203. வருவா யென்று நாடோறும்
வழிபார்த் திரங்கி மனம்தளர்ந்தேன்
கருவாய் பவனென் றெனைத்தள்ளக்
கருது வாயோ வன்றியருள்
உருவாய் வந்து தருவாயோ
தணிகா சலத்து ளுற்றமர்ந்த
ஒருவா வுன்றன் றிருவுளத்தை
உணரே னென்செய் துய்கேனே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் ஒப்பற்றவனே, எளியேன் முன் வந்தருள்வாய் என்று நாடோறும் வழிபார்த்து உள்ளம் குழைந்து மனம் சோர்ந்து விட்டேனாதலால், கருவிற் பட்டு மண்ணிற் பிறப்பவன் என்று கருதிப் புறம்பாகத் தள்ளிவிட நினைப்பாயோ? அல்லது திருவருட்டிருமேனி கொண்டு என் முன் போந்து காட்சி தருவாயோ? உனது திருவுள்ளத் தெண்ணம் இன்னதென உணர மாட்டேனாகின்றேன்; இதற்கு யான் என்ன செய்வேன், எ. று.
அசலம் - மலை. பேரருட் பெருமானாகிய நீ, எளியனாகிய என்பால் அன்புற்று இன்று வாராயாயினும் நாளை வந்து தோன்றி அருள் ஞானம் நல்குவாயென ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏக்கம் மிகுந்து மனமும் சோர்ந் தொழிந்தேன் என்பாராய், “வருவா யென்று நாடோறும் வழி பார்த்து இரங்கி மனத் தளர்ந்தேன்” என்று கூறுகின்றார். பிறந்திறந்து மாறும் மண்ணக மக்கள் கண்முன் தெய்வம் தோன்றுவதில்லை என்பது பற்றி, வாரார்போலும் என நினைவெழுந்தமையின், “கருவாய் பவன் என்று எனைத் தள்ளக் கருதுவாயோ” என வுரைக்கின்றார். ஏனை மக்களுக்கு உள்ளது போலாது தம்பால் அன்பு மிக்குப் பெருகியிருப்பதை யெண்ணித் திருவருளே திருமேனியாகக் கொண்டு வந்தருளலாம் என்ற வேட்கை மயக்கத்தால், “அருளுருவாய் வந்து தருவாயோ” எனக் கேட்கின்றார். தம் மனத்தின்கண் எழும் எண்ணங்களை நோக்கின வள்ளற் பெருமான், இனி, தணிகைப் பெருமான் திருவுள்ளம் யாதோ என நினைக்கின்றாராதலால், “உன்றன் திருவுளத்தை உணரேன்” என்றும், அதை மாற்றும் வன்மை தமக்கு இல்லாமை தெளிந்து உய்திப் பேற்றுக்கு வேறு வழியின்மை கண்டு, “என் செய்து உய்கேன்” என்றும் இயம்புகின்றார்; ஒருவன் - ஒப்பற்றவன்; “ஒருவ னென்னும் ஒருவன் காண்க” (அண்டப்) எனவும், “ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி” (போற்றி) எனவும் திருவாசகம் செப்புவது அறிக. கருவாய் பவன் - கருவாய்க் கிடந்து உருவுற்றுப் பிறப்பவன். பவன் - பிறப்பவன் எதுகை நோக்கிப் பகர வொற்றுத் தொக்கது.
இதனால் முருகனது அருட்டிருமேனி காண்டற் கெழுந்த வேட்கை மிகுதி தெரிவித்தவாறு. (3)
|