்கின்ற கள்வன்


   நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை

    காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் பாட்டோடு

100

   வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்

    கண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக

101

   அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்

    கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்

102

   கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்

    கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்

103

   தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்

    கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்

104

   கற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்

    கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்

105

   தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்

    கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா

106

   மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்

    கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு

107

   மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய

    காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற

108

   பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்

    கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது

109

உரை :

        தடைவகை பலவற்றையும் குறைத்து உண்மையுணர்வின் கண் உள்ளம் ஒன்றி நிலைபெறுவித்த ஞானிகட்கும், தனது உண்மை நிலையைச் சிறப்பாகக் காட்டாமல் பொதுவகையிற் காட்டி நிற்கும் கள்வன் எவனோ, வண்டு மொய்த்து இசைக்கும் கொன்றை மலரை யணிந்தவனே எனவேதங்கள் தமது கீதத்தைப்பாடி உண்மைநிலையைக் கண்டாலும் சிறப்பாக எடுத்துரைக்குமளவுக்குக் காணலாகாத களவன் எவனோ, தொண்டு கைவருதற்கேற்ற மதிமை செறியாதவர்க்கேயன்றிச் செறிந்து செய்வன அறிவார்க்கும் உள்ளத்தே கள்ளம் தோன்றாதவாறு துணைபுரியும் கள்வன் எவனோ, எதனையும் இகழாமல் ஈட்டிய அனைத்தையும் தனக்கே கொடுத்திடும் வள்ளன்மையுடைய தொண்டர்பால் உள்ளனவெனக் கண்ட அனைத்துயைம் வரையாது பெற்றுக் கொள்ளும் கள்வன் எவனோ தன்னைத் தம்முடைய உள்ளத்தில் வைத்துக் கொள்ளும் சான்றோர்களைத் தன்னுள்ளத்தே விழுங்கிக்கொண்டு அவர் உள்ளத்தே உள்ளவற்றைக் கவர்ந்து கொள்ளும் கள்வன் எவனோ, அறிவுடைய உயிருலகின் அறிவை மறைத்து வஞ்சிக்கும் திரோதானமென்னும் சத்தி


     யைக் கொண்டு இல்லது காட்டி ஏமாற்றும் கள்வன் எவனோ, முன்வந்து தொண்டு செய்யும் உலகிலுள்ள உயிர்தோறும் ஒளித்திருந்து அவற்றின் நினைவு முதலியவற்றைக் கண்டு உலவுகின்ற கள்வன் எவனோ, விட்டு நீங்கலாகாத மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை யென்கிற களி மயக்கம் காட்டி வாழ்விக்கும் கள்வன் எவனோ, உள்ளத்தே கிடக்கும் மலமாசுகளைப் போக்கும் அறிவுடைய நல்லோரது செல்வத்தை வாங்குகின்ற கள்வன் எவனோ, குற்றமில்லாத பெண்மையின் வாயிலாகப் பிறத்தற்குரிய அனைத்தையும் பிறப்பித்து ஒடுக்குங்கால் நெற்றிக்கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவனோ, அவன் எல்லாம் வல்ல சிவன் - ( எ-று.)


     தத்து - தடை. பொறிபுலன்களின் ஈர்ப்பினால் தத்தித் தடுமாறும் நிலையின் நீங்கி ஒன்றிய உள்ளமுடையாரை, “தத்தெல்லாம் நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்” என்றும், அவர்கள் மெய்யறிவின்கண் தன்னுடை உண்மையொளியை ஓரளவு காட்டி மறைப்பதுபற்றித் “தன்னுண்மை காட்டாது காட்டி நிற்கும் கள்வன்” என்றும் இசைக்கின்றார். நிலை யுதலில்லாத உடம்பின்கண் இருந்து நெடிது காணுதற்கு, அஃது ஆற்றா இயல்பிற்றாதலின், “காட்டாது காட்டி நிற்கும் கள்வன்” என வுரைக்கின்றார். வேத ஞானம் பாச ஞானமெனவும், அதனால் பரம் பொருள் பார்ப்பதரிது எனவும் நூலோர் கூறுதலால், “மறைகள் கண்டாலும் காணாத கள்வன்” என வுரைக்கின்றார். வேதம் கீதவடிவிற் றென்றற்குப் “பாட்டோடு மறைகள் கண்டாலும்” எனக் கூறுகின்றார். அள்ளம் - கூர்த்த மதியுடைமை. அறிவிற் செறிவுடையார், செறிவிலார் ஆகிய இரு திறத்தார்க்கும் உண்மையொளி காட்டி உய்யும் நெறி யுணர்த்துமாறு பற்றிக் “கள்ளம் செறியாத கள்வன்” எனக் கட்டுரைக்கின்றார். பொருளின் சிறுமைகண்டு புறக்கணிக்காமல் ஈட்டிய சிறப்புத் தோன்ற “எள்ளம் அறக்கொண்ட எலாம்” எனவும், உள்ளவற்றின்கண் பற்றுள்ளம் தோன்றாதவாறு கொடுக்கும் உள்ளத்தை விரிவு செய்வது பற்றிக் “கொடுக்குமவர் தம்மிடத்திற் கண்டவெலாம் கொள்ளைகொளும் கள்வன்” எனவும் இயம்புகின்றார். தம்முள்ளத்தே இறைவனைக் கொண்டு மறைப்பவர்க்கு அவர் உவப்ப மறைந்து, அவர்களுடைய நினைவும் சொல்லும் செயலும் எல்லாவற்றையும் தனக்குள் ஒடுக்கிக் கொள்வது விளங்க, “தம்முள்ள ஒளித்து உள்ளவெல்லாம் கன்னமிடக் கைவந்த கள்வன்” என்று கூறுகின்றார். திரோதானமென்னும் சத்தி உயிரறிவை மறைத்துச் செய்வினைப் பயன்களை நுகர்விக்கும் இயல்பினது; திருவருளை மறைத்து உலகானுபவம் பெறுவிப்பதும், உலகியலை மறைத்துத் திருவருளனுபவம் பெறுவிப்பதும் திரோதானத்தின் செயலாதலாலும், அதற்கு முதல்வன் சிவனாதலாலும் “திரோதானமெனும் சக்தியினால் கற்பனை செய்து மயக்கும் கள்வன்” என உரைக்கின்றார். உலகியலிற் செலுத்துமிடத்து அதன் நலத்தையும் திருவருளிற் செலுத்துமிடத்து அதன் நலத்தையும் மிகுத்துக் காட்டுவதுபற்றிக் “கற்பனை செய்து மயக்கும் கள்வன்” என விளக்குகின்றார். தனக்கும் பிறர்க்கும் தொண்டு செய்து இன்புறுவதே வாழ்வாதலின், “தொண்டுலகு” என்றும், தொண்டுபுரியும் உயிர்கட்குயிராய் நின்று அவற்றின் நினைவு செயல்களைக் கண்டு கொண்டிருத்தலால், “ஆற்றலெலாம் கண்டுலவும் கள்வன்” என்றும் உரைக்கின்றார். மண், பெண், பொன் என்ற மூன்று ஆசையாலும் உளதாகும் மயக்கத்தை கள்மயக்கம் போல்வது என்பார், “கள்


     மயக்கம் காட்டி நிற்கும் கள்வனெவன்” என்கின்றார். உள்மயக்கம் மாசு - உள்ளத்தைத் தெளிவிலதாக்கி அறிவை மழுங்குவிக்கும் மலவாதனையைப் போக்கும் நல்லறிவுடையவர்களை “உள்மயக்கும் மாசு பறிக்கும் மதியுடையோர்” எனக் குறிக்கின்றார். காசு. ஈண்டு உடைமை மேற்று. “பூவேந்திக் கண்டு பணிவார்கள் காசு பறிக்கும் செட்டி பண்டறுவர் ஊட்டுதன பாலசெட்டி” ( தணிகையுலா ) எனப் பிறரும் கூறுவது காண்க. சிவபெருமான் திருவுருவத்துப் பெண்மைக்கூறு உயிர்களைப் பிறப்பித்து வாழச் செய்வதுபற்றி, “பெண்ணா லெவையும் பிறப்பித்து” எனவும், படைத்த உலகுகளை ஒடுக்குமிடத்து நெற்றிக் கண்ணாலழித்து நீறு செய்யுமாறு விளங்க, “நுதற் கண்ணாலழிக்கின்ற கள்வன்” எனவும் இயம்புகின்றார்.


    

சிற்சத்தத்திற் காட்டு சதுரன்


   நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்

    தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற

110

   மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்

    சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்

111

   நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்

    தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்

112

   முன்னை மறைக்கும் முடிபொருளென் றாய்ப்பவர்க்குத்

    தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்

113

   சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்

    சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென

114

உரை :

        விலக்கப்பட்டதென்று நினையாமல் நான் என்ற உணர்வு கொண்டு முன்னிற்போமாயின், அந்த நான் உணர்வு நாணும்படியாக அதன் நடுவே முதல்வனாகிய தனது உண்மை தோன்ற நிற்கும் வித்தகன் யாவனோ, மான் என்று கூறப்படும் மாயையைக் காட்டி உண்மையுணர்வை மறைக்கச் செய்து, அம் மாயையின் தோற்றத்தில் தனது இருப்பைக் காட்டுகின்ற வித்தகன் யாவனோ, அன்போடு நான்மறையும் பிரமனும் நாரணனும் கண்டறியத் தேடுதோறும் அறியப்படாமல் மறையும் மேலான வித்தகன் யாவனோ, பெருமை குன்றாத பழைய மறைகட்கு உச்சியிலுள்ள பொருளாம் என்று ஆராய்கின்ற வைதிகர்க்கும் புலப்படாமல் அப்பால் மறையும் வித்தகன் யாவனோ, தன்னைச் சிந்தையில் வைத்து எண்ணுகின்ற சிவயோகிகள் சுத்த சிதாகாசம் என்று கூறும் சிவவெளியில் சித்தென்னும் சொற்பொருளாகத் தன்னை யுணர்த்தும் வித்தகன் யாவனோ, அவன் சிவபரம் பொருள் - எ.று.


     நான், எனது என்ற உண்ரவுகள் உலகியற் பொருள் வாழ்வுக் குரியனவேயன்றிச் சிவம் பெறும் அருள் வாழ்வுக்கு வேண்டாதன என்று


     எண்ணாமல், நான் என்ற முனைப்பையே தொடர்ந்து கொள்வது முண்டென்பது தோன்ற “எண்ணாது நான் என்று நிற்கின்” என்றும், நிற்குமிடத்து எய்தும் அனுபவத்தால் நான் கெடுவதும் சிவம் தோன்றக் காண்பதும் நிகழ்வதுபற்றி, “நான் நாணத் தான் என்றும் நிற்கும் சதுரன்” என்றும் இசைக்கின்றார். சதுரன் - நானாவகையும் வல்லவன். நால்வகை உபாயமும் வல்லவன் என்ற பொருள்படச் சதுரன் எனப் பிறந்த சொல் பின்னர் பல்வகையும் எல்லாவகையும் வல்லவன் என்றாகி. எல்லா அறிவுகட்கும் அடிப்படையான உண்மை யறிவுடையன் என்ற பொருளில் ‘வித்தகன்’ என வழங்கி வருகிறது. இதனால், “வித்தகர்க் கல்லால் அரிது” என்ற திருக்குறளில் வித்தகர் என்ற சொற்குப் பரிமேலழகர், சதுரப்பாடுடையார் என்ற பொருள் உரைத்தார். சுத்தம், அசுத்தம், பிரகிருதி என மூன்றாய் நிற்கும் மாயை, முறையே விந்து, மோகினி, மான் என்றும் விளங்குவதுபற்றி, பிரகிருதி மாயையை “மான் என்ற மாயை” என்றும், அதன் காரியங்களாகிய உலகியற் பூதங்களும் மன முதலிய கரணங்களும் மெய் வாய் முதலிய அறிகருவிகளும், வாய், கை, கால் முதலிய செயற்கருவிகளும் உலகியற் போகம் தந்து உயிரறிவை மறைப்பது பற்றி, “மாயைதனைக் காட்டி மறைப்பித்து” என்றும், மாயா காரியங்களான அசத்தும் அசித்துமாகிய பொருள்களிற் கலந்து ஒன்றாய் நின்று உண்மை யுணர்வுடையார் உணர்ந்துகொள நிற்கும் திறம் விளங்க “மாயையில் தன் சாயைதனைக் காட்டும் சதுரன்” என்றும், அவன் தன்னைக் காட்டினாலன்றி உயிர்கள் காணலாகாமையின், “காட்டும் சதுரன்” என்றும் உரைத்தருளுகின்றார். வைதிக ஞானத்தை நோக்கச் சிவஞானம் நுண்ணிதாகலின், “நான்மறை நாடுதொறும் தான் மறையும் சதுரன்” எனகிறார். “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்பர் மணிவாசகர் நான்முகனும், நாரணனும் முறையே பாச பசுஞான மூர்த்தங்களாதல் பற்றி, இருவரும் “நாடுதொறும் தான் மறையும் மேன்மைச் சதுரன்” என வுரைக்கின்றார். வான் - பெருமை. பெருமை குன்றாத பழமறை - "வான்மறையா முன்னை மறை” எனப்படுகிறது. இருக்கு யசுர், சாமம், அதர்வணம் என நான்காக வியாசரால் வகுக்கப்படுதற்கு முன்னைய மறைகளை. இங்கே “வான் மறையா முன்னை மறை” எனக் குறிக்கின்றார். முடிப்பொருள், “வேத சிரப்பொருள்” முன்னை மறைக்கு முடிப்பொருள் என்று ஆய்பவர் சைமினி வேதாந்திகள். அவர்கட்கும் காண்பரிது என்பதை “வேதக் காட்சிக்கும் உபநிடத்துச்சியில் விரிந்த போதக்காட்சிக்கும் காணலன்” ( கந்த. 21 : 127 ) என்பதனால் அறியலாம். ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடுபவர். நிவர்த்தி முதலாகச் சாந்தியதீதை ஈறாகிய கலாந்தத்தில், சுத்த மாயா மண்டலத்துக்கு அப்பால் விளங்கும் ஞானவெளி சுத்த சிதாகாச மெனப்படும் பரவெளி; இன்ப மயமாதல் பற்றி அது “சுத்தம்” எனப்படும். ‘சிதாகாசம்’ என்ற தொடரில் சித்தென்னும் சொல் ஞானமேயான சிவத்தைக் குறிப்பது. Êசித்தென்ற சொற் பொருளாகத் தன்னைக் காட்டுதலால் “சிற்சத்தத்திற் காட்டும் சதுரன்” என்று வள்ளற்பெருமான் வரைந்துரைக்கின்றார். சொல்லைச் சத்தம் என்றும், சொல்லிலக்கணத்தைச் சத்தநூல் என்றும் வடநூலார் வழங்குவர்.


    

சிற்சபைத் தேவன்


   யாவர் இருந்தார் அவர்காண் வீற்றிருக்கும்

    தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்

115

   இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்

    செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்

116

   தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ

    நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்

117

   சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்

    சீருருவே ஒருருவாம் தேவனெவன் - ஈருருவும்

118

   ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்

    சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்

119

   தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்

    சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்

120

உரை :

        முத்தர்கள் என உணர்நிலைபெற்ற பெருமக்கள் காண வீற்றிருப்பவனும், தேவர்கள் பலவகையாற் புகழ்கின்ற தலைமையானவனுமாகிய தேவன் எவனோ, எத்திறத்து யாவரும் இவ்வண்ணம் உடையவன், இவ்விடத்தில் இருப்பவன், இவ்வியல்புடையவன் என்று அறியலாகாத செவ்வண்ணமுடைய தலைமைத் தேவன் எவனோ, மெய் வண்ணமுடைய மேலோர்கள் தாம் வாழவும், பல்வேறு அண்டங்களில் வாழும் சராசரங்கள் வாழவும், இவ்வுலகத்து நாம் வாழவும், தான் உரைத்தவையான நான்கு மறைகளும் வாழவும், உயிர்கட்கு உருவருளும் நல்லருளே சத்தியாகவும், மெய்யுணர்வே ஓர் உருவாகவும் அமைந்த தேவன் எவனோ, சத்தியும் சிவமுமாகிய ஈருருவும் என்று உணருமாறு அறிவித்து அடியார்களின் உள்ளத்திற் சென்று அமர்ந்தருளும் தேவன் எவனோ, எக்காலத்தும் தனியியற்கையியல் பிற்றென்றும், அதற்குரிய சமயம் சமரசம் என்றும் விளங்க ஞானசபையில் இருந்தருளும் தேவன் எவனோ அவன் சிவ பரம்பொருள் என்க - ( எ-று )


     முத்தர் - சிவமாம் எய்தியவர். இவர்கள் “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணல் சேவடிக்கீழ் இருப்பவர்.” காணலாகாமைக் குரிய தடையனைத்தும் கடந்தவராதலின், முத்தர் காண வீற்றிருப்பது முறையாம் என அறிக. தேவதேவன் என்றற்குத் “தேவர் புகழ் தலைமைத் தேவன்” எனத் தெரிவிக்கின்றார். “இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” என்று பெரியோர் கூறுதலால், “யாவர்களும் இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச் செவ்வணத்தன்” என இயம்புகின்றார். உலகுயிர்கள் வாழ்தல் வேண்டிச் சிவபெருமான் அருளுருக் கொள்கின்றான் என்ற உண்மையை அறிவுறுத்தற்கு “மெய்வணத்தோர் வாழ அண்டசராசரங்கள் வாழ நான்வாழ நான்மறைகள் வாழச் சார் அருளுரு சத்தி” என உரைக்கின்றார். உருவில் உயிர்கட்கு உருவருளுவது அருட்சத்தியென உணர்க. ஞானத் திருவுருவம் சிவம் என்பவாகலின்


     “மெய்யுருவின் சீருருவே ஒருருவாம் தேவன்” என்ற செப்புகின்றார். சிவமும் சத்தியும் ஆணும் பெண்ணுமாய்க் காட்சி தருதலின், “ஈருருவும்” என்றும், “ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவாரமாப் பூணுமேனும் புகலூர் தனக்கு ஓர் பொருளாயினான்” ( புகலூர் ) எனச் சான்றோர் கூறுதலால், “ஒன்றன உணர்த்தி” என உரைக்கின்றார். அன்பால் நினைக்கும் அடியவர் உள்ளமே சிவபெருமானுக்குக் கோயில் என்பது கொண்டு “அடியார் உளம் சென்றங் கமர்ந்தருளும் தேவன்” என்று கூறுகின்றார். எக்காலத்தும் மாறா இயற்கை இயல்புடைமை பற்றித் “தற்சகச”மெனவும், எப்பொருளையும் எத்திறத்தாரையும் வேறுபாடறக் கலந்துறைவது கொண்டு “சமயம் சமரசமாம்” எனவும் உரைக்கின்றார். சைவம் சமரச சமயம் என்றற்குத் திருத்தொண்டர் புராணமே ஏற்ற சான்றென வுணர்க. ஞான சபையில் இடையறவில்லாத ஞான நாடகம் நடைபெறுவது காண்டலின், “சிற்சபையில் வாழ்கின்ற தேவன்” எனப் புகழ்கின்றார்.


    

கோற்றேன் போல் மதுரிக்கும் தேவன்


   பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்

    கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட

121

   தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்

    பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய

122

   வெண்ணீ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்

    கண்ணீர் அருவி கலந்தாடி - உண்ணீர்மை

123

   என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி

    அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று

124

   புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்

    கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்

125

   கன்பர்க் கருளும் அரசே அமுதேபேர்

    இன்பக் கடலே எமதுறவே - மன்பெற்று

126

   மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே

    ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்

127

   உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்

    அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தௌ¢ளூறும்

128

   வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்

    தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்

129

உரை :

        கீழ்மைத்தாகக் கருதப்படும் பொய்ம்மையை நீக்கி மெய்ம்மை நெறியைக் கடைப்பிடித்துத் தற்போதத்தை அறவே ஒழித்து மெய்யுணர்வு தலைக்கொண்டு, நெய்பெய்த நெருப்புப்போலக் கொழுந்து விட்டெரியும் செருக்காகிய குற்றம் அறுத்து, செந்தாமரை போலும் தன் திருவடியாகிய புணையைப் பற்றிக்கொண்டு, காப்பாகத் துணைபுரியும்


     திருவெண்ணீறணிந்து உடல் நடுங்கி மயிர்க்கூர்ச்செறியக் கண்களில் அருவிபோல் நீர் சொரிந்தோட, உடற்குள்ளேயுள்ள என்புகள் உருக, அவற்றின் உள்ளிருக்கும் பிற தசை நரம்பு முதலியன உருக, இன்ப நுகர்தற்குரிய உயிர் உருக, ஊற்றெழும் அன்புருகிப் பெருக, அன்பே உருவமாகி, வன்மைக் கூறுகள் பலவும் நீங்க, புண்ணியனே, திங்களை யணிந்த முறுக்கிய சடையை யுடையவனே, பொன்னிறம் கொண்ட கொன்றைப் பூவாலாய கண்ணியை யணிந்தவனே, எங்கட்குக் களைகணானவனே, எண்ணிய எண்ணியவாறே அன்பர்க்கு அருள்செய்யும் அரசே, அமுதாகியவனே, பேரின்பக் கடலே, எங்களுடைய உறவே, நிலைத்த மாற்றுரைக்கலாகாத பொன்னே, மணியே, என்னுடைய கண்ணின் மணியே, எருத்தினை உவந்து கொண்ட மெய்ப்பொருளே என்று சொல்லி, நாடோறும் போற்றி வழிபட்டால், உள்ளத்தே ஊறி, அதன் உள்ளே உணர்வூறி அவ்வுணர்வுவழி உடம்பினுள் பக்கமெல்லாம் தேனூறி, இனித்த அமுதூறித் தெளிந்த வானம்போற் பரந்து, திங்கள் போல் குளிர்ந்து, உயர்ந்த மரக்கொம்பிற் கட்டப்பட்ட தேன் போல் இனிக்கும் தேவன் எவனோ அவன் எங்கள் சிவபிரான். எ.று.


     நில்லாது, கெட்டொழியும் பொய் ஒரு பொருளாக முற்பட வைக்கப் படுவதின்மை பற்றி, “பிற்படுமோர் பொய்விட்டு” எனப் புகல்கின்றார். நான் எனதென்னும் அகந்தை இங்கே தற்போதம் எனப்படுகிறது. இதனைப் பசு போதம், பசு நீகாரம் என்றெல்லாம் சிவாகமங்கள் குறிக்கின்றன. ‘உணர்வு’ எனப் பொதுப்படக் கூறுதலின் மெய்யுணர்வே கொள்ளப்படுகிறது. செருக்கு - காமம் முதலிய அறுவகைக் குற்றங்களில் ஒன்று; இதனை மதம் என உரைப்பதும் உண்டு. இறைவன் திருவடி செங்கமலப் பூப்போலும் தாள் எனப்படுகிறது. அன்பர் சென்னியிலும் சிந்தையிலும் அணியப்படுவது பற்றிச் செங்கமலப்பூ எனக் குறிக்கப்படுவதாயிற்று. காப்பு - ஈண்டுப் பாதுகாப்பாக அணிவது; வெண்ணீறு சிறந்த காப்பாம் என்பதை, “வேறு பல காப்புமிகை என்றவை விரும்பார், நீறு திருநெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்” ( பெரிய. பு. 1946 ) என்று சேக்கிழார் கூறுதலால் காண்க. விதிர்விதிர்த்தல் - இரட்டைக் கிளவி. உடலின் துடிப்பு மிகுதி யுணர்த்திற்று. உண்ணீர்மை என்பு - தேகத்தின் உட்கூடாகும் நீர்மையுடைய எலும்பு. என்பு முதலியன உருகிய வழியே அன்புருவமாகும் அமைதியுண்டாமென்றற்கு “அன்புருவமாகி” என இறுதியில் வைத்துரைக்கின்றார். வன்பு - உடற்கு வன்மை தரும் கூறுகள். களைகண் - இடையுறும் இடுக்கண் நீக்கி ஆதரவு செய்வது. அன்பு உடையார் தகவல்லன எண்ணாராகலின், “எண்ணியாங்கு அன்பர்க்கருளும் அரசு” என்ற இசைக்கின்றார். மன்பெறுதல் - நிலைபெறுதல்; பெருமை பெறுவதுமாம். புறப்பொருளாய பொன் மணிகளினும் உடற்குப் பிரிவரிய அகப் பொருளாய் அணியும் ஒளியும் நல்கும் நயம் பற்றி, “எம் கண்மணியே” என இயம்புகின்றார். ஏறு - எருது. அது கொடியாகவும் ஊர்தியாகவும் பயன்படுவதால் “ஏறு உவந்த மெய்ப்பொருளே” என உரைக்கின்றார். உள்ளத்தை இடமாகக் கொண்ட உணர்வு ஊறுவதும், அவ்வூற்று அமுதவூற்றாய் இருக்குமாறும் விளங்க, “கள்ளூறியண்ணித் தமுதூறி” என்றும், எங்கும் பரந்து குளிர்ந்து இனிக்கும் முதல்வனாதலின் சிவனை “வான்போற் பரவி மதிபோற் குளிர்ந்து கோற்றேன் போல் மதுரிக்கும் தேவன்” என்றும் புகழ்கின்றார். மதுரம் என்ற வடசொல் மதுரிக்கும் என் தமிழ் வினைச் சொல்லாகியுளது.


    

ஐயைந்து மூர்த்தியெனும் ஐயன்


   மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்

    நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்

130

   தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட

    மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற

131

   ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று

    காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்

132

   பூமியெங்கும் வாழத்திப் புகழ்வார் விரும்புமிட்ட

    காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க

133

   ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்

    காணஎமக் கீயும் கணேசனெவன் - மாணவரு

134

   முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்

    தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்

135

   வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்

    கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்

136

   தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்

    கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்

137

   கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற

    பாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது

138

   போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடு

    கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு

139

   வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்

    ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்

140

உரை :

        வானுலகத்துச் சென்று வாழ்கின்ற தேவர்கட்கு மாண்பு தரும் தெய்வ மகளிர்க்கு மங்கல நாணாகிய பொன்னாணைக் காத்தற் பொருட்டு, அதற்குக் கேடுசெய்யவந்த நஞ்சினை உவந்துண்ட நாதன் எவனோ, புதிது மலர்ந்த பூக்களைச் சொரிந்து அன்புடன் அரகர என்று சொல்லித் தேவர்கள்வழிபட அட்டமூர்த்தியாய் நின்ற முதல்வன் எவனோ, மிக்க புகழ் பெறவேண்டி அற்புதமான வடிவு கொண்டு எத்தகைய தேவராயினும் நேர் நின்று காண்பதற்கரிய சிவகண நாதன் எவனோ, பூவுலகத்தில் எவ்விடத்து இருந்தும் வாழ்த்திப் புகழ்கின்ற மக்கள் விரும்பிக் கேட்பன யாவையும் ஈந்தருளும் கணநாதன் எவனோ, நினைந்த படி நாம் இங்குமங்கும் இயங்குமிடத்து நெறி கோணுமாறு வரும் இடையூறு பலவற்றையும் போக்கி நேர்மைப்பயன் எய்த அருள் புரியும் கணநாதன் எவனோ, மாண்புற வரும் பழமறையின் முழுப்பொருளை நான்கு முகங்களையும் கொண்ட பிரமனுக்கு வழங்கிய அருட்கடலாகிய சாமி எவனோ, தத்தமக்கு வேண்டாத பிணக்குகளை நீக்கி உண்மை நெறி யறிவித்து வஞ்சனைபுரியும் மலவிருளைக் கெடுத்தருளும் நெஞ்சமாகிய குகையில் எழுந்தருளும் ஈசன் எவனோ, உலகங்களின் குற்றத்தைப்


     போக்கிப் பாதலத்தில் வீழ்ந்து கெடாதபடித் தனது திருமுடிச் செஞ்சடை மேல் கங்கையைச் சேர்த்து நிறுத்திக்கொண்ட கடவுளானவன் எவனோ, எங்கே இருந்தாலும் சுருங்காது விரிந்த மனமும் பண்புமுடையோர் தொழுகின்றவனும், பாம்புகளை ஆபரணமாக அணிந்தவனுமாகிய பரமன் எவனோ, செயல்வகையிற் சுருக்கமின்றி இறைவன் புகழையுரைத்து வழிபடும் தூயனாகிய மார்க்கண்டன்மேல் வந்த கொடிய கூற்றுவனை உதைத்தொழிந்த செவ்விய திருவடிகளையுடைய குழகன் எவனோ, ஆற்றல்மிக்க உலகத்தவர் துதித்துப் பரவும் மகாலிங்க மூர்த்த முதல் இருபத்தைந்து மூர்த்தங்களையுடைய ஐயன் எவனோ, அவன் சிவபெருமான். எ.று.


     நற்றவஞ் செய்து வானுலக வாழ்வு பெற்ற தேவர்களை “வான் போனார்” என உரைக்கின்றார். மாண்பு - ஈறு குறைந்து ‘மாண்’ என வந்துளது. கடலிடை எழுந்த நஞ்சு கடைதலை முற்பட்டுச் செய்த தேவர்களைக் கொன்றிருக்குமாயின் அவர் மனை மகளிர் மங்கல நாணை இழந்திருப்பராதலின், அதனைத் தவிர்த்த நலம் குறித்து, “தெய்வ மடந்தையர்க்கு மங்கலப் பொன் நாண் கொடுக்க உவந்த நாதன்” என்றும், அதன்பொருட்டு நஞ்சினை உவந்து உண்டமை புலப்பட, “நஞ்சு வந்த நாதன்” என்றும் இயம்புகின்றார். புதிது மலர்ந்த பூவை நாண்மலர் என்பர். ஆர்த்தி - அன்பு. அட்டமூர்த்தம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், உயிர், ஞாயிறு, திங்கள் என்ற எட்டுமாம். “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி” ( நின்ற திருத் ) எனச் சான்றோர் உரைப்பது காண்க. காண்பார் அறிவெல்லைக்கு அப்பாலும் செல்லுதலால், “அற்புதவடிவாய்” என்றும், சிவகணங்கட்குத் தலைவன் என்பது விளங்கக் “கணேசன்” என்றும் கூறுகின்றார். உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை உணரப்பட்டுப் பெரிதும் விரும்பப்படுவன “இட்டகாமியம்” எனப்படும். வேண்டுவோர்க்கு வேண்டியவாறே சிவ கணங்களைக் கொண்டு கொடுத்தருளுமாறு பற்றி, “இட்ட காமியங்கள் ஈயும் கணேசன்” என இசைக்கின்றார். ஏணல் - கோணல். உலக வாழ்வில் இங்குமங்கும் இயங்குங்கால், செல்லும் நெறிக்கு மாறாக இடையூறுகள் வந்து பிறழ்வித்து வருத்தத்துக் குள்ளாவது இயல்பாதலால், அதுபற்றி இறைவனை நினைந்தும் வழிபட்டும் செந்நெறிபற்றிச் சேறற்குத் துணை புரியுமாறு மக்கள் வேண்டுவதும், இறைவனும் அவர்கட்கு அருள்புரிவதும் கண்டு, “இடையூறெல்லாம் அகற்றி எமக்கு அருளீயும் ஈசன்” என வுரைக்கின்றார். மறைகள் எக்காலத்தே எவ்விடத்தே எவரால் செய்யப் பட்டன எனக் காண்டலின் அருமைபற்றி “முந்த மறை” என்றும், அதன் பொருளை உலகைப் படைக்கும் பிரமன் அறியாதிருக்கும் குறைபாட்டை நீக்கியும், மறைகளை நாளும் ஓதினும் அவற்குப் பாடறிந்தொழுகும் பண்பாடு எய்தாமை கண்டும் முழுப் பொருளை நான்முகற்கு தந்தமை வியந்து, “நான்முகற்குந் தந்த அருட்கடலாம் சாமி” என இயம்புகின்றார். உண்மை காணவிடாது குறிக்கிடும் வாதவுணர்வு அறிவுக்குறைவால் பிறப்பது பற்றி, “வாதகற்றி உண்மை மரபளித்து” என்கின்றார். குறைவுக்கு ஏது மலமாதலின் அதனை விலக்கியருளும் பெருமை பற்றி “வஞ்சமலக் கோத மலமாதலின் அதனை விலக்கியருளும் பெருமை பற்றி “வஞ்சமலக் கோதகற்றும் குகேசன்” என்றும் கூறுகின்றார். கங்கை, “சலமுகத்தால் அவன் சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து


     பெருங் கேடாம்” ( சாழல் ) என மணிவாசகனார் மொழிதலால், “உலகங்கள் சாயாமல் செஞ்சடைமேல் கங்கைதனைச் சேர்த்த கடவுள்” என உரைக்கின்றார். மலர்தலும் கூம்பலும் இல்லாமை நல்லறிவுக்கு மாண்பாதலின் “கூம்பா நிலைமைக் குணத்தோர்” எனச் சிறப்பிக்கின்றார். பாம்பா பரணப் பிரமன் என்பது, “பாம்பலங்காரப் பரன்” ( கோவை ) எனத் திருவாதவூரர் கூறுவதை நினைப்பிப்பது காண்க. தனக்கு வாழ்நாள் முடிவறிந்தும் சிவவழிபாட்டில் மனம் சுருங்காமை பற்றி மார்க்கண்டனைக் “கூம்பாது போற்றுரைத்து நிற்கும் புனிதன்” என்றும், கூற்றுவனை உதைத்ததனால் சிவக்காது கொடுமை புரிந்த அவன் உடலைத் தீண்டியதனாற் சிவந்தமை தோன்றக் “கொடுங் கூற்றுதைத்த செந்தாட்குழகன்” என்றும் குறித்துரைக்கின்றார். இலிங்கமூர்த்தமைந்து, சிவமூர்த்தமைந்து, சத்தி மூர்த்தமைந்து, கணேச மூர்த்தமைந்து, சுப்பிரமணிய மூர்த்தமைந்த ஆக இருபத்தைந்து; இதனை “ஐயைந்து மூர்த்தியெனும் ஐயன்” என அறிவிக்கின்றார்.


    

முத்தைத் தனிவைத்த முத்தன்


   வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்

    எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்

141

   தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்

    ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்

142

   எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்

    அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும்

143

   அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த

    கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்

144

   ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்

    தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக

145

   வேல்பிடித்த கண்ணன் மேவுமெச்சில் வேண்டுமிதத்

    தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்

146

   தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்

    தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு

147

   சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த

    சம்புமுனிக் கீயும் தயாளனெவன் - அம்புவியில்

148

   ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்

    தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய

149

   முத்துச் சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு

    முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு

150

உரை :

        ஐயத்தின் நீங்கிய வல்லவர்களான சான்றோர்கள் சொல்லும் வண்ணம் எல்லா நலங்களுமடையவன் எவனோ, தேவர்கள் எல்லார்க்கும் தான் தலைவனாகித் தன் திருவடி தொழுதெழும் தேவர்கட்குத் தலைமைப் பதம் நல்கும் மேலாய பொருளாயவன் எவனோ, உயிர்வகைகள் எவ்வகை உடம்பிலிருந்து கொண்டும் மனத்தின்கண் யாது விரும்பினாலும் அவனை அங்கிருந்தே பெற்றுவக்குமாறு அளிக்கும் பெருமான் எவனோ, உயர்வுடைய சிவனுடைய மலர் போன்ற திருக்கையில் உடைய சக்கரப்படையைப் பெறும்பொருட்டுத் தன் கண்களிலொன்றைப் பறித்தணிந்த கரிய திருமாலுக்கு அதை வழங்கிய முக்கண்ணன் எவனோ, மண்ணுலகில் ஆண்டுதோறும் ஓய்வின்றிச் சூல்கொண்டு மகப்பெற்ற ஒரு பெண்ணுக்கும் மருத்துவத் தாயாகி வந்து உதவிய அருளாளன் எவனோ, செவ்விய மனத்தனாய்க் கையில் வேலேந்திய கண்ணப்பர் தன் வாயிற் பெய்து சுவைபார்க்கு முகத்தால் எச்சில் செய்தளித்ததை விரும்பப்படும் அன்புடன் உண்டு உள்ளம் நேர்ந்த அருளாளன் எவனோ, தான் தந்தை என்ற முறைமையால் மகனாகிய கண்டேசர் வைத்த பாற் குடத்தை எற்றி யெறிந்த குற்றத்துக்காக அவன் முழங்காலை வெட்டிய அச் சண்டேசுரர்க்கு தான் தந்தையாய் வேண்டிய சண்டீசபதம் தந்தருளிய அருளாளனெவனோ, நாவற்கனியினைத் தான் உண்டு தன் தாள்பணிந்த சம்பு முனிவனுக்கு அதன் விதையைத் தந்து உண்பித்து உயிர்வித்த அருளாளன் எவனோ, பூவுலகில் உயர்கட்குத் தனுகரணாதிகளைத் தந்து ஆண்டவன் என்று அறிவுடையோர் பரவுமாறு பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் அருளாளன் எவனோ, காண்பதற்கினிய முத்துச் சிவிகையின்மேல் ஊர்ந்துவரும்படி முன்பு சீர்காழிப்பதியில் பிறந்துயர்ந்த முழு முத்துப்போன்ற ஞானசம்பந்தப் பெருமானைச் சிறப்பித்த முத்தன் எவனோ அவனே சிவபிரான் எ.று.


     மக்களுயிர் மலப்பிணிப்புடையதாகலின் அறிவுப் பேற்றின்கண் ஐயமும் திரிபும் எய்துவது இயல்பு; எனினும், இவ்விரண்டின் நீங்கித் தெளிந்த அறிவு பெறுகிறவர் பலரல்லர்; அறிவு முயற்சியில் வன்மை யுடையவரே நல்லறிஞராவர்; அதுபற்றியே, அவர்களை “ஐயந்தீர் வல்லார்” என அறிவிக்கின்றார். சிவனுடைய பண்பும் செயலும் உருவும் திருவுமாகிய வண்ணங்கள் அறிவார் அறிவுக்குத்தக மிகப்பலவாதலின், “வல்லார் சொல்வண்ணம் எந்தவண்ணம் அந்த வண்ணங்கள் எல்லா முடையன்” என்றும், இவ்வகையில் அப்பெருமான் பற்பல விதத்தனாவது தோன்ற “வண்ணங்கள் எல்லாமுடைய விதத்தன்” என்றும் இயம்புகின்றார். ( நாவரசர் வண்ணக் குறுந்தொகை காண்க. திருவையாறு ). தேவர்கள் வணங்குவதும் வாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழ வேண்டியாதல் பற்றி, “எல்லார்க்கும் தாம் தலைவராகத் தம் தாள் தொழும் எத்தேவர்க்கும் தலைமையீந்த பரமார்த்தன்” என உரைக்கின்றார். “வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழ வேண்டி” ( திருவா. Êதக 16. ) என மணிவாசகர் உரைப்பது காண்க. “தொழப் படுந்தேவர் தொழப் படுவானை” எனப் பிறரும் உரைப்பது இங்கே நினைவு கூரற்பாலதாம். உண்மையடியார் எங்கே எப்பிறப்பில் இருப்பினும், நினைந்தபோது சிவபிரான் அங்கே அவர்கட்கு அருள்புரிவன் என்பது சிவநெறி; “எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கே யென் றருள்புரியும் எம் பெருமான்” ( ஞான. பிரம ) என்றும், “எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி,” ( சுந்த. கழிப்பாலை ) ஆள்கின்றான் என்றும்


     சான்றோர் கூறுவதால், “எங்கெங்கிருந்து மனத்து யாது விழைந்தாலும் அங்கங்கிருந்து அளிக்கும் அண்ணல்” என்று வள்ளல் பெருமான் உரைக்கின்றார். புங்கம் - உயர்வு. கண்ணிடந்த கண்ணன் - கண்ணைப் பிடுங்கி யருச்சித்த கண்ணபிரான் ( திருமால் ). கரிய நிறமுடையனாதலால் திருமாலைக் கண்ணன் என்பது வழக்காயிற்று. முக்கண்ணன் - சிவபெருமான். ஆண்டுதோறும் சூல் கொண்டாள் என்பது தோன்ற “ஓயாது சூல்முதிர்ந்த பெண்” என்று குறிக்கின்றார். திருச்சிராப்பள்ளியிற் கோயில் கொண்ட பெருமானைத் தாயுமானார் என்பர்; அதற்கேற்பத் தலபுராணம் சிவன் தாயாகி வந்த சூல் முதிர்ந்த பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த செய்தியைக் கூறுகிறது. கண்ணப்பர் தாம் இறைவற்களித்த ஊனுணவை “வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துப்” பின் அவர் திருமுன்வைத்து, “பல்லினால் அதுக்கி நாவிற் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ்விறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்தருளும்” என மொழிந்தமை கொண்டு, “மேவும் எச்சில்” என்று உரைக்கின்றார். புசித்தென்பது பொசித்து எனவும் வழங்கும். “தீயோனைத் தந்தையெனவே அறிந்து அவன்தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்” என வரலாறு கூறுதலால், “பாற்குடத்தைத் தந்தை யென்றெறிந்தோன்” எனக் குறிக்கின்றார். சண்டேசுரரைத் தண்டி என வழங்குவது முண்மைபற்றி “தாளெறிந்த தண்டிக்கு” எனவுரைக்கின்றார். “புண்ணியம் பாதகமாகப் போற்றிய அண்ணலந் தாண்டி” ( தணிகை.பு. ) என்று கச்சியப்ப முனிவர் கூறுவது காணத்தக்கது. சம்பு நறுங்கனி - இனிய நாவற் கனி, தாள்பணிந்த சம்பு முனி தந்த நாவற்கனியைச் சிவன் உண்டு, அதன் விதையை உமிழ்தலும், சிவனது ஆணைபெற்றுச் சம்பு முனிவன் அவ் விதையை உண்டான் என்பர். “வீங்கு தீஞ்சுவைய பழம் உண்டு விளங்கிழாய், பாங்குமிழ்ந்தனம் வித்தினை, அன்னது பார்த்துளத்து, ஓங்குமன்பின் உவந்து கைக்கொண்டு ஒளிர் மூரலில் தாங்குறாது மடுத்து விழுங்கினன் தாபதன்” (திருவானைக் கா. சம்புமுனி. 8 ) என்பது இதனை வலியுறுத்தும் புராணச் செய்தி ஆன்மாவை ஆனந்த வாரிதியில் புகுத்தி ஆளும் ஆண்டவன் என்ற கருத்து, “மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டு மலம், சாய அமுக்கி யருள்தான் எடுத்து நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்தான் எந்தையர் பரதம் தான்” ( உண். வி¢ளக். 37 ) என்பது காண்க. திருவரத்துறை ஈசன் அருள் வடிவாய் வந்த முத்துச்சிவகை கண்டு, “சோதி முத்தின் சிவிகை சூழவந்து பார்மீது தாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றி நின்று, ஆதியார் அருளாதலின் அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்” ( ஞான. பு. 216 ) என்று வரலாறு கூறுகிறது. ஞான சம்பந்தரை “முழு முத்து” எனவும், அவரையுடைய நாதனாவது பற்றிச் சிவபெருமானை, “தனி வைத்த முத்தன்” எனவும் வள்ளலார் நயமுடனுரைக்கின்றார்.


    

அருள் வள்ளல்


   நாவொன் றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்

    வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று

151

   நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்

    வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின்

152

   காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை

    மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்

153

   தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது

    மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்

154

   சால்புடைய நல்லோர்க்கு தண்ணருள்தந் தாட்கொளவோர்

    மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்

155

   தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவௌ¢ளி

    மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே

156

உரை :

        பத்திப் பேறுபெற்ற திருநாவுக்கரசுக்குத் திருவடி நல்குதற்கு நல்லூருக்கு வருக என்று பணித்தருளிய வள்ளல் எவனோ, பூவுலகில் வாழும் நற்றொண்டரான சுந்தரமூர்த்திகளை நாம் தடுத்தாட் கொள்ள வந்தாராதலால், அவரை நோக்கி “நீவன்றொண்டன்” என்றுரை தருளிய வள்ளல் எவனோ, செய்து போதரும் நல்ல தொண்டிற்குக் காணிக்கையாகத் தமது கருத்தைச் செலுத்திச் சொற் பணிபுரிந்த திருவாதவூரடிகளின் சொற்களை மாணிக்கமென்று சொல்லிச் சிறப்பித்த வள்ளல் எவனோ, திருவடியைப் பேணிநிற்கும் தொண்டர் வருத்தம் எய்துவராயின், அது காணப்பொறாது பெரிய அவ்வன்பரிடையே சென்று அருள் புரியும் வள்ளல் எவனோ, முற்படும் அன்பினால் சால்புற்ற சிவத் தொண்டர்க்குத் தண்ணிய தன் திருவருள் தந்து ஆட்கொள்ளும் பொருட்டு பெரிய எருதின்மேல் இவர்ந்து வந்தருளும் வள்ளல் எவனோ, திருமால் முதலிய தேவர்கள் அயர்வுறா வண்ணம் வேண்டும் வரமளித்து, உயர்ந்தோங்கிய வௌ¢ளி மலையில் வாழ்கின்ற அருள் வள்ளல் எவனோ அவனே சிவபிரானாகிய தெய்வம். எ.று.


