பக்கம் எண் :

2.

    பரமேது வினைசெயும் பயனேது பதியேது
         பசுவேது பாச மேது
         பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது
         பாவ புண்ணியங்க ளேது
    வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை
         மனம்விரும் புணவுண்டு நல்
         வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
         மலர் சூடி விளையாடி மேற்
    கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரொடு
         கலந்து மகிழ்கின்ற சுகமே
         கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங்
         கயவரைக் கூடா தருள்
    தரமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
         தலமோங்கு கந்த வேளே
         தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     மேன்மை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, தூய மணிகளுட் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே, பரம் என்பது யாது? வினையாவது யாது? வினையின் பயன் என்பது யாது? பதி, பசு, பாசம் என்பன யாவை? பத்தியாவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது? அருள் என்பது யாது? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை; மனம் ஆசைப்படுகின்ற உணவையுண்டு, நல்ல ஆடை யுடுத்து இளமகளிரை நாடி யடைந்து மணம் வீசும் பூக்களைச் சூடிப் பல்வகையாக விளையாடி, கைகளை அம்மகளிர் மேற் செலுத்தி அவர்களுடைய முலையைப் பற்றி மெய்யொடு மெய் கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்; இதுவே வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாவாறு அருள் புரிவாயாக. எ. று.

     நம் பாரத நாட்டுச் சமயத்தவருள் பரம்பொருள் ஒன்று உண்டு என்பர் பலர்; அனைவரும் வினையுண்டு, வினைக்குப் பயன் உண்டு என்பர். சைவர்கள் பதி பசு பாசம் என மூன்று பொருள் உண்டு என்பர்; சமய நெறிகளில் பத்தி நெறி, யோக நெறி, கன்ம நெறி என்பன சிறந்தன; அவற்றுள் பத்தி நெறியினர், பத்தி பண்ணுவதே முத்திக்கு ஏதுவாம் என்பர்; யோக நெறியினர் யோக முயற்சியே முத்திக்கு ஏற்றதென்பர்; கன்ம நெறியினர் பாவ புண்ணிய மெனக் கன்மம் இரண்டாம் என்றும், பாவம் செய்பவர் நரகம் புகுந்து துன்புறுவ ரெனவும், புண்ணியம் செய்பவர் இந்திரன் முதலிய தேவர் பதம் எய்தி இன்புறுவர் எனவும் கூறிப் புராண வரலாறுகளைச் சான்று காட்டுவர். வேதநெறியாளராகிய வைதிகர் பல்வகை வேள்விகளைச் செய்து தேவர்களை வருவித்துச் சாகா வரம், இளமை குன்றாத வரம், போரில் வலி தேயாத வரம் முதலிய வரம் பெற்று இன்புறலாம் என்பர். அவர்கள் சமயக் கொள்கையை வள்ளற் பெருமான் “வரம்” என்ற பெயராற் குறிக்கின்றார். தவங்களாலும் விரதங்களாலும் வேண்டுவன வேண்டியவாறு பெறலாம் என்னும் தாபதரும் விரதிகளும் உண்டு. உலகாயதர் மண்ணுலக வாழ்வினும் வாழ்வு வேறே யில்லை; அவ்வாழ்விற் கண்டதே காட்சி; கொண்டதே கொள்கை; உண்பன உண்டு உடுப்பன வுடுத்து மகளிரை மருவி மகிழ்வதே வாழ்க்கையின் பயன் என்பர். அவர்களை, “மடமாதர் தமைக் கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் என்னும் கயவர்” என்று கூறுகிறார்.

     இதனால் உலகாயதராகிய கயவர் தொடர்பு உண்டாகாதவாறு காத்தருள வேண்டியவாறு.

     (2)