பக்கம் எண் :

4

      4. உலகியல் வாழ்வின்கண் வேண்டுவன பல உளவாகின்றன. அவற்றிற்காக உழைக்குமிடத்து வேண்டாதன பல தோன்றுகின்றன. வேண்டுதல் வேண்டாமை யிரண்டாலும் மனம் வேதனையுற்று அமைதி யிழந்து விகாரம் எய்துகிறது. இதனை ஆராயுங்கால் உலக வாழ்வுக்கு அடிமைப்பட்டதே காரணம் என்றும், இறைவன் திருவடிக் காட்படும் வாழ்வு அமைதி சான்றதென்றும் தோன்றவே, “இறைவனே என்னை நினக்கு அடிமையாக்கிக் கொள்க என வேண்டுகின்றேன்; நின் திருவுள்ளம் யாது?” எனக் கேட்பாராய் இப்பாட்டைப் பாடுகின்றார். 

1971.

     வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
     நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
     எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
     உண்டோ இலையோ உரை.

உரை:

     உலகியற்பற்று விளைவிக்கும் விகாரமாகிய பேய்க்கு என் நெஞ்சைப் பறிகொடுத்து வெவ்விய கலக்கமுற்று நிற்கின்றேன்; எட்டுத் தோள்களையுடைய சிவபெருமானே, அஞ்சவேண்டா என்று சொல்லி என்னை அடிமை கொள்ளற்குத் திருவுள்ளம் உண்டோ இல்லையோ, உரைத்தருள்க. எ.று.

     சிவனுக்குத் தோள் எட்டென்பர்; “எட்டுக் கொலாம் அவர் தோள்” (ஒன்று கொலாம்) எனத் திருநாவுக்கரசர் முதலானோர் உரைத்தலின், வள்ளற்பெருமானும், “எண்டோள் இறையே” என்று இசைக்கின்றார். உலகியற் பற்றினால் மனத்திடை விளையும் விருப்பு வெறுப்புக்களால் மனமொழி மெய்களின் இயல்பு மாறுதலால், நினைவும் சொல்லும் செய்கையும் எய்தும் விகாரம் இங்கே 'பேய்' என்று குறிக்கப்படுகிறது. இவ் விகாரம் எங்கிருந்து எப்படி எவ்வாறு உளதாயிற் றென்றற்கு விளக்கம் புலப்படாமை பற்றி. இது “மாயாவிகாரம்” எனவும் வழங்கும். இதனால் மனம் நிலையின்றிப் பேய்பிடித்தாற் போல் அலைந்து துன்பம் எய்துவித்தல் பற்றிப் 'பேய்' என்றும், இதற்கு நெஞ்சைப் “பறிகொடுத்தேன் என்றும் வருந்தியுரைகின்றார். இதனால் உளவாகிய கலக்கமும் சுழற்சியும் வெஞ்சஞ்சலம் என்று குறிக்கப்படுகின்றன. துன்பமிகுதிபற்றி, “வெஞ்சஞ்சலம்” என்கின்றார். தம்மையறியாமல் பேய் கவரப்பட்டமையால், “பேய்க்குப் பறிகொடுத்தேன்” என்று பகர்கின்றார். கள்வர்க்குப் பொருள் பறிகொடுத்தவர் போல் நின்றொழிதல் தோன்ற, “பறிகொடுத்து நிற்கின்றேன்” என உரைக்கின்றார். அதனால் உளதாகிய அச்சமும் அவலமும் நீங்க அஞ்சல் என உரைத்தருளுக என்பார், “அஞ்சல் என” என்றும், சொல்லோடு நில்லாமல் அடிமைகொண்டு ஆதரித்தல் வேண்டும் என்பார் “அடிமை கொள” என்றும், நின் திருவுள்ளம் பற்றவேண்டும் என்பார் “அடிமை கொள” என்றும், நின் திருவுள்ளம் பற்றவேண்டும் என்பார் “மனம் உண்டோ இலையோ உரை” என்றும் உரைக்கின்றார். “திருவின் மிக்கோர் யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்” (தடுத். 37) என்று சேக்கிழார் பெருமான் கூறுதலின், அடிமை கொள்க என வேண்டல் இயல்பாயிற்று. அடிமை - இறைவன் திருவடியே நினைந்தொழுகும் தன்மை. திருவடியைத் தன்மனத்தே யுடையனாம் தன்மை என்றுமாம்.

     இதனாற் பேய்க்குப் பறிகொடுத்து நிற்கும் என் மனத்தை மீட்டு நினக்கு அடிமையாமாறு செய்க என வேண்டியவாறயிற்று.