     மெய்ம்மையான பத்தி செய்வார் பெறும் பேறு பலவும் பெற்றவர் திருநாவுக்கரசரென்றற்குப் “பத்தி பெறு நாவொன்றரசர்” என உரைக்கின்றார். நா ஒன்று அரசர் - நாவுக்கரசர். தருவேம் என்றது, சென்னிமேல் திருவடி வைத்தருளுவது. நாவுக்கரசர் திருச்சத்தி முற்றத்தில் சிவனை வணங்கி யெழும்போது “நல்லூர்க்கு வா” என்று அருளி, நல்லூரில், அவர் “சென்னிமிசைப் பாதமலர் சூட்டி”யது இங்கே குறிக்கப்படுகிறது. திருமணக் காலத்தில் தம்மைச் சிவபெருமான் வேதியனுருவில் தோன்றித் தடுத்தாண்டபோது சினந்து, சுந்தரர் வன்மொழி வழங்கிய செய்தியை, அவரே, “தன்மையினா லனியேனைத் தாமாட் கொண்ட நாட் சபையில், வன்மைகள் பேசிட வன்றொண்டனென்பதோர் வாழ்வு தந்தார்” என உரைப்பது காண்க. சிவத் தொண்டிற்குக் காணிக்கை செலுத்துவது போலத் திருவாதவூரர் குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத் திருப்பெருந்துறைத் திருப்பணிக்குச் செலவிட்ட கருத்தை, “தொண்டின் காணிக்கையாகக் கருத்தளித்தார்” எனக் கூறுகின்றார். வாதவூரண்ணல் வழங்கிய திருவாசகத்தின் ஒவ்வொரு சொல்லும் மாணிக்கம் என்றது பற்றி அவருக்கு மாணிக்கவாசகர் என்ற சிறப்புண்டானமை விளங்க, “மாணிக்கமென்றுரைத்த வள்ளல் எவன்” என இயம்புகின்றார். திருத்தொண்டர்கட்கு வருத்தம் எய்திய போதெல்லாம் மனம் பொறாது சிவன் போந்து அருள்புரிந்த செய்திகளை வரலாறு மிகுத்துக் கூறுதலால்,


     “சற்றும் தரியாது உள்ளளிக்கும் வள்ளல்” என இசைக்கின்றார். மன்னன்பர்-பெரிய அன்பர். மன்-பெருமை, உள்ளளித்தல்-உள்ளிருந்து உணர்வும் ஊக்கமும் அருளுதல். Êசால்பு - நிறைவு. தொண்டர்களின் வாழ்க்கை முடிவில் சிவன் விடையேறி வந்து காட்சி தந்து அருளிய நலம் தொண்டர் வரலாற்றில் நன்கு கூறப்படுவது. மலையாவண்ணம் - மயங்காவண்ணம். மலைதல், ஈண்டு மயக்கப்பொருட்டு. தகை - தெளிவு.


    

நம் தெய்வம்


   நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்

    செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்

157

   நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்

    தேடக் கிடையாநம் தெய்வங்கான் - நீடச்சீர்

158

   நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்

    செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த

159

   எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்

    திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற

160

உரை :

        வௌ¢ளி மலையில் வாழ்கின்ற அப் பெருமான், நாம் செய்யும் பணிகளை என்று கொண்டு, நாரணன் முதலிய தேவர்கட்கும் பெறலரிய சிவகதியை நமக்கருளும் தெய்வமும், எப்பிறப்பினும் நாடிய வழி நமக்கல்லது நான்முகன் முதலிய தேவர்கள் பன்முறை பலவிடத்துத் தேடினும் பெறமுடியாத தெய்வமும், நீடிய சிறப்புடைய நல்ல வழிபாட்டைச் செய்யும் நம்மைப் போன்ற மக்களினத்துக்குச் சிவஞானச் செல்வம் அளிக்கும் தெய்வமும், எளிமைக் கெல்லையாகப் பேசப்படும் நாம் உலகில் இனி எக்காலத்தும் பிறத்தலும் இறத்தலும் இல்லாத திண்ணிய முத்திநிலை பெறுமாறு அருளும் தெய்வமும் ஆவன். எ.று.


     அவனது அருட்பணியை நினையாது உலகியற் பணிகளிற் சென்று உழலும் நம் கருத்தை அவ்வருட்பணியிற் செலுத்திய வழி, நம்பணியை ஏற்று மேன்மேலும் அதனையே தொடர்ந்து செய்விக்கும் நிலையை, “நம்மைப் பணிகொண்டு” என்று தெரிவிக்கின்றார். எப்பிறப்பினும் அது கைகூடும் இயல்பிற்றென்றற்கு “எம்மையினும்” என உரைக்கின்றார். சிவ பதம் செம்மையெனப்படுவதுபற்றிச் சிவகதி “செம்மைக் கதி” என்று சிறப்பிக்கப்படுகிறது. நாரணன் முதலியோர்க்கு வேறு பணி விதிக்கப்பட்டிருத்தலின், நாரணனும் நாடரிதாம் செம்மைக் கதி” எனத் தெரிவிக்கின்றார். மலமாயை கன்மங்களால் பிணிப்புண்டு திருவருணாட்டமின்றி இருக்கும் சிறுமை பற்றி, “நாடக் கிடைத்தல் நமக்கு” எளிது என உரைக்கின்றார். அந் நீடுசீர் என்பது நீடச்சீர் என்று மாறி நின்றது. நல்வந்தனை வழிபாடுகளால் உண்டாகும் சிறப்பு “நீடு சீர்” எனப்படுகிறது. ஞானமே ஒருவர்க்கு மிக்க செல்வமாவது பற்றி “ஞானச்செல்வம்” என்கின்றார். நாரணன் நான்முகன் முதலிய தேவர்களை நோக்க நாம் மிக்க எளியரெனப்படுதலின் நமது எளிமை, “சொல்வந்த எளிமை” எனப்படுகிறது.


     பிறப்பிறப்பில்லாமை முத்தி நிலை. முத்திநிலை, “அந்தமில் இன்பத்து அழிவில் வீடு” எனப்படுதலால் “திண்மை” எனல் பொருத்தமாகிறது. பிறந்திறவாத் திண்மை என்பதற்கு உலகிற் பிறந்து சாகா வரநிலை என உரைப்பதுண்டு; அது பௌராணிக சமயக் கருத்து. சிவாகம சைவ நூற் கொள்கையன்று.


     தீதென்றறிவித்த தேசிகன்


   முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்

    செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது

161

   தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்

    சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது

162

   நித்தம் தெரியா நிலைமே வியநமது

    சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென

163

   யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்

    தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி

164

உரை :

        வளமுண்டாகுமாறு மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ் என்ற மூன்றையும் கடந்து, அப்பாலுள்ள கற்பனா தீதம் என்ற சிவசாந்தப் பாழின் வாக்கிறந்த நிலையைத் தெரிவிக்கும் ஆசிரியனும், தவறுதலின்றி நீங்காத துன்ப விகாரம் எனப்படுவது யாதொன்றும் எய்தாய இன்பநெறியை விளக்கும் ஆசிரியனும், அறிவு நிரம்பாமையால் நித்தம் இது அநித்தம் இது என்று தெளிவு பெறாத நிலையிலுள்ள நமது சிந்தையைத் தெளிவிக்கும் ஆசிரியனும், பித்துக்கொண்டவரெனக் கண்டோர் கூறுமாறு எதனைத் தெளியவுணராதிருந்த நமக்கு இவ்வுலகின் துன்ப வியல்பை எடுத்துரைத்த ஆசிரியனும் அவனே என அறிக. எ.று.


     பிரகிருதி மாயையின் காரியமான ஆன்ம தத்துவ விரிவையும், அசுத்த மாயா காரியமான வித்தாய தத்துவ விரிவையும், சுத்த மாயா காரியமான நாததத்துவ விரிவையும் கண்டறியத் தோன்றவது மாயப்பாழ்; இவற்றின் காரணமான மாயை மூன்றையும் காணத் தோன்றுவது போதப் பாழ்; மாயை மூன்றையும் ஒன்றாக்கி உயிரை அதன்கண் ஒடுக்கிக் காரண காரிய வாதனையின்றித் திருவருளில் தோய்வது உபசாந்தப் பாழ். முப்பாழும் கடந்த திருவருட் சத்திநிலை முழுப்பாழ் என்று குறிக்கப்படுகிறது. இதனைத் திருமூலர் “சிவ சத்தியிற் சிவன் வியாப்தம் எனும் பாழ்” ( திருமந். 2496 ) என்பர். சிவசக்தி சிவத்தில் ஒடுங்கிய நிலை கற்பனாதீதம்; வாக்குக் கெட்டாதது என்பர்; அதனை, “முழுப்பாழுக் கப்பால் செப்பாது” செப்பப்படுவது எனத் தெரிவிக்கின்றார். தீராத்துன்பம் உய்ந்து போக்கில்லாத தென்றற்குத் “தப்பாது” எனச் சிறப்பிக்கின்றார். இடும்பைத் திரிபு என்பது, இன்பமாய்த் தோன்றித் துன்பம் தருவது. எவ்வகையினும் துன்பம் சேராத நெறியருள்பவன் என்றற்கு “யாதொன்றும் சேரா நெறியருள் நம் தேசிகன்” என இசைக்கின்றார்.


     வாழ்வில் நிலையாதவற்றை நிலையின என எண்ணித் துன்புற்றுப் போந்தமையின் கலங்கிய நமது அறிவு நிலையை, “நித்தம் தெரியா நிலை மேவிய நமது சித்தம்” எனக் குறித்துரைக்கின்றார். இதற்குக் காரணம் ஆராமை என்றற்கு “ஆராது” என்று கூறுகின்றார். உலகியல் இன்ப மயக்குப் பிறிது யாதும் நோக்கிவிடாது மறைத்தமை பற்றி, “யாதொன்றும் தேராதிருந்த நமக்கு” எனவும், உலக வாழ்வைக் கருவியாகக் கொள்ளாது உறுதியெனக் கருதித் துன்பத்துக் குள்ளாவது காட்டற்கு “இவ்வுலகம் தீது என்று அறிவித்த தேசிகன்” எனவும் கூறுகின்றார். “வையத்து வாழ் வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பதனால் உலகம் கருவியாதல் தெளியப்படும்.


    

அன்புடைய அப்பன்


   ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம் மை

    ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே

165

   வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்

    அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக

166

   இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை

    அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்

167

   எள்ளித் திரிந்தாலும் இந்தாஎன் றின்னமுதம்

    அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்

168

   டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்

    கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்

169

   காதரவு செய்து நலம் கற்பித்துப் பின்பெரிய

    ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா

170

   வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே

    அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்

171

   நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்

    அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்

172

   கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை

    ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா

173

   முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்

    அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்

174

உரை :

        முழங்குகின்ற கடல் சூழ்ந்த உலகில் குற்றமின்றி நம்மை ஆசையுடன் பெற்ற அப்பனும், குற்றம் தங்குமாறு முருட்டுத் தன்மையுடன் வளர்க்கின்ற மற்றையோர்களைப் போலின்றி அன்பிலே யூறி வளர்க்கின்ற அப்பனும், இன்பமாக, இப் பூமியின்கண் செம்மை பொருந்திய மனம் மலர்ந்து விளங்கும் நமக்கு அம்மையப்பனும், சிறப்பித்துச் சொல்லாமல் இகழ்ந்து திரிந்தாலும் மனம் கோணாமல் இதைப் பெற்றுக் கொள்


     என்று அள்ளிக் கொடுக்கும் அப்பனும், மனமுற எண்ணி எனக்கு இப்போதே அருள்புரிய வேண்டுமெனத் துதிப்போமாயின் அப்போதே வந்து அருள் செய்யும் அப்பனும், முற்பட நன்றாக வற்புறுத்தி நலம் கற்பித்து பின்பு அது செய்வது கண்டு மகிழ்ந்து ஆதரம் புரிகின்ற நம் அப்பனும், குற்றம் புரிவிக்கும் பெரிய வஞ்சனை முதலியவற்றுக் கேதுவாகிய மலவாதனையால் வருந்தி வாடுகின்றபோது நம்மை “அஞ்சாதே அஞ்சாதே” என்று குறித்தருளும் அப்பனும், நஞ்சு எனப்படும் மரண வாதனையை எண்ணி நாம் நாடோறும் எய்தும் அச்சத்தைப் போக்கி அருள் செய்கின்ற அப்பனும், நாளும் இவ்வுலகில் இரவிலும் பகலிலும் எளியவர்களாகிய நாம் செய்யும் பிழைகள் ஆயிரமாயிரம் எனினும் அத்தனையும் பொறுத்து அருள் செய்யும் அப்பனும், பெற்ற குழவி தான் நினைந்து அழுமுன்பே இரு கையிலும் எடுத்து அணைத்து முத்தமிட்டுப் பால் அளிக்கும் தாயினும் அன்புடைய அப்பனுமாவன். எ.று.


     ‘கோதின்றி ஈன்ற அப்பன்’ என இயைக்க, காற்றால் அலைப்புண்டு இடையறா முழக்கம் செய்வது கடற்கு இயல்பாதலால் “ஓசை பெறுகடல் சூழ் உலகு” என உரைக்கின்றார். வேண்டா வெறுப்புடனின்றி ஆர்வத்தோடு இறைவன் நம்மை உலகிற் பெற்றிருக்கின்றாரென்றது விளங்க, “உலகில் நம்மை ஆசையுடன் ஈன்ற அப்பன்” என்று சிறப்பிக்கின்றார். முரட்டுத் தன்மையுண்டாக வளர்த்தவழிக் குற்றம் மிகுதல் கண்டு, “மாசுறவே வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்” என மொழிகின்றார். செம்மை மனமுடையாரைச் சேயார் என்றலும் உண்டு. செம்மை மனமுடைய பெற்றோர் பெறும் பிள்ளைகள் செம்மைப் பண்பும் செயலும் உடையாராவது கண்கூடாதலின், “அம்மையப்பா” எனும் தங்கள் அப்பன் எனக் கூறுகின்றார். அம்மையென்றோ அப்பனென்றோ ஓதாமல் அம்மையப்பன் என்னும் செயல் கண்டு “அம்மையப்பா எனும் அப்பன்” என அறிவிக்கின்றார். செப்புதல் ஈண்டுச் சிறப்பித்துரைத்தல். “நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன்” ( அப்பூதி. 24 ) என்ற மூத்த திருநாவுக்கரசுபோல மொழிதல். கொடுப்பார் கொடுக்குங்கால் கூறும் மொழி. “இந்தா” எனும் சொல். உள்ளுதல் - நினைத்தல். காதரவு - அன்பின்மை; ஈண்டு வன்புறை மேற்று. வெம்மையாற் கற்பித்துத் தண்மையால் அருள்செய்தல் பெரியோரது பெருஞ்செயல்; அதுபற்றியே “காதரவு செய்து நலம் கற்பித்துப் பின் பெரிய ஆதரவு செய்யும் நங்கள் அப்பன்” என நவில்கின்றார். தனது இருப்பைக் காட்டாது தனக்குரிய வஞ்சனைப் பண்பால் குற்றம் செய்விப்பது கொண்டு மூலமலத்தைக் “கோதுறுமா வஞ்ச மலம்” என்று கூறுகின்றார். “பலரைப் புணர்ந்து மிருட்பாவைக் குண்டென்றும் கணவர்க்கும் தோன்றாத கற்பு” ( திருவருட். 25 ) என்று சான்றோர் உரைப்பது காண்க. மலவாதனையைப் பொறுத்து நுகர்ந்த வழி அது செய்யக் கடவ நோய் கெடுதலால் “அஞ்சல் அஞ்சல் என்று அருளுகின்றான் அப்பன்” என இயம்புகின்றார். துஞ்சல் - இறத்தல். துஞ்சலென்னும் வாதனை. மரண வேதனை உயிர் வாழ்க்கைக்கு இறுதி பயப்பது பற்றி “நச்சென்ற வாதனை” என உரைக்கின்றார். வலியிழந்த உடலை மாற்றி வேறு நல்வழி படைத்த உடம்பு பெறற்கு மரணம் வாயிலாதலால் நாம் அஞ்சுவது பேதமை என்பது கொண்டு, “நாம் அஞ்சும் அச்சம் கெடுத்தாண்ட அப்பன்” என்று


     புகழ்ந்துரைக்கின்றார். நிச்சல் - நித்தம். எல் - பகற்போது. சேய் இரங்கா முன் என்ற விடத்து இரங்குதல் அழுதல். “பானினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடையன்” என உரைத்த மணிவாசகத்துக்கு இஃது ஒரு விளக்கம் தருகிறது.


    

   வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை

    நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்

175

   அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது

    நன்றிரவில் சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்

176

   செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது

    நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென

177

   மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்

    நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற

178

   வன்னெறியில் சென்றாலும் வாவென் றழைத்துநமை

    நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்

179

   நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை

    நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்

180

   காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்

    ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு

181

   வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்

    நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்

182

   வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்

    நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்

183

   மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய

    நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது

184

   வாடியழு தாலெம் வருத்தம் தரியாது

    நாடி எடுத்தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்

185

   தான்பாடக் கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்

    நான்பாடக் கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்

186

உரை :

        பெரிய இவ்வுலகில் வன்மைகுன்றப் பத்து மாதம் வயிற்றிற் சுமந்து நம்மை நன்மையுண்டாகப் பெற்ற நல்ல தாயும், இப் பிறப்பில் அன்றொரு நாள் பசியால் வருந்தும் நம்மைக் கண்டு மனம் பொறாமல் இரவுப்போதில் நல்ல சோறு கொணர்ந்தளித்த நல்ல தாயும், எந்நாளும் அருட்பண்பால் செம்மையில்லாத சிறு தெய்வங்களை வணங்கச் செய்யாமல் நல்வழியில் நம்மை வளர்க்கின்ற நல்ல தாயும், பெரு முழக்கம் போலச் சிறிது சிறிதாகப் பெருகும் பெரிய குற்றங்களை எண்ணி மேன்


     மேலும் செய்தாலும் நாடோறும் அவற்றைப் பொறுத்தருளும் நல்ல தாயும், துன்பம் பெருகுகின்ற வன்னெறியில் சென்றபோதும், வா என்று சொல்லி அழைத்து நம்மை நன்னெறியிற் செலுத்துகின்ற நல்ல தாயும், செம்மை நெறிபற்றி நாம் தேடிச் செல்லாவிடினும் நம்மைத்தேடி வந்து உண்மை யறிவு தந்து பின்னை நாம் தன்னைத் தேடிவருமாறு செய்யும் நல்ல தாயும், நல்லதற்குரிய காலம் எய்துந்தோறும் அதனையறிந்து அன்பு கனிந்து நல்லருளாகிய அறிவுப்பாலை நிலவுலகில் பரிந்தளிக்கும் நல்ல தாயும், மிக்குறும் வெவ்விய பிணியும் வேதனையும் துக்கமும் துயரமும் பசிப்பிணியும் ஆகியவற்றை அறிந்து போந்து தீர்த்தருளும் நல்ல தாயும், பூமிமேல், எம்மை வெந்நீரால் ஆட்டினால் எமது மெய்வருந்தும் என்று நினைந்து அருளாகிய நல்ல நீரால் ஆட்டி வளர்க்கும் நல்ல தாயும், எவ் வகையினும் மேம்பட்ட விரிந்த உலகத்து நம்பால் அன்புடைய தாயர் நாலாயிரவ ரெனினும் அவரினும் மேலாய நல்ல தாயும், எத்துணை ஆறுதல்களையும் ஏற்காமல், வாடி அழுதிட்டால் நம் வருத்தம் கண்டு மனம் பொறுக்காமல் தேடி வந்து கையால் எடுத்து மார்போடணைத்துக் கொள்ளும் நல்ல தாயும், நீண்ட இவ்வுலகின்கண் தாயாகிய அவள் பாடும் பாட்டைக் கேட்டு அடியேன் மனம் களிப்பதற்குமுன்பு, நான் பாடுவது கேட்டு மகிழ்ச்சி மிகும் நல்ல தாயும் ஆவன். எ.று.


     மன்னுலகு என்புழி, மன்னைச் சொல் பெருமை மேற்று. கருக்கோடற்கு முன்னிலவும் மெய்வன்மை மகளிர்க்குக் கரு முதிரமுதிரக் குறைந்து மென்மையுறுதலின், “வன்மையற” எனக் குறிக்கின்றார். தாய் வயிற்றில் கருமுதிர்ந்து பிறப்புக்குரிய செவ்வி எய்துங்காறும் தாய் வயிற்றில் சுமக்குமாறு செய்பவன் இறைவனாதல் உணர்த்தற்குப் “பத்து மாதம் சுமந்து நன்மைதரப் பெற்ற நற்றாய்” எனவுரைக்கின்றார். முன்னைப் பிறப்புக்களிலன்று, இந்த இப் பிறப்பில் என்றற்கு “இம்மை” என்றும், வள்ளலாரது வரலாற்றுக் குறிப்பாதல் தோன்ற “நம் பசி கண்டு அந்தோ தரியாது இரவிற் சோறளித்த நற்றாய்” என்றும் இயம்புகின்றார். சிறு தெய்வங்களை வழிபடுவோர் உயிர்க்கொலை செய்தல் கண்டு, “அருட் செம்மையிலாச் சிறிய தேவர்” என்று கூறுகின்றார். சும்மை - ஆரவாரம். சிறிது சிறிதாய்க் கூடிப் பெருக்கும் முழக்கமுமாம். பெருங்குற்றம் உண்டாவதை முற்பட எண்ணிச் செய்தலைப் “பெருங்குற்றம் முன்னி” என்றும், மேன்மேற் செய்தவழிப் பொறாது ஒறுத்தலே முறையாயினும் பொறுக்கும் அருணலம் குறித்து “மேன்மேற் செயினும் பொறுத்தருளும் நற்றாய் காண்” எனவும் நயமுறக் கூறுகின்றார். அறிவினுள் மன்னி நின்று அழைக்கும் திறத்தை “வாவென்றழைத்து நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்” என இயம்புகின்றார். அன்புருவாகிய தாய், தன் குழவிக்கு அஃது இருக்குமிடம் தேடிக் கண்டு அன்புகாட்டிப் பின் அது தன்னைப் பின் தொடர வருவதுபோலும் அருட்செயலை விதந்து, “நாம் தேட முன்னம் நமைத் தேடிப் பின்பு தனை நாம் தேடச் செய்கின்ற நற்றாய்” என உரைக்கின்றார். காலம் வாய்க்குமிடத்து அருள் ஞானம் வழங்கும் சிறப்பை “நல்லருட்பால் ஞால மிசையளிக்கும் நற்றாய்” என்று காட்டுகின்றார்.


    

அருட் சுற்றம்


   ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்

    கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்

187

   இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்

    டன்பாய் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ

188

   ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்

    சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால்

189

   இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்

    துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்

190

   தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்

    தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்

191

   இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்

    தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே

192

உரை :

        சிவானந்தப் பெருநிலையத்தைப் பாடும் சிவஞானத் திருமணத்தைச் செய்துவைக்கும் திருவருளாகிய நங்கையைத் தந்து நமக்கு ஏற்ற திருமணம் செய்துவைக்கும் அம்மானும், தேனும் இனிய பாலும் அமுதும் முதலிய அனைத்தும் ஏக்கமுறும்படியாக இனிய அருளைக் கொண்டு அன்போடு விருந்து செய்தோம்பும் அம்மானும், வலிய தீவினை யென்னும் சூழ்ந்த கடலில் வீழ்ந்து மனம் அழுந்தும் நம்மை அருட்கையால் எடுத்துப் புண்ணியக் கரையில் ஏற்றும் துணைவனும், விரும்பப் படுகின்ற நற்குணத்தால் எய்தலாகும் எத்தகைய இன்பத்தையும் இதுவென்றிதுகாறும் அறியாத நமது துன்பத்தைத் துடைத்தருளும் துணைவனும், வலிய பிறப்பென்னும் தீநெறியிற் சென்று அறிவு மயங்கும் நமக்குத் தூய நெறி இது என்று உணர்த்தும் துணைவனும், இந்தப் பெரிய நிலவுலகில் இன்று தொடங்கிய தென்றற்கின்றி இயல்பாகவே நமக்குத் தொன்றுதொட்டு வந்த சுற்றமும் அப்பெருமானே என்க. எ.று.


     வான்பாடும் ஞானம் - சிவானந்தப் பேரின்பத்தைப் பாடும் திருவருள் ஞானம். ஞானம் பெறுவதைத் திருமணமாகக் கற்பனை செய்து கூறுவது சமயச் சான்றோர் மரபு. யூ¤ருவருள் ஞானத்தைத் தான் பெற்ற பெண்ணாக்கி, நமக்கு மணம் செய்விக்கும் உறவு முறை நோக்கிச் சிவபிரானை, “மணம் செய்விக்கும் அம்மான்” என்று உரைக்கின்றார். சீவகன் கேவல ஞானம் பெற்றது கூறவந்த திருத்தக்கதேவர்” “கேவல மடந்தையென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொடு பாகமாகக் காவலன் தானோர் கூறாக் கண்ணிமை யாது புல்லி மூவுலகுச்சி யின்பக் கடலினுள் மூழ்கினானே” ( சீவக. 3117 ) என்பது காண்க. இளையர்க்குக் கல்வி கற்பிப்பதையும், திருமணச் செய்தியில் வைத்துக் “குழைமுக ஞானமென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்” ( சீவக. 368 ) என்பது காண்க. தாயோடு உடன்பிறந்து தான் பெற்ற மகளை மணம் செய்துகொடுக்கும் உரிமை முறையுடையவன்


     அம்மான். தான் ஈட்டிய பொருளைப் பெறும் உரிமையுடையானை மகன் என்பதுபோல, பெற்ற மகளைப் பெறற்குரியானை மருமகன் என்பது தமிழ் வழக்கு. மருகன் என்ற சொல் வேறு; அது வழி வந்தவன் என்று பொருள்படுவது. பிற்காலத்தார் பொருள் வேறுபாடு நோக்காது மருகனையும் மருமகனையும் ஒன்றாகக் கருதி வழங்குகின்றார்கள். பெண்ணை மணந்த மருமகற்குப் பெற்றவன் பெருவிருந்து செய்து வழக்காயினமையின், “இன்னருள் கொண்டு அன்பால் விருந்தளிக்கும் அம்மான்” என்று எடுத்து மொழிகின்றார். தீச் செயலால் விளையும் பயனைப் பாவம் என்றும், நல்வினையின் விளைவைப் புண்ணயமென்றும் வடநூலார் கூறுவர். செய்வினையைக் கிரியையென்றும், செயப்படு பொருளைக் கருமம் என்றும், நற்கருமத்தைப் புண்ணியமென்றும், தீய கருமத்தைப் பாவம் என்றும் வடமொழியாளர் கூறுவர். சொற்பொருளைத் தூய்மை செய்து கற்கும் கல்வி சீர் குலைந்தமையின் வினையையே பாவமென்று வழங்கும் பொய் வழக்கு நாட்டில் நிலவுகின்றது. தீவினையின் பயனாய்க் கடல் போற் பெருகி நுகர வேண்டியிருப்பது புலப்பட “வன்பாவ ஆழ்கடல்” எனவும், அது நுகர்ந்தே கழிக்கப்படுவதுபற்றி “வன்பாவம்” எனவும் குறிக்கப்படுகிறது. வீழ்ந்தவரை அன்பால் எடுத்து விடுபவர் துணைவர்; துன்பம் துடைப்பதும் நெறி காட்டிச் செலுத்துவதும் துணைவர் பணி. அதனால், “துன்பம் துடைக்கும் துணைவன்”, “தூநெறி காட்டும் துணைவன்” என்றெல்லாம் சொல்லுகின்றார். விரும்பப்படும் நற்குணம், “வீழ்குணம்” எனப்படுகிறது. தீநெறியால் தீப்பயனும் அதனால் துன்பப்பிறப்பும் உண்டாவது விளங்க “வன்பவமாம் தீநெறி” என்கின்றார். தியங்குதல் - மயங்குதல். Êசிவனது தொடர்பு “என்று நீ அன்று நான்” என்ற அனாதித் தொடர்பு எனற்கு, “தொன்று தொட்டு வந்த சுற்றம்” என்றும், அதுதானும் திருவருள் தொடர்பு என்றற்கு, “அருட் சுற்றம்” என்றும் அறிவுறுத்துகின்றார்.


உயிர் போன்ற நேசன்


   ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த

    நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென

193

   வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு

    நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக

194

   ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை

    நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்

195

   புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு

    நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்

196

   உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு

    நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து

197

   வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்

    நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்

198

   பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்

    நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்

199

   ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்

    நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்

200

உரை :

        நுண்ணிய உடம்பின் தொடர்புண்டாகிய அந்நாளிருந்தே அதன்பால் அன்புற்றொழுகும் அரிய உயிரினும் சிறந்த நட்பை நம்பால் வைத்த நேசனும், பேய் கொண்டரைப்போல இருப்பதை வாங்கிக் கொள்ளற்கு மறந்தொழிந்தாலும், நம்மை மறந்தும் நீங்குதலில்லாத நேசனும், தீமை விளையுமாறு செய்யப்படுகின்ற ஆபத்தான இடம் காலங்களில் இந்தா என்று திருவருளை நீட்டித்தருகின்ற நேசனும், பல்லுயிரும் கூடி வாழும் இவ்வுலகில் அற்பத் தன்மையையுடைய மாயைச் சூழலிற் புகுந்தோறும் நம்மைத் தடுத்து, இங்கே நில் என்று இருக்கச் செய்தருளுகின்ற நேசனும், சில்லென்று குளிரும்படி உடற்குள் புகுந்து மற்றாகும் பொருளைத் தன்னை மறந்து உண்டொழிந்தாலும், அதுபற்றி நம் மேல் வெறுப்புக்கொள்ளாத நேசனும், புறத்தே நட்பும் அகத்தே வஞ்சமும் கொண்டு வாழ்ந்தாலும், அதனைத் தான் அறிந்தும், சிறிதும் மனம் கொள்ளாத தூய நேசனும், குறைவில்லாத உலகிலுள்ள நாம் எளிதிற் கிடைக்காத பண்டம் எதை விரும்பினும் அதனை நேர் நின்று அளித்துவரும் நேசனும், மிக்க அன்புடன் இவ்வுலகத்தும் அவ்வுலகத்தும் வேறு எவ்வுலகத்தும் உயிர்போல் நமக்குக் கிடைத்த நேசனும் அப்பெருமானே யாவன், எ.று.


     ஆயமுடல் - நுண்ணுடல். ஆய்தல் - நுணுகுதல் என்பர் தொல்காப்பியர். உயிர் எய்தும் துன்பம் அனைத்திற்கும் உடம்பு காரணமாயினும் உயிர் அதனை விடுதல் இல்லாத பெருங்காதலுடையதாகலின், “ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிர்” என உரைக்கின்றார். “துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்” ( குறள் ) என்பர் திருவள்ளுவர். உடம்பின் நிற்கும் காலத்து சிறிது நீங்கினும் மீள எய்தலாகாமைபற்றி உயிர் “ஆருயிர்” எனப்படுகிறது. மறதி மிக்கவர் பேய்பிடித்தவர்போல் அலைவது பற்றி, “பேயரென மறந்தாலும்” என்றும், அக் குற்றம் காரணமாக நேசம் கெடாதவர் என்றற்கு “நம்மைவிட்டு நீங்காத நம்முடைய நேசன்காண்” என்றும் இயம்புகின்றார். தீங்குண்டாகுமாறு தீவினை செய்யப்படுவதுண்மையின் அதனைத் “தீங்கா ஈட்டுகின்ற ஆபத்து” எனத் தெரிவிக்கின்றார். கொடுப்பார் கொடுக்குமிடத்து வழங்கும் வடைமொழி, சேய்மையில் நின்றவழிக் கொடா தொழியாது நீட்டித் தருமாறு தோன்ற “நீட்டுகின்ற நம்முடைய நேசன்” என உரைக்கின்றார். பல்லுயிரும் பல்பொருளும் கூடிக்கலந்த பொழுதே உலகவாழ்வு இனபம் தருவது விளங்கக் கூட்டுலகு என்று குறிக்கின்றார். துன்பச் சூழலை மாயை என்கின்றார். துன்பத் தன்மை தோன்றாது மறைந்துள்ளமை பற்றி “மாயை” என உரைக்கின்றார். அறியாது சென்று கால் வைக்கும்போது அதன் விளைவு அறிந்திருத்தலின் அன்பினால் தடுத்து நிறுத்தும் நலம் விளங்க “நில்லென் றிருத்துகின்ற நேசன்காண்” என்று கூறுகின்றார். உள்தூ - உள்ளுடற்கு நல்லது செய்யும் மருந்து. கேளாது செய்தல் பற்றி வரும் துன்பத்துக்கு மனம் சலித்து வெறுப்பெய்தல் நிட்டூரம். செல்லும் உலகெங்கும் சிவன் செம்பொருளாய்த் திகழ்கின்றமை பற்றி, “இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும் உயிர் போற் கிடைத்த நேசன்” என்று கூறுகின்றார்.


    

நம்மை உடையவன்


   தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்

    கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற

201

   விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்

    கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற

202

   உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே

    கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்

203

   ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்

    சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி

204

   நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து

    தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து

205

   நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்

    சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்

206

   ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா

    தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்

207

உரை :

        நாம் செய்யும் செயல்வகை பலவும் அப் பரமனுக்கு திரண்டு வெம்மை தோற்றுவிக்கும் அளவான குற்றமாயினும் பொறுத்துக்கொள்வதன்றிக் கோபமே கொள்ளாத கோமானும், பாவம் தீரத் திறையாகச் சொல்லற் கமைந்தது நாம் செய்யும் அன்பாம்; அது அன்றி, மண்ணுலகத்து வேற்றசர்போல நம்மிடத்தே திறையே வாங்குவதில்லாத கோமானும், ஊக்கமிகும் வகையில் உண்டு மகிழும் ஊணும் பிற உடையும் பூணாரமும் ஊர் முதலியனவமு தான் படைத்து இவ்வுலகில் நமக்கு அளித்தருளும் கோமானும், மண்ணுலகில் பற்பல உகங்கள் தோன்றி மறைந்தாலும் மறைவதில்லாத செல்வமாய் இருப்பவனும், நல்லறிஞர் காலத்தால் முற்பட அறிந்து ஆராய்ந்து நாடோறும் தவம் கிடந்து தேடி நமக்கு வைத்த பெருஞ் செல்வமாய் இருப்பவனும், பக்கத் தேயிருந்து எத்தனை நாளைக்குக் கொடுத்தாலும் நாடோறும் கொடுத்தாலும் குறையாது பெருகச் சேமித்து வைத்த செல்வமாய் இருப்பவனும், பூவுலமாகிய இங்கே யிருப்பினும் வானுலக முதலிய மேலுலகு செல்லினும் நம்மை விட்டு நீங்காமல் உயர்ந்த அருள் புரிந்து நம்மைத் தனக்கு உடைமையும் அடிமையுமாகவுடையவன் எ.று.


     தாபம் - வெப்பம். செய்யப்படும் குற்றவகை பலவாய்த் திரண்ட விடத்துத் தலைவராயினார்க்கு மனத்தே வெகுளுதற்குரிய வெம்மை யுண்டாகும்; அக் கருத்து விளங்கவே, “சேர்ந்து மிகத் தாபம் செய்குற்றம்” என உரைக்கின்றார். கோமான் - வேந்தன். வேந்தர்கட்குச் சினமும் இகலுணர்வும் இயல்பாவது பற்றி, நூலோர் அவர்களைச் “சினவேந்தர்”, “இகல் வேந்தர்” என்பர். சிவபெருமான் அவர்களின் வேறாய ஒப்பற்ற தனியருளரசன் என்றற்குக் “கோபம் செய்யாத கோமான்” என்று கூறுகின்றார். நாம் அப் பெருமானுக்குச் செய்யும் உண்மையன்புதான் சிவ வேந்தற்குச் செலுத்தும் அரசுக் கடமை


     என்பார். “விள்ளும் இறை நாம் அன்பு மேவல்” என்று கூறுகிறார். அரசியல் நூல், அரசுக்கு இறுக்கும் இறை கடன் என்றும், அதனைச் செலுத்தாமை பாவம் என்றும் உரைக்கிறது. அதனால், “பாபம் அற விள்ளும் இறை” என்றும், மண்ணகத்தரசர் ஆறிலொன்றென வகுத்து முறை செய்துகொள்வது தோன்ற “வேற்றரசர் கொள்ளும் இறை” என்றும் இயம்புகின்றார். உள்ளம் - ஊக்கம். ஊணும் உடையும் பூணும் பிறவும் உழைப்புக்கு உள்ளமும், அவ்வுழைப்பு வாழ்வுக்கு வளமும் தருதலின், இவற்றை வழங்கும் சிவபெருமானை “நமக்கு இங்களிக்கும் கோமான்” எனக் குறித்து மொழிகின்றார். வீடு நிலம் முதலியன ஒருங்கு அடங்க “ஊராதிகள்” என்று ஓதுகின்றார். நாட்டின் இயற்கைச் செல்வங்கள் காலமாறுபாட்டால் தேய்ந்து வேறுபடுதல்பற்றி, “உகங்கள் பல பலவாய்ச் சென்றாலும் செல்லாத செல்வம்” என்று செப்புகின்றார். நல்லறிஞர் அரிது முயன்று தேடி வைக்கும் சிறப்பினதாதலின், “நல்லறிஞர் நாளும் தவம் புரிந்து தேடி வைத்த செல்வம்” எனத் தெரிவிக்கின்றார். இடுக்கண்கள் அடுக்கி வரினும் விடாது செய்யும் முயற்சி தவம் என அறிக. ஒன்றை அறிவால் நாடுமிடத்து நாடு இடை முயற்சி தவம் என அறிக. ஒன்றை அறிவால் நாடுமிடத்து நாடு இடையிட்டும் காலம் இடையிட்டும் ஆராய்ச்சி சேறலின், “முன்தாவி நாடும்” என உரைக்கின்றார். ஈயக் குறைதல் செல்வத்திற் கியல்பு. “நின்று தின்றால் குன்றும் மாளும்” என்பர். சிவமாகிய பெருஞ் செல்வம் கொடுப்பக் குறைபடா இயல்பிற்றென்றற்கு, “நாளும் நல்கிடினும் தானுலுவாச் சேமித்த வைப்பு” என்று இசைக்கின்றார். உலகியல் தலைவர் போலாது சின்னாளிருந்து பின் தலைமையும் உடைமையும் இழந்து கெடும் சிறுமையுடையனல்லன் என்றற்கு “யாங்குறினும் விட்ட கலாது நம்மை யுடையவன்” என்றும், விடாமைக்குக் காரணம் அவனது பேரருளுடைமை என்றற்கு, “அருளால்” என்றும் இயம்புகின்றார்.


    

செம்பவளச் செம்மேனி யழகன்


   கங்கைச் சடையழகும் காதன்மிகு அச்சடைமேல்

    திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்

208

   சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்

    ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்

209

   நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்

    போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி

210

   புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்

    கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம்

211

   நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த

    நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற

212

   முல்லை முகையாம் முறுவலழ கும்பவள

    எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரை

213

   தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க

    வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்

214

   கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்

    தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி

215

   வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது

    கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்

216

   சைவம் முதலாய்த் தழைக்க அருள் சுரக்கும்

    தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்

217

   துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்

    கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்

218

   எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்

    தௌ¢ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்

219

   சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்

    நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி

220

   வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்ணீறு

    சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்

221

   தானோங்கும் அண்டமெல்லாம் சத்தமுறக் கூவுமொரு

    மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்

222

   ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்

    காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே

223

   ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்

    வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்

224

   சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்

    சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்

225

   பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்

    மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்

226

   மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்

    தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த

227

   கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்

    கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்

228

   ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்

    கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும்

229

   சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று

    தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து

230

   மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய

    செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த

231

   செம்மை மணிமாலையைச் சேர்ந்த மரகதம்போல்

    அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்

232

   சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்

    பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்

233

உரை :

        கங்கை தங்குகின்ற சடையின் அழகும், கண்டாருளத்தில் அன்பு மிகுவிக்கும் அச் சடைமேல் திகழும் பிறைச் சந்திரனுடைய திருவழகும்; அப் பிறைமேல் வீழ்ந்து விளங்கும் கொன்றைப் பூமாலையின் அழகும்; அம்மாலையில் நிறைய மொய்த்து விளங்கும் வண்டுகளின் வரிசை யழகும்; தெளிந்த அறிவர்க்கும் காண்பரிய திருநோக்கின் அழகும்; அதன்மேல் ஆர்ந்த நெற்றியின் அழகும்; விலக்குதற்கரிய அந் நல்ல நெற்றியில் உள்ள பொட்டழகும், அதனோடு தங்கிய திரிபுண்டரமாக் இட்ட திருநீற்றின் நல்ல அழகும்; தனது அழகைக் கண்டவர் கட்குப் பொன்போன்ற தனது திருவருளைச் சொரியும் கண்ணழகும்; அடியார்களின் விருப்பம் நிறைந்த நெஞ்சமாகிய மலரிடத்து மிக்கெழும் மணத்தை உவந்து நுகரும் அழகிய குமிழ்போன்ற மூக்கின் நல்லழகும்; ஒளி பொருந்திய முல்லையரும்பு போலும் பல்லழகும்; பவளத்தின் ஒளி வளரும் செவ்விய இதழின் அழகும்; நல்லோர்களைத் தெய்வத்தன்மை பொருந்திய இனிய பாலில் தேன் கலந்தாற்போல் இனிமை விளங்க வா என்று சொல் வழங்கும் மலர்போன்ற வாயழகும், தாமரைப் பூவிலிருக்கும் தலைவனான பிரமதேவன் பாராட்டும் சங்கக் குழையின் அழகும்: அன்பர்களின் அன்பு மொழியாகிய தேன் சென்று பாயும் வள்ளையிலை போன்ற காதின் அழகும், அடியேன் தொழுது விரும்பியவைகளை நின்ற விடத்து நின்று விண்ணப்பம் செய்வேனாக, அவ்விடத்தே எழுந்தருளி அது கேட்டு அருள் புரியும் நீண்ட செவியழகும்; நாட்டில் உயர்ந்து விளங்குகின்ற சைவம் முதலாகத் தழைத்து ஓங்கச் சமயங்கட்கு அருள் சுரக்கும் தெய்வத் திருமுகத்து ஒளிரும் அழகும்; தெய்வ முகத்துக்கேற்ப உள்ளம் குளிரவும் உயிர் குளிரவும் மெய் குளிரவும் கருத்திற் கொண்டருளும் கருணைக் குறிப்பின் அழகும்; உள்ளறிவாய்ப் புறக்கணித்தற்கிடமில்லாத மேன்மையான உலகெல்லாம் தழைக்குமாறு ஒளிர்கின்ற தௌ¢ளிய அமுதம் போன்ற சிரிப்பழகும்; உள்ளத்திருந்து ஓங்கி வரும் சீலமாகிய திருவருட்கு இலச்சினையாக நிற்கும் நீலமணிபோன்ற கழுத்தின் அழகும்; மயக்கத்தின் நீங்கி வாழ்வுற்று விளங்கும் அன்பர் மனம் போன்ற வெண்ணீறு பரவி ஒளி சிறந்து நிற்கும் அழகிய தோளழகும்; தாழ்விலாது ஓங்கியுள்ள அண்டமெலாம் தன் ஒலி பரவுமாறு கூவும் தனித்ததொரு மான் இருந்து சிறக்கும் சிவந்த கையழகும்; உடம்பின் வழியாக மிக்குறும் ஆணவமாகிய கூற்றினை அழித்தற்கென ஒளிரும் மழுப்படையை அனைவரும் காண ஏந்திய சிவந்த தாமரை போன்ற கையினழகும்; வெட்கம் மீதூர்ந்து ஏக்கமும் எம்மைப் போல்வாருடைய அச்சமுமெல்லாம் போக்குகிற அபயமருளும் பூப்போன்ற கையழகும்; தீங்கு செய்யாத சீர் வரவும் ஏனை எல்லாச் சிறப்பும் எய்தவும் அருள் வரம் நல்கும் ஔ¢ளிய கையழகும்: பெரிய பாம்பாகிய ஆபரணமும் வெண்மை யான அழகிய திருநீற்றுப் பொடியும் என்பினாலாகிய அழகிய மாலையும் கிடந்து விளங்கும் மார்பின் அழகும்; மேலுலகத்தவர் உடுத்த ஆடை யெல்லாம் நிகராமையின் நாணி விலக, புலியினது தோலை நன்கு தைத்தணிந்த தோலாடையின் தையலழகும்; கீழ்ப்பால் அழகு விளங்க அரை ஞாணாகக் கொண்டணிந்த கீளழகும்; கீளொடு சார்த்தியணிந்த கோவணத்தின் மிக்க அழகும்; கீளணிந்த கோலத்தோடு ஒட்டிநின்ற


     மெய்யன்பர் மனத்தையெல்லாம் சேரக் கட்டின வீரக்கழலின் அழகும்; இருவகை யோகமும் அணிமா முதலிய எண்வகைச் சித்தியும் கைவரப் பெற்ற யோகிகளின் சிந்தையின்கண் தேன் போன்று இனிக்கும் திருவடிகளின் அழகும்; சங்கை செய்து ஓதுதல் கொண்ட வளவிய வேதங்களும் திருமாலும் பிரமனும் காணுதற்கில்லாத சிறப்பமைந்த திருவடியின் சிறப்பழகும்; புகழ்பெற்ற சிவந்த மணியாலான மலையிற் படர்ந்த மரகதக் கொடிபோல் அம்மையொருபால் பொருந்தியருளும் அருளழகும், மிகு புகழ் கொண்ட செம்பவளம் போன்ற சிவந்த திருமேனியழகும் பார்த்தபடியிருந்தால் நம் முன் பசி தோன்றாது என அறிக.


