பக்கம் எண் :

சிவநேச வெண்பா

காப்பு

விநாயகர் துதி

நேரிசை வெண்பா

1966.

     முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
     சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே- என்னவனே
     சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
     தற்பரனே நின்தாள் சரண்.

உரை:

     எல்லாத் தேவர்கட்கும் முன்வைத்துப் பேசப்படுபவனே, யானையின் முகத்தையுடையவனே, முத்தி யின்பத்தின் நலங்களைச் சொன்னவனே, தூய மெய்யான சுகத்தையுடையவனே, மன்னவனே, அறிவான் மேலாயவனே, ஐந்து கைகளையுடையவனே, சிவந்த சடைமுடியை உடையவனே, தன் மயமாக வுள்ளவனே, உன் திருவடி எங்கட்கு காப்பிடமாகும், எ.று.

     முன்னவன் என்பது முன்னாகவுள்ளவன் என்று பொருள்படினும், யாவர்க்கு முன்னாகவுள்ளான் என்பது இனிதுபுலப்படத் தேவர்கட்கும், முனிவர்கட்கும் முன்வைத்துப் பேசப்படுவன் எனல் வேண்டியதாயிற்று. உமை பிடியானை வடிவும் தான் களிற்றுவடிவும் கொண்டு சிவபிரான் அடியவர் இடர் கெடுத்தல்வேண்டி வருவிக்கப்பட்டவனாதலால் “யானை முகத்தவன்” என்று தெரிவிக்கின்றார். முத்தின்கண நுகரப்படும் இன்பநலம் ஏனோர்க்குச் சொல்லவாராமையின், வாயாற் சொல்லிக் காட்டிய சிறப்புப்பற்றி விநாயகரை “முத்திநலம் சொன்னவன்” என மொழிகின்றார். பிறர்க்குண்டாகும் இடர் கடிந்து மெய்யான சுகம்பெறச் செய்வதும், இடரே படராத தூய மெய்ம்மைச் சுகத்தின்கண் தான் வீற்றிருப்பதும் உடையன் என்பது புலப்படத் “தூய்மெய்ச் சுகத்தவனே” எனச் சொல்லுகின்றார். காத்தற்றொழில் புரிதலின் “மன்னவனே” என்றும், ஞான வடிவுற்று மேலாய் விளங்குதலால் “சிற்பரனே” என்றும் செப்புகின்றார். துதிக்கையும் சடைமுடியும் உடைமைபற்றி “ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே” என்று பரவுகின்றார். சேகரம் - முடி. தற்பரன் - தனக்குத் தானே பரமாயவன் . அடைந்தாரைத் தாங்கி அருட்காவல் செய்வதுபற்றி “நின்தாள் சரண்” எனப் புகல்கின்றார். “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” எனச் சான்றோர் திருவடியைச் சிறப்பிப்பது காண்க.

     நின் திருவடியைச் சரண் புகுந்தேனாதலால், இடையூறு வாராமற் காப்பது நின்பரம் என்று விண்ணப்பித்தவாறு.