202. இரங்கா நின்றிங் கலைதருமிவ்
வெளியேன் கனவி னிடத்தேனும்
அரங்கா வரவின் நடித்தோனும்
அயனும் காண்டற் கரிதாய
உரங்கா முறுமா மயின்மேனின்
னுருவம் தரிசித் துவப்படையும்
வரங்கா தலித்தேன் றணிகைமலை
வாழ்வே இன்று வருவாயோ.
உரை: தணிகை மலைமேல் எழுந்தருளி அன்பர்க்குத் திருவருள் வாழ்வளிப்பவனே, காளிங்க னென்னும் பாம்பின் தலையை ஆடரங்காகக் கொண்டு கூத்தாடிய திருமாலும் பிரமனும் காண்பதற் கெட்டாத வலிமை மிக்க அழகிய மயில் மேல் அமர்ந்தருளும் நினது காட்சி கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிற நல்வரத்தை, நினைந்து வேட்கை மிக்கு இவ்வுலகில் அலைந்து வருந்தும் எளியனாகிய எனக்குக் கனவிலேனும் பெற்று இன்புற விரும்புகிறேன்; இப்பொழுது எழுந்தருள வேண்டுகிறேன், எ. று.
நன்பொருளைப் பெற ஆசை யுற்றவன் எளியவனாயின், பெறலருமை யறிந்த வழி இரக்கம் மிகுந்து ஏங்கி வருந்துவது இயல்பாதலால், “இரங்கா நின்று இங்கு அலைதரும் இவ்வெளியேன்” என்றும், அதனைக் கனவுப் போதிலும் காணாமை பற்றிக், “கனவி னிடத்தேனும்” என்றும், காட்சி யருமையைத் தெரிவித்தற்குத் திருமாலும் பிரமனும் காண மாட்டாமை தோன்ற, “அரங்கான் அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய” என்றும், அக்காட்சி மயில் மேல் தோன்றி விளங்கும் திறம் காட்டற்கு, “உரங் காமுறும் மாமயின் மேல் நின்னுருவம்” என்றும் விளக்குகின்றார். யமுனை யாற்றில் மடுவில் வாழ்ந்த காளிங்கன் என்னும் பெரும் பாம்பின் தலைமேல் நின்று திருமால் ஆடிய புராணச் செய்தியை, “அரங்கா அரவில் நடித்தோன்” எனக் கூறுகிறார். அரங்கு - ஆடரங்கு. பேராற்றலும் பெருவலியும் உடைய காமுறும் மாமயில்” என்கின்றார். மயின்மேல் எழுந்தருளும் இனிய காட்சி, காண்போர்க்கு மிக்க பேரின்பம் அளிப்பதாகலின், “மயில் மேல் நின்னுருவம் தரிசித்து உவப்படையும் வரம்” எனவும், புறக் கண்ணா லின்றேனும், கனவின் கண்ணேனும் பெற வருளென்பார், “கனவினிடத்தேனும்” எனவும், காட்சி யாசையாற் கையறவு பட்டேனை ஆதரிப்பது நின் பேரருளுக்கு ஒப்பதாகலான், “காதலித்தேன் இன்று வருவாய்” எனவும் வேண்டுகின்றார்.
இதனால், மயின்மேல் தோன்றும் இனிய காட்சி பெற்று இன்புறக் கனவிலேனும் அருளுக என வேண்டியவாறாம். (2)
|