     கொன்றை, சிவனுக்கு முடிக்கண்ணியும் மார்பிலணியும் தாருமாகலின் “சார்ந்திலங்கும் கொன்றைத்தார்” என்று கூறப்படுகிறது. தெய்வம் விரும்பும் மலரின்கண் வண்டு மூசா என்பர்; சிவன் அருளே திருமேனியாக வுடையனாதலின், அவனது கொன்றை மாலையில் வண்டு மொய்த் தழகு செய்கின்றன என்றற்கு “அத்தார்மேல் ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகு” என்று கூறுகின்றார். அழகு நிறைந்து ஒழுகாமை புலப்படத் “தேக்குதிரி புண்டரத்தின் நல்லழகு” என்று உரைக்கின்றார். திருவருளின் அருமை புலப்பட, “பொன்னருள்” எனப் புகழ்கின்றார். குமிழ் - குமிழம்பூ; இது மக்கள் மூக்கிற்கு உவமமாக உரைக்கப்படுகிறது. பவளத்தின் நிறத்துக்கும் ஒளிக்கும் எல்லையாவது விளங்கப் “பவள எல்லைவளர் செவ்விதழ்” எனக் கூறுகின்றார். எல் - ஒளியுமாம். ‘நல்லவரை வா என்றருளும்’ என இயையும். தேவென்ற தீம்பால் - தெய்வத் தன்மை பொருந்திய இனிய பால். மண்ணகத்தே உண்டவர் உடலூனை வளர்க்கும் ஆன்பால் போலின்றி தெய்வத் தன்மை நல்குவதென்றற்குத் “தேவென்ற தீம்பால்” எனச் சிறப்பிக்கின்றார் என அறிக. பூவொன்றும் கோன் - பிரமதேவன். Êசிவனது சங்கவெண் குழையணிந்த செவிகள் பிரமன் ஓதும் வேத கீதத்தை விரும்புவதுபற்றி, “பிரமன் பரவும் சங்கக்குழை” என்கின்றார். வள்ளைச் செவி - வள்ளைக்கொடியின் இலைபோன்ற செவி. வேட்டவற்றை எனற்பாலது சாரியை பெறாது “வேட்டவையை” என வந்தது. நெடிய சேய்மையிலிருந்தே கேட்டு அருளுதல் பற்றி “வார்செவி” எனப் புகழ்கின்றார். அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கும் அறிவாற்றலுக்கும் ஏற்பச் சமயங்கள் தோன்றி இறைவன் திருவருளை நோக்கி இயங்குதலால், “நாட்டில் உயர் சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும் தெய்வமுகம்” எனத் தெரிவிக்கின்றார். எல்லாச் சமயங்களும் இறைவன் திருவருளைப் பெறும் திறமே உரைப்பன வாதலின், அவை அவனால் தழைக்கின்றன என உரைக்கின்றார். உடற்கும் அதன் உள்ளிருக்கும் உயிர்க்கும் அவ்வுயிர்க்கு உட்கருவியாகும் உள்ளத்துக்கும் குளிர்ப்பருளுவது தோன்ற “உள்ளம் குளிர, உயிர் குளிர, மெய் குளிரக் கொள்ளும் கருணை” என்றும், செய்யுளாதலின் முறைமாறியும் உரைக்கின்றார். கருணை பொழியும் திருமுகத்தைத் “தெய்வ முகம்” என்று சிறப்பிக்கின்றார். கண், காது முதலிய புறக்கருவிகளின் வாயிலாகத் தோன்றும் இந்திரிய ஞானத்தினும், உட்கரணமாகிய மன முதலியவற்றால் தெளியப்படும் உண்மை ஞானம் மேன்மையுடைத் தென்றற்கு “உள்ளறிவின் எள்ளாத மேன்மை” என்றும், மாறும் இயல்புடைய இந்திரிய ஞானத்தினும் உண்மை ஞானம் உலகனைத்துக்கும் நலம் தரும் பான்மையது என்பதுபற்றி “உலகெல்லாம் தழைப்பார்” என்றும் இசைக்


     கின்றார். சைவத்துக்குரிய சீலங்களில் உயிர்கட் கருள் வழங்குதல் உயர்ந்த தொன்றாதலால், அதனை “உள்ளோங்கு சீலம்” எனவும், தேவர்கட் கருள்புரிதல் வேண்டிக் கடல்விடத்தையுண்டு கழுத்திடத்தே நிலைபெறக் கொண்ட கருத்தை விளக்குதற்கு, “இலச்சினையாம் நீலமணி மிடறு” எனவும் எடுத்தோதுகின்றார். மால் சிறிதுமில்லாத மாண்புடைய அன்பர் மனம் பாலினும் தூயதாதல் விளங்க “மாலகற்றி வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்” எனப் பாராட்டுகின்றார். முனிவர் வேள்வியில் தோன்றிப் பெருமுழக்கம் செய்து போந்தமையின் “அண்டமெலாம் சத்தமுறக் கூவும் ஒரு மான்” என்கின்றார். ஆணவ மலப் பிணிப்பை அறக் கெடுத்தற் பொருட்டே ஊனுடலின் தொடர்பு உயிர்கட்குள தாதலால், “ஊனோங்கும் ஆணவத்தின் கூற்று” எனவும், அது பலரும் காண கைக்கண் இருந்து ஒளி செய்தலின், “மழுவைக் காணவைத்த செங்கமலக்கை” எனவும் உரைக்கின்றார். பிறரையடைந்து இரந்து பின்னிற்றல் பேராசையுடையார்க்கே இயல்வது. ஆசை வெட்கமறியாது என்றே கூறுவர். ஆசையின் வேரறுத்த சான்றோர் பின்னிற்க நேரின் அஞ்சி நாணி ஏங்குவராதலின், “நாணமுற்று ஏங்கும் பரிசுடைய எப்போல்வார் அச்சம்” என்று குறிக்கின்றார். அஞ்சற்க என எடுத்தகை “அபயகரம்” என வடசொல்லாற் குறிக்கப்படும். ‘கவிகை’ என்பது தமிழ்ச் சொல். வரம் தரும் கையை “வரதவொண்கை” எனச் சிறப்பிக்கின்றார். தீங்கடையாச் சீரும் பிற எல்லாச் சிறப்பும் பெறவுதவுவது அவ் வரத ஒண்கை என உணர்க. வெண்பொற் பொடி என்ற விடத்துப் பொன்மை அழகு என்னும் பொருளில் வந்தது, நிறம் பற்றியன்று, அணித்தார் - அணியாகிய மாலை. மாண்பு, மாண் என ஈறு குறைந்தது. சேணிலம் - வானுலகம். அவருவப்பது வௌ¢ளாடையென்பர். வியாக்கிரம் - புலி. அம்முப்பெற்று வியாக்கிரமத்தோல் என வந்தது. துன்மை - தையல். “கீளொடு கோவணம் சார்த்திய” கேடிலாத் தொண்டர் வடிவு விளங்கும் சிவக்கோலத்தைப் பலரும் பெரிதும் விரும்புமாறு புலப்பட, “கீட்கோலம் ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ளம்” என உவந்துரைக்கின்றார். எட்டு - அணிமா முதலிய சித்திகள். கன்மமும் பத்தியும் ஆகிய இருவகை யோகங்கள். சந்தம் கெடாமல் ஓதப்படுமாறு விளங்கச் “சந்தித்து” என்கிறார். மல் - வளம். மல்லல் என்பது ஈறு குறைந்ததென்று கொள்க. சொல் - புகழ். செம்மை மணி-சிவந்த மாணிக்க மணி. “மரகதக் கொடியுடன் விளங்கும் தௌ¢ளு பேரொளிப் பவள வெற்பென இடப்பாகம் கொள்ளு மாமலையாள்” ( திருநா. 379 ) எனச் சேக்கிழார் பெருமான் கூறுவது காண்க. செம்மேனி யம்மானாதலின் சிவன் திருமேனியைச் “சீர்த்தி திகழ் செம்பவளச் செம்மேனி” என்று சிறப்பிக்கின்றார்.


    

ஆர்வ மிகுதி


   கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்

    கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து

234

   பாட்டால் அவன் புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று

    கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல்

235

   ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்

    சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்

236

   பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்

    உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்

237

உரை :

        தீர்த்தருடைய திருவுள்ளமே கோயிலாகக் கொண்ட சிவபெருமானுடைய பொன் போன்ற திருமேனியழகினை நாம் நாடோறும் கண்டிருந்தாலே துன்பமெல்லாம் கட்டற்று நம்மை விட்டு நீங்கிவிடும்; அப் பெருமானுக்குத் தொண்டுபூண்டு பாட்டுக்களால் அவன் புகழைப் பாடுபவர் பாட அவர் பக்கத்தே நின்று காதுகளிற் கேட்டாலே நம்முடை வினைகள் நம்பால் விடைபெற்று நீங்கிவிடும்; நெடிது சொல்லி நீட்டாமல் பகைவரது முப்புரத்தை யெரித்துச் சாம்பலாக்கிய உத்தமனே என்று ஒருகால் சொல்வோமாயின் உலகத்தைப்பற்றி வருத்தும் துயரமெல்லாம் ஒழிந்துபோம்; நாடோறும் தன் பெயரைச் சொல்லும் அன்பர் உள்ளத்துள் வீற்றிருக்கும் பரசிவமே என்று ஒருமுறை நினைந்து சொல்வோமாயின், நினைக்குமுன்பே நம்மை வருத்தும் தீமையெல்லாம் போய்விடும். எ.று.


     தீர்த்தர் - தூயவர்; எவ்வகைப் பற்றுமறத் தீர்த்தவர். முன்னமே வந்து உயிரைக் கட்டி நிற்பது தோன்ற “அல்லலெல்லம் கட்டறும்” என உரைக்கின்றார். தொண்டர் சூழலை யடைந்து அவர்கள் சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளை விருப்பத்தோடு செய்வது தொண்டடைவதாகும். பாடுவவேயன்றிப் பாடக்கேட்குமிடத்தும் மனம் பரமன்பால் ஈடுபடுதலால் “கேட்டால் வினைகள் விடை கேட்கும்” என விளக்குகின்றார். விடை கேட்டல் - நீங்குதல். ஒன்னார் - பகைவரான திரிபுர அசுரர்கள். புரம் - மதில். பொடி செய்தல் - வெந்து நீறாய்ப் பொடிபடச் செய்வது. உலகம் துயரின் நீங்கினாலன்றி அதனிடையே வாழும் நமக்கு வாழ்வில்லையாம் என்பதுபற்றி “உலகத்துயர் அறுங்காண்” என்று சொல்லுகின்றார். உள்ளத் திருப்பவனாதலால் உன்னுமுன்பே நன்மை விளையும் என்றற்கு “உன்னுமுன்னம் தீமையெல்லாம் ஓடிடும்” என உரைக்கின்றார்.


    

நெஞ்சொடு நேர்தல்


   ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்

    நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்

238

   மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்

    பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்

239

   மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்

    புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி

240

   மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த

    வாணாள் வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்

241

   நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்

    புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்

242

   சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க

    வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்

243

   பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்

    போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்

244

   அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்

    செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்

245

   சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்

    புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்

246

   நற்றுணையென் றேத்துமந்த நாவரசர் கன்றுகடற்

    கற்றுணை யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ

247

   மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்

    பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்

248

   கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை

    மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்

249

   மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு

    பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகக்

250

   தீ¢ங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்

    பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்

251

   துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு

    பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்

252

   பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு

    ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர்

253

   சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு

    புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்

254

   பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்

    கோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர்

255

   சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்

    போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற

256

உரை :

        அப் பெருமானுடைய கூத்தாடும் இயல்புடைய திருவடியாகிய பூவின்பால் சேர்க என்று சொன்னால், அந்தோ, செல்லுதற்கு முன்வைத்த காலைப் பின்வாங்கிக் கொண்டு நின்றொழிகின்றாய்; அவரவர்க்குரிய வினைப் பயனை நுகர்விப்பவனாகிய அப் பெருமான் ஒரு பெரிய கடவுளாவான்; ஒருகால் ஒரு குழவி பால் வேண்டி அலறி யழக்கண்டு அதற்குத் திருப்பாற் கடலையே மடைமாற்றித் தந்தருளிய பான்மையை கடல் போன்ற நூல்களின் இடையே சான்றோர் சொல்லக்கேட்டும் அவனை


     வணங்குகின்றாய் இல்லை; அன்பில்லையே யெனின் அன்பு பெறுதற்கு நுண்ணிய புத்தியுடைய நன்மக்களுக்கு இவ் வரலாறு ஒன்று போது மல்லவா? முத்தி நெறிக்குரிய அறிவுப்பேற்றில் சிறப்புறாத அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழிருந்து சிவனை ஏத்திப் பரவியபோது அவனுக்கு இரங்கி நீண்ட வாழ்நாளை வரமாகத் தந்த வளவிய கொடை நலத்தை நாடோறும் அவன் திருமுன் சென்று ஓதியும் உனக்குச் சிவன்பால் விருப்புண்டாகவில்லை; புண்ணியவான்களுக்குச் சிவன்பால் அன்பு கொள்ளற்கு உபாயமாக இவ்வரலாறு ஒன்றுமே போதுமே; சிவபுண்ணியராகிய சுந்தரமூர்த்திகளுக்குத் திருக்கச்சூரில் தமக்குள்ள தோழமையைத் தெரிவிக் வேண்டி வேதியனாய் வந்து, கச்சூர் வேதியர் மனைகளில் சோறு இரந்துவந்து அளித்த வள்ளன்மையை முன்பே ஐயம் திரிபறக் கேள்வியுற்றும் அன்பு நெறியினின்றும் மாறிவிட்டனை; அன்பு கொள்ளற்கேற்ற அறிவுடையோர்க்கு இச் செய்தியொன்றே போதுமே; போதிய அளவு நெய் இருந்தும் அங்குவந்த ஓர் எலி, தான் அந்நெய்யை அருந்துதற்கு அகலின்கண் திரியை மூக்கினால் தூண்டிய செயலுக்காக அதனை மறுபிறப்பில் செங்கோல் வேந்தனாக்கிய அப்புகழ்மிக்க செய்தியை இங்கே பலர் பன்முறை ஓதக்கேட்டும் அவன் திருவடியை நினைக்கின்றாயில்லை; அவன்பால் அன்புசெய்தற்கு நல்லறிவுடையோருக்கு இச்செய்தி யொன்றே போதுமல்லவா? முற்பட வருகின்ற நல்ல துணையாம் என்று பரவுகின்ற திருநாவுக்கரசர்க்கு அன்று கல்லைத் துணைப்புணையாக இணைத்துக் கட்டிக் கடலில் இட்டபோது அக்கல்லே தெப்பமாக மிதந்து அவர் கரையேறச் செய்த வரலாற்றை இத் தன்மையதென்று இப் பேருலகர் சொல்லக் கேட்டும் அப் பெருமானை வணங்குகின்றாயில்லை; அவன்பால் அன்பு கொள்ளற்குப் பூவுலக மாந்தர்க்கு இச்செய்தியொன்றே தூண்டுதலாகுமே; தீப்பறக்கும் நெற்றியிடத்துக் கண்கொண்ட சிவனுக்கு அன்பரான மணிவாசகர் மனம் கலக்கமுறாதவாறு வையைக் கரையில் மண்சுமந்தான் என்று உரைக்கப்படும் வரலாற்றைப் பண்புடைய நல்லோர் எடுத்துரைக்கக் கேட்டும் அன்புற்று ஏத்துகின்றா யில்லை; மெய்யன்பு பூண்பதற்கு இந்நிகழ்ச்சியொன்றே போதுமே; நெடிய நரகத் துன்பத்தைத் தரும் மாபாதகம் புரிந்த வேதியன் ஒருவனுக்கு அப்பாதகத்தைப் போக்கிச் சிவப்பேற்றுக்குரிய நெறி நின்றடையச் செய்த திருவருட் பண்பினை இங்கே உலகத்தறிஞர் பலரறிய எடுத்துரைப்பக் கேட்டும் நீ நினைக்கின்றாயில்லை; சிவன்பால் அன்பு பெருகுதற்கு இவ் வரலாறொன்றே போதுமே; நாம் தங்குகின்ற இப் பூமியின்கண் வாழ்ந்த முன்னோர் அறியப் பன்றிக் குட்டிகட்குத் தாயாய்த் தோன்றி பரந்த நாடறிய அவற்றிற்கு முலைதந்து இறைவன் பாலூட்டிய திருவிளையாடலை அவன் புகழையறிந்த மேலோர் சொல்லி நிற்பக் கேட்டும் நெஞ்சே நீ அப் பெருமான் அருளைத் துதிக்காமல் இருக்கின்றாய்; இதை நினைந்து நீ அவன்பால் அன்பு கொள் என்றால் அது செய்தற்கு இவ்வரலாறு ஒன்றே அமையுமே; நல்ல திருவடிகள் நோவுமாறு பாணபத்திரனுக்கு ஆள் என்று சொல்லிக் கொண்டு விறகுக் கட்டைத் தலையிற் சுமந்து மதுரை வீதியில் விலைகூறி விற்பனை செய்த திறத்தை நீதியறிந்தவர் சொல்லி நீன்றாராக, அது கேட்டும் அவன் திருவடியை நினையாதொழிகின்றாய்; திருவடிக்கண் மெய்யன்பு செய்து மேம்படுதற்கு இவ்வொரு நிகழ்ச்சியே போதுமே. எ.று.


     அன்னவன் - அவன் என்னும் சுட்டுமாத்திரையாய் வருமாயினும் ஈண்டு அத்தகையவன் என்று பொருள்கொள நிற்கிறது. ஆடுகின்ற இயல்புடைய திருவடியை ‘ஆட்டில்கால்’ என நயமுற உரைக்கின்றார். பூ மாடு - பூவின் பக்கம். ஆடு மாடு என்ற நயம் தோன்றக் கூறியவாறு. முன்வைத்த காலைப் பின்வைத்தல் நன்றன்று; நீ அது செய்து சிறுமை யடைகின்றாய் என்றற்கு, “முன் நீட்டிய கால் பின்வாங்கி நிற்கின்றாய்” என உரைக்கின்றார். ஊட்டும் மால் கடவுள் - அவரவர் வினைக்குரிய பயனை நுகர்விக்கும் பெரிய கடவுள். பிறரெவராலும் செய்யப்படாத அருமைபற்றி “ஊட்டும் மால் கடவுள்” என்று இசைக்கின்றார். “அவ் வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல், ஆர்தா மறிந்தணைப் பார் ஆங்கு” என மெய்கண்டாரும், ‘பால்வரை தெய்வ’மெனத் தொல்காப்பியரும் கூறுவர். Êசிவனருட்செயலை யுரைக்கும் நூல் கடல் போற் பெருகியிருக்கும் திறம் குறித்தற்கு “நூற்கடலின் மத்தியில்” என இயம்புகிறார். முத்திப் பேற்றுக்குரிய நெறி வகைகளில் வன்மை பெறாதவன் இராவணன், அரக்கனாதலால் என்றற்கு “முத்திநெறி மாணா அரக்கன்” என மொழிகின்றார். அவ் வரலாறு கேட்பதே புண்ணியம் என்றற்குப் “புண்ணியருக் கீதொன்றும் போதாதோ” எனப் புகல்கின்றார். இரந்து கொணர்ந்தளித்த சோறு “இரப்புச் சோறு” எனப்படுகிறது. போதம் - அறிவு. போதவும் என்றற்கு மிகவும் என்றும் கூறலாம். சந்ததம் என்ற வடசொல், எப்போதும் என்ற பொருள் தருவது. புந்தி - புத்தி. “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே” என்ற திருக்குறுந்தொகை இங்கே நினைக்கப்படுகின்றது. நுதற்கண்ணில் எழுந்த தீப்பொறி எங்கும் தாவிப் பறக்கும் இயல்பினது என்ற குறிப்புப் புலப்பட “தாவும் நுதற்கண்” என உரைக்கின்றார். அன்பன் - இங்கே திருவாதவூரர். பன்முறையும் ஓதப்படுவது பற்றி “மாணவுரைப்ப” எனக் கூறுகின்றார். மீளா நரகத் துன்பத்தை “நீணரகத் தீங்கு” எனத் தெரிவிக்கின்றார். “பாங்கு” என்றது, ஈண்டுச் சிவப்பேற்றுக்குரிய தகுதிப்பாட்டினைக் குறிக்கிறது. துங்கம் - உயர்வு; பொறுத்தற்கரிய பெருங்குற்றம் செய்தவனும், அதனை யுணர்ந்து இறைவனை வழிப்படின், அருள்வதை முறையென்றல் வேண்டி “அருட்பண்பு” என அறிவிக்கின்றார். “வயக்கடவுளைக் காப்பதன்னோ காப்பென்றான் கருணை மூர்த்தி” எனவும், “எவ்வினைஞரேனும் உய்தக் கோராதல் செய்கை உன்னருள் விளையாட்டன்றோ” என்று பரஞ்சோதியார் கூறுவதும் குறிக்கொண்டு நோக்கத் தக்கது. சிவன் சுமந்து போந்த விறகை வாங்கினாருமில்லை. வாங்கி எரித்தாருமில்லை. அந்த நயம் தோன்ற அதனைக் “கோதில் விறகு” எனக் குறிக்கின்றார்.


    

பித்தா எனினும் பிறப்பறுப்பான்


   ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு

    தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற

257

   பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை

    ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ

258

   வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்

    அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே

259

   செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா

    தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற

260

   நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை

    யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்

261

   நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை

    யேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத

262

   அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்

    நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்

263

   அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்

    தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே

264

   தாவென்றால் நல்லருள்இந் நாவென்பான் நம்பெருமான்

    ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்

265

   நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய் பித்தர்

    என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது

266

   பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்

    அத்தோ உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்

267

உரை :

        போற்றப்படுகின்ற ஆடும், யானையும், அணிலும், குரங்கும், அன்பு நாடும் சிலந்தியும், சிற்றெறும்பும், நீளவளர்கின்ற பாம்பும், சிவனை வழிபட்டு அருச்சனை பண்ணின என்றால், சிவபூசை செய்தற்கு யாவர் விரும்பாதார்? சோம்பலுற்ற அயர்கின்ற நீ வன்மை எனப்படும் குற்ற மெல்லாம் போக்கி அப் பெருமான் திருவடியைப் பூசிக்கும் மெய்யன்பு என்பது யாதோ அதனை அறியாதிருக்கின்றாய்; அன்போடு சிவந்த சடை கொண்ட நம் பெருமானான சிவனது திருப்புகழைக் கேட்டு இரை கொள்ளாமல் பொறியைந்து மடக்கி யோகம் புரிந்து உலகியலில் காணப்படும் வஞ்சமனைத்தும் நீங்குமாறு நாரை முத்தியின்பம் வேண்டி முயன்றதென்றால், மற்றை யாவரை அவ்வின்பத்தைப் பெற விரும்பார் என உரைப்பேன்; அன்பாகிய ஈரமில்லாத நெஞ்சமே, நீ அவ்வின்பம் பெறச் சிறிதும் நினைக்கின்றாயில்லை; நின் தன்மை இருக்கும் விதத்தை என்னை என்பது? அன்புடையவர் என யாவர் யாவர் பேசப்படுகின்றார்களோ அவர் அனைவரினும் பேரன்புடையவன் நம் சிவபெருமான் என்று நாடோறும் நான் உனக்கு உரைக்கின்றேன்; உன் பக்கத்திருப் போருள்ளும் அவன்பால் அன்பு கொண்டோரை அறியேன்; புறச் சமயத்தவராயினும் மெய்யின்ப நாட்டமுடையோர் அவனைப் பரவுதற்கு இணங்குவர்; அன்புடன் நல்லருள் தருக என்று வேண்டினால் இந்தா என்று உரைப்பவன் நம் பெருமானாகிய சிவன்; ஆ, இதனைப் பலகாலும் உன்பால் ஓதி அலுத்துப்போகின்றேன்; நீ வன்கண்மை மேற்கொண்டு நிற்கின்றாயேயன்றி அவன்பால் மனம் நேர்ந்து நினைக்கின்றாயில்லை; பித்துக்கொண்டவரெனினும் என் சொல்லைக் கேட்டு இணங்கி நடப்பர்; குறைவின்றி, நீ சிவனை நினைந்து பித்தா என்று உரைப்பினும் பிறவித்


     துன்பத்தொடர்பை அறுத்தருள்பவன் அப் பெருமான் என்று, ஐயோ, உனக்குப் பன்முறை தெரிவிக்கின்றேன். எ.று.


     அசகளத்தூரில் ஆடும், கரிவலம் வந்த நல்லூரில் யானையும், குரங்கணில் முட்டத்தில் குரங்கு முதலியனவும், இவ்வாறே பிற தலங்களில் பிறவும் வழிபட்ட செய்திகளைத் தலபுராணங்கள் விரிவாகக் கூறுகின்றன. ஈழ நாட்டுக் கேதீச்சரத்தில் பாம்பு பூசித்த வரலாறு குறிக்கப்படுகிறது. சிவனுக்குச் செய்கின்ற அருச்சனை, சிவார்ச்சனை எனப்படுகிறது. ஓம்புவது, ஈண்டுச் செய்தல் மேற்று. அன்புக்கு மறுதலைப் பண்பு அத்தனையும் வன்பு என்பதனுள் அடங்கும். நாரை முத்தியின்பம் நாடிய திறத்தை, ‘நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடல்’ ‘நன்கு விளக்குகிறது, “செய்யகால் மடநாரையும் சென்று தாழ்ந்து, ஐயனே இப்பிறவியறுத்து நின், மெய்யர் வாழ் சிவலோகத்தில் மேவி நான் உய்ய வேண்டும்!’ என வேண்டியது இங்கே நினைப்பிக்கப்படுகிறது. அன்புடையோர் - உன் பக்கல் இருக்கும் நண்பர்கள். சாக்கிய நாயனார் பௌத்த சமயத்தவர்; அது புறச்சமயம்; அவர் சிவன்பால் அன்பு செய்தொழுகினமை பற்றி “புறச்சமயத்தின்புடையாரேனும் இணங்குவர்” என்று உரைக்கின்றார். ஆ - வி¢யப்பிடைச் சொல். அலுத்தல் - களைத்தல். ‘அவனை நேர்ந்து’ என்றவிடத்து, நேர்தல் - இணங்குதல். நம்மை யடையானாதலின் “பித்தா எனினும் பிறப்பறுப்பான்” என இயைக்க. அத்தோ, அச்சோ என்பது போலும் வியப்புச்சொல்; அந்தோ என்பதன் விகாரமன்று. அறைதல் - வற்புறுத்துரைத்தல்.


    

ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய்


   கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்

    வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற

268

   வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்

    கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்

269

   இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்

    செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்

270

   செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்

    சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத

271

   அஞ்ச ருந்தேன் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்

    நஞ்சருந்தென் றாற்போல நலிகின்றாய் - வஞ்சகத்தில்

272

   ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே

    ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்

273

   சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்

    வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே

274

   ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்

    போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி

275

   ஒன்றைமறக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்

    நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்

276

   சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்

    மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்

277

   குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்

    ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்

278

உரை :

        சிறிதும் கேள்விப் பயிற்சியில்லாதவர்போல நான் சொல்வதைக் கேளாமல் கெடுகின்றாய்; அதன்மேல் கேள்வி பயிலாதார் கூட்டத்தையே விரும்புகின்றாய்; வேள்வி செய்யும் வேலை வரும்போது எங்கேனும் சென்று ஒளிந்துகொள்கின்றாய்; நின் தலைக்கென்று எமனிடமிருந்து ஓலை வருங்கால் இவ்வுலகில் எங்கே சென்று ஒளிப்பாய்; மயக்கத்தைச் செய்யும் பூவுலகம் மணமற்ற வெறும் பூவாதலால் அதனை விரும்பாதே என்று உனக்கு நான் சொல்லி விலக்குமுன்பே நாடி விரைந்து போகின்றாய்; வேறு சமயங்கள் காட்டும் பாழ்நெறியிற் செல்லாமல் சைவநெறியிற் செல்லுக என்று சொன்னால், என்னிடத்தும் சொல்லிக்கொள்ளாமல் போய் வேற்று மயக்கம் செய்யும் சமயத்தில் ஆழ்ந்துவிடுகின்றாய்; பொல்லாங்கு விளைவிக்கும் கள் முதலிய ஐந்தும் மேற்கொள்க என்றால் தேவரமுது போன்று விரும்பி யேற்றுக்கொள்வதும், அவற்றை விட்டிடுக என்றால் அச் சொல்லை நஞ்சு உண்க என்றாற் போல் வெறுத்துவிட வருந்துகின்றாய்; வஞ்சக நெறிகளில் ஓடுகின்றாய்; வஞ்சமென அறிந்தவுடன் மீள்வதை விடுத்து உன் இச்சைப்படி அங்கே ஆடுகின்றாய்; ஆடி அயர்கின்றாய்; நெடிய உலக வாழ்வை நினைக்கின்றாய்; வேறொன்றை நாடிச் சுழல்கின்றாய்; வேறொன்றிற் சென்று வீழ்கின்றாய்; பிறிதொன்றினின்றும் மீள்கின்றாய்; இச் செயல்களால் எனக்குத் தாழ்வே தருகின்றாய்; வன்மை நிலவும் நெறிகளில் என்னை வலியழித்துப் போகின்றாய்; மீட்டவிடத்து மறுபடியும் அதன்கட் புகுகின்றாய்; மனம் ஒன்றுதலின்றி ஒன்றை மறக்கின்றாய்; ஒன்றை நினைக்கின்றாய்; இது என்னையோ? நல்லதை மறைக்கின்றாய்; வீணே மனத்தை வருத்துகின்றாய்; வெற்றியே பெறுகின்ற எருதேறும் சிவபெருமான் திருவடியை நினைக என்றால் மற்றொரு பக்கம் சென்று பல பொருள்களைப் பார்த்துப் பரந்து விரிகின்றாய்; பலவற்றை நினைந்து ஊக்கம் குன்றி வருந்தும் உனக்கு எண்ணில் கோடி வணக்கங்கள் செய்தாலும் சிறிதும் இரக்கமின்றி ஓடியலைந்து துன்புறுகின்றாய். எ.று.


     கேள்வியிலார் - உயர்ந்தோர் சொல்லக் கேட்டுப் பயிலாதார்; கற்றலிற் கேட்டல் நன்று என்பர்; அதன்கட் பயிலாமை தீதென்றற்குக் “கேள்வியிலார் போலக் கேளாய் கெடுகின்றாய்” என்று கூறுகின்றார். வேள்வி - விருந்தோம்பும் நல்லறம். “விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்” ( குறள். 88 ) என்பது காண்க. விருந்தோம்பும் நல்லோர் கூட்டம் போந்து மீள நன்னெறிக்கண் நிறுத்தாமைப் பொருட்டு மற்றையோர் கூட்டத்தில் இருக்கின்றாய் என்பது புலப்பட, “வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய்” என விளம்புகின்றார். வேலை - தொண்டு. “ஒளிந்து மேவுகின்றாய்” என்றற்கு, ஒளித்துக்கொண்டு அவ்வொளித்திருத்தலையே மேலும்


     விரும்புகின்றாய் எனப் பொருள் கூறுக. தலைக்கு ஓலை வருதல் என்பது, சாவு வருதல். ஒளிப்பாயே என்றவிடத்து, ஏகாரம் வினாப்பொருட்டு. பார் - பூமி. இதனைப் பூவுலகு எனவும் பூவெனவும் கூறுதலுண்மை பற்றி, “இப்பார் வெறும்பூ நயவேல்” என அறிவுறுத்துகின்றார். மாலை - மயக்கம் வாழ்வாரைத் தன்னையே பெரிதும் நயந்துறையுமாறு மயக்குதல் பற்றி “பார் வாழ்வு, மாலையுறும் இப்பார் வெறும்பூ” எனப்படுகிறது. உலகியற் சிற்றின்ப வாழ்வையே நச்சிச் செல்வம் குறித்துச் “செப்பாமுனம் விரைந்து செல்கின்றாய்” என்று தெரிவிக்கின்றார். பிற சமயிகள் தமவல்லாத பிறவற்றைப் பாழ்நெறி என்பர். அவர் மதம் மேற்கொண்டு “அப்பாழிற் செல்லாதே சைவநெறி செல்” என்பது தெரிவிக்கப்படுகிறது. வள்ளற் பெருமான் சமரச ஞானியாதலின் பிறசமய முடிவைப் பாழ் எனப் பழிக்கமாட்டாரென அறிக. கள், காமம், பொய், களவு, கொலையாகிய ஐந்தையும் “பொல்லாத அஞ்சு” என்று புகல்கின்றார். உலகியலின்ப மல்லது வேறில்லையெனக் கருதி ஆர நுகர விரும்புவார்க்குக் கள் முதலிய ஐந்தும் வேண்டத் தக்கனவாதலால், “அஞ்சு அருந்து” என்பார் உளராயினர் என அறிக. வஞ்சகம் - வஞ்சனைச் செயல்வகைகள். உலகியல் வாழ்வை வாழ்வாங்கு வாழ நினைப்பது நேரிய முறை; இயற்கை யறிவுடையோர் தொடக்கத்தில் அதனையே நாடுவராதலின், அவரை நினைந்து, “நீடுலகைச் சூழ்கின்றாய்” என்றும், உடன் வாழும் இனமும் சார்வும் சேர்க்கையும் பிறவும் தத்தம் நெறியில் ஈர்த்தலின் “நெஞ்சு அலமரும் திறத்தை “வேறொன்றிற் சுற்றுகின்றாய், மற்றொன்றில் வீழ்கின்றாய், மேலொன்றில் மீள்கின்றாய் தாழ்வொன்றே ஈகின்றாய்” என்றும் இயம்புகின்றார். நன்னெறிக்கண் சேறற்குரிய மனவலியை அழித்து வன்னெறியில் செலுத்தும் இயலைத் தெளிந்து “வன்னெறியில் என்னை வலதழிக்கப் போகின்றாய்” எனப் புகல்கின்றார். வலது - மனவலி. யோகம் என்பது கடைகுறைந்து ‘யோகு’ என வந்தது. யோகம் - ஒன்றுதல். ஒன்றை மறத்தலும் ஒன்றை நினைத்தலும் ஒன்றை மறைத்தலும் ஒன்றை வெளிப்படுத்தலும் வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே நாளும் நிகழ்வன. சேவிற் பரமன் - எருதேறும் சிவபெருமான். வெறும் பாவனைகளால் உயர்வு பெறுதல் இன்மையின், “பாவித்துக் குன்றும் உனக்கு” என்றும், அடக்குதற்குரியாரை இரந்து கேட்கின் கெடுவனவே செய்வர் என்பது பற்றி, “ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய்” என்றும் உரைக்கின்றார்.


    

விலக்குரை


   கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்

    கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை

279

   வல்லிரும்பெண் பேன் அந்த வல்லிரும்பேல் கூடத்தில்

    கொல்லன் குறிப்பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்

280

   கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்

    ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்

281

   ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்

    பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்

282

   கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது

    கொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்

283

   பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்

    மேவில்வயப் பட்டால் எதிராதே - நோவியற்றி

284

   வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்

    ஏறுகின்றோன் சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற

285

   வென்னடைசேர் மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்

    மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி

286

உரை :

        உருகாத கல்லென்று உன்னை நெஞ்சே கூறுவேன்; கல்வகையில் மன முதலிய கரணங்களில்லாத கல்லெனலாம் எனின், கல்லாயின் என் சொல்லைக் கடவாமல் கிடந்தபடியே கிடக்கும்; புல்லிய நின்னை வலிய இரும்பு என்று சொல்வேன்; வலிய இரும்பாயின் சம்மட்டியால் அடியுண்டு கொல்லன் மனக்குறிப்பின்படி உருவெடுக்குமேயன்றி கோணுதல் செய்யாது; துன்பமெல்லாம் உண்டாக்குகின்ற வலிய குரங்கு என்று மனத்தைச் சொல்வேன்; குரங்கென்றால் அது ஆட்டுகிறவன் சொல்வழி நிற்பதன்றித் தான் வேறு வழியில் ஆடாது; உலகத்தவர் நீட்டி வைது பேசுகின்ற பேய்தான் இந்த மனம் என்று சொல்லுவேன்; அப் பேயோ, திருவைந்தெழுத்தை ஓதுகின்ற நன்மக்களை நெருங்காது; சொல்லவும் கூசுகின்ற கண்டவரை யெல்லாம் மேல் வீழ்ந்து கவ்வும் கடிய நாயென்று சொல்வேன்; ஆனால், அது தன்னைக் கொண்டவர்களைக் காணுமாயின் குலைப்பதுகூட இல்லையே; பூமியில் காட்டில் ஆனிரை மேய்க்கும் அண்டர்க்கும் அடங்காத புலி என்று மனத்தைக் கூறுவேன்; அப் புலியும் விற்பொறியில் சிக்கி அதன் வயப்பட்டால் எதிர்த்தல் செய்யாது; நோய் செய்து வீறு கொள்கின்ற மும்மத யானை என்று நெஞ்சினைக் கூறுவேன்; அவ் யானையும் ஏறிச் செலுத்துகின்ற பாகன் சொல் வழியை மீறிச் செல்லாது; சீறி யச்சுறுத்துகின்ற வெற்றி நடையையுடைய சிங்க வேறு மனம் என்று உரைப்பேன்; அதுவேயன்றி வேறு எத்தகைய விலங்கும் மன்னனிருந்து ஆட்சிபுரியும் நாட்டில் வழங்காது. எ.று.


     நன்று - பெரிது. பெருவெப்பமுண்டாகத் தீயிட்டு வெதுப்பினும் உருகாமை புலப்பட “நன்றுருகாக்கல் என்பேன்” எனவுரைக்கின்றார். கரணம் கலந்தறியாக் கல், உளி முதலிய கருவிகளால் தீண்டப்படாத கல் என்றும், மன முதலிய கருவியொடு கூடாத கல்லென்றும் கூறலாம். உலைக் களத்திற் காய்ச்சிய வழி அடிக்க உதவும் கருவி கூடம்; சம்மட்டி எனவும் வழங்குவர். அல்லல். துன்பம் உலகெங்கும் உள்ள மக்கள் ஏசுமிடத்துப் பேய்களை வழங்குகின்றமையின், “நீட்டுலகர் ஏசுகின்ற பேய்” என்று உரைக்கின்றார். பேய் வாழும் சுடுகாட்டில் ஆடும் சிவபிரான் திருப்பேராதல்பற்றி ஐந்தெழுத்தை ஓதுவாரைப் பேய் பற்றாது என்றற்கு “அஞ்செழுத்தைப் பேசுகின்றோர் தம்மைப் பேய் பிடியாதே” என்று கூறுகின்றார். கூசுகின்ற என்பதைக் கிற்பக் கூசும் என மாறுக. கிற்றல் - சொல்லுதல், செய்தலுமாம். “கிற்றிலேன் கிற்பன் உண்ணவே” ( சதகம். 45 ) என்று திருவாசகம் ஓதுவது காண்க. சுணங்கன் - நாய். வளர்ப்பவனொருவனாயினும், அவன் சுற்றத்தாரும் நண்பரும் உளப்பட அவனைச்


     சேர்ந்தோர் பலராதல் பற்றிக் கொண்டோர் எனப் பன்மையிற் கூறினார். அண்டர் - காட்டில் ஆனிரை மேய்ப்பவர். ஆனிரை முதலியவற்றிற்குத் தீங்கு புரியவரும் புலி முதலியவற்றுக்கு அஞ்சாது வெருட்டித் துரப்பதுடன் அவற்றுட் சிலவற்றைப் பார்வையாக வயப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் அவ்வண்டர்க்குண்டு, அண்டர் என்பது அண்டார் என நீண்டது. வில் - புலி, சிங்கம் முதலியவற்றை அகப்படுவிக்கும் விற்பொறி. வீறுதல் - மேம்படுதல். மும்மதவெற்பென்பது யானைக்கு வெளிப்படை. வெல்நடை - வென்னடை; வெல்லும் இயல்புடைய கொடு விலங்கு. மன்னராட்சியில் அடிக்கடி வேட்டம் சென்று கொடு விலங்குகளை மிகாவண்ணம் கொன்றமையின் “மன்னவன் சேர் நாட்டில் எவ்விலங்கும் வழங்காது” என இயம்புகின்றார்.


    

ஆவதறியா தழுந்தினை


   என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த

    பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ

287

   போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்

    ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்

288

   நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா

    நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்

289

   ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்

    வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ

290

   வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்

    றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ

291

   நோவ தொழியா நொறிற் காம வெப்பினிடை

    ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்

292

உரை :

        நெஞ்சமே, உன்னை இனி என்னென்று சொல்வேன்; என் சொல்லை ஏற்பாயேல் உன்னை மாற்றுயர்ந்த பொன்னெனப் போற்றுவேன்; என் வழிக்கு வருகின்றாயில்லை; பயனின்றி நீ போம்வழி யாவும் பொய்; அவ்வழியிற் போய் நீ செய்வனவும் பொய்; அதனால் விளைவனவும் பொய்; அதுபற்றி நீ பெற்றுள்ள அறிவும் பொய்; குற்றம் உண்டுபண்ணும் உன் உடம்பும் பொய்; அதுகொண்டு இவ்வுலகில் நீ செய்யும் தவமும் பொய்; நிலைபேறில்லாத நின் இருப்பும் பொய்; நீயும் பொய் என்றால், இங்கே நீ ஏதும் உணர்ந்திலை; மாயம் நிறைந்த இவ்வாழ்வென்னும் வாதில் இழுத்து என்னை மயக்கிவிட்டாய்; தீமை மிக்க நீ வன்மையுடைய விடமாவாய்; வன்கண்மை மிக்க நின் பெயரின் முன்னுள்ள ஒரு கீறலை எடுத்து என்னவோ, நினையாமல் சொல்லி உன்னை அழைத்தேன்; வீணே புகுந்து நோய் செய்வதிலிருந்து நீங்காத ஒடுக்கும் காமத் தீயின்கண் விளைவெண்ணாமல் அழுந்திக் கிடக்கின்றாய். எ.று.


     பொன்னெனப் போற்றக் கருதிய உள்ளம், நெஞ்சின் பொய்ம்மையை எண்ணி அறவே கைவிட்ட குறிப்பை, “மாற்றுயர்ந்த பொன்னென்பேன்


     என் வழியிற் போந்திலை” என்றும், வழிவாராமையன்று என் மனத்தை மாற்றியது; அது சென்ற வழியின் பொய்ம்மையும் செய்த செயலின் பொய்ம்மையும் காரணம் என்று புலப்பட “கொன்னுற நின் போம்வழியும் பொய் நீ புரிவதும் பொய்” என்று புகல்கின்றார். கொன்னைச் சொல், பயனின்மை யுணர்த்துவது. வழியும் வழியிற் புரிவதும் பொய்யெனவே, விளைவும் அது நினைந்தாற்றும் அறிவும் பொய்யென்று தானே விளங்குதலின், “அதனாலாம் விளைவும் பொய் அறிவும் பொய்” என்று விளங்கக் கூறுகின்றார். “அதனாலாம் விளைவும் பொய் அறிவும் பொய் அறிவும் பொய்” என்று விளங்கக் கூறுகின்றார். தோம் - குற்றம். தவம் என்றது, விடாது முயன்று செயும் செயல். “நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்பது பற்றி, “நிலையும் பொய்” என்றார். வருவது தெரியாமையும் வந்தது நினைவில் நில்லாமையும் வாழ்வின் மாயச் செய்கை; அதனால் “மாய வாழ்க்கை யெனும் வாதில் இழுத்தென்னை மயக்கினை” எனக் கூறுகின்றார். நஞ்சு என்பதன் முன் கொம்பு கீறி “நெஞ்சு” என நிறுத்தி அழைத்தேன் என்பார். “வன்னேர் விடங்காண் நின் வன்பெயரின் முன்பொரு கீற்று என்னே அறியாமல் இட்டழைத்தேன்” என மொழிகின்றார். நொறில், ஈண்டு விரைவுப் பொருட்டன்று; ஓங்கவிடாது ஒடுக்கும் பொருளில் வந்துளது.


    

காமம் பேதவகையின் பிறப்பிடம்


   உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்

    நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி

293

   வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்

    தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு

294

   பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்

    சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு

295

   சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்

    செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு

296

   மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்

    நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற

297

   போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய

    பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்

298

   கள்ளடைக்கும் காமப் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்

    முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற

299

   ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்

    பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்

300

உரை :

        பொருந்திய காமநோயினால் உள்ளமெல்லாம் எரிந்துகெட, அவ் வுள்ளத்தைத் தனக்கு உள்ளிட்டிருக்கும் உணர்வு வெந்து கருகவும், மேலுள்ள உடம்பின் நடுவும் மேலும் கீழும் வேக, நட்பென்னும் பண்பினது நலம் வெந்தொழிய, நீங்குவதின்றி, வாட்டமுற்றுப் பாதாள வுலகமோ மேலை வானுலகமோ சென்று மறைந்தாலும் தேடிவந்து பற்றிச்


     சுடும் ஒரு கொடிய தீ என அறிக; ஆங்காங்கு ஓடி நில்லாத நீங்கினாலன்றிப் பெரிய காமமாகிய தீ நின்னையேயன்றி நின்னைச் சார்ந்தாரையும் சுடுவதோர் செந்தீ என அறிக; நிழலுக்கு ஒதுங்கினாரை இங்கேயும் காமத்தீ விடாது. வந்து இம் மண்ணுலகில் தன்னைக் காணாவண்ணம் தடைநிறுத்திச் செய்வன செய்ய நினைத்தாலும் பையப் பற்றித் தலைக் கேறிக்கொள்ளும் நஞ்சம் என அறிக; எண்ணிறந்த போர்களை யுண்டாக்கும் உள்ளத்தில் தங்கித் தாக்கும் காமமாகிய புதுமயக்கம் உன்னுடைய பரந்த பெரிய அறிவையும் கொள்ளைகொள்ளும் ஒரு பித்த நிலை என்று அறிக; சோர்வுற்றபோது கட்குடியை எய்துவிக்கும் காமமாகிய பெருமயக்கம் மெய்ஞ்ஞானம் நாடி அதற்குரிய வழிச்செல்வார்க்கு வழியை முள்ளிட்டடைக்கும் பொல்லாப் பகை என அறிக; சேற்றின் வடிவாய் தன்னில் படியுமாறு குற்றவகை அனைத்தையும் தனக்குட் பெய்துகொள்வதாகிய காமம், பாதகத்தின் ஏனை வகைகளான பொய் முதலியவனைத்தும் ஒன்றுகூடிப் பிறப்பதற்கு இடமாம். எ.று.


