பக்கம் எண் :

5

      5. உலகில் மக்களினம் சாதி,. இனம், நிறம் உடைமை முதலிய பலவற்றால் வேற்றுமையுற்றுப் போரும் பூசலும் செய்து துன்புறுவதைக் காண்கின்றார் வடலூர் வள்ளற் பெருமான். இந்நிலைமை ஏன் உண்டாயிற்றென எண்ணுகின்றார். மக்களிடையே நிலவும் இப்பிரிவும் பிணக்கும் இறைவனால் உண்டானவவல்ல; சாதி முதலியன உருவாக்கும் தளை என்று கண்டு இவற்றை யொழித்தற்கு இறைவன் துணை வேண்டும் என்று துணிகின்றார். அந்நிலையில் இப்பாட்டு உருவாகிறது.

 

1972.

     அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
     அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
     சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
     சோதிஉரு வாக்குந் துணை.

உரை:

     இந்நிலவுலகின்கண் சாதி குல வேறுபாடுகள் உண்டாக்குகின்ற கட்டுக்களை யறுத்துக் கலப்பற்ற தூய்மை மயமான சோதியினமென மக்களை உருவாக்குதற்குத் துணை நின் திருவடியன்றி வேறு யாதும் யாவரும் இல்லை; எனக்கு அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, அதற்குமேல் உன் திருவுள்ளம் யாதோ, அறியேன், எ.று.

     நாட்டில் சாதி குல வேறுபாடுகள் மக்களினத்தைத் தனித்தனியாகப் பிரித்து ஒன்றொடொன்று கலந்து உறவுகொண்டு ஒருமையுறாதவாறு சிதைப்பது நினைந்து வருந்துகின்றா ராதலால், “இப்பாரில் சாதியுருவாக்கும் தளை” என்று உரைக்கின்றார். சாதியின் பேரால் உண்டாகிய கட்டுப்பாடுகள் “சாதியுரு வாக்கும் தளை” எனப்படுகின்றன. அதனால் பிறர் துணை செய்தற்கு மனமில்லாமையும், துணைபெறற்கு அச்சமும் தோன்றி, மக்களினத்தை வறுமையிருளிற் கிடத்தித் துன்புறுவிப்பது கண்டு, கட்டுக்களை உடைத்தெறிக என்றற்குத் “தளையவிழ்த்து” என்று உரைக்கின்றார். சாதியுருவாக்கிய தடைகள் செயற்படாதவாறு கையையும் காலையும் கட்டி முடிந்தது போறலின் “தளை” யெனவும், “அவிழ்த்து” எனவும் கூறுகின்றார். “சாதி குலம் பிறப்பென்னும் சுழி” (கண்ட) என்பர் மணிவாசகர். படைப்புக் காலத்திருந்த இயற்கைத் தனித் தூய்மைநிலை இங்கே “தன்மயம்” எனப்படுகிறது. தன்னைச் சேர்ந்த பலவகைத் தூயவன்மைகளை எரித்துத் தூய ஒளியாக்கும் தீயின் சோதி போல, வேறுபாடத்தனையும் போக்கி அருட்சோதியினமென மக்களை ஒன்றுபடுத்தி ஒருமையுருவாக்க வேண்டும் என்ற கருத்துத் தோன்றத் “தன் மயமாம் சோதியுருவாக்குதல்” என்று சொல்லுகின்றார். இதற்குத் “தன் மயமாம் சோதியுருவாக்குதல்” என்று சொல்லுகின்றார். இதற்குத் துணை செய்யவல்லது மொழியுமன்று, சமயமுமன்று, அரசுமன்று, அரசியல் தலைவருமல்லர் என்றற்குத் “துணையார் கண்டாய்” என்றும், இறைவன் திருவடிதான் மக்கள் உள்ளத்தில் நின்று சாதியுருவாக்கும் தளையின் வேண்டாமையை யுணர்ந்து செயல் படுவிக்கவேண்டும் என்றற்கு “நின் தாளன்றி யார் கண்டாய்” என்றும் இயம்புகின்றார்.என் மனக்கருத்தை நின் திருமுன் உரைத்தேன்; நின் கருத்து அறியேன் மக்களிடையே வேறுபாடின்மையும், ஒன்றி வாழும் ஒருமை நிலையும் நிலைபெறவே பெற்றோர் விரும்புவர் என்ற குறிப்புப் புலப்பட, “எனக்கு அம்மைப்பா” என எடுத்தோதுகின்றார.

     இதனால், மக்களினத்தைச் சீர்குலைக்கும் “சாதியுருவாக்கும் தளைகள்” ஒழிதல் வேண்டுமென முறையிட்டவாறு.