பக்கம் எண் :

நூல

நூல்

 

      1. மக்கள் அனைவரும் நாளும் யாதாயினும் ஒரு செயலைச் செய்கின்றார்கள். ஒன்றும் செய்யாதவர்களே யில்லை. செய்வினையின் பயன்தான் செயற்கு நல்லது தீயதென்று பெயரை நல்குகிறது. இத்தகைய செயலைச் செய்யும்போது செய்பவன் திறமை அறிஞர்களால் அறிந்து போற்றுதலோ தூற்றுதலோ செய்யப்படுகிறது. சுருங்கிய காலத்தில் பெருகிய பயன் தருமாறு செய்யும் திறமை பாராட்டப்படுகிறது. அவ்வியல்பிற் குறைவுடையது பாராட்டுப் பெறுவதில்லை; குற்றப்படுவது தூற்றப்படுகிறது. இத்திறமை பாராட்டற்குரியதாக வேண்டின் செய்பவனுக்குச் செயலிடத்தே அன்புண்டாக வேண்டும். அன்பு அவனது அறிவை யூக்குகிறது; அறிவு செயற்கு மேற்கூறிய சிறப்புக்களை நல்குகிறது. இறைவனைப் பரவுவதும் சிறந்ததொரு வினையாதலின், அதற்கும் இந்த அன்பு இன்றியமையாதது; அதனை நினைந்த வடலூர் வள்ளலார் “பரம்பொருளே, எனக்கு நின்னைப் பரவுவதில் அன்பு தோன்றினும் பாராவால் முடியுங்காறும் அஃது என் உள்ளத்தே நெடிது நிற்க அருள் செய்க” என எடுத்த எடுப்பிலேயே வேண்டுகின்றார். 

1967.

     வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
     நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
     முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
     புதல்வாநின் தாளென் புகல்.

உரை:

     தனிச் சிறப்புடையவனே, வேற்படையுடையவனே, மலைகளையிடமாகக் கொண்டவனே, விண்ணுலகை யுடையவனே, நெற்றியில் திருநீறுடையவனே, அன்பர்களின் நெஞ்சினைக் கோயிலாக் கொள்பவனே, ஞானமுரைக்கும் முதல்வனே, ஆறுமுகங்கள் உடையவனே, மூன்று கண் கொண்ட சிவனார் மகனே, நின் திருவடி எமக்குப் புகலிடமாம். எ.று.

     வீறு - பிறிதொன்றற்குமில்லாத சிறப்பு. சிவனுக்கு மாலும், திருமாலுக்குச் சக்கரமும் போல முருகனுக்கு வேல் படையாதல் பற்றி “வேலுடையாய்” என்றும், குறிஞ்சி நிலத்துக்குரிமை பூண்டமையின் “வெற்புடையாய்” என்றும் விளம்புகின்றார். தேவர் சேனாபதியாய் அவர் வாழும் மண்ணுலகைக் காத்தருளுவது கொண்டு “விண்ணுடையாய்” எனவுரைக்கின்றார். அருட்குருவாய் ஞானமருளும் பெருமானாதலின், அதற்கடையாளமாக நீறணியும் நீர்மையை விதந்து “நீறுடையாய்” எனவும், அன்புடையார் மனமே கோயிலாகக் கொள்ளும் அருள் நலம்பற்றி “நேயர்கள் தம் நெஞ்சுடையாய்” எனவும் இயம்புகின்றார். ஞானநூல்கள் முருகனை முதல்வனெனக் கூறுதலால், “கூறும் முதல்வா” என்று உரைக்கின்றார். முகம் ஆறுடையவன் என்பதும், அம் முகங்கள் சிவனது நெற்றிக் கண்ணிற் பிறந்த தீப்பொறி ஆறின் உருவமாம் என்பதும் நினைந்து, “ஆறுமுகவா முக்கண்ணன் புதல்வா” என்று மொழிகின்றார்.

     எடுத்த பணிக்கு இடையூறு உண்டாகாமற் காத்தல் வேண்டுமென்பார். “நின்தான் எம்புகல்” என வுரைக்கின்றார்.

     நூல் இடுக்கிணின்று இனிது முடியும்பொருட்டு கடவுளை வாழ்த்தும் மரபுபற்றி இவையிரண்டு பாட்டாலும் முறையே விநாயகரையும் சுப்ரமணியரையும் துதிக்கின்றார்.