     உடலுக்குள் உணர்வும், உணர்வுக்குள் உள்ளமும் இருப்பதெனக் கூறுபவாதலின், “உள்ளெரிய மேலாம் உணர்வும் கருக உடல் நள்ளெரிய” என உரைக்கின்றார். காமம் தழுவப்பட்டார் நட்டார் மனையென விலக்கி யொழுகுதலின்மையால் “நட்பின் நலம் வெதுப்ப” என்று மொழிகின்றார். காமத்தின் கொடுமை நண்பர் மனையில் எளிதில் தலைகாட்டும் என்றற்கு அதனை முதற்கண் வைத்து மொழிகின்றார். காமத் தீக்கு அஞ்சிப் பாதலம் புகினும் வானகம் செல்லினும் உய்தியில்லை யென்றற்கு, “வாடிப் பிலஞ்சென்று வான்சென்று ஒளித்தாலும் தேடிச்சுடும்” என உரைக்கின்றார். சினமும் தீயுமே சேர்ந்தாரைக் கொல்வதென்பர்; காமமும் இவற்றின் இனமாதலின் “நின்னைச் சேர்ந்தாரையும் சுடும் செந்தீ” என்று இசைக்கின்றார். காம நுகர்ச்சிக்கு ஆணும் பெண்னுமாய் இருவர் வேண்டப்படுதலின் இவ்வாறு கூறுகின்றாரென்றும் சொல்லலாம். சந்தீ என வருவார் - குளிக்கும் மழைக்கும் வெயிற்கும் வருந்திச் சிறிது தருக என வருபவர். அக்கினக் கடவுளே காமத்துக்கிரையானாரென்று புராணம் கூறுதலால் “காமம் செந்தீயையும் சுடுமோர் தீக்கண்டாய்” என மொழிகின்றார். நினைத்தலும் செய்தலோடொக்கும் என்பது கொண்டு, நினைத்தாலும் என்பதற்கு நினைத்துச் செய்தாலும் என்று உரை கூறப்பட்டது. உலகில் உளவாகிய போர்களில் பெண் காரணமாகத் தோன்றின பெரும்பாலன வாதலின், “எண்ணற்ற போர் உறும் காம மயக்கம்” என உரைக்கின்றார். நுகருந்தோறும் புத்தின்பம் தந்து மக்களறிவை மயக்குவது பற்றிக் “காமப் புது மயக்கம்” என்று கூறுகின்றார். பித்தம் - உடம்பிடத்தே தோன்றும் வாத முதலிய மூன்றனுள் ஒன்று. வாதம், பித்தம், சிலேத்துமம் என்பர். காமவின்பம் மிகவேண்டிக் கள்ளுண்டார் உண்மை கண்டு “கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம்” என உரைக்கின்றார். மெய்ம்மையுணர்வு எய்தினாலன்றிச் சிவஞானத்திற் கருத்துச் செல்லாதாகலின், அதனையே முதற்கண் எடுத்து, காமம் அவ்வுணர்வும் நிகழாவாறு கேடு செய்யும் என்பதுணர்த்தற்கு “மெய்ந் நெறிக்கோர் முள்ளடைக்கும் பொல்லா முரண்” என்று கூறுகிறார். முள்ளடைத்தல் - வழியாகாதவாறு செய்வது. முரண் - பகை; முரண்பாடுமாம். விலக்கற் கருமை தோன்றப் “பொல்லா முரண்” எனப் புகல்கின்றார்.


    

செயல் தெளிவின்மைக்கு வருந்தல்


   வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்

    தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய

301

   மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்

    என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்

302

   பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்

    எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு

303

   மாமாத் திரையின் வருந்தனமென் றெண்ணினைஅந்

    நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்

304

   மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்

    தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்

305

   பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்

    நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்

306

   ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்

    தோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த

307

   காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்குழல்

    பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்

308

   எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்

    கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்

309

   ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை

    ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான

310

உரை :

        ஆதலால் வெவ்விய காம மயக்கத்தை உண்டாக்கும் மகளிரை விரும்பலாகாதாகவும், அவர்கள்பாற் செல்லும் ஆசையை இன்னும் நீக்கினாயில்லை; இம் மகளிரை மாய அணங்கினர் என்றும் சிவந்த வாயையுடைய மடவார் என்றும் பேதையர் என்றும் பேசப்படும் கொடிய சொற்களைக் கேட்டும் அவற்றின் பொருளை எண்ணுகின்றாயில்லை; பழமையான இவ்வுலகில் பெண்ணென்று நயந்து நாவால் உரைப்பின் எழு பிறப்புக் காறும் துன்பம் தொடரும் என்று எண்ணுக என்று நல்லோர் அறிவுறுத்தும் சொற்களை எண்ணுகின்றா யில்லை. விண்ணுலகிற்கே யன்றி மண்ணுலகிற்கும் பெண் ஆகும் பொருள் என்ற கருத்தால் வருவித்தோம் என்று எண்ணினையே யன்றி அப் பெண்ணென்ற பெயரின் பொருளே ஆசை என்று அறிந்தாயில்லை; நாம் செய்யும் மந்திரங்கட்கும் பூசை மரபுகட்கும் எத்தகைய சமய நூல்கட்கும் விலக்கப் படாத தவிர்பொருளன்றோ; பேய் பிடித்தால் மந்திரத்தால் தீரும் என்பர்; ஆனால் இப் பெண்ணாசையென்ற பேய்பிடித்தால் விடாது; அது செந்நாய் வாயாற் கவ்விக் கொண்டாற் போலும் என்று அறிந்திலை; ஆய்ந்து காணுமிடத்து இவர் மயக்கத்துக்குக் காரணம் உன்னுடைய அறிவின்மை என்பேன். அவர் நட்பு வலிய நரகின் தொடர்பு என்று, ஐயோ, நீ அறியா


     தொழிந்தனை; முறையே வந்த கார்கால இருட்போதில் செல்லற்கு அஞ்சி மனம் கலங்குகின்ற நீ மகளிரது கூந்தல் என்ற பேரிருட் செறிவில் அஞ்சாமற் செல்வத்தைத் தவிர்கின்றிலை; பூமியிலுள்ளோர் பகையறுக்கும் கைவாட் படையென்றால் அதைத் தொடுதற்கே அஞ்சி நீங்குவர்; உயர்ந்த அணியணிந்த மகளிரின் கண் பார்வையாகிய வாளால் அறுப்புண்டும் மனம் குழைகின்றாய்; மண்ணுலகில் வாழ்கின்ற விலங்குகளில் யானை யொன்றைக் கண்டால் அஞ்சியோடுகின்ற நீ, மகளிர் இரண்டு முலைகளாகிய யானையைக் கண்டதும் நெருங்குதற்கு இசைகின்றாய். எ.று.


     காம மயக்கத்தை விளைவிக்கும் செயலுடைய மகளிரை “வெம்மால் மடந்தையர்” என விளம்புகிறார். அவர்தம் நலத்தை விலை கூறி விற்பவர் என்பதுபற்றி “மேவவொணாது” என மேலோர் விதித்தனர். ஆசையை விட்டிலை என்றற்குத் “தவிர்ந்திலை” என்று வள்ளலார் உரைக்கின்றார். “ஆயும் அறிவினரல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு” ( குறள் : 918 ) என்ற கருத்தை உட்கொண்டுரைத்தலின் “மாய அணங்கினர்” என உரைக்கின்றார். மன்ற என்பதை, எண்ணிலை என்பதோடு கூட்டுக. மாயம் - வஞ்சனை. வாயிற் செம்மை நிறமும் மனத்தில் மடமையும் சொல்லிற் பேதைமையும் உடையரென்றற்குச் செவ்வாய் மடவார் பேதையர் என்றும், மடவார் பேதையர் என்பன பருவப் பெயராய் அதற்கு மாறாச் செயலினர் என்ற பொருள் தருவதாயிருத்தலின் “கொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே” என்றும் இசைக்கின்றார். இவ்வுலகில் இல்லிருந்து நல்லறம் பல செய்தற்காம் என்ற அளவில் கொண்டோம் என்று உரைப்போர் உரையை மேற்கொண்டுரைக்குமாறு புலப்படப் “பெண்ணிங்குமா மாத்திரையின் வருந்தனம் என்று எண்ணி” என உரைக்கின்றார். நாம அர்த்தம், நாமார்த்தம் என வந்தது; பெயர்ப் பொருள் என்பது கருத்து. பெண்ணென்ற சொற்பொருள் பேணுதலும் பேணப்படுதலுமாம் என அறிக. மந்திரம் கற்பித்தற்கும் பூசை முதலியன செய்தற்கும், வேறு சமய நூல்களைப் படித்தற்கும் பெண்களை விலக்கியிருந்தமை புலப்பட்ட “சாயாச் சழக்கு” என்று கூறுகிறார். தழுவிக் கொள்ளலாகாத விலக்குடையது என்பதைச் சாயாச் சழக்கு என்று குறிக்கின்றார். செந்நாய் - காட்டில் வாழும் நாய் வகையில் ஒன்று; அது பலவாய்க் கூடி வாழும் என்பர்; கவ்விப் பிடித்த பிடி விடாமை பற்றிச் செந்நாய் “பிடித்தாற் போலும்” எனச் செப்புகின்றார். ஏழமை - நன்று தீது கண்டு அல்லது நீக்கி நல்லது கொள்ளும் அறிவில்லாமை. வன்னரகு - மீளவிடாத வன்மை கொண்ட நரகம். ஊழ் முறை செல்லுதற்கு அஞ்சிப் பின் பெயராத நிலையைப் “போர்த்திலையே” என்று பேசுகின்றார், ஏந்திழை - உயர்ந்த அணிகள். இவ்வறிவுரை மேலும் தொடர்கிறது.


    

   வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை

    வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்

311

   சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்

    சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு

312

   பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்

    பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்

313

   கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்

    பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்

314

   கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு

    கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்

315

   மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி

    ஐயோ நரைப்ப தறிந்திலையே - பொய்யோதி

316

   ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்

    வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்

317

   வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்

    சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்

318

   கட்கு வளைஎன்றாய் கண்ணீர் உலர்ந்துமிக

    உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு

319

   மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்

    உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலில

320

உரை :

        சீராய் உயர்ந்த மலையென்றால் அதன்மேல் ஏறுதற்கு தயங்குவாயாயினும் மகளிர் முலையென்னும் மலையென்றால் ஆத்திரத்தோடு ஏற முனைந்தாய்; அழகிய சிங்கம் உளதுகாண் என்றால் அஞ்சிச் சுருங்கிப் பின்னிடுவாய்; ஆனால் மகளிர் இடையாகிய சிங்கமென்றால் காண்டற்குத் திருப்பித் திருப்பிப் பார்க்கின்றாய்; இங்கே சிறு பாம்புளது என்று சொன்னால் உடனே வேறே ஓடிப் பதுங்குகின்றாய்; அந்நிலையில் மகளிரது அல்குல் பாம்பின் படல் போல்வதெனில் சிறிதும் அஞ்சுவாயில்லை; பழமைத்தாகிய கீழ்க்கடலில் நீராடுக என்றால் கேளேன் என்கிறாய்; மகளிர் அல்குல் பாழ்த்த கடல்போலினும் யாரையும் கேளாது சென்று பாய்ந்தாடுகின்றாய்; கீழே காலிற் கல் உறுத்தும் என்றால் ஒடுங்குகின்றாய்; அழகிய மகளிர் காற்சிலம்பின் கல்லென்ற ஓசையைக் கேட்டவுடன் மேனி நிமிர்ந்து நோக்குகின்றாய்; மகளிரின் இருண்ட கூந்தலை மையோ எனவும் கருமணலோ எனவும் புனைந்துரைப்பாய்; சிறிது மாறி ஐயோ, இது நரைத்துப் போவதறியாயோ; பொய்மை பொதிந்த பெண்ணின் ஔ¢ளிய நுதலைக் கண்டு ஒண்பிறையென உன்னுகின்றாய்; அது உள்ளே வௌ¢ளிய பிறை போன்ற எலும்பு என உரைக்கின்றாயில்லை; கண்ணின் மேலுள்ள புருவங்களைப் பார்த்து இவை வில்லென்று சொல்லினையே; புருவ மயிரும் நரைத்து வெளுத்து உதிர்ந்து போன போது எப்படியுளது சொல்லென்றால் ஒன்றும் சொல்லத் துணிவு கொள்ளாய்; வலிய அம்பு போன்ற வடிவுடைய கண்ணைக் குவளை மலர் என்று புனைந்துரைத்தாய்; அக் கண்ணீர் வற்றி மிகவும் குமிழ்ந்து தோன்றும்போது அவ்வாறு சொல்வாயோ; காண்டற்கமைந்த மெய்யாகக் குமிழம்பூவே மூக்கு என்று விரும்பினால், வெண்மையான மலத்திடையே வெளியாகும் குமிழம் அதுவேயென நினைக்க வொண்ணுமோ. எ.று.


     சீரான வெற்பு - பக்கமெல்லாம் மடிப்பும் நொடிப்புமின்றி ஏறற்கு இனிது அமைந்த மலை. விரைந்தனை - இறந்த காலம்; ஆத்திர மிகுதி யுணர்த்திற்று. வாடித்தியங்குதல் - நெஞ்சு சுருங்கி மெலிதல். பயந்திலை - அஞ்சவில்லை. பாம்புயென்றால் படையும் நடுங்கும் என்ற கருத்தையுட் கொண்டு நிற்கிறது. ஆம் - ஆசை. கடலாடல் பண்டயை நாள் தொட்டே இருந்துவரும் வழக்கு; அதனால் “பண்டைக் கடலில் ஆடுக” என்கின்றார். மயிலாப்பூரில் மாசித் திங்களில் கடலாட்டுவிழாச் சிறந்து விளங்கினமையின் வள்ளலார் கீழ்க்கடலைக் குறிக்கின்றார். மகளிர் இன்பத்தில் மூழ்கி அறிவு செயல் இழந்து பலர் கெட்டமை பற்றிப் “பாழ்க்கடல்” என்று குறிக்கின்றார். காரிகை - அழகு. அழகுடைய மகளிரைக் காரிகை என்பது வழக்காயிற்று. காற்சிலம்பின் கல்லென்ற ஓசை உள்ளத்தைத் துள்ளுவித்தலின், “மேலெழும்பக் கற்றனை” என விளம்புகின்றார். அல் - இருள். அளகம் - கூந்தல். பொய்யோதி - பொய்ம்மை நலம் பொதிந்த பெண். இன்று கருத்துத் தோன்றி நாளை வெளுத்துப்போவது பற்றிக் கூந்தலைப் “பொய்யோதி” எனவுரைக்கின்றார் என்றும் கொள்ளலாம். ஓதி - கூந்தல். மயிராற் புருவமுளதாதலின், அஃது உதிர்ந்தவழிப் புருவம் இல்லையாம்; அதனால் “சொல்லென்றால் சொல்லத் துணியாய்” என்று சொல்லுகிறார். கட்குலவு குமிழ் - கண்ணுக்கு அழகாகத் தோன்றுகிற குமிழம்பூ. வெஃகுதல் - விரும்புதல். நீர் கொண்டபோது மூக்கில் ஒழுகும் வெண்மலத்தில் தோன்றும் குமிழியை இங்கே குறிக்கின்றார். சீந்தல் - மதித்தல். “பொருளில்லாரைச் சீந்துவாரில்லை” என்றாற் போல. பெண்ணாசை பற்றியே உலகியல் வாழ்வு பெரிதும் இயங்குதலின் பெண்ணலத்தை உவர்த்தற்குரியனவே மிக்குற மேலும் எடுத்து மொழிகின்றார்.


    

   வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ

    டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வௌ¢ளைநகை

321

   முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்

    ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு

322

   கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்

    செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்

323

   ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்

    வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்

324

   அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்

    எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே

325

   கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்

    கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத்

326

   தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு

    மூளொன்று வௌ¢ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்

327

   செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்

    பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத

328

   செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்

    கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்

329

   செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தியது

    துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்

330

   சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு

    வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை

331

   மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதரிந்துடையாப்

    புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே - திண்கட்டும்

332

   அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்

    செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்

333

   கண்ணீர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக

    வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ணீர்மைச்

334

   சாடியென்பாய் நீ அயலோர் தாதுக் கடத்திடுமேன்

    மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை

335

உரை :

        வாடுதல் இல்லாத வள்ளையிலை போல்வது நீண்ட காது என உரைக்கின்றாய்; அவ் வள்ளையிலைக்குள் உட்புழையோ உள்நரம்போ அமைந்திருப்பதுண்டோ? வௌ¢ளிய பற்களை முல்லையென்று மொழிகின்றாய்; முறிந்து ஒரு சிறு கோற்கொண்டு அம்முல்லையில் நாடோறும் படியும் அழுக்கெடுப்பதுண்டா? மகளிர் வாயிதழை நல்லதோர் கொவ்வைப் பழம் என்று கூறிக்கொள்கின்றாய்; இதழ்மேற் சிவந்து குழம்பித் தோன்றுவது சிவந்த ரத்தமென உணர்ந்திலையோ? கன்னத்தைக் கண்ணாடியெனக் கொண்டு அதன் மேல் ஆசை வைக்கின்றாய்; அக் கன்னத்தின் மேலுள்ள செழுவிய தோல் வாடிவிடுமாயின் என்ன சொல்லவல்லாயோ? முகத்தைக் கண்டு மண்ணகத்தே வந்து கூடிய அழகிய சந்திரன் என்று உரையாடுகின்றாய்; எந்தச் சந்திரனுக்கு ஏழு துளைகள் உள்ளன? அதனை எண்ணா தொழிந்தனையே? மகளிர் கழுத்தைச் சங்கென்று கூறுகின்றாய்; அக் கழுத்தே யன்றிப் பிறவுறுப்புக்களும் உடலின் கூறென்று கொள்ள வேண்டாவோ? அதற்குள்ள கோணலெல்லாம் உடற்குண்டெனக் கொள்ள வேண்டாவோ? உடலின் கூறென்றுரைத்த ஒரு பகுதியைத் தோள் என்று சொல்லி வேய் என மகிழ்கின்றாய். அம்மூங்கிலுக்கு மூட்டெலும்பென ஒரு வௌ¢ளெலும்பின் மூட்டு உளதோ? நாளும் மலரும் செங்காந்தள் இவள் அங்கையென்று சிறப்பிக்கின்றாய்? அக் காந்தட் பூவுக்குப் பலவாய் உளவாகிய என்புப்பூட்டுக்கள் உண்டோ? மங்கையின் கொங்கைக்குச் செவ்விள நீர் ஒப்பாம் என்று சொல்லுகின்றாய்; வலிய தசைத்தடிப்பு எந்த இளநீர்க்கு உளது? இதனை நீ எண்ணவில்லையே? முலையை ஒரு செப்பு என்றும் உரைக்கின்றாய்; அது மார்பில் சிலந்து; சீசீ என்று துப்புக என்பவர்க்கு நீ யாது சொல்வாய்? கச்சிட்டு இறுகக் கட்டிய முலையை மொட்டென்று மொழிந்து மகிழ்கின்றாய்; துவண்டு கீழ் நோக்கித் தொங்குகின்ற முலைக்கு என்ன உரைப்பாய்? இவ்வாறு தொங்கித் தாழ்கின்ற அவற்றை முன்னே உள்ளே மண்வைத்துக் கட்டும் பந்தென மொழிந்து மகிழ்ந்தாயே, அதைக் கண்டு இன்னும் பழுத்து உடையாத


     புண்கட்டி என்று சொல்பவரது வாயை மூடுவாயோ? திண்மையமைந்த குரும்பை போலும் இளமுலைகள் என்று பாராட்டினாய்; அவற்றை மேனோக்கி யெழும் இரத்தக்கட்டி என்பவருண்டே, அவர் சொல்லை எண்ணி யறிந்தனையோ? அவ்வாறுரைப்பவர், மேலும் அம் முலைகளைக் கண்ணீர் தரும் பரு என்று கட்டுரைக்கின்றார்; அதற்குச் சான்றாக அம் முலையிடத்து வெண்மையான நீர் வரக் கண்டுள்ளாய்; அது தெரிந்தும் நாணுகின்றா யில்லையே! தண்ணிய மைபொருந்திய சாடியின் தலை போல்வது இளமுலை என உரைக்கின்றாய்; அயலவர் சொடிபெய்து அடைத்து வைக்கும் குடத்தின் மேன்மூடி போல்கிறது என்பர்; இத்தகையோர் உரைகளைத் தடுக்க முடியுமா? எ.று.


     பிழை - புழை; இது புழல் எனவும் நூல்களில் வழங்கும். நரம்பு தோன்ற விளங்கும் நிலை “நரம்பின் புனைவு” எனப்படுகிறது. நகை - பல் வாய்க்குள் மறைந்திருக்கும் பல்வரிசையைப் புலப்படுத்துவது பற்றி, நகை பல்லுக் காயிற்று. பற்களின் இடையே தங்கும் அழுக்குகளை உடனுக்குடன் நீக்க வேண்டியிருத்தலின், “ஒல்லை யழுக்கெடுப்பது” என உரைக்கின்றார். கோவைப் பழத்தைச் சான்றோர் கொவ்வை என்பர்; “கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்” என நாவரசர் நவில்வது காண்க. செவ்வை - செம்மைநிறம். கவுள் - கன்னம். அந்தமதி - முழுமதி; அழகிய மதியுமாம். கண், காது மூக்கு தனித்தனித் துளையிரண்டு; வாய் ஒன்று; ஆகத் துளை ஏழு. நந்¢து - சங்கு. கண்டம் - கழுத்து. விண்டவை - உடலுறுப்புக்கள்; கழுத்தையடுத்தது தோள் என நினைக. தோளை வேய் என்று புனைந்து மகிழ்ச்சியால் உள்ளம் துடிக்கின்றாய் என்பது. தோளை உடலொடு சேர்த்துக் கோக்கும் என்பு மூட்டெலும்பு. விரற்போற் பிரிவுண்டேயன்றி அவ் விரல்கட்குள்ள பூட்டுப்போன்ற உறுப்பு அங்கைக்கு இல்லை. கொங்கை, ஊன் தடிப்பாயினும் வன்மையும் வல்லென்ற சூதாடுகருவி போலும் தோற்றமும் உடையதென்ற குறிப்பு விளங்க “வல்லூன் தடிப்பு” என உரைக்கின்றார். இளமுலைக்குச் செப்பினை உவமை கூறுப; “அதனால் செப்பென்றனை” என உரைக்கின்றார். சிலந்தி - உடலிடத்துண்டாகும் நோய் வகையுள் ஒன்று. அது வாயாற் சொல்லலாகாதது; இனிச் சொல்லற்க என்ற சான்றோர் கூறுவது பற்றி, “துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதி” என்று சொல்லுகின்றார். வம்பு - வப்பு என வலித்தது. மொட்டென மொழிவதிற் பிறக்கும் உவகையை விதந்து “துள்ளுகிறாய்” என்று சொல்லுகின்றார். வீழ்ந்த முலையைக் காணவும், கவின்பட மொழியவும் விரும்புவோர் இலராதலின், “கிழ்த்துவண்டு வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதி” எனக் கேட்கின்றார். அழகிய உருவமும் திண்மையும் அமைவது கருதி உள்ளே மண் வைத்துக் கட்டுவதுபற்றிப் பந்தை “மண்கட்டும் பந்து” எனப் பகர்கின்றார். இள முலையைப் பந்தெனப் பாராட்டுவாரை நோக்கி இது கூறப்படுகிறது. வாய் பொத்துவையே - வாயை மூட இயலுமா என்பது கருத்து. திண்ணிய தென்னங்குரும்பையை இளமுலைக்கு உவமை கூறல் உண்மையின் “திண்கட்டும் அந்நீர்க் குரும்பை” எனக் கூறுகின்றார். பந்து போலும் தோற்றம் நீங்காமை புலப்பட “அந்நீர்” எனக் குறிக்கின்றார். செந்நீர் - குருதி. கண்ணீர் தரும்பரு - கைப்படின் கண்ணீர் கலுழும் பரு. வெண்ணீர் - வெண்மையான முலைப்பால். தண்ணீர்மைச் சாடி - தண்ணிதாய் மெருகிடப்பட்ட சாடி; மைபெய்த சாடியுமாம். தாது -


    

பொடி; ஈண்டுப் புகையிலைப் பொடி கருதப்படுகிறது. கடம் - குடம். இவ்வறிவுரை மேலும் தொடர்கிறது.


   ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்

    தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நூலிடைதான்

336

   உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்

    கண்டோர்பூட் டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்

337

   ஆங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்

    பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்

338

   தேராழி என்பாய்ச் சீக்குழியை அன்றுசிறு

    நீராழி என்பவர்க்கென் நேருதியே - ஆராப்புண்

339

   நீர்வழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்

    சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்

340

   ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்

    வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி

341

   மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்

    சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு

342

   மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்

    கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்

343

   கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்

    தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது

344

   போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்

    மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவா

345

உரை :

        வயிற்றைப் பார்த்து ஆலிலை என்ற அதனை புகழ்கின்றாய்; அந்த ஆலிலைக்கு நெடியகுடரும் ஈருளும் தோலும் இல்லையே, இதற்கு என்ன சொல்லுகின்றாய்? இடைதான் நூலில் நுண்ணிதாய் உண்டோ இல்லையோ என்று உள்ளத்தோடு உவந்துரைப்பாய்; கையால் தொட்டுப் பார்த்தோர் இடையில் எலும்புப் பூட்டுண்டு என்கின்றார்களே அதைக் கண்டதில்லையோ? மகளிர் அல்குலிடத்தை நீங்கி விலங்கும் ஆழ்ந்த கடலென உரைக்கின்றாய்; வேறு சிலர் அதையே பாழ்ங்கிணறு என்று சொல்லுவார்களே, அதை அறிவாயோ? தாழ்ந்த கொடிஞ்சியமைந்த தேர்ச்சக்கரம் என்றும் சீயொழுகும் அவ்வல்குற் குழியைப் புனைந்துரைப்பாய்; அற்றன்று, அது சிறுநீர் நிறைந்த கடல் என்கின்றார்களே அவர்கட்கு யாது கூறுவாய்? நிரம்பாத புண்ணீராகிய குருதிக்கு வழியாகும் அதனை ஆசையின் நிலைக்களம் என்று இசைக்கின்றாய்; எருவாகிய வலிய மலம் வரும் வழியை என்னென்பாய்? முடை நாறும் சிறு நீரை கானாற்றைப் போல ஒழுக்கவும், அல்குலைச் சிறப்பில்லாத புண்ணென அருவருத் தொழிந்திலையே; புண்ணாகக் கருதி எறும்பும் ஈயும் மொய்ப்பது கண்டுஅவற்றிற் கஞ்சியே மேலே துணியிட்டு மூடுவது


     பார்த்திருக்கும் அதன் உண்மை நிலைமையை அறிகின்றாயில்லையே; இறந்தபின் நம்மை அடைய இருப்பது நரகம் என்றால் மனம் நடுங்குகிற நீ, மகளிர் அல்குல் தலையாய நரகம் என்று சொல்லியபோது கேட்டு மனம் நிலைகுலைய விலைலயே? குறைபாடுடைய இவ்வல்குலைக் கண்டால் நம்பால் உள்ள ஆசையைக் கையொழித்து விடுவார்கள் என்று நினைந்தே, அதனை நன்றாக மறைத்திருக்கவும், அதனையே மனத்தால் அடைகின்றாய்; நெருங்காமல் இருக்க விடாயாய் வருந்துகின்ற நீ அதற்கு மாதவிடாய் உண்டாவதையும் எண்ணுகின்றாயில்லையே. எ.று.


     இடைப் பகுதியைப் பள்ளமென்றற் கொப்ப வயிற்றை மேடென்பது வழக்கு. வயிற்றுப் பை ஒரு வகைச் சவ்வினா லாயினமை பற்றி அதனை அடர் என்றும், அதன் தொடர்ச்சியாகிய குடரை அடர்குடரென்றும் கூறுகின்றார். குடருள் சிறிதும் பெரிதுமாய ஈருள் இருத்தலால் ஈருள் என வுரைக்கின்றார். இடையிற் பூட்டுண்டென்பது கண்காணத் தோன்றாமையின் “கைதொட்டுக் கண்டோர் பூட்டுண்டென்பார்” என இயம்புகின்றார். இடையிற் பிரிந்தோங்குதலின் அல்குலை “விண்டோங்கும்” அல்குலென வேறுபடுக்கின்றார். விண்டோங்கும் என்பதை ஆழ்கடற் கேற்றினும் அமையும். கொடிஞ்சி - தாமரைப் பூவடிவினமைந்த தேர்த்தட்டு. ஆராப்புண்ணீர் வழி - முற்றும் ஆறாத புண்ணாய் நீர் கசியும் நிலை. சிலைநீர் - மூத்திரம்; கலித்தொழுகுதலால் சிலைநீர் எனப்படுகிறது. வீறுடைய புண்ணுண்டாதலால் அல்குலை வீறாப்புண் எனக்குறிக்கின்றார். போர்க்களத்தில் பகைவர் படைக்கருவியால் முகத்திலும் மார்பிலும் பட்ட புண், வீறுடைய புண்ணென அறிக. மூலைகளில் வளையமைத்து வாழும் எறும்பு என்றற்கு “மூலை எறும்பு” எனல் வேண்டிற்று. சீலை - உடை. விதிர்ப்பு - நடுக்கம். கோநரகம் - தலைமை சான்ற நரகம். தண்டாது ஒளித்தல் - நன்றாக மறைத்தல். தண்டாமை - குறைபடாமை. அண்டுதல் - நெருங்குதல். அணிமையை அண்டை யென்பது நடுநாட்டு வழக்கு. திங்கள்தோறும் புறப்படும் பூப்பு, இங்கே மாத விடாய் எனக் கூறப்படுகிறது யாவரும் இனிது அறிந்து கோடற்கு.


    

   தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி

    வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்

346

   ஏய்ந்தமுழந் தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே

    வாய்ந்துவராற் றோற்கு மதித்திலையே - சேந்தவடி

347

   தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்

    வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா

348

   மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்

    தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்

349

   மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ

    தொன்றே ஒருபுடவையாய் ஒத்ததுகாண் - ஒன்றாச்சொல்

350

   வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ

    தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்

351

   காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்

    காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்

352

   சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம

    சாயை யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்

353

   அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற

    அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை

354

   ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்

    தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த

355

   முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்

    துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்

356

   செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்

    வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்

357

   ஔ¢ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது

    கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்

358

உரை :

        மகளிரின் துடையை மெல்லிய வாழத் தண்டொக்கும் என்கின்றாய்; கோலூன்றி முதுகு வளைந்து குரங்கு போல் ஆகும்போதும் அதனை அவ்வாறு புகழ்வாயோ? நன்கின்றியமைந்த முழங்காலை வரால்மீன் போலும் எனப் பரவுகின்றாய்; புலால் சிறிது வாய்ந்து சுருங்கியபோது அவ் வராலின் தோற்குள்ள மதிப்பும் தருகின்றிலை; இனைந்த அடிகளைத் தண்ணிய தாமரையென்று சிறப்பிக்கின்றாய்; தன்மை குன்றி வெளுத்துவிட்டால் வெண்டாமரையென்று அதை விரும்புவாயோ? வண்டுமொய்த்தல் நீங்காத மேன்மையாகக் கருதும் சண்பக மலரே இவள் மேனி என்று சாற்றுகின்றாய்; தீயில் இடும்போது அம் மேனி சண்பகத்தின் மணமோ தீநாற்றமோ காணப்படுகிறது? வானத்தே மின்னும் மின்போல்வது வடிவு எனப் புகழ்கின்றாய்; மேலே இதுவரை உரைத்தவற்றுள் ஈது ஒன்றுதான் ஒருபுடை ஒத்தளது அறிக; உள்ளத்தோடு பொருந்தாத வாய்ச்சொல்லை மன்மதன் வாகனமான கிள்ளை எனப் புகழ்கின்றாய்; அதனையே மாற்றிக் கொடிய நமன் உயிர் கவர விடுக்கும் தூதர்கள் ஏறிவரும் வாகனமென்றால் குற்றமாமோ? மன்மதனுடைய காகளமான குயில் என மகளிர் குரலை மொழிகின்றாய்; காலனான எமனது காகளம் அவரது குரலென்று குறை கூறுவோர்க்கு யாது கூறுவாய்? இளமை தவழும் சாயல் கண்டு மயில் என்று சிறப்பித்துரைக்கின்றாய்; அற்றன்று, அது பிரமசாயை என்று பேசுவோருண்டே, அவர்க்கு என்ன விடை கூறுவாய்? சிவந்த தாமரை மேல் உள்ள அன்னம் போன்ற நடையையுடையர் என்று புகழ்கின்றாய்; அஃதன்று; உண்ணப்படுகின்ற சோற்றின் அளவுக்கமைந்தது நடை என உரைப்பவர்க்கு யாது கூறுவாய்? அம்மகளிரை ஒப்பற்ற ஓவியமென உரைக்கின்றாய்; ஓவியமாதலின் அதன்கண் எழுபத்தீராயிரம் நாடிகள் இருக்க இடமின்றே? பூமியிலுள்ளவற்றில் முற்படவைத்து மொழியப்படும் மலர்க்கொம்பு என மகிழ்ந்துரைக்கின்றாய்; அதற்கு மூனறரைக் கோடி உரோமத் துவாரம் உண்டோ? மகளிர் வடிவம் இனிது அமுதுகொண்டு செய்யப்


     பட்டதென இசைக்கின்றாய்; அது மெய்யாயின் அவர்கள் வைதுரைக்கும் சொற்களை வசையாகக் கொள்ளமாட்டாயே? ஔ¢ளிய இழையணிந்த இளமகளிர் உருவை உண்ணு கரும்பு என்று புகழ்ந்துரைக்கின்றாய்; அவ்வுடம்பிற் சிறிது கிள்ளியெடுத்தால் இரத்தம் கொட்டுகிறதே; ஆகவே இவற்றைப் பொய்யென்று புறக்கணிப்பாயாக. எ.று.


     குறங்கு - துடை. அரம்பை - வாழை மகளிர் துடைக்கு வாழைத் தண்டை யுவமம் பண்டை நூல் வழக்கு. விள்ளுதல் - கூறுதல். மேலே திரண்டு கீழே கூம்பி வருதல் பற்றி, “நன்கிலவாய் ஏய்ந்த முழந்தாள்” என்று இயம்புகின்றார். முழந்தாளை, முழங்கால் என்பது முண்டு. தளர்ந்து உடல் வெளுத்த விடத்துப் பொலிவு குன்றுவது பற்றித் “தன்மை விளர்ப்படைந்தால்” எனச் சாற்றுகின்றார். வண்டாரா சண்பகம்; மேனாட்டும் சண்பகம் என்று இயையும் சண்பகத்தின் தேன் களிப்புமிக்க தென்று வண்டினம் உண்ணாமை பற்றி “வண்டாராச் சண்பகம்” எனவும், சிறப்புடைய மணமுடைமை தோன்ற “மேனாட்டும் சண்பகம்” என்றும் புகழ்கின்றார். வானத்தே காணப்படும் மின்னலை வானாட்டுமின் என்றும், இதுபோலும் இடையுடையார் மகளிர் என்றற்கு மின்னார் என்றும் கூறுவதுண்டு. உரைத்தவுள் - சாரியை பெறாது வேற்றுமையுரு பேற்றது; உரைத்தவற்றுள் என உரைக்கப்பட்டமை யறிக. உவமமெல்லாம் ஒருபுடை யொப்பனவேயாதலின் “ஒருபுடையா ஒத்தது” என ஓதுகின்றார். மனத்தொடு பொருந்தாத சொல்லை “ஒன்றாச் சொல்” என உரைக்கின்றார். வேள் - காமவேள்; காமவேட்கு வாகனம் கிளி. கிள்ளையின் மொழி மகளிர் மொழிக்கு உவமம். காகளம் - எக்காளமிடும் சேனை. குயிலினத்தைக் காமன் படையினது காகளம் என்பர். தருக்குகின்றாய் - தருக்கி யுயர்த்துப் பேசுகின்றாய். பிரமசாயை - பிரமகத்தி என்பது. உண்ணும் உணவுக் கொப்ப நடையுளதாம் என்பது உலக வழக்கு.


    

   ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்

    கேடில்பெருஞ் சூரனென்பர் கேடடிலையோ - நாடிலவர்

359

   மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை

    வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்

360

   வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்

    பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு

361

   சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்

    சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு

362

   நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி

    நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது

363

   கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய் கல்லணைத்துக்

    கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்

364

   வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு

    செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி

365

   மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ

    செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்

366

   மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து

    துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்

367

உரை :

        நின்றாற் கொள்ளப்படும் மகளிரை ஒப்பில்லாத நல்லவர் எனக் கவிஞர் சொல்வது கேட்டு அவரை விரும்புகின்றாய்; கேடில்லாத பெரிய சூரன் என்ற பெயரை நாய்க்கும் சூட்டியுரைப்பர், அதனைக் கேட்டதில்லையோ? ஆயுமிடத்து அம் மகளிரை மெல்லிய இயல்பினர் என வுரைக்கின்றாய்; கருப்பம் மிக்கவழி யுளதாகும் வேதனையை வலிய இயல்பினர் வேறு யாரும் பொறுக்க மாட்டார்களே? இல்வாழ்க்கைக்குரிய மங்கல நாணைப் பூட்டினவுடன் அவர்மேல் பெருங்காதல் கொள்ளுகின்றாய்; வெவ்விய தீயில் வீழ்ந்தாலும் ஒரு பயனுண்டு; இங்கே இல்லையே? பல்வகை இழையணிந்து சென்றால் அவர்பின்னே நீயும் செல்கின்றாய்; வெவ்விய புலியின்பின் சென்றாலும் பயனுண்டே? மகளிர் பின் செல்லுகின்ற நீ அவர் ஓரிடத்தே நின்றால் நிற்கின்றாய்; கண்ணை மூடிக்கொண்டு நின்றாலுமே ஒரு பயனுண்டே? இது பயனில் செயல். மத்தை ஒரு பால் விடாது, தனிப்பக்கண்டால் அவரது உடம்பைக் கைகளாற் கட்டிக் கொள்கின்றாய். அதைவிட ஒரு கல்லை அணைத்துக் கொண்டால் அவ்விடத்தொரு பயனுண்டே? பெண்டாயின மகளிர் பின்னர் வைதாராயினும் அவர்க்குத் தொண்டு புரிவதையே வற்புறுத்தினாய்; அதைவிட ஒரு பிணத்துக்குத் தொண்டு செய்தாலும் ஒரு சிறப்புளதே? கையையும் மெய்யையும் கடந்து சிவந்த தோல் போர்த்த மேனி மினுக்கைப் பார்த்து அறிவு மயங்குகின்றாய்; அதைவிட அறிவிழந்து செத்தொழிவதால் ஒரு சிறப்புண்டாகுமே? மேனியிற் பொருளாகப் பூசும் மஞ்சள் மினுக்கைக் கண்டு அறிவு மயங்கினாய்; அதனை விட்டு வேறோர்பால் கிடந்து உறங்கினும் ஒரு சுகமுண்டே? எ.று.


     இன்பப் பொருளாகக் கோடல் பற்றி மகளிரைக் “கொள்ளுமவர்” என்று குறிக்கின்றார். பெயர் நல்லாரென்பது கொண்டு ஏமாறாதே; நாய்க்கும் சூரன் என்று பெயருண்டு; பெயருடைமைபற்றி அதனிடத்துச் சூரத்தன்மை காணப்படுவதில்லை. வல்லியலார் - மனத்தாலும் மெய்யாலும் வன்மை மிகவுடையவர். அவராலும் பொறுத்தற்கரியது கருப்ப வேதனை; அதனை தாங்குதலின் மகளிரை மெல்லியலாரெனல் கூடாது என்பது கருத்து. இல்லியல் பூண் - இல்வாழ்க்கைக்கறிகுறியாக அணியும் மங்கலப் பூண். விழுதல்-விரும்புதல். வெந்தீயில் விழுந்தால் மீள அதனை நெருங்க அஞ்சுவோம்; நோயுறோம்; மகளிர் மேல்வீழ்பவர் மேன்மேலும் வீழ்ந்து நோயுறுவர் என்பது கருத்து. புலிப்பின் செல்வார்க்கு மெய்வலியுடையரென்ற மதிப்புண்டாம்; கண் மூடி நின்றால் காண்போர் மனமிரங்கி யாதேனும் உதவுவர்; கல்லையணைத்துக் கொண்டால் கீழே வீழோம் என்ற உறுதியுண்டு; வையும் மனைவிக்குத்தொண்டு செய்வோனை வையகம் இகழும்; பிணத்துக்குரிய தொண்டு செய்வோனைப் போற்றும் என அறிக. மகளிரின் சிவந்த மேனிமினுக்கு ஒப்பனையாலும் பிற செய்கைகளாலும் உண்டாவதின்மையால் “கைதாவி மெய்த் தாவும் செந்தோல் மினுக்கு” என உரைக்கின்றார். கை ஒப்பனைக்கும், மெய் செயல் வகைக்கும் நின்றன.


    

   பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்

    பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்

368

   தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்

    தொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும்

369

   தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை

    வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்

370

   உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்

    உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்

371

   கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்

    கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர்

372

   மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்

    மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை

373

   பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு

    பட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த்

374

   தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்

    தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்

375

   வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்

    நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்

376

   தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்

    போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்

377

   கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்

    உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்

378

   இங்கிவர்வாய் பாசிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை

    நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே - மங்கையர்தம

379

   ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது

    காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்

380

   காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்

    கேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி

381

   ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழங்கடலில்

    வீ¢ழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்

382

   வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்

    காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்

383

   செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்

    பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது

384

   கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்

    செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்

385

   ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்

    கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்

386

உரை :

        வஞ்சிக் கொடி போலும் மகளிரைப் பார்த்துக் கூத்தாடிப் பின்னோடி அன்புறுகின்றாய்; அதைவிட வெவ்விய நரகைப் பார்த்தாலும் அவ்விடத்தே யோர் பயனுண்டு; தன்னைச் சேர்ந்த மகளிரின் கைபட்ட மாத்திரையே மனம் களித்து இன்புறுகின்றாய்; வலிய பூதம் தோன்றித் தொட்டாலும் அதன் துணையுண்டாம்; நட்புற்றாலும் கோடற்கில்லாத மகளிரை விரும்புகின்றாய்; அதைவிடக் கொடிய விடத்தைக் கொண்டாலும் அறிவுப் பயனுண்டு; அவருடைய சிவந்த வாயிதழ் ஊறிய நீருண்டு மகிழ்கின்றாய்; அதனினும் ஔ¢ளிய சிறுவரது சிறுநீரை யுண்பாயாயின் ஒரு மனவுரன் உண்டாகும்; அவர் வாயிதழைக் கற்கண்டாகக் கவ்வி மகிழ்கின்றாய்; எட்டி, வேம்பு என்ற இக்காய்களை யுண்பதில் மிக்க பயன் உண்டு; அம் மகளிர் வாயில் மென்று தரும் மிச்சிலை மிகவும் விரும்புகின்றாயே, அதைவிட வெறும் வாய் மெல்லுவதிற் பயனுண்டே; அவருடுத்திருக்கும் ஆடையின் முன்றானை உடம்பிற் பட்டால் மகிழ்ச்சி மிகுகின்ற அந்நிலையினும், மார்பு துடிக்க அம்பு தைக்குமாயின் அதனாற் புகழுண்டன்றோ; நெருங்காத மங்கையின் மெய் தீண்டுமாயின் உள்ளம் மலர்ந்து சிரிக்கின்றாய், அதைவிட ஒரு செந்தேள் உன்னைத் தீண்டுமாயின் நன்று; அவர்களைத் தின்பித்தற்கு யாதானுமொரு பண்டத்தை வாங்குகின்றாயே, அதனை அவர்கட்கிடுவதினும் ஒரு நாய்க்கிடின் அதனால் நலமுண்டு; சொல்லால் தாக்கும் அவர் பொருட்டுப் பொருள்பல தேடும் ஆண்மைச் செயல்புரிகின்றாய் - அச்செயல் புரிந்து ஈட்டிய பொருளைத் தெருவில் போட்டாலும் உனக்குப் புகழுண்டாம்; தான் கட்டிய ஒளியுடைய கயிற்றை யணிந்த மகளிரோடு உடனுணவு கொள்கின்றதைக் காட்டிலும், தனது நாயுடன் உணவு கொளல் நன்றி யுறவு உண்டாக்கும்; வேட்கை மிகுவதால் இவர்கள் வாயிலிட்டுத் தருகின்ற வெற்றிலையை விரும்பி யேற்கின்றாய், அதைவிடப் புல்லிய மலத்தை விழுங்கினும் அச் செயலிலோர் வன்மையுண்டு; மகளிருடைய சிறப்பில்லாத மனையைக் காத்துக் கிடக்கின்றாய், அதனினும் சுடுகாட்டைக் காப்பதில் ஒரு பெருமையுண்டு; பூப்பெய்தியொடுங்கி யிருக்கும் மகளிர் குரல் கேட்க விரும்புகின்றாய்; அதற்காக ஏங்குவதை விடக் கழுதையின் பாழ்த்த குரலைக் கேட்பதில் ஒரு கிளர்ச்சியுண்டு; வாய் கோணி மூச்சுவிடும் மகளிருடன் வாழ விரும்புகின்றாய்; அதைவிட ஆழ்கடலில் வீழ்ந்தொழியின் ஒரு நலமுண்டு; தன்னை விரும்பி வீட்டுள் வந்தாற்கு முலையும் எதிர்வீட்டானுக்கு முகமும் காட்டி மயக்கும் மகளிர் செயலைக் கண்டும் அவரை இன்னும் உவர்த்து விலக்கினாயில்லை; கூட்டி வைக்கும் ஆளுக்கு வேண்டுவன செய்யுமாறு சீமான் தனது பணப்பையில் கையை நுழைப்பது கண்டிருப்பாய்; அதுகண்டும் அஞ்சாதொழிகின்றாய்; சிலருக்குக் கையாலும் சிலருக்குக் கண்ணாலும் சைகை செய்தும் மயக்கும் மகளிர் இயல்பை எண்ணுகின்றாயில்லை; இவ்வகையாகத் தளராமல் எல்லை யில்லாத செய்கைகள் பலவுடைய மகளிர் செயலத்தனையும் உரைப்பேனாயின், அம்மம்ம, வயிறு குழம்பும் என அறிக. எ.று.


