204. உய்யும் பொருட்டுன் திருப்புகழை
உரையே னந்தோ வுரைக்கடங்காப்
பொய்யும் களவு மழுக்காறும்
பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும் படிவந் தடர்த்தியமன்
இழுத்துப் பறிக்கி லென்னேயான்
செய்யும் வகையொன் றறியேனே
தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
உரை: தென்னகத்துத் திருத்தணிகையில் எழுந்தருளும் செழுஞ்சுடராகிய முருகப் பெருமானே, உய்தி பெறும் பொருட்டு உனது திருப்புகழை ஓதுவதை விடுத்துச் சொல்லி முடியாத பொய்யும் களவும் பொறாமையுமே பொருளாகக் கொண்டு வாழும் புலைத்தன்மை யுடையவனாகிய என்னை நிலத்தில் தளர்ந்து விழும்படிப் பற்றி நெருக்கி இழுத்து நமன் உயிரைக் கவருங்கால் யான் செய்யத்தக்கது யாது? ஒன்றும் அறியாமல் மயங்குகிறேன், காண், எ. று.
பிறந்தது முதல் இறக்கும் வரையில் பலவேறு துன்பங்கட்கு இரையாகி வருந்தும் பிறவிச் சூழலினின்றும் உய்தி பெறுதற்கு வழி முருகக் கடவுள் திருப்புகழை யோதுவது என்பர் சான்றோர்; அதனை யான் செய்யவில்லை என்பாராய், “உய்யும் பொருட்டு உன் திருப்புகழை உரையேன்” எனவும், பின்னைச் செய்தது என்னை எனவரும் வினாவுக்கு விடை கூறுவாராய்ப், பொய்யுரைப்பதும், களவு செய்வதும், பிறர் நலம் கண்டு பொறாமைப் படுவதும் செய்பொருளாகக் கருதிச் செய்துள்ளேன் எனவும் உரைக்கின்றார். இறுதிக் காலத்தில் இயமன் போந்து தன் கைப்பாசத்தால் வருந்தி நிலத்தில் விழுமாறு பிணித்து உயிரைக் கொண்டு போவன் எனப் புராணம் கூறுதலால், “எய்யும்படி வந்து அடர்த்து இயமன் இழுத்துப் பறிக்கில் என்னே நான் செய்யும் வகை” என்று கூறுகின்றார். எய்த்தல் - தளர்தல். அடர்த்தல் - நெருக்குதல். பறித்தல் - கவர்தல். உயிர் நீங்கும் காலத்தில் அறிவு செயலற்றொழிதலால், “செய்யும் வகை என்னே ஒன்றும் அறியேன்” என்று உரைக்கின்றார். செய்த குற்றம் நினைந்து வருந்துவது புலப்பட, “அந்தோ” என்கின்றார். நல்லோரைச் சிறப்பிப்பதும் தீயவரை வருத்துவதும் இயமன் செயல் என்ப.
இதனால், திருப்புகழை ஓதாமல் தீயன செய்த குற்றத்துக்காக இயமன் வருத்தி உயிரைக் கவர்ந்து செல்வன் என அஞ்சியவாறு. (4)
|