     நரகைப் பார்த்தால் பாவம் செய்லின் தீங்குதோன்றி மனத்தைச் செம்மையுறுத்துவது பயனாமாதலின் “பயனுண்டே” எனப் பகர்கின்றார். வன்பூதம் தொடுமாயின் வலிய துணையாயிற்றென்னும் துணிவாம். நன்மகளிரென நயந்தபோதும், அவர் கொள்ளத் தகாதவரெனத் தெரிந்தும் தீண்டுவது குற்றமென்றற்குத் “தெவ்வில் மடவாரைத் திளைக்கின்றாய்” எனத் தெரிவிக்கின்றார். தெவ்வுதல் - கொள்ளுதல். இருந்து மீட்டும் அக்குற்றம் புரியும் வாய்ப்பின்றி இறந்து படுதல்பற்றி, “தீவிடத்தை வவ்வுகினும் அங்கோர் மதியுண்டு” என உரைக்கின்றார். “தீவிடத்தை வவ்வுகினும் அங்கோர் மதியுண்டு” என உரைக்கின்றார். மதுகம் - எட்டிக்காய்; எட்டிக் காயைத் தின்றார்க்குத் தேள் முதலியவற்றின் தீவிடம் ஏறாதென்பார். உள்ளமெல்லாம் பரவசப்படுவது கண்டு. “மகிழ்வு பதிந்தாய்” என உரைக்கின்றார். மார்பிற்படும் அம்புப்புண் விழுப்புண் எனச் சிறப்பிக்கப்படும் என அறிக. நாய்க்கிடின் அது நன்றி மறவாது நலம்புரியும் என அறிக. தவறின்றாயினும் உள்ளதாகக்கொண்டு பிணங்குவதுபற்றித் “தாக்கு அவர்க்காய்” எனச் சாற்றுகின்றார். அரிய முயற்சி செய்த பொருள் செய்வது தேட்டாண்மை எனப்படும்; பெரியதோர் ஆண்மைச் செயல் புரிந்து சிறியதொரு பரிசு பெறுவதும் அதுவாம்; அங்ஙனம் பெற்ற பொருளை அம்மடவார் கையிற் கொடுப்பதை விடத் தெருவிற் பலர் காண வைப்பது பெயரும் பீடும் நல்கும் என்பது பற்றி, “தெருவிற் போட்டாலும் புகழுண்டு” என்று சொல்லுகின்றார். வாட்டார் - ஒளி பொருந்திய தாலிக்கயிறு. குக்கல் - நாய். தமது கூட்டத்தால் காம வேட்கையை மிகுவிப்பது குறித்து “மிண்டாகும் இவர்” என விளம்புகிறார். நொறில் - வன்மை. ஏத்தா மனை - புகழில்லாத வீடு. கனம் - பெருமை. பூப்பெய்திய இளமகளிர் மூன்று நாளும் மறைந்திருப்பதுபற்றிப் “பூத்தாழ்வோர்” எனப்படுகின்றார். கிளர் - கிளர்ச்சி. வாய் கோணி நெடுமூச்செறிவது கோட்டாவி; அடிக்கடி கோட்டாவி விட்டுச் சோம்பும் மகளிர் “கோட்டாவி யாழ்ந்தார்” என இகழப்படுகின்றார்கள் ஆழ்கடல் - ஆழ்ங்கடல் என வந்தது. விரகு, ஈண்டு நிலத்தின் மேல் நின்றது. உள்வீட்டான் - வீட்டின் உள்ளிருப்பவன். கூட்டாள் - மகளிரை ஆடவர்க்குக் கூட்டி வைக்கும் ஆள். Êசீமான் பணப்பை மகளிர் கற்பைச் சூறையாடுவது காண அஞ்ச வேண்டுதலின் “பயந்திலையே” என அறிவிக்கின்றார். செய்யா மயக்குகின்றார். - செய்து மயக்குகின்றார். இம்மடவார் - தம்நலத்தை விற்கும் இவ் விலைமகளிர். குடர் குழம்பும் என்பது, அஞ்சுவல் என்பதுபட நின்றது.


    

   வாயொருபாற் பேச மனமொருபால் செல்லவுடல்

    ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்

387

   நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்

    சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை

388

   வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்

    புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்

389

   வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு

    நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ

390

   சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால

    காலமென்கோ நில்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்

391

   பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்

    மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்

392

   பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த

    சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்

393

உரை :

        இங்கே சொல்லி வரும் விலைமகளிர் வாயொன்று சொல்ல, மனமொன்று நாட, கையொன்று செய்ய நெறியழிவர்; இவர்கள் அறமறியார்; தீமையே விரும்புவர்; சிவன் பெருங் கோயிற்குச் செல்லார்; சிறு தெய்வங்களாகிய பேய்கட்கே விழா முதலியன செய்வர்; இவர்களை இப்போது என்னென்பது? வஞ்சத்தின் வடிவென்பேனா? கொடிய வினையாகிய புலியென்பேனா? பிறப்பின் திரட்சியென்பேனா? பெரிய நரக பூமி என்று சொல்வேனா? அஞ்சத்தக்க உயிரை அறுக்கும் வாள் என்பேனா? வாயால் உரைக்கலாகாத மாய வடிவ மென்பேனா? மண்ணகம் முடிவெய்தும் நாளின் வடிவென்போனா? கொடிய எமன் என்பேனா? தீக்கோள் என்பேனா? மயக்கும் சாலம் என்பேனா? இந்திரசாலத்தின் வடிவென்பேனா? கேடு செய்யும் ஆலகாலம் என்பேனா? நினது பொல்லாக் காலத்தின் வடிவென்பேனா? உலகத்தில் பெண்ணென்றார் யோகம் வல்ல பெரியோரும் மனம் நடுங்குவரென்றால், மன்னவருள் அஞ்சி நடுங்காத அறிஞர் யாவர்? பெண்ணென்றால் பேயும் மனம் இரங்கும் என்பர்; பேய் என்ன, அவர் பெற்ற சேய்களான மக்களுமே அவரால் விளையும் தீமைக்கஞ்சி இரக்கம் எய்துவரே. எ.று.


     அழிதல் - நெறி பிறழ்ந்து கெடுவது. நயத்தல் - விரும்புதல். சிறப்பு - திருநாள்; விழாவுமாம். வல்லியம் - புலி, புஞ்சம் - திரட்சி. நரகவேதனை விளைவிக்கும் நிலம் என்றற்கு, “நரகபூமி யென்கோ” எனவுரைக்கின்றார். என்கோ: இதின் என்கு என்பது செய்கென் கிளவி; ஓ; வியப்பு. அஞ்சுறும் வாள் - அஞ்சுதலைச் செய்யும் வாள், ஈர் வாள் - அறுக்கும் வாள். வாய்; சொன்மேனின்றது. கோள்; தீமை விளைவிக்கும் கோள்வகை ஒன்பதனுள் ஒன்று. தீமை கண்டு பொறாது வருந்துவர் என்றற்குத் “தீமைக்கு இரங்குவர்” எனத் தெரிவிக்கின்றார்.


பொன்னாசை கூறல்


    

   பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்

    என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக்

394

   கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்

    வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று

395

   பாச வினைக்குட் படுத்தும்அப் பாவையர்மேல்

    ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்

396

   நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே

    பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை

397

   வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்

    எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற

398

   பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்

    றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால்

399

உரை :

        ஆய்ந்து கொள்ளும் செம்பொன்னாலும் ஆடையாலும் மூடி அணிசெய்யா விடத்து அவர் மேனி வடிவு என்னாகும்; இதனை எண்ணவில்லையே; துன்ப வகையின் கொத்து என்று சொல்லப்பட்ட அம் மகளிரின் கூட்டம் எழுபிறப்புக்கும் காரணமாம் என்பதறிந்தும் அக் கூட்டத்தைக் கைவிடுகின்றா யில்லையே; தொடர்பாமென்று பாசமாகிய வினைக்குட்படுத்துக் கட்டுப்படுத்தும் மகளிர்மேல் உனக்குஎவ்வாறு ஆசை யுண்டாயிற்றென எண்ணுகின்றிலை; அன்பில்லாத உன் ஆசையை என்னென்று சொல்வது? நெய் சொரியப்பட்ட நெருப்புப்போல இதன் மேல் பொன்னாசை வேறு மிக்குறுகின்றாயே; பொன்மேல் ஆசை வைத்துப் பின் இழந்து வீணாக வயிற்றெரிச்சலுற்று எத்தனையோபேர் இம் மண்ணுலகில் நின் கண்ணெதிரே நிற்கின்றார்களே, பார்த்திலையோ! துள்ளிச் செல்கின்ற பொன்னை யுடையவர்கள் துன்பக்கடலை யுடையவராவர்; அன்றி வேறே எதனையுடையவராவர்; கண்டிருக்கிறாயன்றோ. எ.று.


     “புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது” ( 4 : 114 ) என மணிமேகலை கூறுவதற்கு, “செம்பொன்னால் துகிலாற் புனையாவிடல் அவர்மெய் என்னாகும்” என்பது விளக்கம் தருகிறது. இன்னாமைக் கொத்து - துன்ப வகையின் தொகை. எழுவகைப் பிறப்பு முளவாதற்குக் காரணம் என்றற்கு “எழுமைக்கும் வித்து” என இயம்புகின்றார். மடவார் கூட்டம். மகளிர் தொடர்பு - தொத்து, ‘பற்று. வினையாய் நிகழ்ந்து பயனால் கட்டுப்படுத்தலின் “பாசவினை” என்று பகர்கின்றார். பாவை போல்வதுபற்றிப் பாவையர் என்பது மரபு. மகளிர்பால் ஆன்ம நேயமுறாது அவர் உடல் மேல் ஆசை கொள்ளுமாறு விளங்க “நேசமிலாய் நின்னாசை என்னென்பேன்” என வுரைக்கின்றார். பெண்ணாசைக்கு மேலாகப் பொன்னாசை மிகுவது “நெய்வீழ் நெருப்பென” உரைக்கப்படுகிறது. ஆசை வைத்துப் பொன்னை யீட்டியவரிற் பின்னர் அதனை இழந்து வருந்துவோர் பலராதலால் “மண்ணுலகில் எத்தனைபேர் நின்கண்ணெதிர் நின்றார்” என்று கூறுகின்றார். “ஈட்டலும் துன்பம் ஈட்டிய ஒண் பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பம்” ( நாலடி ) என்றலின், “பொன்னுடையார் துன்பப் புணரியுடையார்” என அறிவுறுக்கின்றார்.


    

   ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்

    ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்

400

   வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்

    ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது

401

   நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான

    தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக

402

   ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை

    என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியோடு

403

   போர்த்துப் புரட்டி பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்

    ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்

404

   கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி

    எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்

405

   பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்

    தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்

406

   வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்

    ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்

407

   உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்

    இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்

408

   இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்

    எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்

409

உரை :

        உன் கையிற் பொன்னிருந்தால், உன் தாயும் அறியாமல் வைத்துக்கொள்ள ஓர் இடம் வேண்டுமே, அதற்கு எங்கே போவாய்; ஏற்ற இடம் கிடைத்தாலும் வைத்தபின் அவ்விடம் அடையாளம் மறைந்து போனால் என்ன செய்வாய்; பின்பு அது வைத்த விடத்தே வெந்து கரியாய் விட்டால் என்ன செய்வாய்; ஓரிடத்தே இரு என்றால் நீ அதனைக் காப்பதற்கு என்ன செய்வாய்; பகைவர் அறிந்து மிக்க சினமுற்று அவ்விடத்தைப் பேர்த்து எடுத்துக் கொண்டால் என்ன பண்ணுவாய்; நீ புதைத்த பொன்னையே தோண்டி யெடுக்கக் கையைப் புகுத்தும்போது அதனுள்ளிருந்து கருங்குளவி செங்குளவிகள் கொட்டி வருத்துமாயின் என்ன செய்வாய்; பொய் சொல்விக்கும் பொன்னைக் காக்கும் பூதம் போந்து இது என் காவல் என்று தடுக்குமாயின் நீ என்ன செய்குவாய்; பொன்னைக் கெடாது காத்தலால் ஆணவம் தோன்றித் தலைக்கேறும்போது என்ன செய்வாய்; உன்னுடைய நட்பு வேண்டி உலோபம் என்னும் குற்றம் புகுந்து கெடுக்குமே, அதற்கு என்செய்வாய்; அதனால் பொன் பெறற்குரிய நலம் முன்பு இல்லாத நமக்கு இனி உண்டோ இல்லையோ என்ற ஐயம் தோன்றி உள்ள நலமனைத்தும் அழியச் செய்யுமே இதற்கு என்செய்வாய். எ.று.


     தாயன்பு ஆற்றல் மிக்கதாகலின், அதனை அடிப்படுக்குமாற்றல் இளமைக்கின்மை பற்றி, “ஆற்றல் மிகு தாயும்” என அறிவிக்கின்றார். பொன்னை வைத்தபின் இடம் மறந்து வருந்தினோர் பலராதலின், “சிவ சிவ” என்றும், இடத்தில் வைத்த குறி மறையுமாயின் இடம் தன்னைக் காட்டாமை பற்றிக் “காட்டாமல் ஏய்த்தால்” என்றும் இயம்புகின்றார். வைத்த பொருள் காலக்கழிவால் அழுக்கேறிக் கரியாய்ச் செல்லாப் பொருளாய் விடற்கஞ்சி, “நீடும் கரியான தென்றால் அரகர மற்றென் செய்வாய்” என அறிவுறுத்துகின்றார். ஒன்று குறித்து ஓரிடத்தேயிராது பல கருதிப் பலவிடத்தும் ஓடியலைதல் மக்கள் இயல்பாதல் பற்றி, “ஓடுகின்ற நீ அதனைப் புரப்பதனுக் கென்செய்வாய்” எனப் புகல்கின்றார். புரத்தல் - காத்தல். மாற்றலர் - பகைவர். குளவிகளின் கொட்டுங் கருவி எய்போல் இருத்தலின் “எய்” என்று இசைக்கின்றார். பொன்னைக் காக்குமிடத்துப் பிறர் அறியாமைவேண்டிப் பொய் பல கூறப்படுதலின்


     “பொய் புகுத்தும் பொன் காவல்” என்று புகல்கின்றார். பொன் காவற் பூதத்தாற் புடைப்புண் டிறந்தனரென உலகவர் கூறுவதுண்மை பற்றி “பூதம் மறித்து என் காவல் என்றால் மற்றென் செய்வாய்” என்று வினவுகின்றார். காவற் சிறப்பால் வைத்த பொன் கெடாதிருப்பது காண்பார்க்குண்டாகும் செருக்கு “பொன் காவல் வீறுங்கால் உளதாகும் ஆணவம்” எனவும், ஆக்கமிழந்து கெடச் செய்வதுபற்றி “வெங்கூளி” எனவும் விளம்புகின்றார். உலோப குணம் தோன்றின் புகழ் மாறி வசை தோன்றுவது இயல்பாதலால், ”மாறுஞ்சீர் உலோபமென்னும் குறும்பன்” என இசைக்கின்றார். உலோப மிகுதி இல்லா நலம் இனி எய்துமோ என்ற ஐயம் பிறப்பித்து உள்ள நலத்தையும் ஒழிப்பது விளங்க “நலமெல்லா மழியும்” என உரைக்கின்றார்.


    

   ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது

    பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்

410

   கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற

    சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே - பேர்த்தோடும்

411

   நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா

    ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்

412

   பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்

    இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்

413

   இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்

    இட்டமதை விட்டற் கிசைந்திலையே - முட்டகற்றப்

414

   பொன்னடப்ப தன்றியது போகமே யாதியவாய்

    என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்

415

   நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்

    வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே - நீண்வலயத்

416

   திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்

    எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற

417

உரை :

        பொன் பெறுதற்குரிய சூழ்ச்சியும் முயற்சியும் செய்தோர் ஆயிரம் பேரிடத்தில் அது பாய்ந்தோடிப் போய் அவர் பக்கத்தே நில்லாமல் போவதை நீ பார்த்ததில்லையா? மெய்ந் நூலணர்வினரான திருவள்ளுவர், ‘கூத்தாட்டவைக்குச் சென்று கூடிய கூட்டம் பின்னர் நீங்குவது போலச் செல்வம் நீங்கும்’ என்று சீர்த்த அடிகளையுடைய திருக்குறளில் கூறிய மொழியையும் நீ தெளியவில்லையா? ஒவ்வொரு நாளையும் வாழ்நாட்கொல்லி என்று சொல்லக் கேட்டால் உடல் நடுங்குகின்ற நீ நாளும் அறியாத வகையிற் பொருட்காகக் கொலையுண்ணப் படுதலின் ஆட்கொல்லி என்று கூறுவதை ஆய்ந்தறிந்ததில்லையா? கீழ்ப்பட்ட கொல்லை மேட்டுப் பச்சிலைச் சாற்றால் பொன் படைக்கப் படுகிற தென்பார்களே! அத்துணைப் புல்லியது எனக் கேட்டும் எங்ஙனம் அதன் மேல் உனக்கு இச்சையுண்டாயிற்று? ஆசையில்லாத பெரியோரின் மலம்பட்ட விடமெல்லாம் பொன்னாக மாறுகிறதென்பர்; அது வாயின்


     அதன்பால் உண்டாகும் விருப்பத்தை விடுதற்கு இசைகின்றாயில்லையே; இடையூறகற்றற்குப் பொன் பயன்படுவதன்றி உண்டி முதலியவாக அது என்ன பயன்பட்டது? ஒன்றையும் நீ எண்ணவில்லையே; இந் நிலவுலகில் பொன் முன்னால் நீண்ட தொரு மயக்கம் நிலையாயுளது; ஆனால் நிலையா உலகில் அது வீண் மயக்கம் என்று அறிந்தும் அதனை விடுகின்றா யில்லையே; நீண்ட உலகியல் வாழ்வு இச்செல்வமின்றி அமையா தென்பாயாயின் சிற்றுயிர்கள் எச்செல்வம் கொண்டு வாழ்வு நடத்துகின்றன?


     நில்லாமற் போவது என இயைக்க ஆழ்ந்தோர் - பொருளீட்டற்குரிய நூல்வகை யாய்ந்து செயல்புரிவோர். ஈட்டுபவரும் ஈட்டிய பொருளை யிழப்பவரும் பல்லாயிரவர் என்றற்கு “ஆயிரம் பேர் பக்கல் பாய்வதும் பின்னர் நில்லாமல் ஓடிப்போவதும்” என உரைக்கின்றார். இரண்டாவதாக ஆய்ந்தோர் என்றது திருவள்ளுவரை; மெய்ந்நூல் பலவும் கண்டவர் அவர் என்பவாகலின், செல்வம் ஆவதும் போவதும் மேலே கூறினமையின், “கூத்தாட்டவை சேர்குழாம் விளிந்தாற்போலும்” என்ற உவமப் பகுதி மாத்திரம் எடுத்தோதப்படுகிறது. சீர்த்தாட்குறள்; தனிச்சீரை இறுதியிலே கொண்ட குற்ட்பா என்றுமாம். “நாளை உயிறீரும் வாள்” என்பதுபற்றி உயிர் கொல்லி என்று அறிஞர் கூறுவர். நாளும் அறியாவகையில் கள்வர் புகுந்து ஆளைக்கொன்று பொன்னைக் கவர்ந்து செல்வது பற்றி, “ஆட் கொல்லி” என்று இயம்புகின்றார். பச்சிலைச் சாற்றால் செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்குவதுண்டென உலகவர் கூறுவர். கீழ்த்த பச்சிலையா லாக்கப்படுமேல், பொன் சிறந்ததாகக் கருதி அதன்மேல் ஆசை கொள்வது கீழ்மை யென்றற்கு, “இச்சையுனக்கு எவ்வாறு இருந்தது” எனக் கேட்கின்றார். ஆசையறுத்த முனிவர்களை இங்கே “இச்சையிலார்” என்று குறிக்கின்றார். இட்டம் - இஷ்டம். விடல் - விட்டல் என வந்தது. முட்டுப்பாடு நீக்கப் பொன் பயன்படுவதன்றி உணவாவதில்லை என்றற்கு “போனகமே யாதியவாய் என்னடுத்தது” என இயம்புகிறார். நீளுதல் - நீணுதல் என வருதலின் ( திருஞான. பிரம ) நீள்வலயம் நீண்வலயம் என எதுகை நோக்கி வந்தது. வலயம் - வட்டம். ஈண்டு, அஃது நிலத்தில் நடக்கும் உலகியல் மேனின்றது.


    

மண்ணாசை இயல்


   மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்

    மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது

418

   மண்கொண்டார் மாண்டர்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்

    மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட

419

   விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி

    மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம்

420

   என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்

    இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்

421

   கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த

    மண்காணி என்று மதித்தனையே - கண்காண

422

   மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலே

    விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண

423

   அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்

    அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்

424

   மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்

    மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்

425

   வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்

    வீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும்

426

   மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்

    கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான

427

   மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்

    பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்

428

   ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்

    தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்

429

   மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்னானேல்

    எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்

430

உரை :

        சுவையில்லாத மண்மீது நீ ஆசை கொள்ளுகின்றாய்; மண்ணாண்ட மன்னர் பலரும் மண்ணாசையால் அழிந்ததை மனத்தில் நினைத்திலையோ? பயனின்மை கருதாமல் மண் கவர்ந்தார் பலரும் மாண்டொழிந்தனர்; மாய்ந்த அவரது உடலை வைக்கச் சுடுகாட்டு மண்ணைக் கொண்டனரேயன்றி அவர்தாம் விருப்பிற்கேற்ப வேறு மண் கொண்டார்களில்லையே; திண்ணமாய விண்ணுலகு செல்லும்போது அவ்விடத்துக்கு வேண்டுமெனப் பிடி மண்ணேனும் உடன் கொண்டு செல்லவல்லவரோ? மண்ணுலக ஆட்சி முன்னே யொருவன் என்ன தென்றான், பின்னே யொருவன் என்னதென்றான்; இருவரும் விட்டு நீங்கியது பாரதத்தில் கேட்டிருந்தாயல்லவா? மண்ணுலகில் விளைவு காண்பதில் நீயே கண்காணியாவாய்; ஆனால் நீ காணியாவதில்லை! நீ யிருந்த நிலத்தை மாத்திரம் காணி என்று கருதுகின்றாய்; கண்கூடாக மண்ணில் உனக்கொரு காணி வேண்டி வருந்துகிறாயாதலால் நீ விண்ணுலகிலும் காணிபெற வேண்டுவதில் வியப்பில்லை; எண்ணியவாறு பெறுதற்கு நீ அந்தரத்தில் நிற்கின்றாய்; உன்னைவிட மண் அந்தரத்தில் இருப்பதை அறிகின்றாயில்லை; தந்திரமாகப் பேசுமிடத்து மண் கொடுப்பேன் என்பாயேல், கேட்போர் சினந்து வைவார்கள்; சிறுவர் மண் கொடுப்ப நீ கொண்டு மகிழ்கின்றாயன்றோ; வீடு வளமை தருவது என்றேனாயின் வீடென்றது மண் வீடு என்று நினைக்கின்றாய்; வீடு என்ற சொல்லின் பொருளை நீ அறிந்தாயில்லை; நாட்டின்கண் மண்ணாலும் மரத்தாலும் அமைக்கப்படும் வீடெல்லாம் கண்காணக் கட்டழிந்து வீழக் காண்கின்றாயன்றோ? மண்ணகத்தின் உயர் வீடுகளும் அங்குள்ள வேந்தர்களும் மேலுலகத்து இன்ப வீட்டுக்கு அப்பாலான வீடும்


     பாழாதல் பார்த்துள்ளாயன்றோ? கீழ்வீட்டிலிருந்து மேல்வீட்டுக்கேறுவன் என்கின்றாய்; அந்நிலையில் எமன் கடா ஏறிவந்து உன்னோடு ஏறுவனாயின் உன் ஆசைப்பெருக்கு என்னாகும்? மண்ணுலகு படைத்த பிரமனும் மண்ணை விரும்பான் என்றால் உனக்கு எவ்வாறு இம்மண்ணின் மேல் ஆசையுண்டாயிற்று?


     செத்தாரைச் சுடுதற்கும் இடுதற்குமென்று ஒதுக்கப்பட்ட இடம் ஒருவர்க்கும் உரியதன்மையின் ‘அயல்மண்’ எனப்பட்டது. மண்ணாண்ட மன்னரனைவரும் மாண்டு மடிந்தமை பற்றி, “மன்னால் அழிதல் மதித்தனையே” என்று சொல்லுகின்றார். மண்ணுக்கு இறுதிக்காலம் கூறுவதுபோல விண்ணுக்குக் கூறாமையின் “திண்கொண்டவிண்” என்று தெரிவிக்கின்றார். மண்ணைக் கொண்டேகும் கையும் மெய்யும் விட்டு உயிர் மாத்திரம் சேறலின் “பிடி மண்ணேனும் கொண்டேக மாட்டாராயினர்” என அறிக. பாண்டவ கௌரவர் இருவரும் குருகுலத்து மண்ணேயம் கொண்டு பொருதழிந்தமை விளங்க “இன்னதுநீ கேட்டங் கிருந்திலையே” என இசைக்கின்றார். விளைபுலத்துக் கண்காணி விளைபுல மாகான் என்பதுபற்றிக் “கண்காணியாய் நீயே காணியல்லாய்” என உரைக்கின்றார்; நிலவளவு செய்வார் “காணி, முக்காணியென்று மதித்தனையே” என விளம்புகிறார். “விண்ணகத்து இடம் வேண்டின் வேள்வியாதி செய்க” என்ற வேதநூல் கொள்கைபற்றி, “மண்காணி வேண்டி வருந்துகிற நீ விண்காணி வேண்டல் வியப்பன்று” என விளம்புகின்றார். கருதியது பெறவேண்டி முயற்சி வடிவாய் இருப்பவனை “அந்தரத்தில் நிற்கின்றான்” என்னும் வழக்குப்பற்றி, “எண்காண அந்தரத்தின் நின்றாய்” என இசைக்கின்றார். மண் மாரி பெய்தது என்ற வழக்கு அந்தரத்தில் மண்ணுண்மை புலப்படுத்துகிறது. இந்நாளில் சந்திரனிடத்திலிருந்து மண் கொணரப்பட்டமை கண் கூடாதலின் “அந்தரத்தில் மண் நின்றது அறிந்திலையே” என்றது பொருத்தமாதல் காணலாம். தந்திரமாகப் பேசுவோர் கொடாமைக்கு மண்கொடுப்பேன் எனல் வழக்கு. சிறுவர் சிற்றில் அமைத்து மண்ணைச் சோறென்று தருவதுண்மையின் “சிறுவர்களும் மண் கொடுக்கில்” எனவுரைக்கின்றார். வீடு என்ற சொற்குப் பொருள் விடுதல் என்பது. மண்ணகத்து வீடுகள் வாழ்வோர் போகிய வழி இடிந்து பாழாவதும், மாயாகாரியமாகிய உலகு மாயையில் ஒடுங்குமிடத்து அது மாயைப் பாழ் என்றும், அம்மாயையும் பரசிவ வருளொளியில் ஒடுங்கியவழி வியோமப் பாழ் என்றும் கூறுப்படுதலின் “வீடும் பாழாதல் பார்த்திலையோ” என விளம்புகின்றார். மண்ணளித்த வேதியன் - பிரமன். உன்னைப் படைத்த பிரமனுக்கில்லாத விருப்பம் உனக்கு எங்ஙனம் வந்தது; வரற்கு ஏது வில்லை என்பது கருத்து.


    

   ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னிலுன்றன்

    ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத

431

   பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்

    கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்

432

   செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

    இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத்

433

   தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்

    பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி

434

   அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்றுந்

    தி¢கழ்வாய் மையும்நீ தெளியாய் - இகழ்வாரை

435

   எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்

    றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன

436

   ஓரா வெகுளி யுடையான் தவமடையான்

    தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்

437

   வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்

    இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்

438

   ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்

    காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்

439

   எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற

    கொல்லா நலம்சிறிதும் கொண்டிலையே - பொல்லாத

440

   வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்

    அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு

441

   தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்

    வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்

442

   மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே

    நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்

443

   பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்

    சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில்

444

   ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக

    மாயா விகாரம் மகிழ்ந்தனையே -சாயாது

445

   நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற

    தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை

446

உரை :

        மண்மேல் ஒன்றிற்கும் பயன்படாத துரும்பின் மேலும் நினது ஆசை விடுவதில்லை என்றால், உன்னைவிட்டு நீங்காத பேராசையை என்னென்று சொல்வேன்; நீங்காத பாவக்கடலுக்கெல்லாம் படுகடலாம் பாழ்த்த வெகுளியெனும் கோபக்கடலில் மூழ்குகின்றாய்; வருத்தமுண்டாக உன் கோபம் செல்லாவிடத்தாயின் அது உனக்கே தீங்கு தரும்; செல்லுமிடத்தும் அதனினும் தீமைவிளைப்பது பிறிதில்லை என்று சான்றோர் சொல்லியதை எண்ணுகின்றாயில்லை; ஒருவன் வளமுண்டாகத் தன்னைக் காத்துக்கொள்ள நினைப்பானாயின் தன்பால் சினம் என்னும் குற்றம் உண்டாகாமல் காப்பானாக என்ற அறவுரையைப் பொன்போலப் போற்றி புகழ்ந்து கைக்கொள்ளல் வேண்டும்; அதனைச்


     செய்கிலை; நெருங்கி ஆடி அகழ்கின்றவரையும் நிலமகள் பொறுமையுடன் தாங்குவதுபோல இகழ்வாரைப் பொறுக்க வேண்டுமெனத் திகழும் மெய்யுரையையும் நீ தெளிந்திலை; இகழ்பவரை நோக்கி இவர் எவ்வண்ணம் நம்மை இகழ்கின்றார் அறிவோம் என்று இவ்வாறு வெகுண்டு அதற்கு இடமளித்தாய்; பகையென்று எண்ணாமல் வெகுளியைக் கைவிடாதவன் தவமடையான். அதனால் அதனை விட்டொழிக என்று சான்றோர் உரைப்பரே; அதனைத் தானும் நீ அறிந்தாயில்லை; நீங்காத நின் வெவ்வினைக்கீடாக அரன் துன்பம் வருவிப்பானென்றால் இச் சினமென்னும் குற்றத்தை எவரிடத்து ஒப்படைக்க முடியும்? செவ்விய மனமில்லாயாய், இன்னாமை செய்தவருள்ளும் ஒருவர் பால் விருப்பும் ஒருவர்பால் வெறுப்பும் கொண்டு நீ யாது பயன்பெற்றாய்? நல்லறிவு வாய்ந்த மேலோரால் எல்லா நயங்களையும் தன்னகத்தே கொண்டது எனப் பாராட்டப்படுகின்ற கொல்லாமையாகிய நல்லறத்தை நீ மேற்கொண்டிலை; பொல்லாத மணவன்மை பூண்டிருக்கும் அறிவிலியாகிய நீ மன்னுயிர்பால் அன்பும் இரக்கமும் கொள்வாயில்லை; வாய்மை யென்பது இன்பம் தரும் தூய்மை எனப்படும் யாவும் தனக்குத் துணையாகக் கொண்டது என்ற அறம் ஒன்றையும் அறிவிற்கொண்டிலை; தூய்மையின்றி, ஒரு கையில் மானேந்தும் வள்ளலாகிய சிவனுடைய அன்பர்களில் நானும் ஒருவன் என்று நடித்தாயன்றோ; இவ்வகையான மற்றைக் குற்றங்கள் பலவற்றையும் செய்து பழகிப் பழகி அவற்றைச் செய்வதிற் பெரிய சாதனை கொண்டோர்களின் தலைவனாக நின்றாய்; அதனோடு பாதகச் செயல்களில் ஓயாது சென்ற திரிபுணர்வால் இவ்வுலகியலின் மாயா விகாரத்தில் வீழ்ந்து மயங்கினை; அதனால் உள்ளத்தில் தெளிவுறாது எய்தியிருக்கும் இளமை என்றும் மாறாத மெய்மையுடையது என நினைந்து திளைக்கின்றாய்; உன்னைப் பெற்ற தாயின் இளமை எத்தனை நாள் இருந்தது எனக் கேட்டறிக. எ.று.


     சிறு துரும்பும் பற்குத்த வுதவும் என இதனைப் பேணியது ஆசைப் பெருக்கைக் காட்டுதலின் அதனை “ஏகாப் பெருங்காமம்” என்று பேசுகின்றார். ‘படுகடல்’ என்றவிடத்துப் படுசொல் மிகுதி குறித்து நின்றது; படுதோல்வி என்றாற்போல். பாழ் விளைத்தல் பற்றிப் “பாழ் வெகுளி” எனக் குறிக்கின்றார். வெகுளி - வடமொழியிற் கோபம் எனப்படுகிறது. தாபம் - வருத்தம். தன்னின் வலியார்மேல் சென்ற சினம் விளைவிக்கும் தீது பின்னர் நினைந்து நினைந்து வருந்துவித்தலின் “தாபமுற” என உரைக்கின்றார். “செல்லாவிடத்துச் சினம் தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற” ( 302 ) என்பது திருக்குறள். செல்லிடத்து மேவிய சினம் இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயக்கும் என்று பரிமேலழகர் கூறுவர். தற்காப்பு வளம்படு செயலாதல் பற்றி “மல்லல் பெற” என வள்ளலார் உரைத்தருள்கின்றார். இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய அறம் என்பது இனிதுணரப்படல் வேண்டி உவமத்தை மாத்திரம் பிரித்தெடுத்துரைக்கின்றார். இகழ்வாரை மேலும் இகழச் செய்வது பொறாது சினக்கும் புன்மையாவதால் அதனை “இவ்வண்ணம் என்னை வெளியிட்டனை” என்று குறிக்கின்றார். சினம் தோன்றிய போது அறிவு மழங்குதலின் “ஓரா வெகுளி” என்று சிறப்பிக்கப்பட்டது. தீர்தல் - நீங்குதல். செய்தானை விடாது பற்றி நின்று தன் பயனை நுகர்வித்தலின் “வெவ்வினை” என விளம்புகின்றார். முற்றவும் கடியப்படாமை தோன்ற,


     “அரன் வெம்மை புரிவான்” என்பது காட்டப்படுகிறது. செவ்வை - நடுநிலைமை. “ஒன்றாக நல்லது கொல்லாமை” ( 323 ) என்று கூறலின் “எல்லா நலமும் இஃதே” எனப்படுகிறது. ‘வன்பு’ அன்புக்கு மறுதலை. “தூய்மையென்ற தவாவின்மை மற்றது வாய்மை வேண்டவரும்” என்ற திருக்குறளை மேற்கொண்டு, அவாவின்மையே யன்றிப் பிற நலங்களுமாம் எனக் கொண்டு, “எல்லாம்” என வள்ளற்பிரான் வழங்குவது காண்க. அடியார்போல் நடிப்பது அறப் பண்பன்றென்பது, “நாடகத்தால் உன்னடியார் போனடித்து நானடுவே, வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்” என மணிவாசகர் உரைப்பதனாலறியலாம். பாதகச் செயற்குக் காரணம் இயற்கையாலன்றித் தீயினத்தின் சேர்க்கையாகிய செயற்கைத் தொடர்பாதலால், அதனை “விகாரவுணர்ச்சி” எனவும், அதனால் உலகியலின்பப் பேற்றின்மேற் சென்ற மயக்கவுணர்வு “மாயா விகாரம்” எனவும் குறிக்கப்படுகிறது. நில்லா இயல்பிற்றாகிய உலகியல், தன்கண் வாழ்வார் அதனையுணர்ந்து நீங்காவண்ணம் அவரது அறிவை மயக்கிப் பிணிப்பது பற்றி “உலக மாயா விகாரம்” என்பது மரபாயிற்று. மெய்; ஈண்டு நிலைபேறு குறித்து நின்றது.


    

யாக்கையின் பொல்லாவியல்


   மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நில்போல்வார்

    கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த

447

   கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து

    கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க

448

   ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்

    பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்

449

   நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு

    காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த

450

   மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து

    கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்

451

   சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ

    ஓகாளம் செய்தவனை ஓர்ந்திலையோ - ஆகாத

452

   கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர

    கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்

453

   குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத

    குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை

454

   மாலையிலும் காலையினும் மத்தியினும் குத்துமிது

    சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்

455

   தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்

    மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்

456

   சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு

    பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய

457

   கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய

    மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய

458

   முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய

    எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்

459

   கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்

    எண்ணப் படுமோவென் றெண்ணிலையே - எண்ணத்தில்

460

உரை :

        அவ்விளமைப் பருவத்தை உடம்பன்றோ கொடுத்தது; உடம்புள்ளவரை அஃது உளதாம் என நினைக்கின்றாய்; முதுமை யுற்றோர்க்கு இளையர் கைகொடுத்து தாங்கிச் செல்வதைப் பார்த்த தில்லையோ? உடம்பின்கண் தோன்றி, கூனால் கைக்கோலூன்றிக் கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து நடைமெலிந்து கால் நடுங்க நிற்குமவரைப் பார்த்ததில்லையோ? தசை சுருங்கினமையின், ‘ஐயனே முன்னே நட’ என்று சொல்லி அருமைப் புதல்வர் முன்னே நடக்க அவர் பின்னே மெல்ல நடந்து செல்லும் முதியோரைப் பார்த்ததில்லையோ? கொடிய எமனது நரகு வருக என்று அழைக்கவும் கூட்டமான நரியும் நாயும் கூவியழைக்கவும் ஒருபால் சுடுநாற்றமுடைய சுடுகாடு அழைக்கவும் மிக முதிர்ந்துள்ளவரைக் கண்டதில்லையோ? உடம்பு வாடியும், நீர் சிறிதுமின்றிக் கண்கள் உலர்ந்து கெடவும் வாய் உலர்ந்து வறளவும் கைவலிகுன்றி நிற்கும் முதியவரைக் கண்டதில்லையோ? யாக்கை யுலர்ந்தும் இக்கிழவன் சாகாமல் வீணே நாளும் தளர்கின்றான் என இங்கே நின்போல்வார் எள்ளி இகழ்வதைக் கண்டதில்லையோ? இங்ஙனம் இயற்கையில்மூத்துத் தளர்ந்து மெலிவுறுவது ஒருபாலாக, உடற்குண்டாகிய நோய்வகைகளைக் காண்பார், ‘இது ஆகாத காலம்; வந்துள்ள இந்நோய் பொல்லாத கடுநோய்; இது குமரகண்டம்’ என்று சொல்லுவோரைப் பார்த்ததில்லையா? எடுத்த உடலிற் குட்டநோய் தோன்றக்கண்டு இது நாளடைவில் கைகால்களக் குறைத்துவிடும்; பொல்லாத நோய் என்று சொல்லி வருந்துபவரைப் பார்த்ததில்லையா? தீய வினை காரணமாகத் தோன்றி மாலைப்போதினும் கால்ப் போதினும் நண்பகலினும் வயிற்றை வருத்தும் இது சூலை என்று சொல்லி வருந்துபவரைக் கண்டதில்லையா? இது மேகநோய், இது உடம்பு மிகவும் நலிந்து கெடச் செய்யுமாதலால் இதனிடமிருந்து சுகமடைதல் இல்லை என்பவரைக் கண்டதில்லையா? தணியாத தாகம் உறுவித்து மனத்துக்கு நோய் விளைவிக்கும் இது சீத நோய்; இது வாத நோய்; இது பித்தநோய் என்று கூறப்படும் நோய் கொண்டு வருந்துவோரைப் பார்த்ததில்லையா? இவர் போலவே, கைப்பிணியும், காற்பிணியும், கண்ணோயும், இவ்வாறு எண்ணற்கரிய நோய்வகையும் கொண்டவர்களைக் கண்டதில்லையா? தளர்ச்சி கொண்ட முட்டுக்களில் உண்டாகும் ஊறுகளுடன், கைகால் முடமாதல் முதுகு கூனுதல் முதலான எண்வகைப்பட்ட ஊறு கொண்டவர்களைப் பார்த்ததில்லையா? தடை விளைவிக்கும் ஊறுகள் இவ்வுடம்பில் எண்ணற்றன இளமைக்காலத்தே உண்டாகியிருப்பது கண்ட பின்பும் இளமையை ஒரு பொருளாக எண்ணப்படாது என எண்ணிப் பார்க்கின்றாயில்லையே. எ.று.


     ஆயிளமை என்றவிடத்து அகரச்சுட்டு நீண்டு இடையே, ஆயிடை யென்றாற்போல யகரவுடம்படு மெய் பெற்றது. விருத்தர் - முதியவர். கூன் மெய்யிடைக் காணப்படுதல் பற்றி “மெய் கொடுத்த கூன்” என்று கூறுகின்றார். உயிர் கொண்டு போதல்பற்றி நமனை “வெய்ய நமன்” என்பது மரபு. இளமை நலம் கனிந்து வன்மை கொண்டு விளங்குபவர் முதுமை எய்துவானேன் எனும் வினாவுக்கு விடையாக, நமன் நாடு முதலியன அழைக்க “மூத்து நின்றார்” என மொழிகின்றார். பீடு - பெருமை. இளமை வளத்தால் வன்மையுற்ற மெய்யென்றற்குப் “பீட்டைந்த மெய்” என்று பேசுகின்றார். ஏகாளம் - இகழ்தல். இது ஏகத்தாளம் எனவும் வழங்கும். நோயின்றி இயல்பாய் வளர்ந்த உடல் முதுமையில் எய்தும் நிலையினைக் கூறி மேலே இளமைக் கண்ணும் பிறாண்டும் எய்தும் நோய் வகையை உரைக்கின்றார். நோய் வந்த காலத்தைச் சோதிட நூலார் கண்டம் என்பர். காளைப்பருவமுற்றார்க் குண்டாய கடுநோயைக் குமர கண்டம் என்பது வழக்கு. குட்டம் - குட்டநோய், விடாது தொடரும் வினை துட்டவினை யெனப்படுகிறது. வயிற்றிடைக் குடரை முறுக்கி வருத்துவது சூலை நோய். இதன் கொடுமையைத் திருநாவுக்கரசர் “கூற்றாயினவாறு” எனத் தொடங்கும் திருப்பதியத்தில் விரியக் கூறுவது காண்க. தேகத்தில் தோலின்மேல் பல்வேறு வடிவத்தில் வேறுவேறு நிறமுறுவிக்கும் நோய், வானத்தில் மார்கழித் திங்களில் சிதறித் தோன்றும் மேகம் போல்வதுபற்றி இந்நோய் மேகமெனப்படுகிறது என்பர். வாதம், பித்தம், சீதம் எனும் இவற்றின் மிகுதி குறைவுகள் விளைவிக்கும் நோய்களை “சீதநோய் வாதமொடு பித்தநோய்” என உரைக்கின்றார். திருவள்ளுவரும் “மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று” ( 94 ) என்பர். பரிமேலழகர் உணவு செயல்களின் மிகுதி குறைவு என்று கொள்வர். கை கால் முதலியவற்றின் வேறாய தலை, மார்பு, வயிறு ஆகிய கூறுகளடங்கிய உடற்பிணி “மெய்ப்பிணி” எனப்படுகிறது. முட்டுக்களும் இடையூறுகளும் உண்டாக்கும் ஊறுகள் மூட்டுக்களிலும் கை கால்களிலும், முதுகு, உடையாகிய வற்றிலுமாக எட்டுறுப்புக்களில் உண்டாகும். அவற்றை எண்ணி “எட்டூறு” எனக் குறிக்கின்றார். கழுத்து ஒன்று, கையிரண்டு, தோள் இரண்டு, இடையொன்று, கால் இரண்டு ஆக எட்டு என்பர். தனை விளைவிக்கும் ஊறுகளைத் “தட்டூறு” என்று உரைக்கின்றார். இத்துணையும் இளமைக் காலத்து உளவாகும் நோய் வகைகளையும் இடையூறு வகைகளையும் கூறியவாறாகக் கொள்க. இளமை வாழ்வின்கண் நிகழும் மயக்கம் நீங்கற்பொருட்டு இங்ஙனம் விரியக் கூறியவர் வாழ்க்கை நிலையாமையை இனிக் கூறுகின்றார்.


    

நிலையாமை நினைதல்


   பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை

    மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று

461

   கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்

    நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்

462

   பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்

    கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த

463

   ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு

    நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக

464

   இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்

    நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி

465

   உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை

    மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்

466

   நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்

    மருவும் குறட்பா மறந்தாய் - தெருவில்

467

   இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்

    மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்

468

   பறையோசை அண்டம் படீரென் றொலிக்க

    மறையோசை யன்றே மறந்தாய் - இறையோன்

469

   புலனைந்தும் என்றருளும் பொன்மொழியை மாயா

    மலமொன்றி அந்தோ மறந்தாய் - நிலனொன்றி

470

   விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்

    நெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில்

471

   நெய்விடல்போல் உற்றவர்கண் ணிர்விட் டழவுயிர்பல்

    மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்

472

   வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய

    நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்

473

   நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு

    நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்

474

   நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்

    சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது

475

   தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்

    விட்டார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - தட்டாமல்

476

   உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்

    கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்

477

   நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று

    சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்

478

   ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்

    சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு

479

   என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்

    அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே

480

உரை :

        சிந்தனைக் காட்சியில் இவ்வுடம்பு பொய்யென்று அறவோர் கண்டு அதன்மேற் பற்றின்றித் தனிமை கொண்டாராக நீ மெய்யென்று நினைந்து அதன் பொய்ம்மை மயக்கத்தைப் பொருந்தியிருக்கின்றாய்; ஒரு


     பக்கம் இருந்து மகளிர் கூடிக் கூகாவென்று அழுவது கண்டிருந்தும் நீ உடம்பின்மீது பெருங் காதல் கொள்ளுகின்றாய்; மிக்க அன்பையுடைய மகளிர் இருந்து வருந்த, பிணத்தை எடுத்துச் செல்பவரைப் பார்த்திருந்தும் நீ மனம் கலங்கினாயில்லை; சாவதற்கு முன்பு இருந்த ஊரவர் பிணத்துடன் ஈமத்துக்குச் சென்று மீண்டு பின் நாம் அவருடன் நீராடக் கண்டும் நீ நினைத்துப் பார்க்கவில்லை; சீராக இன்றிருந்தவர் நாளைக்கிருப்பரென்பது மெய்யன்று என அறவோர் உரைத்த அறம் தங்கிய சொல்லை நீ ஆராய்ந்து பார்க்கின்றா யில்லை; பிணமெனுமாறு ஒன்றி உறங்குவது போலும் சாக்காடு என்ற ஔ¢ளிய குறட்பாவின் உண்மையை அறவே மறந்தோ போய்விட்டாய்; காற்றாடிபோல நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ற நெடுமொழியைத் தன்கண் கொண்ட திருக்குறளையும் மறந்தொழிந்தாய்; நீ வாழும் தெருவில் இறந்தாரைக் கண்டு இவர் நாம் அறியப் பிறந்தார், இப்போது இறந்தார் என்று பலரும் கூறுவதை முக்காலும் மறந்துபோனாய்; இறந்தார்க்காக அறையப்படும் பறையோசை அண்டமுகடு வெடிக்குமாறு ஒலிக்கிறது என்ற மறைநூல் ஓசைகேட்ட வப்பொழுதே மறந்துபோனாய்; ஞான குருவான திருஞானசம்பந்தர், “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டை மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்றருள் செய்வான் அமரும் கோயில்” என்றுரைத்த பொன்மொழியை மாயா மலமறைப்பினால் மறந்து விட்டாய்; நிலத்தின் மேல் இருக்கும்போதே விக்குள் எழக்கண்டு வாயில் நீர்விடுமுன் அயலவர் உரைத்து மனம் உருகக் கண்டும் நீ உடலின் நிலையாமையை நினைக்கின்றாயில்லை; மிக்கெழு நெருப்பில் நெய்யைச் சொரிவது போல் உற்றவரும் உறவினரும் கண்ணீர் சொரிந்து அழவும், உயிர்கள் பல உடம்பு விட்டு நீங்குவது கண்டும் உடலின் நிலையற்ற தன்மையை எண்ணவில்லை; செய்யப்படும் வினையால் அதன் ஒளி கழியும். சூரியன் வானிடத்து மறையவும் நம்முடைய வாழ்நாள் கழிவதைக் கண்டு ஐயோ, நீ மனம் நடுங்கவில்லை; கோள்கள் நிலவி மறையும் நாழிகையை நாளாகக் கொண்டனை யேயன்றி ஒவ்வொரு நாளையும் ஒரு நாழிகைச் சிறுபொழுதாக எண்ணி வருந்துகின்றாயில்லை; ஒரு நாழிகைக்குமுன் அவ்விடத்தே நின்றார், இவ்விடத்தே நின்றார், இருந்த நிலைகுலைந்து உயிர் நீங்கினார் என்று பலரும் உரைப்பது கேட்டும் நிலையாமை உண்மை தெளிகின்றாயில்லை; உரிய காலம் பிற்படுமுன் உணவைத் தொட்டார்; உடனே ஒரு தும்மு தும்மினார்; உயிர் நீங்கிவிட்டார் எனப் பிறர் சொல்லக்கேட்டும் உடலை மெய்யென நினைத்தற்கு வெட்கப்படுகிறாயில்லை; தடை செய்யாமல் இட்டது உண்டு படுத்து உறங்கினவர் அப்படியே இறந்து போனார் என உரைக்கக் கேட்டும், உடம்பை மெய்யென நினைத்தற்கு மனம் கூசவில்லை. வளவிய தாரணிந்த இவர் நேற்றுதான் மணம் புரிந்துகொண்டார்; இன்று இறந்து சாம்பரானார் என்று சொல்வது கேள்விப்பட்டும் உடலைப் பொருளெனக் கொள்ளாது நீங்கினாயில்லை; தனிச்சிறப்புடைய தேரேறித் தெருவில் உலாவந்தவர் இறந்து வானுலகம் போயினார் எனப் பலரும் சொல்லக்கேட்டும் உடலின் நிலையாத் தன்மையைத் தெரிகின்றாயில்லை; அவ்விடத்தைச் சேர்ந்திருந்தவர் இருமினார்; அப்பொழுதே இறந்து போனார். என்னே, இவ்வாழ்வு தான் என்னே எனச் சொல்லி இரங்குபவரைக் கண்டும் உடல்மேற் கொண்ட பற்று நன்கு ஆய்ந்து நீங்குகிறாயில்லை. எ. று.


     புலம்புறல் - உள்ளத்தால் தனிமை யுணர்வு கொள்ளுதல். பொய்யை மெய்யாகக் கொண்டு மயங்குவது பொய்ம்மயக்கம். கை - பக்கம். மகளிர் மனம் ஆடவர் உடன்மேலது என்பதுபற்றி, இறந்தார் உடலைச் சூழ்ந்திருந்து மகளிர் அழுவது இயல்பாயிற்று. மாகாதற்பெண்டு - பேரன்புடைய மனைமகளிர். மாழ்குதல் - வருந்துதல். பிணத்துடன் ஈமத்துக்குச் சென்று அடக்கம் செய்து மீண்டு வந்து நீராடுவது தமிழ் நாட்டவர் மரபு. “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ இடமில்லையே” என்பர் தாயுமானார். நன்று - அறம்; மெய்ம்மையுமாம். உடலின் உரம் பற்றி யுண்டாய மறதியை “மறங்கருதி அந்தோ மறந்தாய்” என இயம்புகின்றார் நெடுஞ்சொல் - மெய்ம்மையுரை. மறந்தாய் என்று மும்முறை கூறியது அடுக்கு. மறையோசை - மறை நூல் உரைக்கும் உரை; வள்ளற்பெருமானுக்கு அருட் குருவாதலின், ஞானசம்பந்தர் “இறையோன்” எனப்படுகின்றார். மாயா காரியமான உடம்பொடு கூடி இயற்கையான மூலமலத்தால் மறைப்பண்டமை விளங்க “மாயாமலம் ஒன்றி மறந்தாய்” என உரைக்கின்றார். மாயையும் மலமாய் மயக்குவதா யுளதென்றும் அறிக. விக்குள் வந்தாள் நீர் பருகல் வேண்டுமென்பர். உயிர்பல் என்பதைப் பல்லுயிர் என மாறுக. விண்டிலை - நீங்கிலை. செய்வினையின்கண் கருத்துத் தோயுமிடத்துக் காலக்கழிவு தோன்றாமையின் “செய்வினையின் வாள் கழிய” என்று கூறுகிறார். வினைசெயலால் பகலொளியும் ஞாயிறு, மறைதலால் நாட் கூறும் கழிவது கூறியவாறு. நாளும் கோளும் நாழிகைமேல் நிற்பனவேயன்றி நாட் காலத்தில் மேனிற்பன வல்ல. கோள்களை எண்ணி அவற்றிற்குரிய நாழிகையை நாளாக எண்ணி ஏமாறுகின்றாய்; நாளை நாழிகையென்ற சிறுபொழுதாக மாறி நினைத்தல் வேண்டும்; அதனை யெண்ணின் நிலையாமை யுணர்வு நெஞ்சில் நிலைபெறும் என்றற்கு “நாழிகையா யெண்ணி நலிந்திலையே” என்று நவில்கின்றார். தட்டுதல் - தடை செய்தல். பேருறக்கம் - சாக்காடு. நீறு - சாம்பல். தணத்தல் நீங்குதல். வீற்றுதேர் - தனிச் சிறப்புடைய தேர். இறந்தாரை, ‘வானுலகம் சென்றார்’ என்பது மங்கல வழக்கு. ஆய்ந்திலை - ஆய்ந்துணர்கிலை.


    

   மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்

    கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்

481

   றொடுதிங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ

    கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்

482

   நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்

    பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே

483

உரை :

        உடற்குள் இருக்கும் கருப்பையினுள் இடம் பெற்றும் வளர்தலின்றி வீணே சிதைந்து கருவும் உருக்குலைந்து ஒழுகி விடுவதைக் கண்டிருக்கின்றாய். கருத்தோன்றிய திங்கள் முதல் பத்துத் திங்களும் ஒவ்வொரு திங்களிலும் கெடுவதுண்டு என்று சான்றோர் கூறுவதையும் கேட்டுள்ளாய்; கருவுட்படும் இந்நிலை முற்றுவதற்குள் யோனியின் நெருக்குதலால் தோன்றிய கரு உயிரிழந்து பலனற்று வீழ்ந்தொழிவதையும் பார்த்திருக்கின்றாய். எ.று.


     சுக்கில சுரோணிதக் கலப்புற்றும் கருப்பையை யடைந்து இடம் பெறுதல் அரிது என்பது புலப்படக் “கருப்பைக்குள் வாய்ந்து” என்றும், கருவாய் உருமுதிர்தலின்றிக் கருக்குழம்பு பிதிர்வுற்று உதிர்ந்தொழிவ துண்மையின், “முதிராக் கருவும் பிதிர்ந்துதிர” என்றும் உரைக்கின்றார். கருமுதிரும் காலம் திங்கள் பத்து எனினும், ஒவ்வொரு திங்களிலும் சிதை வேற்படுவதுண்டென்று சான்றோர் கூறுப; மாணிக்கவாசகர், “மானுடப் பிறப்பினுள் மாதாவுதரத் தீனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும், ஒரு மதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும், இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும், ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும், அஞ்சுதிங்களின் ஊறலர் பிழைத்தும், ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும், எட்டுத் திங்களில் கூட்டமும் பிழைத்தும். ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும், தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்” ( போற்றி 13-25 ) என்று கூறுவது கொண்டு, “அந்தோ கெடுகின்றதுவும் கேட்டாய்” என உரைக்கின்றார். கருவுயிர்க்கும் போது யோனியின் நெருக்கத்தால் வெளிவரும் வாய்ப்பின்றித் தலை நசுங்கி உயிர் போதலுண்மை பற்றி, “யோனி நெருக்கில் உயிர் போய்” என்று எடுத்தோதுகின்றார்.


    

   காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்

    கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்

484

   பாலனென்றே அன்னமுலைப் பாலருந்தும் காலையிலே

    காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து

485

   பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்

    அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்

486

   பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்

    அள்ளியிடும் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்

487

   காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்

    ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண

488

   மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவளே

    சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையோ - மேற்பிள்ளை

489

   மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்

    பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ

490

   திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை

    எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்

491

உரை :

        கருப் பலன் நிறைந்து காவெனக் கத்திக்கொண்டு தாய் வயிற்றிலிருந்து நிலத்தில் வீழ்ந்த போழ்தே பிணமாகக் கண்டு கொவென்றழுவாரைக் குறித்து நோக்கியதில்லையோ? நோயின்றிப் பிறந்து பாலன் என்று பரிந்து தாய் தரும் முலைப்பாலை யருந்துங் காலையில் அப் பாலனுயிரைக் கூற்றுவன் கொண்டு போவதைக் கண்டுள் ளாயன்றோ? குழவிப் பருவத்தின் மேல் வளர்ந்து பெற்றோர் மனம் மகிழப் பேச்சுத் தந்து விளையாடுங் காலத்தே ஆவி நீங்கிப் போவதைப் பார்த்திருக்கின்றாயல்லவா? கற்பன கற்று உரியன ஆய்ந்தறிய வேண்டிப்


     பள்ளியிற் பயிலுங்கால் பெரிய எமன் போந்து அச்சிறுவன் உயிரைக் கவர்ந்து போகக் கண்டிருக்கின்றாயன்றோ? கல்வி நிரம்பிப் பள்ளியை விட்டு நீங்கும் காளைப்பருவத்தில், காண்பார் மனம் குழைந்து வருந்தக் காளையாகிய ஆளை நமன் உயிர் கொள்வதைக் கண்டுள்ளாயன்றோ? ஆளனாகிய வேளையில் அவன் மாப்பிள்ளையாகும் ஏற்பாடு செய்து மணம் முடிக்கும் அந்நாளே அவன் இறப்பதை எண்ணிப்பார்த்தாயா? அதன் மேல் அவன் பிள்ளைச்செல்வமும் பிறசெல்வங்களும் மேழிச்செல்வமும் பெண்டிரும் கொண்டு இல்வாழுமிடத்து இறந்துபோவார் பலருண்டே அதனைப் பார்த்திருக்கின்றாயல்லவா? இறந்தொழியும் இந்நிலை இக்கணமே வருமோ? மேல்வரும் கணமோ? எக்கணமோ? என்று பெரியோர் கூறினர்; அதனை நீ மனதில் எண்ணுகின்றாயில்லையே! எ.று.


     கரு நிறைந்து குழவியாய்ப் பிறப்பதைப் “பலன் உற்றுக் காவென்று வீழ்தல்” என்று கட்டுரைக்கின்றார். பிறக்கும்போதே இறப்புண்டென்னும் குறிப்பை அறியாதொழிந்தாய் என்றற்குக் “குறித்திலை” என்று கூறுகின்றார். பால் விக்கி இறக்கும் திறத்தைப் பால்குடிக்குங் காலையிலே எமன் அதன் உயிர்குடித்தலைக் காண்க என்பார், “உயிர் குடிக்கக் கண்டிலையோ” என்று காட்டுகின்றார். விளையாடும் பருவத்தே எய்தும் சாக்காட்டை, “விளையாடுங்கால் அற்றாவி போவ தறிந்திலையோ” என அறிவிக்கின்றார். இவ்வாறு பள்ளிச்சிறுவன் இறப்பதை “நமன் வாயில் அள்ளியிடும் தீமை” என்று அவலிக்கின்றார். பாரநமன் - வன்மைமிக்க கூற்றுவன். காளைப் பருவத்து ஆடவனை “ஆள்” என்பது காண்க. ஆளும் செவ்வி யெய்தினவனை ஆள் என்றலும் ஆளன் என்றலும் உலகியல் வழக்கு. சமன் - நமனுக்கு ஒரு பெயர். முடிமன்னரென்றும் குடிமக்கள் என்றும் வேற்றுமை நோக்காது உரிய காலத்தில் தப்பாது உயிர் கோடலால் “சமன்” என்பது காரணப் பெயர். மணமகனையும் மணமாதற்குரிய செல்வியுமுடையானை “மாப்பிள்ளை” என்பர். சாப்பிள்ளை - இறக்கும் பிள்ளை. “மாடை” - பொன்னும் பொருளுமாகிய செல்வம். ஏர் - வேளான் செல்வம். இது மேழிச்செல்வ மெனவும் வழங்கும். பாடை மேற்சேர்தல் - இறந்தொழிதல், வீடவிஃது - இறத்தற்கு நேரும் இந்நிலை. என்றார் -என்று சொன்ன சான்றோர் உரை.


    

   கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட

    ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ

492

   பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி

    ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்

493

   பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும

    காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்

494

   மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ

    பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற

495

உரை :

        இங்ஙனம் மாய்ந்தொழியும் இவ்வுடம்பை எலும்பு முதலியன தொகப்பெய்த கூடென்பேனா, கொண்ட வினையென்ற நீரோட்டத்தில்


     விட்ட ஏடு என்பேனா, நீர்மேல் எழுதிய எழுத்தென்பேனா, பாழிடமென்பேனா, ஒன்பது துவாரம் கொண்டவொரு பாவையென்பேனா, வலிய பிறவி ஏழின் உருவமென்பேனா, அப்பிறவி கன்மத்திற் கீடாக வருவதென்பேனா, தாழ்ந்ததொரு மண்ணாற் செய்த பாண்டமென்பேனா, காமம் முதலிய செவ்விய சரக்குவைத்துக் கட்டிய பையென்பேனா, பாழ்த்த கருமத்தொகுதி என்பேனா, ஆணவத்தால் இறுகக் கட்டிய கட்டென்பேனா, நேர்மையின்றிக் கோணும் இயல்புடையார்க்கென்ற மெய்ந்நிலை என்பேனா, மின்னென்று சொல்வேனா, பொய்யின் வடிவென்பேனா, மாயையின் பொடியென்று சொல்வேனா. எ.று.


     என்பு - நரம்பு. தசை முதலியன செய்து வைத்த தோற்கூடு என்றற்குத் “தொக்குறு தோற்கூடு” என்று சொல்லுகிறார். மனமொழி மெய்களாற் செய்து கொள்ளப் படுதலால், “கோள்வினை” எனக் கூறுகின்றார். நீர் பெருக்கிவிட்ட ஏடு அதனை வழிச் செல்வதுபோல வினைவழிச் செல்வதுபற்றி “வினை நீரோட்டில் விட்ட ஏடு” என விளம்புகிறார். தோன்றும்போதே மறைவதுபற்றி “நீர் மேலெழுத்து” என உரைக்கின்றார். துன்பம் தரும் நோயும் ஆசையும் குற்றமும் நிறைந்தமை பற்றிக் காடெனவும், விரும்பத்தகாமை கண்டு பாழ் எனவும் பகர்கின்றார். எழுவகைப் பிறப்புக்கும் ஏது கன்மமாதலின், “கன்மமதற் கீடென்கோ” என்று கூறுகின்றார். கரும பாண்டம் - கருமங்கள் வைக்கப்பட்ட பேழை. கோண்தகை - கோணிச் செல்லும் இயல்பு. தோற்றமும், முடிவும் விளங்கக் காணப்படாமை பற்றி “மாயவிளைவு” என்றும், கண்டாரை மயக்குதலின் “மாயப் பொடி” என்றும் உரைக்கின்றார்.


    

   மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்

    அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்

496

   மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ

    கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை

497

   இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்

    முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு

498

   மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்

    வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்பட்ட

499

   ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்

    மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்

500

   காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்

    ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்

501

   துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்

    நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற

502

   வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்

    இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்

503

   பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்

    சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு

504

   கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு

    சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்

505

   நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத

    இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி

506

   ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை

    ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்

507

உரை :

        பொய்யாகிய வுடம்பை மெய்யென்று மங்கல வழக்காக மொழிந்தமையின் அதற்கேற்ப உலகவரும் மங்கலப் பொருளாக விரும்பினராக, அவர் வழக்குகளை அவ்வாறு நினையாமல் துன்புற்றாய்; தங்குகிற உலகின்கண் இவ்வுடம்பை ஓம்பி வளர்க்கவேண்டி மிகவும் வருந்துகிற நீ இதுபற்றிக் கற்ற கருத்துக்களை எங்கே கொட்டி யொழிந்தாய்; உயிர் நீங்கின மக்களைப் பாடையிற் கட்டிச் சென்று ஈமத்தில் வைத்து, ‘இக்கட்டை அவிழ்த்து எரிமூட்டுக’ என்று உடன் வந்தவர் சொல்வது கேட்டும், வாழ்வில் முக்கட்டும் தேடி முயன்றாய்; கட்டாகிய இவ் யாக்கை மண்ணிற் புதைக்கப்பட்டும் மரக்கட்டைமேல் தீவைத்து எரித்திடக் கண்டிருந்தும் வெண்பட்டே உடுக்க ஆத்திரப்பட்டாய்; சுடுகாட்டில் ‘ஐயா, இப் பிணத்தின் பண்பட்ட அரை நாண் கயிற்றை அவிழ்த்தெறிக’ என்று உரியவர் சொல்லக் கேட்டிருந்தும், உன் உடம்பில் அணிதற்குப் பல்வகை ஆபரணங்களை அணிந்து கொண்டாயல்லவா? மறக்காமல் தீ வைக்கும்போது சவத்தின் காதிலுள்ள கடுக்கனைக் கழற்றி விடுக என்பது கேட்டிருந்தும், உடம்பிற் கயலவாகிய பல்வகை அணிவகைகளை அணிந்து கொண்டாயே; சாம்பராகும் பொருட்டு உடம்பு எரியுங்கால் தீநாற்றம் எழுவதை முகர்ந்தறிந்தும், உடம்பில் நறுமணம் கமழ்தல் வேண்டி நறுமணப் பொருள்களை நாடி யடைந்தாயல்லவா? மலமொழுகும் துவாரங்களின் வழியாகப் பொலிவிலாச் சுவையும் தீநாற்றமும் வருவது கண்டிருந்தும் இன்சுவைப் பொருள்கள்பால் ஆசை வைத்துண்டு இருந்தாயல்லவா? முன்பு பருந்தும் கழுகும் சுவைத்துண்ட சுடுகாட்டில் பலபேர் வெந்துபோகப் பார்த்தும், நிலத்தின்மேல் சோறுண்டு வாழத் துணிந்தாயல்லவா? இதற்கெல்லாம் மாறுபட்டு நில்லா தொடுங்கும் இவ்வுலகம் பொய்யென்று நான் கூறி யுரைக்கின்றேன்; கேட்டும் மிக்க சோம்பலும் தூக்கமும் கொண்டு அவற்றையே தொடர்ந்து செய்கின்றாயல்லவா? பெரும்பலன் தருவதாகிய மேலுலக நல்வாழ்வைப் பெறநயந்த சான்றோர் விரும்பாமல் துறந்த இல்வாழ்க்கையை மெய்யென்று கருதி அதன்கண் ஊன்றி நின்றாயல்லவா? சொல்லப்படுகின்ற உயிரை உனக்களித்த இறைவனை நாளும் விரும்பாமல் இவ்வுடம்பு தந்த தாய் தந்தையரை உண்மை அம்மையப்பராக எண்ணி மகிழ்ந்திருந்தா யல்லவா? எ.று.


     தீயதை நல்லதாகக் கூறல் மங்கல வழக்கு. பொய்யான உடம்பை மெய்யென்பது அதுபோன்ற மங்கல வழக்கு. வெறுத்தொதுக்க என்ன வேண்டிய உலகவர், மங்கல வாய்ப்பாட்டால் ஓம்புக, வாஞ்சை செய்க என்றனர் என்பாராய், வள்ளற்பெருமான் “மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர்” என்று இயம்புகின்றார். அலைதல் - வருந்துதல். உடலொடு கூடித் தங்குதற்கு இடமாதலின் உலகைத் “தங்குலகு” எனக்


     கூறுகின்றார். உழலுதல் - உழைத்து வருந்துதல். கற்றவற்றை எவ்வாறு மறந்தாய் என்றற்கு, “கற்றதனை எங்கே கவிழ்த்தனை” என்று வினவுகின்றார். அற்றவர் - இறந்தவர், தலைக்கட்டு, இடைக்கட்டு, காற்கட்டு எனக் கட்டு மூவகையாம். தலைக்கட்டு - வரிசை மதிப்பு. இடைக்கட்டு - உடை. காற்கட்டு - மனைவி. எலும்பாற் பின்னி நரம்பாற் கட்டியதென்ற பொருளில் வழங்கும் யாக்கையென்றும் சொல், கட்டையே உணர்த்துதலின் “இக்கட்டு” எனச் சுட்டிக் கூறுகின்றார். பன்னாள் இடையிற் கிடந்து தேய்ந்து தோன்றுவதுபற்றி, அரைஞான் கயிற்றைப் “பண்பட்ட அரை நாண்” எனப் பகர்கின்றார். மேவுதல் - விரும்புதல். எய்த்தல் - ஈண்டு மறத்தல் மேற்று. தாது பொடி - சாம்பல். புற்கென்ற - அற்பமெனப் புறக்கணிப்புக் குறிக்கும் சொல். பாறு - பருந்தும், கழுகும். சுருங்கியொடுங்கும் உலகம், “கூம்புலகம்” எனப்படுகிறது. அந்தமில் இன்பத் தழிவில் வீட்டு வாழ்வு இங்கே “நல்வாழ்வு” என உரைக்கப்படுகிறது. நயந்தோர் - நயந்த ஞானவான்கள். ஈன்றோர் - அம்மையப்பர்.


    

   நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்

    வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்

508

   உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்

    மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை

509

   ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்

    வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்

510

   தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட

    நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்

511

   கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்

    வாடியழும் போது வருவாரோ - நீடியநீ

512

உரை :

        உன்னை ஈன்ற தாய் தந்தையர் நீ நோயுற்று வருந்தினால் கண்டு உடன் வருந்துவரேயன்றி வினையாகிய பகை வந்து தாக்கும் போது அதைத் தடுக்கமாட்டாராவர் அன்றோ? நம்பால் வந்து விளையாட்டால் துன்புறுத்தும் பிறசிறுவர்களை நெருங்காவாறு தடுத்து விலக்குவரேயன்றி தென்றிசையில் வாழ்பவனெனப்படும் நமன் வந்தால் அவனைத் தடுத்து விலக்க வல்லரல்லர்; சிற்றுண்டியாகிய திண்பண்டத்தைக் கொணர்க என்றால் வாங்கிவந்து கொடுப்பரேயன்றித் திருவருளாகிய அமுதம் தந்திடுக என்றால் அது வல்லராகார்; உண்டாகிய துயர் நீக்கற்குப் பிறர் தூண்டாமலே மனைவி முதலிய சுற்றத்தாரெல்லாம் சுற்றிக் கொள்ள உயர்ந்து இருக்கலாம்; ஆனால் அவர்கள் சிவஞான நன்னெறி யடைதற்குத் துனையாவாரோ? இறந்தால் பின்னர்ப் பலராய்க் கூடியழுதற்குத் துணையாய் ஒன்று சேர்பவர் உண்டு; ஆனால் உயிர் வலிய நரகத்தில் வீழ்ந்து வருந்தும்போது வரமாட்டாரன்றோ? எ.று.


     ஈன்றோர் - பெற்ற தாய் தந்தையர். பிள்ளைகள் நோயுற்றபோது வருந்துவது ஈன்றோர்க் கியற்கை; அந்நோய்க்குக் காரணமாகியது வினையாகிய பகை என்ற வழி ஒன்றும் செய்கிலார் என்றற்கு “வினைப் பகையை நீக்க வல்லரல்லர்” என உரைக்கின்றார். வினைப்பயனாகிய


     நோயை இறைவனே நுகர்விக்கின்றானாதலின் அவனொருவனாலன்றி வேறு எவராலும் மாற்ற முடியாதென்பது நூன் முடிபு. தென்றிசை யோனாகிய நமன் வந்தால் அவனைச் சிவபிரான் தடுத்த வரலாறுண்டேயன்றிப் பிறர் செய்ததாக இல்லாமையால் “தென்திசைவாழ் மற்றவன் வந்தால் தடுக்க வல்லாரோ” எனக் கேட்கின்றார். அவரவர் தனி முயற்சியாற் பெறற்பாலதாகிய திருவருள் பிறர் வாங்கித் தரப்படுவதன் றென்பது விளங்க, “அருளமுதம் வாங்கியிட வல்லாரோ” என்று கூறுகின்றார். தீங்கு செய்யும் வினையை அகற்றற்கு மனையாதிச் சுற்றம் துணையாகாது; சிவஞான நன்னெறியே துணையாம் என்பது இனிது விளங்க, “நன்னெறித் துணையோ” என உரைக்கின்றார். இறந்தார் பொருட்டு அழுதற்கன்றி உடனிறத்தற்கு வருவார் இல்லை என்பது தோன்ற, “கூடியழத் துணையாய்க் கூடுவர்” என்று சொல்லுகிறார்.


    

   இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ

    சிச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்

513

   நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்

    இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்

514

   எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்

    வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்

515

   அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்

    கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்

516

   ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை

    இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்

517

   தாயார் மனையார் தனயரார் தம்மவரார்

    நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்

518

   ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை

    வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவன்

519

   உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ

    என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்

520

   தம்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்

    என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்

521

   நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்

    உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்

522

   எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்

    இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்

523

உரை :

        நெடிது வளர்ந்த நீ இச் சீவர்கட்குத் துணையா? இங்கே இவர்கள் நினக்குத் துணையா? இல்லையெனின், நீயென்றும் இவரென்றும் காணப்படும் கூறுபாடு என்னே; இச் சீவர்கள் நீயிருக்க முன்னே இறந்தால் நீ செய்யக்கூடியது என்னை? அவர்கட்கு முன்னே நீ


     இறந்தால் அவர்தாம் என்ன செய்ய வல்லார்? இவ்வாறு தொடர்பின்றிப் பிறந்திருக்கும் நின் இயல்புக்கு எத்தனையோ தாயர்; நீ பெற்றவை எத்தனையோ பெயர்கள்; நீ பிறந்த ஊர்கள் எத்தனையோ; நீ வாழ்ந்து வாழ்வுகள் எத்தனையோ; எடுத்த உடம்புகளும் எத்தனையோ ஆகும். அத்தனைக்கும் பிறந்திறந்த அவ்வவ்விடங்கள் தோறும் வாழ்ந்து; அவ்வம்மக்களை ஆண்டு அளவளாவி எண்ணிறந்த விதங்களில் அவர்களை இழந்தாய்; அப் பிறப்பிறப்பு வாழ்வு வகைகளில் ஒன்றிலேனும் நன்றாய் உயிர் வாழ்வின் இயல்பை உணர்ந்திருப்பாயாயின், இப்போதே அறிவு முற்றித் துறவு மேற்கொள்ளத் துணிந்திருப்பாய்; உலகத்திருப்போருள்; தாயர் யார், மனைவியர் யார், மக்கள் யார். தம் உறவினர் யாவர், நீ யார் இந்நிலைமையை நினைந்து பார்த்தாயில்லை; மகன் இறந்தால் பெற்றோர் ஏங்கியவழுவர் என்கிறாய்; இயமன் வரின், உயிரை வாங்கி ஒரு துணியில் வைத்து முடியிட்டு வைப்பார் உண்டா? உன் தந்தை உன்னை விட்டு இறந்து நீங்கித் தனக்கொரு தந்தையை நாடுவன்; அதனால் அவனை நீ என் தந்தை யென்றுரைப்பது எவ்வாறு பொருந்தும்; நினக்கு மனைவியாயினால் இறந்து பின்பிறந்து மற்றொருவனுக்கு மனைவியாவளென்றால் அவளை நீ என் மனைவி என்று சொல்வது எங்ஙனமாம்? வீடுபேறு என்னும் நன்மை பெறுதற்குத் துணையாயமையும் ஞான நெறியை நாடாதபடி இடைநின்று தடுக்கும் உட்பகை என்று மேற்கூறிய தாயர் முதலியோரை ஓர்தல் வேண்டும். அதனை நீ ஓர்ந்துணரவில்லையே எம்பெருமான் படைத்த உலகில் இத்தனை உயிரனத்துள் ஒரு சிலவற்றையே வரைந்து தாய், தந்தை, மனைவி, சுற்றமென மயங்குவது என்னை? என்ன நினைக்கின்றாய்? எ.று.


     பிறந்த சீவர் அனைவரும் தத்தம் கருவி கரணங்களைக் கொண்டு உய்திபெறத் தனித்தனியே முயல்பவராதலின், ஒருவர்க்கொருவர் துணையாதல் இல்லை என்பது புலப்படுத்தற்கு, “சீச்சீ இஃதென்ன திறம் கண்டாய்” என்று இயம்புகிம்றார் முன்பின்னாக இறப்பது கூறியது துணையாகாமை வற்புறுத்தற்கு. பிறப்புதோறும் பலரோடு வாழ்ந்ததும் உறவும்தொடர்பும் கொண்டதும் பின் அவற்றை இழந்ததும் விளக்கி அவற்றை நன்றாய் உணர்ந்து கொண்டால் துறவுள்ளம் தானே தோன்றும் என்றற்கு, “இன்றே துறத்தற்கிசையாயோ?” என அறிவிக்கின்றார். “தாய் யார் மனை யார்” என்பது முதல், “என் மனையாள் என்பது நீ எவ்வணமே” என்பதுவரை, துறக்கப்படுதற்குரியவர் அவர் என்பதை “உட்பகை” யென்று காட்டி வற்புறுத்தியவாறு; எண்ணிறந்த உயிரினத்துள் சிலவற்றை உறவு குறித்துப் பேசுவது தெளிவுடைய அறிவுக்கு நேரிதன்மை காட்டற்குச் “சில்லுயிர்பால் இம்மால் அடைந்தது என்னினைந்தோ?” என்று இயம்புகின்றார்.


    

   எம்பந்த மேநினைக்கிங் கில்லையென்றால் மற்றையவர்

    தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்

524

   அற்றவருக் கற்றசிவ னாமெனுமப் பொன்மொழியை

    மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்

525

   கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்

    கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்¢பலவாம்

526

   தூரியத்தில் தோன்றொலிபோல் தோன்றித் கெடுமாயா

    காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்

527

   ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட

    நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்

528

   காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த

    மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை

529

   இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு

    முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்

530

   ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்

    கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகி¢ரி

531

   யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்

    பாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின்

532

   பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால ல¦லைதனை

    மெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று

533

   மீட்டுநின்ற ல¦லா வினோத மெனுங் கதையைக்

    கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற

534

   காலத்தை வீணில் கழிக்கும் படிமேக

    சாலத்தை மெய்யாத் தருக்கினையே - சாலத்தில்

535

உரை :

        மாறில்லாத எத்தகைய பந்தமும் உனக்கு இவ்வுலகில் இல்லையென்றால் மற்றைச் சீவர்கள் சிலருடைய பந்தம் எங்ஙனம் உன்னிடத்துளதாயிற்று? திருஞானசம்பந்தர் “உலகினில் இயற்கையை யொழிந்திட்டற்றவர்க்கு அற்ற சிவ” ( ஆலவாய் ) னாம் என்று சொன்ன பொன்மொழியை வேறு சிறப்பில்லாத மொழியாக நினைந்து மறந்து போயினாயே; மாகாய்ப்பதாகக் கற்பனை வாயிலாகக் காட்டுவது போன்ற இப் பிரபஞ்சக் கற்பனையை மெய்யென்றன்றோ கொண்டிருக்கின்றாய்; பற்பலவாகி வாத்தியங்களில் எழும் ஒலிபோல் தோன்றிமறையும் மாயா காரியத்தை மெய்யெனக் கருதுகின்றாய்; சிறப்புடைய பொன்னைப் பித்தளையிற் காண்பிக்கும் கபடநாடகத்தை மெய்யென்று நம்புகின்றாய்; மனத்தின்கண் நெடிது படிந்து வெதுப்பும் அவித்தையைக் கொண்டு கடவுட் பொருள் செய்யும் இந்த மாயவித்தையை மெய்யென நினைந்து வாழ்கின்றாய்; அதற்கென வாய்ந்த அவித்தையாகிய இப்படகம் மாயை, இருள், தமம் என்ற முப்படகமாக, அவற்றுள் கலந்து மறைப்புண்டாய்; யாவர்க்கும் ஒத்த இறைவனான சிவ ஞாயிற்றின் பரை என்கின்ற வெயிலொளியில் கானல் நீராய்த் தோன்றும் காட்சிகளை மெய்யெனக் கருதி மகிழ்கின்றாய்; சிவசத்தி மூன்றனுள் ஒன்றான கிரியா சக்தி என்ற அம்மையின் விளையாட்டெனப்படும் இப் பாசவியக்கத்தில் கருத்தை யிழந்துவிட்டாய்; அன்பினால் பொய்யாகிய சூக்குமவுடம்பின்கண் நிகழும் பாலல¦லைகளை மெய்யென நினைந்து வீணாகப் பாரித்துக் கொண்டாய்; நிலையில்லாத நிகழ்ச்சிகளைக் காட்டி அதன்கட் புகுத்தி மீட்டு நிறுத்துவது ஒருவகை ல¦லாவினோதம் எனவுரைக்கும் கதைகளைக் கேட்டும், அந்தோ, அவற்றை மெய்யெனவே நினைந்துவிட்டாய்; இது


     காறும் கொண்டிருந்த காலத்தை வீணாக்கும்படி மேகக்கூட்டம் போலத் தோன்றிச் சிதறி நீங்கும் இவற்றை அசத்தென அறியாது சத்தென்று நினைந்து தருக்குகின்றாய், எ.று.


     பந்தம் - தொடர்பு. எப்பந்தம் ‘எம்பந்தம்’ மெலிந்தது; முற்றும்மை விகாரத்தால் தொக்கது. எச்சீவரிடத்தும் மாற்றமின்றி நிலவுதல் பற்றி, “மாறில் பந்தம்” எனக் கூறுகின்றார். ‘அகரம்’ பண்டறி சுட்டு. ஒருவருக்கொருவர் பற்றில்வழிப் பந்த முண்டாகாதலின் “பந்தம் எவ்வாறு தங்கியது?” என வினவுகின்றார். உலகியலில் பொருள்மேலும் பிறவுயிர் மேலும் பந்தமுற்று அல்லலுறும் இயற்கையை அறத்துறந்தவர்க்கு ஒரு பற்றுமில்லாத சிவபெருமான் உரியனாம் என்ற பொருள்பட, ஞானசம்பந்தர் “உலகினில் இயற்கையை யொழிந்திட் டற்றவர்க்கு அற்ற சிவன்” என உரைத்தருளியதை வள்ளற் பெருமான் நினைக்கின்றார். பொன்மொழி - மறக்கலாகாத வாய்மை மொழி. விதைநட்டுக் காட்டி உடனே முளைத்துக் காய்ப்பதாகக் காட்டும் கண்கட்டு வித்தை போன்றது இப் பிரபஞ்சமாகிய தோற்றம் என்றற்குக் “கற்பனையிற் காய்ப்பதாய்க் காட்டும் பிரபஞ்சக் கற்பனை” எனக் கழறுகின்றார். தூரியம் - இசைக் கருவிகள். மாயையை முதலாகக்கொண்டு தோன்றும் பொருள் செயல்களை மாயா காரியம் அசத்தாதல்பற்றி “தோன்றிக் கெடும் மாயா காரியம்” என வுரைக்கின்றார். ஆலித்தல் - முலாம் பூசுதல். பித்தளையிற் பொன்னிறம் தோற்றுவித்தலைப் “பித்தளையில் சீரியற்றும் ஆடகத்தை ஆலித்தல்” எனவும், அது நேர்மைச் செயலன்மைபற்றிக் “கபடநாடகம்” எனவும் மொழிகின்றார். பித்தளையைப் பொன்னெனக் காட்டி மயக்கும் வஞ்சகச் செயல் இன்றும் எங்கும் நடைபெறக் காண்கின்றோமன்றோ? அகத்திற்காய் அவித்தை - மனத்திற் படிந்து அறியாமை விளைவிக்கும் அவித்தை. இதனை அவிச்சையெனவும், இருள் எனவும், இன்ன தன்மைத்தெனச் சொல்லவொண்ணாதது எனவும் சங்கரவேதாந்திகள் கூறுவர். கடவுள் என்றது பிரமப் பொருளை; அது பாரமார்த்திகத்தில் பிரமம் எனவும், விவகாரத்திற் கடவுள் எனவும் கூறப்படும். பொய்யன்று, உண்மையே எனக் கொண்டொழுகுமாறு அறிவை மயக்கி விடுவதுபற்றி “மாயவித்தை” எனக் காணப்படும் பிரபஞ்சத்தைக் காட்டுகின்றார். இந்த அவித்தைக்கு வாய்த்த பொருள் மாயையாதல் விளங்க “வாய் அவித்தை படகம்” எனப் பகர்கின்றார். படகம் - திரை. இப் படகம் - மாயை, இருள் தமம் என முத்திறப்படுதலின், “முப்படகம்” என மொழிகின்றார். மாயை, தமம் இருள் என முறை செய்து, மாயை அதிசூக்குமத்திரை எனவும், தமம் என்பதைச் சூக்குமத்திரை எனவும், இருளைத் தூலத் திரையெனவும் கொள்ளல் வேண்டும். மாயை அவ்வியக்தம் என்றும், தமம் வியக்தம் என்றும் காணப்படும். தமம் - தமோகுண காரியமாகும். இருள். பரை பராசக்தி; இது சிவசக்தியெனவும் வழங்கும். சூரியனும் ஒளியும்போலச் சிவமும் பரையுமென அறிக. பரையாகிய சத்தி மாயையைக் கலக்குவதனால் காரியப்படும் பிரபஞ்சம் அசத்தாயினும், கானலின் நீர்போலச் சத்தாய்ப் புலப்படுவதுபற்றி, “பாறையாம் ஆதபத்தில் தோன்றும் நீராய்க் களித்தனையே” எனத் தெருட்டுகின்றார். பராசக்தி - இச்சை, ஞானம், கிரியை என முத்திறமாய் விரியும். அவற்றுள் கிரியையைக் “கிரியா


     சத்தியெனும் அம்மை” என இனிதுணர இயம்புகின்றார். பால ல¦லை - சிறுவர் விளையாட்டு. ஒருவர்க்குள் ஒருவர் ஒளித்து விளையாடுவதுபோல நிலையின்றி மறையும் பொருள்களினூடே பரம்பொருள் இருந்து இயக்குதலின், அதனைப் “பொய்யொன்றுண் மெய்யிற் புகும் பால ல¦லை” என்று இசைக்கின்றார். முருகனும் கண்ணபிரானும் இளமைக்கண் பொய்த் தோற்றம் பலகாட்டி விளையாட்டயர்ந்த செய்திகளை முறையே கந்தபுராணமும் பாகவதபுராணமும் கூறுதலால், “பொய்யென்று மீட்டு நின்ற ல¦லா வினோதமெனும் கதை” என வுரைக்கின்றார். பிள்ளைமை, இளமை, முதுமை என வேறுபட்டுத் தோன்றும் தோற்றம் பலவும், உலகில் வாழ்வதற்கென வரைந்த காலத்தைக் கழித்தற்கென்று அமைந்தவை என்பார், “ஈட்டிநின்ற காலத்தை வீணிற் கழிக்கும்படி” என்றும், அவற்றின் தோற்றமும், மறைவும் வானத்தே திரண்டு நின்று சிதைந்து மறையும் மேகக்கூட்டம் போல்வதென்பது விளங்க “மேக சாலத்தை மெய்யாத் தருக்கினையோ” என்றும் கூறுகின்றார். இவ் வறிவுரை மேலும் தொடர்கிறது.


    

   கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்

    றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்

536

   இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்

    கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்

537

   தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ

    மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்

538

   கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்

    பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றவனையே - மாமுடிக்கும்

539

   வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்

    வீழ்வுகொடு வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்

540

   விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்

    உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையோ - தொண்டுலகங்

541

   கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்

    நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்

542

   வௌ¢ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை

    கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு

543

   கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ

    கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க

544

   ஊழிவௌ¢ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்

    ஊழிநன்னீ ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்

545

   தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற

    சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலுந்

546

உரை :

        சாலவித்தைக்காரன் கையாளும் கண் மையினும் வேறா விளங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று உண்மை ஒரு சிறிதும்


     அறியாது உழலுகின்றாய்; அறிவு வளமின்றி இங்கே உன்னைப் பெரியோர்கள் கண்டால் என்னென்று கருதுவார்கள்; நீ ஏமாப்பின்றி இரவைப் பகலாக மாறிக் கண்டு மயங்குகின்றாயே; உயிர் தங்குகின்ற உடல் முதலியன பொய்யென்று தெளிந்தவர் உரைக்கவும், நீ மனம் கொள்ளாமல் மோகம் முதலிய குற்றங்களில் கிடந்து புரள்கின்றாய்; ஓகோ, உமது தலைவன் முடியில் தீப்பற்றிக் கொண்டது என்று சிலர் சொன்னால், அதுகேட்டு மாற்றுநாடாமல், தலைக்குப் பூச்சூடத் தேடிப் போகிறவர்போல அலைகின்றாயே; பெருமை கொண்ட வாழ்வும் நிலையின்றி இமைப்போதில் மாறிக் கெடும் என்று சான்றோர் உரைத்தபோதும் அதன்பால் விழைவுற்று வெறிதே வீழ்கின்றாய்; தாழ்வுண்டாக நுமது கையாற் கட்டப்பட்ட வீடு தீப்பட்டுப் பிரிந்து வேகிறதுகாண் என்றால், அதனை ஏலாமல், உள்ளே சென்று உணவுண்டு உறங்குபவரைப் போல உறைகின்றாயே” பழமையான இவ்வுலகம் காட்டில் வாழும் முயற்கொம்பு போற் பொய்யாயொழிகிறது என்று சொல்லுகின்றேன்; கேளாமல், ஐயோ நீ அதன்பால் பற்றுக்கொண்டு செல்கின்றாய்; நும்முடையதான ஊர் வௌ¢ளத்தில் மூழ்கிவிட்டது என்று சொன்னால், அதனுட் சென்று கடைசிவரை காண்பவர் போலத் திரிகின்றாய்; இவ்வுலகிற் காணப்பட்டன யாவும் பொருளாகக் கொள்ளற்கில்லாத நிலையில்லாத வஞ்சத்தோற்றம் என வுரைக்கின்றேன்; காதிற் கொள்ளாமல் கொண்ட மட்டும் சேரக் கவர்ந்துகொள்ள நினைக்கின்றாய்; உண்டு அழிக்கும் பொருட்டுக் கடையூழி வௌ¢ளப்பெருக்கு வந்துவிட்டதென்றால், அவ் வௌ¢ளநீர் மூழ்கி ஆடுதற்கும் முகந்து பருகுதற்கும் ஏற்ற நன்னீரோ என்பவரை ஒத்து உலவுகின்றாய்; எழுவகைப் பிறப்பையும் உண்டாக்கும் தனு கரணம் புவனம் போகம் என்று சொல்லப்படுகின்ற கனவின் கண்ணுற்று கவல்கின்றாய்; உன்னை என்னென்பது. எ.று.


     சாலவித்தைக்காரன் நிகழ்ந்தது காண்டற் பொருட்டுக் கையாளும் மையானது கண்மை எனப்பட்டது. அறியாமையாகிய இருள் அதனின் வேறாதல் பற்றிக் “கண்மையகன் றோங்கும் அந்தகாரம்” என அறிவிக்கின்றார். அந்தகாரம் - இருள். செம்மாப்புறுதல் - செருக்குறுதல். ஏமாப்பு - பாதுகாப்பு. தேகம், கருவி, கரணம், நிலம், செல்வம் முதலியன அடங்கத் “தேகாதி” என்று கூறுகின்றார். காமம், குரோதம், உலோபம், மதம், மாற்சரியம், மோகம் முதலிய ஆறையும் தொகுத்து “மோகர்தி” என மொழிகின்றார். கோமுடி - தலைவன் முடி; தலைமுடியுமாம். மாமுடிக்கும் வாழ்வு - செல்வம் கொழிக்கும் வாழ்வு. வீழ்வு - விருப்பம். கைவீடு - கையாற் கட்டப்பட்ட வீடு. ‘விண்டு வேகின்ற’தென இயக்க. நயம் - காதல். கைதவம் - வஞ்சம்; பொய்யுமாம். தற்புவனம் - தாம் வாழும் நாடு. தனு - உடம்பு. கரணம் - மனம் முதலிய நால்வகைக் கருவிகள். ஏழ் - ஈண்டு எழுவகைப் பிறப்புக்காயிற்று. சொற்பனம் - கனவு. துவன்றுதல் - பொருந்துதல்.


    

   உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்

    கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே

547

   கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்

    பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து

548

   சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை

    நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான

549

உரை :

        பலநாளும் உண்டவற்றையே யுண்ணுகிறாய்; உணர்ந்த வற்றையே உணர்கின்றாய்; கண்ட பொருள்களையே கண்டு மகிழ்கின்றாய்; முன்னாள் கொண்டவற்றையே கொண்டு உலவுகின்றாய்; கருதியவற்றையே கண்டு முன்பு அறியாதார் போலக் குறித்தறிந்து கருத்தைச் செலுத்துகின்றாய்; முன்பு அறிந்து பேசி வந்தவற்றையே பேசுகின்றாய்; இவ்வியல்பினை நல்லோர்கள் கண்டால் நகை செய்வார்களல்லவா? எ.று.


     உண்டற்குப் பகற்போது உரியதாகலின், “பற்பகலும் உண்டனவே யுண்கின்றாய்” என உரைக்கின்றார். ஓர்ந்துணரும் மனம் ஒன்றாதலின், “ஓர்ந்தனவே ஓர்வது” ஒழியாதாயிற்று. காணப்படுவது நிலவுல கொன்றே யாகலின், முன்னாள் கண்டவுலகே பின்னாளும் காணப்படுவதால் “கண்டனவே கண்டு களிக்கின்றாய்” எனல் வேண்டிற்று. கொண்டன : உடுத்துக் கொண்டனவும் அணிந்து கொண்டனவும் வேறுபடாமை பற்றிக் “கொண்டனவே கொண்டு இயங்குகிறாய்” என்று இயம்புகிறார். குறித்தறியும் செயல் எப்போதும் ஒன்றாவது கண்டு “குறித்தனவே பின் குறித்து” என்றும், அறியுந்தோறும் முன்னையறிவு அறியாமையாய் உள்ளத்தில் மறைவது பற்றிப் “பண்டு அறியார் போலப் படர்கின்றாய்” எனப் பகர்கின்றார். படர்தல் - நினைத்தல். கண்டன கேட்டன முதலியனவும் மனத்தே நினைந்தனவுமாகிய இவையல்லது சொல்லடற்கு வேறின்மையால், “பண்டறிந்து சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய்” என்று சொல்லுகின்றார். பண்டறிந்து என்ற விடத்துப் பண்டென்றது இறந்த காலம் சுட்டினும் நிகழ்வும் எதிர்வும் கொள்ளப்படும். உண்டதே யுண்டு உடுப்பதே யுடுத்து ஒழுகுதலிற் புதுமை தோன்றி ஊக்குதலின்மை நோக்கி நல்லோர் நகைப்பரென்றற்கு, “நல்லோர்கள் கண்டால் நகையாரோ” என உரைக்கின்றார்.


    

   காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்

    காலமற்றும் அத்திறமேற் காண்குவையேல் - சாலவுமுன்

550

   போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்

    யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்

551

   வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல

    ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்

552

   நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை

    நீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல்

553

   ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ

    நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று

554

   சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ

    அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்

555

   நீஇங்கே நான் அங்கே நிற்கநடு வேகுதித்தால்

    நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு

556

   ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்

    இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த

557

உரை :

        கழிந்த காலம் போல இங்கே நிகழ் காலத்தையும் காண்கின்றாய்; எதிர்காலமும் அத்திறமே வரக்காண்குவாய்; அற்றேல், முன்னைப்போது மிகவும் கழியுமுன் பெறக்கடவ அனுபூதியைக் கொள்ளாமல் என்ன பயன்கருதி வருந்துகின்றாய்; குற்றம் பயக்கும் பயனற்ற அவத்தைகளை விளைவிக்கும் திறன் படைத்த மூலமலமான ஆணவத்தால் அழிவுறுகின்றாய்; ஆணவ முனைப்பால் உன்னை நீ யார் என அறியாமல் எதிர் நிற்கும் ஒருவரை நோக்கி நீ யார் என்று வினவி நிமிர்கின்றாய்; ஓய்வின்றி உன் ஊனுடம்புள் நின்று ஒன்றின் உண்மை யறியாயாய், ஐயோ, நீ அதனை நான் என்று சொல்லி வருந்துகின்றாயே; நான் எனச் சொல்லுவாயோ சொல்லமாட்டாயோ, ஒன்றையும் நுகராமை பெற்றுப் பெரும் பிறிதுறங் காலத்துச் சொல்லுக; நீ இங்கேயும் நான் அங்கேயும் நிற்க, இடையில் ஒருவர் குதித்தால் நம்மிடை நிலவிய இங்கு அங்கு என்பன எங்கே போகின்றன? காண்; ஒன்றையெடுக்கச் செல்லுகின்ற நீ அதைவிட்டு மற்றொன்றை எடுப்பதைக் காண்கின்றேன்; இங்கிருந்த நீ சென்றடுத்திருந்தது எங்கே? எ.று.


     காண்கின்றி : இகரவீற்று முன்னிலை வினை. காலங்கழிவதன் முன் அதன்கட் பெறும் அனுபவம் அனுபூதி எனப்படுகிறது. தீதுபுரிந்து துன்புறும் நிலைமைகட்குக் காரணம் ஆணவமென்ற மலம் என்றற்கு “ஆணவத்தினாலே யழிந்தனையே” என அறிவிக்கின்றார். துன்பம் விளைக்கும் திறம் ஆணவத்துக் குண்டென்பது பற்றி “வீணவத்தை விளைக்கும் திறன்மூல ஆணவத்தினாலே” என மொழிகின்றார். ஊனுடம்பினுள் நீயென்றும் நானென்றும் உரைத்தற்குப் பொருளாயது ஒன்று எனப்படுகிறது. உளவு - உளதாதல், உண்மை என்றுமாம்.


    

   தானா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது

    வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்

558

   சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்

    சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்

559

   தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்

    வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்

560

   சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்

    சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ

561

   காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்

    மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்

562

உரை :

        நெஞ்சமே, அம்பலத்தில் ஆடுகின்ற திருவடிக்கண் அன்பு செய்து உன்னை மறந்து பெறும் உய்திநாடாது, வறிதே மதம் என்னும்


     குற்றத்தில் தோய்ந்துவிடுகின்றாய்; மதம் முதலிய தீயினத்தின் சார்புகளை விட்டு நீங்கினால் நான் மிகவும் மகிழ்வேன். ஆனால் அவற்றால் சோர்வு கொண்டு நீ துயரடைகின்றாய்; நற்சார்பு பெரும் பற்றுக்கோடாம் என்று நான் இவண் சும்மா இருந்தாலும், வருக என்று என்னை நினைந்து, மனமே, வலிந்து இழுக்கின்றாய்; ஓ, உனது சூழ்ச்சியை அறியாமல், நீ சுழலும்போதெல்லாம் உன் சுழற்சியில் கிடந்து நானும் சுழல்கின்றேன்; நெடிது நினைந்து நீ காலசைத்தால் யானும் விரைந்து தலையசைப்பேன்; மயக்க வயப்படுத்தும் நின் சூழ்ச்சியின் முறைமை யாதோ தெரியவில்லை. எ.று.


     மன்று - திருவம்பலம். காமம் முதலிய குற்றவகை ஆறனுள் ஒன்று மதம்; இது செருக்கெனவும் வழங்கும். மலிதம் - குற்றத்தால் நிறைதல். கேளாய் - கேளாதொழிகின்றாய். சோர்வு, சோர்பு என வந்தது. பெருந் தூ - பெரும் பற்றுக்கோடு; “இனம் தூய்மை தூ வாவரும்” ( குறள் 455 ) என வருதல் காண்க. தீயினம் குற்றம் செய்தற்கும் நல்லினம் குணமாவன செய்தற்கும் பற்றுக்கோடாதலின், “சார்பு பெருந்தூ” என உரைக்கின்றார். ‘நான்’ என்பது உயிருணர்வு. சூழ்ச்சியின் நீட்சி தெளிவிற் கொண்டுய்க்கும் என்பதுபற்றி “நீட்சியில் நீ காலசைத்தால்” என்று கூறுகின்றார். மாலசைத்த புணர்ப்பு - மயக்கத்திற் பிறக்கும் சூழ்ச்சி. வாறு - முறைமை.


    

   கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்

    ஏவல் கொளுமேழை என்கேனோ - பாவத்தில்

563

   சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்

    எற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ

564

   சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்

    அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற

565

   சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்

    நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ

566

   துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்

    உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ

567

   பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்

    நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா

568

   நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்

    என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ

569

   ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ

    வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்

570

   எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதி

    கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத்

571

உரை :

        நெஞ்சமாகிய உனக்கும் உயிராகிய எனக்கும் உள்ள தொடர்பு யாது எனின், விரிந்து தோன்றும் அண்டமாகிய கிணற்றில் யான் ஒரு குடமாகவும், நீ அக் குடத்திற் கட்டிவிடும் கயிற்றோடு


     விடுவோர் கருத்தின்படி யொழுகும் ஏவலாள் என்றும் சொல்வேனா; பாவத்தால் சூழப்பட்ட நீ கடலில் தோன்றும் சுழியாவாயெனின், நான் அதில் மிதந்தலையும் துரும்பு என்று சொல்வேனா; பற்றினை யுண்டாக்கும் நீ சங்கற்பமென்னும் சூறாவளியென்றால், நான் அதன்கண் அகப்பட்ட ஒரு சருகிலை என்று சொல்வேனா; மிகுகின்ற சேலை நெய்யப்படுகின்ற ஒரு தறியில் இப்படியும் அப்படியும் ஓடும் குழை நீ யென்றால், நான் அதன்பின் தொடரும் நூலிழை என்று சொல்வேனா, மயக்கம் செய்யும் நெஞ்சமாகிய நீ எனக்குள் துள்ளித் துடிக்கும் உறுப்பாய், குயவன் சுற்றிவிடுகின்ற சக்கரமாயின், நான் அதன் உள்ளுறுப்பாகிய உள்ளாழி என்று சொல்வேனா; வெளிறுடைய நீ வெற்றிடமாகிய வானத்தே பறக்கும் பருந்தெனப் படுவாயாயின், நான் அப் பருந்தின் நீழலென்று நினைந்து சொல்வேனா; நீழலிடுதலில்லாத நின்வசமே நான் உள்ளேன் என்று உலகம் பழித்துரைக்கின்றது; நீ என் வசமுள்ளாய் என்று சொல்வதில்லை; நீ மாத்திரம் என வசமாகவே இருப்பாயானால், என்னால் ஆகாத பொருளே இல்லையாம்; என்னை வானத்துத் தேவர் வந்து வணங்குவர்; அதனோ டமையாமல், எண்ணத்துக்கும் சொல்லுக்கும் எட்டாத பரஞ்சோதியாகிய கண்ணுதற் கடவுளாகிய சிவனும் என் அங்கை நெல்லிக் கனியாவன்; எ.று.


     ஆலும் அண்டம் - விரிந்து தோன்றும் உலகம். கூவம் - கிணறு. கி¢ணற்றிற் கயிறோடு செல்லும் குடம் உயிராகவும், கயிற்றிற் கட்டி நீர் முகக்கும் இறைப்பவன் நெஞ்சமாகவும் காட்டப்படுகின்றன. நீர் இறைக்கும் ஏவலாளை “ஏழை” என்று கூறுகின்றார். திரணம் - துரும்பு. பாவம் - பாவ நினைவுகள். இரு வகைப் பற்றுக்கும் ஏதுவாவது நெஞ்சமாதல் - தோன்றப் “பற்றிடும்நீ” என்று உரைக்கின்றார்; சங்கற்பம் : ஈண்டுப் பொதுவாக நினைவுகளைக் குறிக்கிறது. சேலை விராவுதல் - சேலை நெய்யப்படுதல்; குறுக்கும் நெடுக்குமாக நூல் தொடுக்கப்படுதல்பற்றி நெசவு. ‘விராவுதல்’ எனப்படுகிறது. குழை - இதனைக் குழல் என்றும் நாடா என்றும் கூறுவர். மயக்கம் செய்தலும் துள்ளுதலும் நெஞ்சின் இயல்பாதலால் “துள்ளுறுப்பு” என்று சொல்கிறார். மட்பகைஞன் - வேட்கோவன். வேட்கோவருள் உயர்ந்தார்க்குக் ‘குயவன்’ என்ற சிறப்பளித்துப் போற்றுவது பண்டையோர் மரபு; நாளடைவில் சிறப்புப் பெயரே சாதிப் பெயராயிற்று; பிராமணன் என்ற சிறப்புப் பெயர் இந்நாளில் சாதிப் பெயராயதுபோல. உள்ளுறுப்பு - சக்கரத்தின் உள்ளாழி. வெண்மை பொருந்திய நெஞ்சினை “வௌ¢ளுறு நீ” என விளம்புகிறார். வெண்மை - வௌ¢ளறிவு; வெளிற்றறிவு எனவும் வழங்கும். பாழலைவான் - பாழ்வான், அலைவான் என்று கொண்டு, ஒன்றுமில்லாத வெற்றிடமான வான் என்றும், காற்றலைகளையுடைய வான் என்றும், வானத்திற் பாழிடம் மிகவுயத்ததென்றும், காற்றலை கீழிடத்ததென்றும் கொள்க. நிந்தை மொழி - பழித்துரை; இல்லது கூறலுமாம்.


    

   தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்

    கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்

572

   சிந்தோடும் ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்

    அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்

573

   கச்சோதம் என்னக் கதிரோன் தனையெடுப்பர்

    அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு

574

   மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்

    ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல

575

உரை :

        இந்நிலையில் எண்ணுங்கால் செய்வதறியாது திகைக்கின்றேன்; கணப்பொழுதேனும் நீ என் சொல்லின்படி நில்லாமல் பயனில்லாதவற்றைச் செய்வேனென்று துள்ளித் துடிக்கின்றாய். வலிமைமிக்க கடலையும் அதன்மேல் உள்ள வடவைத் தீயையும் சேர்த்து ஒடுக்கி ஒரு கையில் அடக்கியாள்பவர் உண்டு; ஆனால், அந்தோ, உன்னை அடக்குபவர் யார்? ஒருவருமிலர்; சூரியனையும் ஒரு மின்மினிப் பூச்சி போலக் கையில் எடுத்தடக்குவர்; ஆனால் உன்னை அடக்குபவர் ஒருவரும் இலர்; படைக்கப்பட்டுப் படிப்படியாக உயர்ந்து விளங்கும் மூவுலகையும் சேர்த்து ஒன்றாக்கித் தம் உடையின் முன்தானையில் வைத்து முடியிட்டுக் கொள்வர்; ஆ, அவர்தாமும் இங்கே உன்னை அடக்க வியலார்.


     கொன் : பயனின்மை. குதித்தல் - துள்ளுதல். வன்செய்யும் சிந்து - வன்மையுறும் கடல். வடவைத் தீ - குதிரை முகத்துடன் கடல் மேலிருக்கும் தீ எனப் புராணிகர் கூறுவர். கச்சோதம் - மின்மினிப் பூச்சி. வைச்சோங்கும் சிந்து: இதன்கண் வைச்சல், படைப்பின் மேற்று, “யாவையும் வைச்சு வாங்குவாய்” என்பது திருவாசகம். மேல், நடு; கீழ் என உலகு மூன்றாதல் பற்றி “மூவுலகும்” என்று மொழிகின்றார்.


    

   தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்

    வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய

576

   போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா

    யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்

577

   வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்

    ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற

578

   சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக

    நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய

579

   அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்

    பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த

580

   உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப

    எந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்

581

   தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்

    அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்

582

உரை :

        தேசம், காலம், திக்கு என்றும், மக்கள் வாசம் புரியும் இடமென்றும், அவ்வவ் விடங்கட்கேற்ற வழக்கென்றும், போகமென்றும், புலன்களென்றும், யோகமென்றும், பற்பலவான எண்ணங்களென்றும்,


     ஏகம், அநேகம் என்றும், வான், கடல், மலை, மண் என்றும், உடம்பென்றும், உறவென்றும், சாதியென்றும், வாழ்வு தாழ்வு என்றும், இவ்வுலகிற்கமைந்த நீதி என்றும், கன்ம நெறியென்றும், இவற்றிற்கு அப்பாலாய் சொல்லற்கரிய அண்டங்களென்றும், அவற்றின் அசைவுகளென்றும், அசைவில்லாத பொருள்களென்றும் சொல்லப்படுகின்றவை அனைத்தும், பல போக்குகளையுடைய உன்னுடைய நினைவின்கண் தோன்றி உலவி நிற்பனவாகும். இவ்வுலகத்தவர் இவற்றை அறிந்திருந்தும் எதையோ எண்ணி எவ்வகைக் குற்றம் குறைகளையும் தந்தவன் எவனோ நான்முகன் என்று சொல்லுகின்றார்கள்; அந்தோ, அவர்கள் சதுமுகனையே படைத்துவைப்பது உன் செயல் என்று அறியாமல் இருக்கின்றார்கள். எ.று.


     தேசம் - நாடுகள்; அவை பலவாதல் விளங்க “மேவு பலதேசம்” என்று சிறப்பிக்கின்றார். நாடுகளிலும் மக்கள் வாழிடங்களும் போக்குவரவு புரியுமிடங்களும் வேறு வேறு பலவாய் உள்ளன என்றற்குப் “பற்பலவாம் வாசம்” என்று கூறுகின்றார். நாடுதோறும் மக்களுடைய வழக்கமும் ஒழுக்கமும் வேறுபடுவ துண்மைபற்றி “அவ்வவ் வழக்கு” எனக் குறிக்கின்றார். ஆங்காங்குப் பெறப்படும் போகங்கள் பலவும் துன்பம் பயத்தல் கண்டு “மாசுடைய போகம்” என்றும், கருத்தொன்றிச் செய்வன யோகமாயினும் அதன்கட் பொய்ம்மையும் கலத்தல் பற்றிப் “பொய்யகலா யோகம்” என்றும் புகல்கின்றார். சொல்லும் செய்கையுமாகிய இரண்டிற்கும் எண்ணிறந்த யூகங்கள் வேண்டியிருத்தலின், “பற்பலவாம் யூகம்” என இயம்புகின்றார். முந்நீர் - கடல். ஊன் - ஊன்செறிந்த உடம்பு. சாதிகளில் மேன்மை கீழ்மை கூறப்படுவதுபற்றி “மேனின்ற சாதி” என்றும், செல்வமுடைய வாழ்வை வாழ்வென்றும், அஃது இல்லாததைத் தாழ்வென்றும் கூறல் இயல்பாதலால், “வாழ்வென்றும் தாழ்வென்றும் பிரித்துப் பேசுகின்றார். உலகியல் வாழ்க்கைக் கமைந்த கொள்கைகளை “உலக நீதி” எனவும், வினையும், அவ்வினை விளைக்கும் பயனும், அதனை நுகரும் திறமும் “கன்ம நெறி” எனவும் காட்டப்படுகின்றன. எண்ணில் கோடி அண்டங்கள்; அவற்றுள் எண்ணிறந்தன சராசரங்கள் என்றலின்-“அண்டத்து அசைவும் அசைவுமலாப் பண்டம்” என்று பகர்கின்றார். சொல்ப - சொல்லப்படுபவை. நெஞ்சின்கண் எழும் எண்ணங்கள் இடந்தோறும், காலந்தோறும் பொருள்வகை செயல்வகை முதலியவற்றால் பற்பலவுருக் கொண்டெழுதல் பற்றி, “பன்முகங்கள் கொண்டிருந்த உன் நினைவு” என்று கூறுகின்றார். நிற்ப: அகரவீற்று வினைமுற்று. துன்பம் வந்தபோது படைப்போனை நினைந்து வருந்துவது உலகியல்பாதல் பற்றி, இவ்வுலகர் “எந்நவையும் தந்தோன் எவனோ சதுமுகன் என்பார்கள்” என்று இசைக்கின்றார். சதுமுகன் முதலிய தேவர்களையும் உலகங்களையும் அண்டங்களையும், பொருள், செயல், போகம் முதலிய அனைத்தையும் படைத்தளித்து விரியப் புனைந்துரைத்துக் காட்டுவது “தெஞ்சு” என்று வற்புறுத்தற்கு, “அந்தோ நின் செய்கை அறியாரே” என அறிவிக்கின்றார்.


    

   ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்

    ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்

583

   என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்

    நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே

584

   செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்

    நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பின்

585

   ஆவதுவும் நின்னால் அழிவதும்நின் னாலெனயான்

    நோவதும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்

586

   காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்

    ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்

587

   ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்

    தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்

588

   இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்

    துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய

589

   இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது

    செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்

590

   ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்

    வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்

591

   செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்

    நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்

592

உரை :

        ஐயோ, நான் ஆம் என்பதை அல்லவென்றும், அல்ல வென்பதை ஆம் என்றும் சொல்லி என்னை வருத்துகின்றாய்; நாம் அன்புநெறி மேற்கொண்டு என்றும் பிறப்பிறப்பில்லாத பேரின்ப வீடடைவோமென்றால், நன்றென்று இசைக்கின்றாய்; அந் நெறிக்கண் செல்லலுற்றால், பழமையாய் வந்ததென்று மாறாயதொன்றைச் செய்கின்றாய். செல்லலாகாத சிறுநெறி மேற்கொண்டு தீமையெல்லாம் எய்துவிக்கின்றாய்; உன் நட்பினை என்னென்பது? சொல்லுமிடத்து ஆவதும் அழிவதும் எல்லாம் நின்னால் என்று நான் உன்னை நொந்து கொள்வது கண்டும் அயலார்போல நின் போக்கிலே போகின்றாய்; ஒன்றையொன்று பற்றும் எனக்கும் ஆண்மையிற் குறை, பெண்மையிற் குறை, பொருள்நிலையிற் குறை, உணவுவகையிற் குறை, உற்றார் உறவினரோடும் ஊரவரோடும் குறையுண்டு; பூணாரத்திற் குறை, உடல் வலியிற் குறை, இவையன்றியும் எனக்கு உற்ற துணையாகிய நீயும் குறையே உண்டுபண்ணுகின்றா யென்றால், வேறு கூறுவதென்னை? இவ்வண்ணம் குறை கண்டதன்றி நாம் இன்பம் யாது கண்டோம்? நாம் விரும்பிய யாவும் துன்பமாய் முடிந்தன; அதிலும் துன்பத்திற் கடிப்படை பிறப்பு என்று தெளிந்து மனம் சோர்வுற்றேன்; வன்மையுடைய இப்பிறவித் துன்பத்திலும் பிறப்பைக் காத்துக்கொள்வதிலுள்ள துன்பம் சொல்லவொண்ணாதது என்றறிந்து அறிவு மயங்குகின்றேன்; சொல்லப் படுகின்ற இறப்பின்கண் சுருக்கமின்றியிருக்கும் துன்பத்தை உரைக்கலாமெனின் உடம்பெல்லாம் வாய்கொண்டு உரைத்தாலும் முற்றவும் சொல்லி முடியாது; ஏன், இதற்கு நாம் செய்வதென்னை என எண்ணித் திகைக்


     கின்றேன்; இவ்வண்ணம் நான் நைந்து வருந்துவதனைத்தும் கண்டும் உன் போக்கிலேயே போகின்றாய்; எ.று.


     அலைத்தல் - வருத்துதல்; நாளுக்குநாள் வலியைக் குறைத்தல் என்றுமாம். ஒருப்படுதல் - இசைதல். தொன்று - தொண்மையுடையது. மேற்கொள்ளலாகாத குற்றநெறி யென்றற்குச் “செல்லாச் சிறுநடை” என்று செப்புகின்றார். கண்டு இரக்கமின்றி இயல்வதுபற்றி “அயலின் நோக்கினை” என்று கூறுகின்றார். அயலின் : இன், ஒப்புப்பொருட்டு. அவலம் - வலியின்மை; குறையுடைமை. நான் சோர்கின்றேன் என இயையும். வன்பு - வன்மை. திதி - நிலைபேற்றுக்குரிய காத்தல். ஓய்தல் - நுணுகுதல்; சுருங்குதலுமாம். ஏல் : அசை . நைவது - வருந்துவது.


    

   இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்

    சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்

593

   நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்

    வேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ

594

   நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்

    செல்லோம் எனினுமது செல்லாதே - வல்ல¦ர்யாம்

595

   இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்

    என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்

596

   தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று

    நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்

597

   அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்

    நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்

598

   றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்

    போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ

599

உரை :

        நம் கை வந்துள்ள இவ்வுடம்பாகிய ஓட்டைக் குடம் உடைந்துபோனால் யாதாகும் என்று, நெஞ்சே உன்னுடன் யான் பன்முறை சொல்லித் திரிந்தேனாக, நீ அது குறித்து என்னோடு ஒரு நாளிலேனும் எண்ணினதில்லை; நாளை இன்று என இவ்வாறு செல்கின்ற நாட்களில் எவ்வேளையிலேனும் வலிய நமன் தூதரை விடுவனாயின், ஐயோ, கேள் : நாங்கள் நல்லவர்கள் விடுக என்றால் விட்டுச் செல்ல மாட்டார்கள்; நும்மோடு யாம் வாரேம் என்றாலும் அச்சொல் அவர்பாற் செல்லாது; வல்லவர்களான யமதூதர்களே, நாங்கள் இன்சொல்லே பேசுபவர்கள்; இன்றைக் கிருந்து வருவோம் என்று நாம் என்ன சொன்னாலும் அச்சொற்களெல்லாம் அவர்கள் செவியிற் செல்லா; நிலைத்த சொற்களையுடைய நான்முகன் திருமால் முதலிய தேவர்கள் தாமும் அந்நாளில் அவர்கட்கு உரையாராயினர்; இன்று நாம் உரைப்போம் என்று சொல்லுவது கைகூடாது; இவ்வாறு அத்தகைய சாநாள் வருமுன்பே ஆதியான சிவனருளைப் பெறும் நன்னாளை அடைதற்கு நாம் முயல்வோம் காண் என்று, இப்போது முன்னின்று மொழிகின்றேன்; அது கேட்டும் கேளார் போன்று உலகியற்குட் செல்கின்றாய்; யாது செய்வேன்? எ.று.


     இல்லிக்குடம் - ஓட்டைக்குடம்; ஒன்பது பெரிய துவாரங்களும், மயிர்க்கால்தோறும் சிறு துவாரங்களும் கொண்டிருத்தலால், உடம்பை “இல்லிக்குடம்” என்பது மரபு ஆயிற்று. பொற்குடமுடைந்தால் பொன்னாம், மட்குடமுடைந்தால் மண்ணாம், உடம்பாகிய குடமுடைந்தால் ஒன்றுக்குமாகாதாகலின் “யாதாம்” என இயம்புகின்றார். நெஞ்சின் நீங்காது உலவுதலின், “சொல்லித் திரிந்தும்” என்று சொல்லுகின்றார். வெல்லற்கரிய வன்மையுடைமை தோன்ற “வல்லியமன்” என்று சிறப்பிக்கின்றார். இன்று நாளை என நாட்கள் கழிவதை, செய்யுளாதலின் முறைமாற்றி “நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்கள்” என நவில்கின்றார். வேளை - பொழுது; காலம் குறித்துப் புதிது தோன்றிய தமிழ்ச்சொல்.யாம் “நல்லவர்கள், யாமே வந்து சேர்வோம்” என்றாலும் விட்டு நீங்கார் என்றற்கு “நல்லோமெனினும் நடவார் நடவார்” என இரட்டித்துரைக்கின்றார். எங்ஙனம் யாது சொல்லினும் அத் தூதவர் செவி ஏலாது என்பது விளங்க “அச்சொல்லெல்லாம் ஏலாது” என்று அறிவிக்கின்றார். மன் - நிலைபேறு. எண்ணிறந்து பிரமரும் நாரணரும் இந்திரர் முதலிய தேவரும் இற்ந்தனராக, சாநாளில் அவர்கள் இவ்வாறு கூறித் தூதுவரை விலக்கிய வரலாறு இன்மையின், “தாமரையோன் மான்முதலோர் தாம்அறையார்” என உரைக்கின்றார். ‘நாம் நாடுதும்’ என இயைக்க. உற்றவர் சொல்வது கேட்பர்; உறாதவர் கேளாராதல் பற்றி “உறார் போன்று” என ஓதுகின்றார். தன்னோடு உற்றும் உறார் போன்று கேளா தொழிவது குறித்து, நெஞ்சினை “உறார் போன்றனை” என உரைப்பாராயினர். புரிதல் - ஈண்டுச் செயல் மேனின்றது


    

   டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா

    நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த

600

   தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்

    தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்

601

   றையோ ஒருநீ அதனோடு கூடினையால்

    பொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல்

602

   ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்

    என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்

603

   தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்

    போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்

604

   வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்

    செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்

605

   வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை

    நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற

606

   ஈண்டோர் அணவாய் இருந்தநீ எண்டிசைபோல்

    நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ

607

   மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை

    முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்

608

உரை :

        தோன்றிய நாள் தொட்டு நன்மை தீமையிரண்டினும் ஏற்ற உறவாகிய என்னைவிட்டுத் தாமத குணம் என்ற நேற்றுத் தோன்றிய உறவோடு நெருங்கி உறவு கொண்டிருக்கின்றாய்; குணமாகச் சொல்லுமந்தத் தாமதம் ஓர் அவித்தையாம்; அதன் செயல் மறைப்பது; தாமதம் என்ற மோக வடிவுற்றுச் சமுத்திரம் போன்றது; ஐயோ, நெஞ்சமே, தாமதம் என்ற மோக வடிவுற்றுச் சமுத்திரம் போன்றது; ஐயோ, நெஞ்சமே, தாமதமென்ற ஆகாத்தனோடு கூடிக் கொண்டாயே; நீயும் நானும் சேர்ந்து நாம் என்று ஆகியது பொய்யோ? பகைவர் போல் வெறாமல் கூடுவாரோடு நீ கூடும்போது என்னை நினையாயாயினும் என் சொல்லையேனும் எண்ணிப் பார்க்கின்றாயா? சொல்லப்படுகின்ற நீ புரியும் தீமைகளை நான் எடுத்தோதுவதாயின், நான் ஆதிசேடர் பலராக மாறிப் பிரமனுக்குரிய நாளெல்லாம் பெற்று உரைத்தாலும் காலம் போதாதொழியும்; ஆதலினால் யான் உன்னை வெகுண்டு அவ்வப்போது வைவேன்; ஆனால், நீ என் வசைகளை வாழ்த்தாகக் கருதிச் செய்வனவற்றைச் செய்கின்றாய்; இஃதொரு கூறுபாடன்று; உய்தல் வேண்டி உன்னை ஒரு பொருளாக மதித்து இரங்குகின்றேன்; நீ மலத்தையே நாடுகின்றாய்; இது நலமன்று காண்; வேண்டாதவற்றோடு கூறுகின்ற நீ, இங்கே ஓர் அணுவடிவாயிருந்து இப்போது எண் திசைபோல் எல்லையின்றிப் பரந்துள்ளாய்; இது நன்னெறி யாகாது; அதனை விரும்ப வேண்டா; மனமே, நீ மற்றவரின் வேறாய் வளவிய புகழ் படைத்துள்ளாய்; உன் புகழ் முற்றும் ஒருவராலும் சொல்லவொண்ணாது, காண். எ.று.


     கேவலத்திற் கிடந்த உயிர் சகலத்தில் உருவெடுத்த ஞான்றே உடனுறவாய் அடுத்ததாகலின் மனத்தின் உறவு “அடிநாள் உறவாம்” என்று இயம்புகின்றார். பின்னர் உண்டான பிரகிருதி சம்பந்தத்தால் தாமதகுணச் சேர்க்கை யுண்டானமையின், “தாமதமாம் நேற்றையுறவு” என்று கூறுகின்றார். மாயையை அவித்தை என்பதுண்மையின், பிரகிருதி மாயா காரியமான தாமதத்தை “ஓர் அவித்தை” எனவும், உயிரறிவை மறைக்கு மியல்பிற்றோதல்பற்றி “ஆவரணம்” எனவும், மயக்குவது செயலாதலால் “தாமதமே மோக சமுத்திரம்” எனவும் இயம்புகின்றார். கரைகாண்டற் கில்லாமையால் தாமதம் எனல் பொருத்தமாயிற்று. ஒளி வடிவாய உயிரொடுகூடி ஒளிரும் வாய்ப்புடைய மனம் இருள் வடிவாய தாமதத்தோடு கூடுதல் பெருந்தாவுறவு என்றற்கு “நாம் என்று ஒற்றுமைப்படப் புகன்றது பொய்யோ” என்று புகல்கின்றார். கைத்தல் - வெறுத்தல். இணக்க மறிந்து இணங்காது கூடுவாரொடு கூடுதல் தீது என்பர்; கூடினபோது “தாமதம் ஓர் ஆவரணம், மோகம்” என்றெல்லாம் நான் சொன்ன சொல்லை மறந்தாய் போலும் என்றற்கு “என் சொல் எண்ணுதியோ” என வுரைக்கின்றார். உன்னோடு உறவாகி உய்தி பெற விரும்புகின்றேனாக, நலவொளியை நாடாமல் மலவிருளை மதித்துக் கூடுவது நன்றன்று என்றற்கு “ஈதோர் நலமன்றே” என நவில்கின்றார். எண்டிசையும் எல்லையின்றி நீள்வனவாதலால் “எண்டிசைபோல் நீண்டாய்” என உரைக்கின்றார்.


    

   தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு

    மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க

609

   எல்லா நலமும் இதனால் எனமறைகள்

    எல்லாம்நின் சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்

610

   மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்

    றாகமங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த

611

   நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய

    தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்

612

   விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ

    இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த

613

   வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற

    மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்

614

   போகம் சுகமென்றும் போகம் தரும்கரும

    யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்

615

   போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து

    நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ

616

   தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த

    நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்

617

   டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே

    ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி

618

   வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே

    சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற

619

   வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற

    நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை

620

   எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்

    உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென

621

   வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்

    சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்

622

உரை :

        மனம் சுழன்று அடங்குமாயின் எல்லாவுலகும் அடங்கிவிடும்; ஒப்பற்ற பெரிய நடம்புரியும் திருவடி மலரும் சித்திக்கும்; வானுலகு முதலிய எங்கும் பெறலாகும் நலமனைத்தும் இம் மன வடக்கத்தாற் பெறலாம் என்று மறைகள் யாவும், மனமே, நின் புகழையே எடுத்துரைக்கின்றன; எல்லார்க்கும் பெரிய நிறைவு கொண்டமைந்த மனவொடுக்கம் உயர்ந்த சிவகதி நல்குமென ஆகமங்கள் நின் புகழை வடித்துரைக்கின்றன; இங்ஙனம் நன்மையெல்லாம் பெறற்கமைந்த நீ, உன்னுடைய உயரிய தன்மையை விட்டொழித்தல் சதுரப்பாடன்று; துன்பம் தரும் குற்றமாவன எல்லாவற்றையும் விட்டு நான் உரைக்கும் நிலையான சுகத்தை அடைவாயாக; நீ பெயரிட்டுரைத்த அச்சுகமாவது யாதென்பாயாயின் பந்தமற்ற திருவேடமே சுகம் தருவது எனவும், மெய்யுணர் தலின்றி நெஞ்சினுள் ஒடுங்கிக் கிடத்தலாகிய மூடம் சுகம் எனவும், பலவாகிய தோடங்களால் உண்டாகும் துன்பமிகுதி சுகமெனவும், போகம் பயக்கும் கன்ம யோகம் சுகம் எனவும், உண்டு இல்லை என்று கூற


     முடியாதபடி உயிர்ப்பை யடக்கி நிற்கும் அறிவுநிலை சுகமெனவும், நலந் தீங்குகளை ஒப்பக் கருதி யுணர்வின்றிக் கிடத்தல் சுகமெனவும், விந்து நாதங்களைக் கண்டிருத்தல் சுகமெனவும், என்றுமுள்ள நாமே என ஓதுவதே சுகமெனவும், உள்ளத்தே நம்மை நாமே கண்டிருக்கும் அந்தரங்க யோகமே சுகமெனவும், புறத்தே சென்று காண்பன கண்டு அமைதல் சுகமெனவும், அன்பு அறம் முதலியன அறியாத சூனிய நிலையே சுகமெனவும், வெல்லும் சொல் கொண்டு வீறுபடப் பேசுவதே சுகமெனவும் சொல்லுவர்; அவை யாவும் சுகமல்ல; நூல்களில் சொல்லப்படுகின்ற வான் முதலிய தத்துவங்களைக் களைந்து நான் முதலிய மூன்றில் ஒன்றையும் நாடாமல், அவற்றோடு அமையாமல், இரவு பகலின்றி உள்ளும் புறமும் ஒரே இயல்பிற்றாய் அருள் வள்ளலாய் விளங்கும் பரசிவத்தின் நெருப்பும் அதன் வெப்பமும் போல அதனைச் சூழ்ந்துறைவதே சுகமாம் என அறிக. எ.று.


     மாநடம் - எனற்பாலது எதுகை நோக்கி மானடம் என வந்தது. வான் - ஆகுபெயராய் வானவர்நாட்டு நலம் குறித்தது. கமம் - நிறைவு. நன்மை பெறற்குரிய குணஞ்செயல்களையுடைய நீ அவற்றை விட்டுத் துன்பத்துக் குரியையாதல் அறிவுடைமையாகா தென்றற்கு, “தன்மை விடல் சதுரல” எனக் கூறுகின்றார். சதுர் - சதுரப்பாடு; அறிவுவன்மையுமாம். கட்டு - உலகியற் பந்தம். மெய்யுணர்தலாகிய செயலின் கட்செலுத்தாது உள்ளுக்குள் ஒடுங்கிக்கிடத்தல் “மெய்யுணர்வையின்றி நின்ற மூடம்” எனப்படுகிறது. “வேடத்துளானலன் வேட்கை விட்டார் நெஞ்சின் மூடத்துளேநின்று முத்திதந் தானே” ( 2614 ) எனத் திருமந்திரம் கூறுவது காண்க. முற்ற நனைந்தார்க்கு குளிர் நீங்கல் உண்மையாம். துன்பத்துள் மூழ்கினார்க்கு உணர்வு ஒழிதலுண்மையின் அதனைத் “தோடம் செய் போகம்” எனவுரைக்கின்றார். போக காரிகை என்னும் நூலார் துன்பத்தையும் போகம் என்பர். கருவிகரணங்களைச் செய்யப்படும் கருமத்தில் ஒன்றுவித்தல் கரும யோகம். உயிர்பையடக்கி உணர்வுண்டோ இல்லையோ என்னுமாறு கிடப்பதை “உண்டிலை யென்று ஆகம்செய் போதம்” எனப் புகல்கின்றார். நலம் தீங்குகளை ஒப்பக் கருதி உவப்பு வெறுப்பின்றி உணர்வற்ற நிலையைப் “பொன்றல்” என்று குறிக்கின்றார். நம்மையே பொருளென்று பேணிக் காத்தலை, “நாம் பொருள் என்று ஓதல், அஃதொன்றே சுகம்” என இசைக்கின்றார். “ஆன்ம சொரூப தரிசனமே மோக்ஷம்” எனப்படுவதுபற்றி, “உட்கண்டிருக்கும் அந்த நன்றே சுகம்” என்று கூறுகின்றார். “இருநிலனாய் நீராய்த் தீயாய், காடுமலையாறு கடல்களாய் நிற்கும் இயற்கையை உடலாய்க் கொண்ட பரம்பொருளைக் காண்டலைச் சுகமென்பாரும் உளராதலின், “புறத்திற் சென்றே கண்டாற்றல் சுகம்” எனப் புகன்றுரைக்கின்றார். சூனிய வாதத்தை, “அன்பறியாச் சூனியம்” என்று சொல்லுகின்றார். தத்துவங்களை நிலமுதல் சிவமீறாகக் கூறுவதேயன்றி வானமுதலாகக் கூறுவது முண்டாதலால் “வானாதி தத்துவங்கள்” என வழங்குகின்றார். “அளவிறந்து தோன்றானோ வானே முதல்களையின் வந்து” என்று மெய் கண்டாரும் உரைப்பது காண்க. நான் ஆதி மூன்றாவன, நான் எனும் உணர்வுக்கேதுவாகிய ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்று வன்னி - நெருப்பு.


    

   கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம

    இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்

623

   பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது

    பற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல்

624

   வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க

    வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்

625

   ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற

    ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது

626

   போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி

    வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ

627

   துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்

    எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது

628

   பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்

    சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்

629

உரை :

        சுகம் பெறுதற்குரிய நெறியை அறிதற்கு எவ்வாறு இருக்க வேண்டுமெனில், கேள்; இப்போதிருக்கும் முறையிலிருந்தால் அஃது இயலாது; செவ்விய நெறிக்கண் நின்று பற்றற்றவனாகிய பரமனது பற்றினையே நாம் பற்றல் வேண்டும். அதுதானும் நான் எனது என்னும் பற்றற்றாலன்றிப் பயன்படாது; பற்றறுதி எவ்வாறு கைகூடும் எனில், உலகியல் வாழ்வில் எய்தும் சுகதுக்கங்களால் தோன்றிப் பெருகும் உலகப் பழக்க வாதனை நீங்குதல் வேண்டும்; அது நீங்கினாலன்றி அப்பற்றறுதி கைவராது; இவ்வுலகியல் வாதனையும் தாழ்வையே யுண்டு பண்ணுமென்று அறிந்து திருவருளைப் பெறற்குரிய ஞானம் எய்துதல் வேண்டும்; அதனாற்றால் உலக வாதனை யொழியும்; அந்த ஞானம் எங்ஙனம் விளங்கும் எனில், நிகழப்படும் போகங்கள் அத்தனையும் பொய் யென்றறிந்து நீங்கும் நித்தவனித்தங்களைப் பகுத்துணரும் விவேகத்தாலாகும்; அது, உண்ண வந்தவன் உணவே உண்ணுதல்போல் பொருள்களைக் கண்டறிந்து மெய்ம்மை காணும் எண்ணத்தால் எய்தப்படும்; அஃது எய்தினாலன்றி இசையாது; எண்ணம் ஈடேற வேண்டுமாயின் உலகியற் சேற்றில் அழுந்தியவர் கூட்டத்தைச் சேராமல், பரம சாதுக்களின் சங்கத்தைச் சார்தல் வேண்டும்; அஃது இன்றியமையாது. எ.று.


     சூழ்தல் - ஆராய்தல். அம்ம : கேள் என்ற பொருள்தரும் இடைச் சொல். செம்மையேயாய சிவத்தையடையும் நெறி “செவ்வாறு” என அறிக. பரமன் பற்றற்றானாயினும் நமக்கு அவன்பால் உளதாகும் பற்று இங்கே “பற்றற்றான் பற்று” எனப்படுகிறது. நம் உள்ளம் ஒரு காலத்து ஒன்றினையே பற்றும் இயல்பினதாகலின், பற்றற்றான் பற்றினைப் பற்றல் வேண்டில் உலகியல் வாழ்வைப் பற்றி நிற்கும் பற்று அறல் வேண்டும்; அதுபற்றியே “அது பற்றற்றாலன்றிப் பலியாதால்” எனப் பகர்கின்றார். உலகியற் பற்று, சகத்தாருடன் உளதாய பழக்க வாதனையை அடிப்படையாகக் கொண்டு விரிந்து நிலவுவது; அவ் வாதனை யொழிந்தால் பற்றறுதி


     கைகூடும்; இதற்காகவே, “பற்றற்றல் சகப்பழக்க வாதனைபோய் நீங்கிலன்றி வாராது” என உரைக்கின்றார். சகப்பழக்கம் - உலகியல் வாழ்வில் மக்களோடு பொருளோடும் பழகிப் போந்தது; பழகுதலைத் துறந்தாலும் காயமிருந்த பாண்டம் போல வாசனை நீங்காதென்றற்கு வாதனை போக வேண்டுமென்றொழியாது வாதனை போய் நீங்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இன்பதுன்ப நுகர்ச்சி வேதனை என்று குறிக்கப்படுகிறது. வாதனை யெனினும் வாசனை யெனினும் ஒக்கும். பழக்கம் எளிதில் நீங்காத கொடுமையு டைத்தாகலின், அது ஞான மெய்தினன்றி நீங்காமை தோன்ற, “அருளை நாடுகின்ற ஞானம் வந்தாலன்றி வாதனையும் நலியாதால்” என உரைக்கின்றார். இவ்வுலகியல் ஞானமும் இன்பமும் ஈனம் தருவன என்ற உணர்வு எய்தினாலன்றித் திருவருள் நாட்டம் உண்டாகாது; அது கருதியே “ஈனம் அந்தோ இவ்வுலகம் என்று அருளை நாடுகின்ற ஞானம்” என்று சிறப்பிக்கின்றார். நித்த வனித்த வேறு பாட்டுணர்வால் ஞானம் பிறக்குமென்பது ஞானநூன் முடிபாயினும், அனித்த வுணர்வே சிறந்ததென்றற்குப் “போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவிவேகம்” என்று அறிவுறுத்துகின்றார். அதனை ஓர் உவமையால் விளக்குவாராய் “உண்ணவந்தாற் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் எண்ணம்” வரல் வேண்டுவன விளம்புகின்றார். உலகியல் வாழ்வு இன்ப நன்னெறியாயினும் வாழ்வோரால் சேறாய்க் கலக்கித் தீதாக்கப்படுதல் பற்றி, அதன்கண் வாழ்வோரை, “பங்கமடைந்தார்” என்றும், அவர் கூட்டத்தை “அவை” என்றும் குறிக்கின்றார். அவரைச் சார்ந்தவர் அவ்வாழ்க்கைப் பங்கத்தே யழுந்துவதுகண்டே அவர் அவையைச் சாராது “சாதுக்கள் சங்கமடைய வேண்டும்” என்று இயம்புகின்றார். பங்கம் - சேறு.


    

   வீழ்முகத்த ராகிநிதம் வெண்ணீ றணிந்தறியாப்

    பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்

630

   பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே

    வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்

631

   பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே

    வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்

632

   சைவமெங்கே வெண்ணீற்றின் சார்பெங்கே மெய்யான

    தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே

633

   தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை

    நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்

634

   எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து

    கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று

635

   நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை

    ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற

636

   எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்

    பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக

637

   அற்பமே மற்றவெலாம் ஆயிலழி யாக்காய

    கற்¢பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்

638

   சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா

    சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்

639

   சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த

    கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு

640

   மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக

    யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்

641

உரை :

        ஆகவே, விரும்பத்தக்க முகமுடையாராகியும் நாளும் வெண்ணீறணியாது பாழ்முகத்தாய் இருப்பவர்பாற் சென்று தங்குவதை யொழிக; தமது பாழ்த்தமுகத்தில் பேய்த்தன்மை தோன்ற உள்ளத்தே பித்துணர்வு நிலவ நின்னோடு வெறிதே வாயாடுபவரை நெருங்கி நிற்பதை யொழிக; மனம் நிலைகுலைந்து பேதுறவெய்தவும் நெறிபிறழவும் நின்னோடு வாதுபுரிகின்றவர் பக்கல் அடைந்து நிற்றலைக் கையொழிக; சலம் சாதித்தது சைவமெங்கே, திருவெண்ணீற்றின் சார்பு எங்கே, மெய்யான தெய்வமெங்கே என்று தருக்கம் செய்பவரைச் சேரா தொழிக; உய்தி எங்கே உளது என்று நீங்காமல் சிவநிந்தை செய்து சிறு தெய்வங்களை முன்னிறுத்திப் பேசிப் பிதற்றுபவர்பால் சேர்வதை விடுக; உண்மையறியாமல் தெய்வமென ஒன்று எள்ளத்தனையும் இல்லை; இதனைத் தெளிந்து கொள்க என்று சொல்லித் துள்ளுவோர் கூட்டத்தைச் சேர்வதொழிக; எல்லாப் பொருட்கும் நடுவேயிருப்பது நாம் என்றும், நம்மையன்றிப் பிரமம் வேறில்லையென்றும் சொல்பவர் சூழலைச் சேராதொழிக; எல்லா அறிவும் எங்கும் பரந்து நிற்கும் எமதறிவே என்று பேசும் பொல்லாத வல்லுரையாளர் பொய்நட்பைச் சிறிதும் நாடுதலொழிக; மற்றவர் சொல்லுவன யாவும் புல்லிய அற்பமாம்; ஆதலால், என்றும் அழியாக் காயகற்பம் பெறுவதே பொருள் என்பவர் உண்டு; அவர்பால் செல்லாதே; சிற்சில சித்திகள் கைவரப் பெறுவதே பொருள் என்போரையும் நாடாதே; எல்லாம் மாயா சத்திகள், அச்சத்தியே பொருள் என்பவரையும் எண்ணாதே; அடைந்துள்ள இச்சன்மமே தோன்றும் தரமுடையது; திடமான பொருள் அனித்த கன்மமே என்பவரை எண்ணுதல் கூடாது; கன்மமிகுதியால் வானுலக வாழ்வு பெறுவதே கதி என்பவரும் உண்டு. அவர் கூற்றையும் மதிக்கலாகாது; பல்வகைப் போகங்களைப் பெறுதற்கு யோகமே பொருளாம் என்பாரோடு கூடுதல் செய்யாதே. எ.று.


     சிவவேடத்தை இகழ்வோரைப் பாழ்முகத்தோரெனவும், வாயாடுவோர் எனவும், வாதித்திடுவோர் எனவும் அடையாளம் காட்டி அறிவுறுத்துகின்றார். சிவநெறியை வெறுத்து மாறுபடுபவர், சைவத்தையும் திருநீற்றையும் சிவத்தையும் இகழ்வரென அறிக. சைவம் - சிவத்தோடு சம்பந்தமாவது என்பர் திருமூலர். மெய்யான தெய்வம் - சிவபெருமான். சிவனை விலக்கி வேறு பிற சிறு தெய்வ வழிபாடு செய்வோரை “சிறு தேவர்களை நேராய் பிதற்றுவோர்” என வுரைக்கின்றார். கடவுட்கொள்கை யில்லாத உலகாயதரை, “தெய்வமென்ப தில்லை யென்று கொள்ளென்று துள்ளுகின்றோர் கூட்டம்” எனச் சொல்லுகின்றார். நான் பிரமம் என்னும்


     பிரம பரிணாமவாதிகளை “நம்மையன்றி நண்ணும் பிரமமில்லையாம் என்று சொல்பவர்” எனக் குறிக்கின்றார். விஞ்ஞானமே பரமென்றும் ஆன்மாவென்றும் கூறும் விஞ்ஞான வாதிகளை “எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும் பொல்லா வலக்காரர்” என்று புகல்கின்றார். காயகற்ப வாதிகளையும், அணிமா மகிமா முதலிய சித்தி பெறுவதையே நோக்கமாகக் கொண்ட சித்தவாதிகளையும் இவ்வாறே விலக்குகின்ற வள்ளலார், மாயாவாதிகளை, “பன்மாயா சக்திகளே வத்துவென்பார்” என்று உரைக்கின்றார். “சன்ம காரணம் கன்மம்” என்னும் கன்மவாதிகளை “அனித்த கன்மமே திரவத்து என்பார்” என்கின்றார். யாகாதி கன்மங்களே தேவ கதிக்கும் போகங்கட்கும் காரணமென்னும் மீமாஞ்சகரை “கன்மிகு மாகம் கதி யென்பார்” என்கின்றார். மாகம் - வானுலகம். பாதஞ்சலரைப் “பல்போக யோகம் பொருள் என்பார்” என உரைத்து விலக்குகின்றார்.


    

   மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்

    பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்

642

   மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்

    றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்

643

   பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பர்

    தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி

644

   வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்

    கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற

645

   நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்

    தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல

646

   மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்

    பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்

647

   பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்

    அந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து

648

   கோடாநு கோடி கொடுத்தாலும் சைவநெறி

    நாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது

649

   கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு

    புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்

650

   ஆகாவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை

    நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்

651

உரை :

        மண்ணுலக வாழ்வு ஒன்றே வாழ்வாவது என்பாரும், மண்ணோடு விண்ணுலகையும் சேர்த்து இவ்விரண்டுமே உயிர்க்கு வாழிடமென்பாரும், ஞாயிறு திங்கள் நெருப்பு மூன்று சுடருமே தெய்வமென்பாரும், பெண்மையே தெய்வமென்பாரும் எனப் பல திறத்தருண்டு; அவரது பெயர் குறிப்பதும் தீது; மண்ணிடத்து நிலைத்த சொற்பொருளாக மரங்களைத் தெய்வமென்பவரும் இன்னும் என்னென்ன வெல்லாமோ


     உரைத்து ஓங்குபவரும் உண்டு; அவர் கூட்டத்தைச் சேராதொழிக; மிக்க நலங்கள் உண்டானபோது சிறுவர்களும் இது பூசாபலம் என்று புகல்வராக, அதனைத் தெளியாமலும் சிவபூசை செய்யாமலும், உயிருணர்வு வளமுற்றுச் சிறப்பித்துரைக்கும் பூசையின் பயன் யாதுளது; அது வீண்செயலென்று வீணே தமது பாழ்த்த வாயாற் பேசுகின்ற பேய் மக்கள் கூட்டமுண்டு; அவர்களோடு கூடுவதை விடுக; மாறுவதே நீண்ட கோலமாகவுடைய வாழ்க்கையை நீத்தோர் பெருமையை நினையாது அவர்களுடைய பொன் போன்ற ஞான நிலையத்துக்குள் நுழையாவாறு வேறாயவற்றை யுரைத்துத் தடுப்போர் கூட்டத்தையும் சார்தல் வேண்டா; நீண்ட அழகமைந்த மெய்யொழுக்கமுடையவர் போல வெளிப்பட நின்று அகத்தே பொய்யொழுக்கமே யுடைய பூரியார் கூட்டத்தையும் பொருந்துதல் ஒழிக; பொய்யொழுக்கம் பூண்டு பொய்யான நூல்களை விரித்துரைக்கும் பித்தர் கூட்டத்தையும் அவரது பொய்ந்நூலையும் விரும்புதல் ஒழிக; கையை நீட்டிக் கோடிகோடியாகப் பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் சைவநெறியைக் கொள்ளாதவரை நெருங்குதல் ஒழிக; விலகுதலின்றிக் கொல்லா விரதத்தைக் கைக்கொள்ளாதவர் கூட்டத்தைக் காணில் அதனை அற்பமாக மதித்து நீங்குக; இவ்வாறு மாறுபட்ட எல்லாவற்றையும் சேரவெடுத்துரைப்பது எற்றுக்கு? நம் ஐயனாகிய சிவன்பால் அன்பில்லாரை நீ கனவிலும் நினையாதே. எ.று.


     மண்ணக வாழ்வொன்றே வாழ்வு; வேறே இல்லை யென்னும் சமயமும் உண்மையின், அச் சமயத்தாரை “ஏகம் கொள்” என்றும், மண்ணும் விண்ணுமாகிய இரண்டுமன்றி வேறே வீடுளது என்பது வீணுரை என்பவரை “வானென்பார்” என்றும் குறிக்கின்றார். ஞாயிறு, தீ, திங்கள் மூன்றையும் தெய்வமெனக் கருதி வணங்குவோரை, “முச்சுடரென்பார்” எனக் கூறுகின்றார். தாருகவன முனிவர்போலப் பெண்ணையே தெய்வமெனப் பேணுபவரைப் “பெண்ணென்பார்” எனப் பேசுகின்றார். மரங்களைத் தெய்வமாகக் கொண்டு வழிபடுவோர் நம் நாட்டிலும் பிற நாட்டிலும் உண்டென அறிக. மண்ணையும் மரத்தையும் தெய்வமென்பார் எதனைத்தான் விலக்குவார் என்றற்கு “மற்று என்னுரையார்” என்று இயம்புகின்றார். மன்னலங்கள் என்றவிடத்து, மன், பெருமையும் மிகுதியும் குறிக்கின்றது. ‘ஆவித்து வீண் பாழ்வாய் கூறுகின்ற பேயர்’ என இயைக்க ஆவி பூத்தலாவது உயிர் தழைத்தல். வீறுதல் - சிறப்புறுதல். நிலவுலக மக்கள் வாழ்க்கை மாறுவதையே இயல்பாக வுடையதாதலால் “மாறுகின்ற நீட்கோல வாழ்க்கை” என்று வள்ளற் பெருமான் கூறுகின்றார். நாடோறும் புதிய புதிய அறிவு தோன்றி செயலும் பொருளும் பெருகுவித்து மக்கள் வாழ்வில் மாற்றங்களை விளைவித்து அழகும் இன்பமும் தோற்றுவித்தல் கண்டு “மாறுகின்ற நீட்கோல வாழ்க்கை” யென்றும், இம் மாற்றம் புத்தின்பம் தந்து வாழ்வாரை இவ்வாழ்வையே காதலித்து மயங்கச் செய்தலைக் காணும் ஞானவான் நீத்தலை மேற்கொண்டு மேலாய வீட்டின்பத்தைக் காட்டுகிறான் என்றற்கு, “வாழ்க்கை யெலாம் நீத்திடுவோம்” என்றும், அவன் காட்டுவது “பொன்னறை” என்றும், அதனை மறுத்து உலகியலில் ஆழ்த்துவோரைப் “பொன்ன்றைக்குத் தாட்கோல் இடுவார்” என்றும் சாற்றுகின்றார். நீள்


     கோலம், நீட் கோலமெனவும், தாழ்க்கோல் தாட்கோல் எனவும் வந்தன. பொய்யொழுக்கத்திற் கேற்பன வுரைக்கும் நூல் பொய்ந்நூல் என அறிக. கேட்போர் தொகை பெருகுதல்வேண்டிப் பெருமுழக்கமிட்டு ஆரவாரத் தோடுரைப்பராதலின், அதனைப் பற்றிப் புலம்புகின்றார். என்று உரைக்கின்றார். அவை - கூட்டம். சின்னாட்களில் கொல்லாமையும், பன்னாட்களில் கொல்லுதலையும் உடையார் உளராதலின், “கொல்லா விரதமது கோடாது கொள்ளார்” என்று கூறுகின்றார். புறத்தே செல்க என விலக்கற்குப் “புறம்பொழிக” எனப் புகல்கின்றார். ஐயன் - தலைவனாகிய சிவபெருமான். கனவிற் கண்டது நனவில் ஓரொருகால் எய்தினுமெய்து மென்பது பற்றிக் “கனவிலும் நினையற்க” எனக் கடிகின்றார்.


    

   கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பேர்

    இன்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்

652

   கண்டிகையே பூணிற் கலவையே வெண்ணீறாய்க்

    கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே

653

   வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்

    தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்

654

   ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்

    சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத்

655

   தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்

    கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்

656

   தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்

    கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்

657

   இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்

    அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே

658

   அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ

    புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்

659

   தேனே அமுதே சிவமே சிவமேஎம்

    மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான

660

   மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்

    அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்

661

உரை :

        ஏகனாகிய சிவபெருமான் திருவடிக்கு அன்பே வடிவாகவும், அருளே உயிராகவும் பேரின்பமே உணவாகவும் கொண்டு உறைபவரும்; அன்புடையராய், பூண்பது கண்டிகையும், மெய்யிற் பூசும் கலவைச் சாந்தே வெண்ணீறாக் கொண்டு அவ்வேடத்தைக் கைவிடாது சார்ந்துறைபவரும்; தொண்டு செய்வதுடன் வாயாற் சொன்மாலை தொடுப்பதோடு நம் இறைவனுக்குத் தூய மலர்கொண்டு மாலை தொடுத்துறைபவரும்; சிவனைச் சார்ந்த பிரமதேவன் அழகிய நந்தனப் பணி கண்டு ஆர்வமெய்துமாறு சிவனுக்கெனச் சீர்த்த நந்தனப் பணி செய்துறைபவரும்; அன்பு குன்றாமல் தீயிற்பட்ட மெழுகுபோல மனம்


     இசைந்துருகி நம்மிறைவனான சிவன் கோயிலில் மெழுகும் கொள்கையுடன் உறைபவரும்; தன்னையடைந்தாரைத் தாய்போல் வளர்க்கும் தயவுடைய நம் பெருமானுடைய கோயிற்கு விளக்கித் துப்பரவு செய்யும் குணத்தோடு உறைபவரும்; தூயவர்களின் குழலில் இன்பமுடன் இருந்து தீபம் முதலிய சரியைத் தொழில் பலவும் அன்புடன் செய்து உறைபவரும்; அன்புடன் வந்து சேர்ந்த மிக்க அன்பர்கட்கு அமுது அளித்தல் முதலிய சிவபுண்ணியத்தை நாடோறும் புரிந்துறைபவரும்; சிவன் திருமுன் நின்று, ‘புண்ணியமாகிய தேனே, அமுதமே, சிவமே சிவமே, எம்மானே’ என்று மகிழ்ந்துறைபவரும், வானத்து மன்னனே, அருட்கடலே மாணிக்கமே, எங்கட்கு அன்னையே’ என்று எண்ணியுறைபவரும்; எ.று.


     Êசிவனை ‘ஏகன்’ என்று சான்றோர் பரவுதலின் “ஏகன்” என்று ஏத்துகின்றார். “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்பது திருவாசகப் சிவபுராணம். கண்டிகை - அக்கமணிமாலை. “ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலர்” என்று சேக்கிழார் கூறுவர். கலவை - மெய்யிற் பூசும் வாசனைச் சாந்து. இகவா - நெகிழாத. வாய்மலர் - வாயால் உரைக்கப்படும் சொல்மலர். நந்தனம் - இந்நாளில் நந்தவனம் என வழங்குகிறது; பூந்தோட்டம் என்றும் கூறுப. நார் - அன்பு. நந்துதல் - குறைதல் - மெழுகு - சாணமிட்டு மெழுகுதல். கோயில் விளக்குதல் - மாறுகொண்டு அலகிட்டுத் துப்புரவு செய்தல். சரியைத் தொழில் - அலகிடுதல், மெழுக்கிடுதல், கோலமிடல், புல்பூடுகளைப் போக்குதல் முதலிய உழவாரப் பணிபுரிதல் முதலியனவாம். அண்ணுதல் - நெருங்குதல். உண்டி, உடை, மருந்து முதலியன அளித்தலை “அமு தீதலாதி” என உரைக்கின்றார். வானானமன் - வானிடத்து மன்னன். ஆன், இடம் குறிக்கும் இடைச்சொல்.


    

   பண்ணீர் மொழியால் பரிந்«¢தத்தி ஆனந்தக்

    கண்ணீர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ணீரில்

662

   பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி

    கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்

663

   பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்

    சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்

664

   மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு

    வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்

665

   மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு

    இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்

666

   நல்¢வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்

    சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த

667

   தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்

    வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்

668

   சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று

    தேர்ந்தே சிவபுசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி

669

   நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து

    மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்

670

   அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்

    அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே

671

   வி¢ஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்

    செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்

672

   பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை

    நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை

673

உரை :

        நல்லனபால் பண்ணிசையமைந்த சொற்களால் பரிவுடன் ஏத்தி ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மனம் மகிழ்ந்துறைபவரும், உண்ணீர்மையுடன் முன்பு கண்டிருந்தும் காணாத் தன்மையுடையராய்ச் சிவனது பொன்மேனியைப் பார்த்துப் பார்த்து நாடோறும் மகிழ்ந்துறைபவரும், தொண்டுள்ளத் திற்கேற்ற பொற்பு மிகுமென்று நினைந்து ஞானசம்பந்தர் முதலிய மூவர்களின் சொற்களாலான திருப்பதியங்களால் துதித்துறைபவரும், கனவிலும் மனத்தின்கண் மாசுறாத மாணிக்கம் என்ற திருவாசகத்தை வாயால் ஓதியுறைபவரும், சொற்களிடமாக நிலைபெறும் இசைப்பகுதி யமைத்து உயர்ந்தோர் திருமுறையாக வகுத்து வழிபட்ட திருவிசைப்பா முதலியவற்றை ஓதியுறைபவரும், நிலைத்த இசைப்பாக்களுக்குப் பின் நல்வாழ்வு தரும் நம் சிவபெருமானுடைய மான்மியங்களைச் சொல்லியும் கேட்டும் தொழுது உறைபவரும், புகழ் வாய்ந்த தாதா என்று அன்புடன் சாம கீதமுதல் வேதங்களையும் ஆகமங்களையும் விரித்தோதி உறைபவரும், வேதாந்தப் பொருளை யறிந்தோர்க்கு அஃது அறிவுறுத்துவது சிவமே பொருள் என்பது என்று தெளிந்து சிவபூசை செய்து உறைபவரும், அன்பு நிறைந்து வழிபட்டு நல்லநெஞ்சமே சிவனுக்குக் கோயிலாமென்று நம்பெருமானாகிய அவனை அதன்கண் வைத்து மிக்க சிவநேயம் கொண்டு உறைபவரும், முன்னே அயன் தலையின் எழுதிய அச்சம் தரும் எழுத்தெல்லாம் கேட்கின் அஃது அச்சம் பயக்கும் எழுத்தாமாதலின், அவற்றைக் கொள்ளாது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தால் அருச்சனை செய்து உறைபவரும், மேகம்போல மிக்குப் பரக்கும் ஐம்பொறியின் நுகர்ச்சியாவற்றையும் நம்பெருமானுடைய செவ்விய அழகிய திருவடியில் ஒன்றுவித்துறைபவரும், வஞ்சம் புரியும் பொய் காமம் முதலியவற்றால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் புண்ணியனாகிய சிவபெருமானுக்குத் தமது உயிரையே பொருளாக வைத்துப் படைத்துறைபவரும். எ.று.


     அன்பு விளைவிக்கும் பண்ணிசையமைந்த மொழிகளைச் சொல்லி வழிபடுமிடத்து இன்பக் கண்ணீர் பெருகி வழிதலின், “பண்ணீர் மொழியாற் பரிந்தேத்தி ஆனந்தக் கண்ணீர்” சொரிவது கூறுகின்றார். உள்ளத்தே அன்பு விளைவியாதவழிப் பண்ணாற் பயனின்மையின் “நன்னேயப் பண்ணீர் மொழி” எனச் சிறப்பிக்கின்றார். உண்ணீர் - உள்ளம் அலவுற்றுக் கலங்குதலின்றித் தெளிவுடைத் தாதல். ஆரா அன்புளதாய


     போது எத்தனை முறை நோக்கினும் ஆர்வம் நிறைவுறாமை பற்றிக் “கண்டும் காணாப் பரிசினராய்” என்றும், காட்சியாசை மேன்மேலும் உந்துதலின், “கண்டு கண்டு களிப்போர்” என்றும் கூறுகின்றார். பொன் மேனி - பொன்னிறம் கொண்ட மேனி; சான்றோர் சிவனைப் “பொன்னார் மேனியன்” என்பர். திருக்கோயில்களிற் காணப்படுவதும் பொன்னாற் செய்த திருமேனி என வுணர்க. தொண்டு செய்தலால் உண்டாகும் புண்ணியமிகுதி, “தொண்டடையும் பொற்பு அதிகம்” என குறிக்கப்படுகிறது. மூவர் பாடியருளியன திருப்பதியமாயினும், பிற்காலத்தார் பொருணலம் நோக்காது திருப்பதிகமென வழங்கினமையின் வள்ளற் பெருமானும் யாவரும் இனிதுணருமாறு “சொற்பதிகம்” எனச் சொல்லுகின்றார். பத்துப்பாட்டுக்கள் கொண்டது பதிகம்; திருப்பதியைச் சிறப்பித்துப் பாடுவது திருப்பதியம்.. பதி - தலம். சொற்பனம் - கனவு. தான் மாசில்லாத மாணிக்கமாய், தன்னை ஓதுவார் உள்ளத்தில் மாசு அணுகாதவாறு காத்தருளும் மாண்புடைய தென்றற்குச் “சொற்பனத்தும் மாசு அகத்திற் சேர்க்காத மாணிக்கம்” என்றும், அது திருவாசகத்துக்குரிய தென்றற்கு “மாணிக்கமென்ற திருவாசகம்” என்றும் இயம்புகின்றார். “பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில்மணியின் மணி வார்த்தை” ( பண்டாய. 7 ) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. இசைப்பால் - இசைக்கூறாகிய பண்ணின் பகுதி. இசை வாசகத்தில் நிலைபெறுதலின் “வாசகத்தின் மன்னிசை” என உரைக்கின்றார். சான்றோரும் திருவிசைப்பா என்றே முறை செய்துள்ளனர். மான்மியம் புராணமென்று கூறப்படுவதுமுண்டு. திருவிசைப்பாவோதிப் புராணம் ஓதுதல் முறைமை. தென்னாட்டுத் திருக்கோயில்களில் சென்ற நூற்றாண்டுவரைத் திருப்பதியம் ஓதியபின்பே வேதாகம வசனங்கள் ஓதப்பட்டன. அதற்குக் காரணம் அவை தோத்திர நூல்களல்ல வென்பது. ஆங்கிலவரசு நிலைபெற்றபோது பிராமணீயம் அரசியற் செல்வாக்கு மிகப் பெற்றதனால், வடமொழி வேதமோதுதலும் அம் மொழியில் வழிபாடும் செயல்முறைகளும் புதியவாய் வழங்குவதும் முதலிடம் பெற்றன. திருக்கோயிலில் தெய்வங்களின் திருப்பெயர்களும் திருமுறைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்” என்றும், “ஓரும் வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த சாரங்கொண்ட சைவ சித்தாந்தம்” என்றும் கூறுவது பற்றி, “வேதாந்தம் சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருள்” என்று தேர்ந்து, என்று தெரிவிக்கின்றார். அயன் எழுத்து - பிரமன் எழுதிய தலையெழத்து” என்பர்; அதனால் “அயன்தன் அஞ்செழுத்தெல்லாம் கேட்கின் அஞ்செழுத்தாம்” என்று அறிவிக்கின்றார். எட்டெழுத்து ஆறெழுத்து நாலெழுத்து முதலியவற்றையும் பஞ்சாக்கரமென வழங்கும் சைவமரபுபற்றிப் பிரமன் எழுதிய எழுத்தும் அஞ்செழுத்தெனப்படுகிறதென அறிக. அயன் எழுதுவது தலையெழுத்தனெப், படுவதேயன்றி இத்தனையெனக் கூறப்படுவ தில்லையாதலால், அஞ்செழுத்தென்பது விலக்கப்படுவதற்கில்லை. திருவைந்தெழுத்தை யோதிச் சிவனை வழிபடுவதை ஐந்தெழுத்தால் அருச்சித்தல் என்பர். அஞ்செழுத்தால் உள்ள அரனுடைமை கண்டு அரனை அஞ்செழுத்தால் அருச்சித்திதயத்தில்” ( சிவ. போ. சூ. 9 ) என மெய்கண்டதேவர் மொழிந்தருளுவது காண்க. வானத்துலவும் மஞ்சுபோல உலகமுற்றும் பரந்து விரிந்து நோக்கும் ஐம்பொறியை, மஞ்செனவே விஞ்சும் பொறி” யென்று


     விளம்புகின்றார். பொறியைந்தையும் சிவன் திருவடியில் ஒன்றுவித்து வாழ்வதை “எண்ணமேயுடல் வாய்மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்” ( வாழா ) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. உயிரைச் சிவனுக்கு நைவேதனம் செய்வதை “ஆன்ம நிவேதனம்” என்று வடநூலார் கூறுவர். நிவேதனம், நைவேதனம் எனவும் வழங்கும்.


    

   நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்

    ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்

674

   தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்

    நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு

675

   மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்

    தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்

676

   வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்

    தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு

677

   தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்

    வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய

678

   வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத

    காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்

679

   தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்

    ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்

680

   வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்

    ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கீஅப்பால்

681

   மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்

    தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்

682

   றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்

    டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்

683

   தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்

    பாரா இருந்த படியிருந்து - பேராது

684

   கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து

    கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய

685

உரை :

        செய்யப்படுகின்ற வேலை நீடித்து நடத்தலும் நிற்றலும் முதலிய எல்லாவற்றிலும் நம் பெருமானுடைய திருவடியைத் தியானத்தலில் ஆழ்ந்திருப்பவரும், வாட்டமின்றித் தூய நனவின்கண்ணும் சுழுத்தியின்கண்ணும் நம் பெருமானிடத்து உள்ள அன்பை இடையறாது செலுத்தி நிற்பவரும், மாயா காரியமான பிரகிருதி மாயை யென்ற மானொடு கலந்து அயலாய் நின்ற நிலைமையை நீக்கித் தன் தன்மையின்றிச் சிவம் தானாய் நிற்கும் தகைமை யுடையவரும், வானத்தில் மழை மேகத்தைக் கண்டு ஆடுகின்ற மயில்போலச் சிவனுறையும்


     திருப்பதிகளைக் கண்டு மகிழ்ந்தாடும் தவமுடையோரும், மோனம் மேற்கொண்டு தாழ்ந்த சடையும், திருநீரும், அவற்றிற்கொத்த கோவணமும் கீளுடையும் சிவப்பொலிவும் கொண்டு வாழ்பவரும், ஆழ்ந்த நீர் நிலையமான கடல் அலைபோன்ற அசுத்த மாயையினாலாகிய பூத காரியங்கள் எல்லாவற்றையும் கண்டு கழித்து, பரந்து இயங்கும் பிரமனுக்குரிய தத்துவங்களான பூதமைந்தும், பொறியைந்தும் பொறியறிவான புலனைந்தும், வாக்கு முதலிய செயற்கருவியைந்தும், திருமால் தத்துவங்களான கலை முதலிய ஏழும் நீக்கி, அவற்றிற்கப்பால் சுத்த வித்தை முதல் நாதமீறாகவுள்ள சுத்த தத்துவத்தையடைந்து அவற்றையும் கழித்து அப்பால் விளங்கும் திருவருளைக் கண்டு, அவ்வருள் வழங்கும் ஒளியால் தம்மைத் தாம் கண்டு, அதன்பின் மேலுள்ள பரவெளி கண்டு, அதற்கப்பாலுக் கப்பால் என்றும் நீங்காத தன்மயமாய் அறிவின்பமாகிய சிவவொளியைப் பார்த்து, இருந்தபடியே இருந்து, அந்நிலையின் நீங்காமல், கண்டது என ஒன்றோடும் கலவாமல் ஆங்குண்டாகும் அனுபூதியிற் கலந்து மகிழும் சிவோகியாகிய தலைவரும் எ.று.


     வேலை - தொழில், இடைக்காலத்தே வழக்கிலிருந்து புகுந்து சொல் நடக்கினும் நிற்கினும் கிடக்கினும் எப்போதும் சிவனடியே சிந்தித்திருக்கும் செயலுடைமை தோன்ற, “அடித்தியானம் அமர்ந்தோர்” என அறிவிக்கின்றார். நீடல் - நீட்டித்தல். ஆடல் அடி - திருக்கூத்தியற்றும் திருவதி. நனவும் சுழுத்தியும் கூறிக் கனவு கூறாதது, அது காண்போர் இச்சை வழி இயலுவதன்றென்பது விளங்குதற்கு. சுழுத்தியில் மனமும் தொழிற்படுதலின், நனவிலும் சுழுத்தியிலும் “நேயம் நிகழ்த்தும் நெறியினர்” என உரைக்கின்றார். நேயம் - அன்பு. மாயையின்கண்ணதாகிய மூலப்பகுதி “மாயமுறுமான்” எனப்படுகிறது. மூலப் பகுதிக்கு மான் என்பதும் ஒரு பெயர். மூலப்பகுதியின் காரியமாகிய உடம்பொடு கூடி வேறற நிற்பதுபற்றி “மானது வாய்நின்ற” என்றும், அஃது உரிய நிலையன்மையின் “அயல்” என்றும் கூறுகின்றார். சேதனமாகிய உயிர்க்கு உடம்பு அசேதனமாய் அயலதாம் என அறிக. அதுவாய் நிற்றல் - சிவமாய் நிற்றல். வான் - மழை மேகம். மனம் ஒடுங்கும் நெறியாதலின் மோனம் இன்றியமையா தாயினமை தோன்ற ஒடுக்கொடுத்துச் சிறப்பிக்கின்றார். சிவவேடமும் சிவப்பொலிவும் ஈண்டுச் சிவம் எனக் குறிக்கப்படுகின்றன. வதிதல் - வாழ்தல் ஆழ்நிலைய வாரி - ஆழமுடைய கடல். மூலப்பகுதி யெனவும் பிரகிருதிமாயை யெனவும் பிரித்துக் காணுமுன் மாயை சுத்தம், அசுத்தம் என இரண்டாகப் பிரித்து எண்ணப்பட்டது. பிரகிருதி மாயா காரியமான ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் பிரமன் பாகமென்றும், அசுத்த மாயா காரியமான வித்தியா தத்துவங்கள் ஏழும் திருமால் பாகம் என்றும், சுத்த மாயா காரியமான சுத்த தத்துவத்தைச் சிவதத்துவமென்றும், சித்தாந்தம் கூறுகிறது. அவற்றை வள்ளற்பெருமான் விரியக் கூறுகின்றார். மாயா மண்டலத்துக்கு அப்பால் உள்ளது அருள்வெளி; அவ்வெளியில் திருவருளொளியில் தோயும் உயிர் தன்னுண்மையைக் காண்டல்பற்றி “அருளால் தமைத்தாம் கண்டு” என்றும், அக் காட்சியின் பயனாய் அப்பாலுள்ள பரவெளி காணப்படுகிறதென்றற்கு “அப்பாற் பரவெளி கண்டு” என்றும், அப்பாலைக் கப்பால் காணப்படும் சிதாகாசப் பெருவெளியின் ஞானவொளியைத் தீராச் சுயமாய்ச் சிதானந்தமாம் ஒளி” என்றும்


     இயம்புகின்றார். அங்குக் காணப்படும் சிவவொளியிற் கலப்பது சிவயோகம்; கலப்பவர் சிவயோகியர்; கலக்குமிடத்துக் கீழே கண்டு கழித்தவற்றில் ஒன்றோடும் கலவாது நிற்குமாறு புலப்பட “கண்டது என்று ஒன்றும் கலவாது” என்று குறிக்கின்றார். சிவயோகம் பெறுதலின் வேறு வெற்றியில்லாமையால் “சிவயோகியராம் கொற்றவர்” என்று புகழ்ந்துரைக்கின்றார்.


    

   சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர

    தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்

686

   தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த

    யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்

687

   கூறும் குறியும் குணமும் குலமுமடி

    ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற

688

   சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த

    சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்

689

   தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்

    செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்

690

   ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்

    நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது

691

   தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்

    செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்

692

   தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்

    பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்

693

   எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க

    மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே

694

   யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்

    சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி

695

உரை :

        நெருங்குதற்கில்லாத சத்துவத்திற் சத்துவகுணவுருவமே தமக்கு உருவாகக் கொண்டு பரதத்துவத்தில் நின்றொளிரும் தக்கோரும், சிவபோகச் செந்நெறியில் தீதும் நன்றும் யாவும் சிவன் செயலெனக் கருதி இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகக் கொண்டு உறைபவரும், குற்றமின்றாகக் கூறுகின்ற குறியும் குணமும் குலமும் முதலும் இறுதியும் இடையும் ஆகிய யாதும் கருதாதவரும், சிறக்கின்ற உயர்ஞானநிலையில் அறிந்து கொண்டவெல்லாம் உள்ளத்தே செரிக்குமாறு சித்தம்பதறாத சார்ந்த நிலையில் நின்றொழுகுவோரும், சாந்திபெறும் பொருட்டுத் தமது நிலையையும் தம்பால் வந்தமையும் சித்துக்களையும், தாமே கண்டு மகிழாமல் செம்மைநிலை கெடாத பெரியோரும், எவ்விடத்தும் மன நிரம்பாமையுற்றுப் பெருகிநிற்கும் ஆசைக் கடலை மான்குளம்படியில் நிற்கும் நீரளவாக மதித்து நீங்கும் நிலைமையுடையவரும், எந்நெறியையும் சேராமல் தமது ஞானமே பொருளாகக் கொண்டு பொன்றாத வீட்டின்கட்


     பெறலாகும் செம்பொருளாய சிவத்தைச் சார்ந்தவரும், மண், பொன், பெண் என்ற ஆசையற்றுக் காண்போர் பெயரோ பித்தரோ பாலரோ என நினைக்குமாறு உலவும் பெரியவரும், ஈயினுடைய கூரிய கொடுக்களவான துரும்பாக இவ்வுலகனைத்தையும் மதித்து அளித்து மேனியில் தாங்கிக்கொள்ள வல்ல அறிவாற்றலுடையவரும், மெய்ம்மையாக எல்லாவற்றையும் முற்ற அறிந்தும் அறியாதார் போன்று எக்காலத்தும் பிறப்பின்றியிருக்கும் பெரியோரும், எ.று.


     அண்டுதல் - நெருங்குதல். Êசத்துவத்திற் றமம், சத்துவத்தில் இராசதம், சத்துவத்திற் சத்துவம் என்று பிரியும் குணவகையில் சத்துவத்திற் சத்துவகுணம் எத்தகைய மாசும் மறுவும் சேராத தூய்மை யுடையதாகலின் “அண்டரிய சத்துவத்திற் சத்துவ” மென்று உரைக்கின்றார். உருவும் ஒருவகைப் பண்பாதலின், சத்துவ குணவுருவை “சத்துவமே தம் உருவாய்” எனல் பொருந்துவதாயிற்று. அசுத்தமாயா தத்துவங்களை அபரதத்துவமெனவும், சுத்தமாயா தத்துவத்தை பரதத்துவமெனவும் வழங்குதலுண்மைபற்றி “பரதத்துவத்தில் நிற்கும் தகவோர்” என்று பரிந்துரைக்கின்றார். மத்துவம் - சைவச் செந்நெறி; சிவரூப சிவதரிசன சிவயோகங்களின் நெறி மத்துவமெனச் சிவாகமங்கள் உரைக்கின்றன. யாதும் சம்மாகக் கொண்டிருப்பது சமனிலையென்னும் மெய்ப்பாடு. கோதுபட என்பதில் படுதல் இன்றாகக் கெடுதல். குறி - பெயர். ஆதியும் இடையும் அந்தமும் இல்லாத சிவமாம் தன்மை பெற்றோரை “அடியும் ஈறும் கடையும் இகந்தோர்” என இயம்புகின்றார். சேந்து - சேந்தியெனப்படும் உயர்விடம். சிவபதம், இங்கே “வீறுகின்ற சேந்து” என்று சிறப்பிக்கப்படுகின்றது. சிவபதத்தில் அடையும் போகத்தை உண்டிருத்தற்கமைந்த சித்த சாந்தியை, “சீரணிக்கச் சேர் சித்த சாந்தி” என எடுத்துரைக்கின்றார். சரித்தல் - ஒழுகுதல் . தம்மையென்றது தமது உயர்வை என்க. செயற்கரியவற்றைச் செய்யும் வல்லைமைகள் சித்து என வழ.ங்கும். அரியன செயற்படுமிடத்து உவப்புறுவது உயிர்க்கியல்பாயினும், அதனைச் செய்யாத வலிமையுடைமை பற்றி அவரைத் திறலோர் என உரைக்கின்றார். இம்மை, மறுமை, அம்மை என்ற மூவகையும் அடங்க “எம்மையினும்” எனக் குறிக்கின்றார். மனம் நிரம்பாமை ஆராமை; அதுவே அவா எனப்படுவது. திருவள்ளுவர் அதனை “ஆரா வியற்கை அவா” என்பர். மான்குளம்பின் நீரை, “மானின் குளம்புறு குழிவாழ் கலங்கற் சின்னீர்” ( ஞானா. 54 : 123 ) என ஞானாமிர்தவாசிரியர் கூறுவர். தாம் பெற்ற திருவருட் சிவஞானம் “தம்பொருள்” எனக் குறிக்கப்படுகிறது. சதானந்த வீடு - என்றும் குன்றாத இன்ப வீடு. செம்பொருள் - சிவபரம்பொருள். பெண்ணாசையைப் போக்கினவர் பிறமாதரைத் தாயரென எண்ணுவராதலின், “தாயரென மாதர் தமையெண்ணி” என்று கூறுகின்றார். “தன்மனைக் கிழத்தியல்லதைப் பிறர்மனை அன்னையீற்றீரா நன்னராண்மை” ( 24 : 39-40 ) என்று ஞானாமிர்தம் கூறுகிறது. ஈயதனின் எய் - கொசுகு முதலியவற்றின் குருதி யுறிஞ்சும் கருவி. திரணம் - சிறுதுரும்பு. வித்தகர் - வல்லவர், பரிசு - தன்மை.


    

   வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்

    செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்

696

   தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்

    ஏறா திழியா திருப்போரும் - மாறாது

697

   மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர

    மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்

698

   சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்

    சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்

699

உரை :

        நீங்குதலின்றி இரக்கமின்றி வைதாலும், வாழ்க என்று வாழ்த்தி உபசாரம் செய்தாலும் தன்மை மாறாத தகுதியுடையவரும், உண்மை நெறியில் உலகினைத் தெளிந்து சிவமாகக் கண்டு எங்கும் ஏறுதலும் இழிதலுமின்றி இருந்தாங்கிருப்பவரும், மாறுதல் சிறிதுமின்றி மோனத்தை மேற்கொண்டு எல்லாம் முடிந்துவிட்டது உயர்ந்தோங்கித் தோன்றும் பரமானந்த நிலைக்கு அப்பால் உறைபவரும் தாம் கெடுதலில்லாத சாதுக்களாவர்; அவர்களுடைய சங்கத்தின் பெருமையைச் சாதுக்களாயினாரன்றிப் பிறர் எவரும் அறியார், எ.று.


     ஓவல் - நீங்குதல். விருப்பம் இல்வழி விட்டு நீங்குவதின்றி வாயில் வந்தன சொல்லி வைதல் கூடாது; அதனைச் செய்யினும் என்றற்கு “ஓவலின்றி வைதிடினும்” என்றும், வைத்தற்கு வெறுப்பும் வாழ்த்தியதற்கு விருப்பும் கொள்ளாமை பற்றி “தன்மை திறம்பார்” என்றும் இயம்புகின்றார். “செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந்தோடாமை” என்று பேராசிரியர் முதலிய உரைகாரர் கூறுவர். மெய்வகை - உண்மைநிலை. எவ்விடத்தையும் எப்பொருளையும் எவ்வுயிரையும் உயர்த்தியும் இழித்தும் நோக்காது ஒப்ப நோக்கவோரை, “எங்கும் ஏறாதிழியா திருப்போர்” என்று இசைக்கின்றார். முடிவிடம் - எல்லாம் ஒடுங்குமிடம். சிவானந்த நிலையத்தைப் “பரமானந்த”மெனவும் அதற்கப்பாலை “ஆனந்தா தீதம்” எனவும் உரைக்கின்றார். “ஏகனடிக்கு அன்பே வடிவாய் அருளே உயிராய்ப் பேரின்ப உணவாய் இசைந்தார்” முதல் “பரமானந்தா தீதத்தமர்ந்தோர்” ஈறாகக் கூறப்பட்ட பெருமக்களை சாதுக்களாம் என முடிக்கின்றார். அவர்களைத் திருஞானசம்பந்தர் “சாதுக்கள் மிக்கீர்” என்று சொல்லி அழைக்கின்றார். அவரது சங்கத்தின் பெருமையை அச்சாதுக்கள் தாம் அறிய வியலும் என்றற்குச் “சாதுக்களன்றி எவர் தாம் அறிவார்” என வுரைக்கின்றார். இவ்வுரை, “புலமிக்கவரைப் புலமையுணர்தல் புலமிக்கவர்க்கே புலனாம்” என்பதை ஒத்துளது.


    

   நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்

    ஆங்கவர்தாட் குற்றவேல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ

700

   பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக

    எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்

701

   தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை

    யாதொன்றும் நோக்கா தமைந்திடுக-தீதென்ற

702

   பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்

    வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து.

703

உரை :

        நெஞ்சே, நீ துக்கம் சிறிதுமின்றி அப்பெருமக்கள் சங்கத்தில் நிலையாய் நின்று உள்ளம் மகிழ்ந்து நாடோறும் அங்கே அவர்களின் திருவடிகட்குச் செய்யத்தகும் குற்றவேல்களை ஆராய்ந்து செய்து, உயர்ந்த சிவத்துக்குரிய ஐந்தெழுத்தை ஒதற்கு வேண்டும் அருள் நாவாகக் கொண்டு, குறையாத அன்புடன் மானதமாய் ஓதித் திருவருட் செஞ்சோதியாகிய, தேன் பொருந்திய தும்பை மாலை சூடிய சிவத்தின் திருவடியில் ஒன்றியிருந்து, பிறிது யாதொன்றையும் நோக்காமல் அமைதி கொள்வாயாக; அதனால், தீதென்று சான்றோர்களால் உரைக்கப்படுகின்ற துன்பவாழ்வு சார்பின்றி நீங்குதலால், பதிவாழ்வடைந்து, எப்போதும் என்னோடு இன்பத்தில் மகிழ்ந்து வாழ்வாய், எ.று.


     “சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்துக” என்றது, சங்கத்திருப்பு இன்பம் காட்டி மகிழ்வுறுத்தும்; அது குறித்து அதனை வழிபடுக என அறிவுறுத்தவாறு, குற்றவேல் புரியுமிடத்தும், அறிவினால் ஆய்ந்து செய்தல் வேண்டும் என்றற்கு “ஆய்ந்தியற்றி” என அறிவிக்கின்றார். சிவ பஞ்சாட்சரம், சிவ எனத் தொடங்கும் திருவைந்தெழுத்து என்றுமாம். மந்தம் - உரை. மானதம் என்ற ஓதுமுறை மூன்றனுள் மானதமாய் ஓதுக என்றற்கு “எண்ணி” என்றும், எண்ணுமிடத்துத் திருவருளை நினைந்து மிக்க அன்புடன் என்ன வேண்டும் என்றற்கு “அருளே நாவாக எஞ்சாப் பரிவுடன் எண்ணி” எனவும் இசைக்கின்றார். “விதியென்னும் அஞ்செழுத்தே” என்றுதான் சிவஞான போதமும் தெரிவிக்கிறது. சிவனுக்குத் துன்பமாலையும் அமைந்ததாகலின் அதனை விதந்து கூறுகின்றார். பிறிது எதனையேனும் நோக்கியவழி நினைவு தடுமாறும்; அமைதி குலையுமென்றற்கு “மற்றை யாதொன்றும் நோக்கா தமைந்திடுக” என அறிவுறுத்துகின்றார். நிலைபேறின்றித் துன்பம் மிக்குள்ள வாழ்வாதல் பற்றிப் பசுபாச வாழ்வைத் “தீதென்ற பாழ்வாழ்வு” என்றும், அமைதி கொண்டவிடத்துப் பாழ்வாழ்வு சார்பின்றி நீங்குதலின், “பாழ்வாழ்வு நீங்க” என்றும், நிற்பது பதிவாழ்வாதலின் அதன்கண் என்னோடு என்றும். நிற்பது பதிவாழ்வாதலின் அதன்கண் என்னோடு என்றும் இன்பத்தோடு வாழ்வாய் என்றற்குப் “பதிவாழ்வில் எஞ்ஞான்றும் வாழ்வாய் என்னோடு மகிழ்ந்து” என்றும் அறிவுறுத்தி முடித்தருளுகின்றார்.