96
96. தம்முடைய அறிவிலாதல் மனத்திலாதல் திண்மையில்லையென வள்ளலார் எண்ணுவதோடு, இறைவன்
அதனைத் தமக்கு நல்கவில்லை எனவும் நினைக்கின்றார். காரணம் யாதெனச் சிந்தித்தவர், திண்மை
தருதற்கு இறைவன் திருவுள்ளம் இரங்கவில்லை என அறிகின்றார். அறிவாராய்ச்சி தொடர்கிறது. அறிவிலோ
மனத்திலோ திண்மையுண்டாயின், எல்லையில்லாத அளவில் வினைகள் தோன்றும்; பின்பு அவற்றை
யொடுக்க அண்டங்கள் அனைத்திலும் இடம் போதா என்று கருதிகின்றாய் என்ற கருத்துத் தோன்ற இப்
பாட்டைப் பாடுகின்றார்.
2063. திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
எத்தனையும் போதாமை என்று.
உரை: என்னைத் திண்ணியனாக்கி யருளுதற்கு நின் திருவுள்ளம் இரங்காமைக்குரிய காரணம் அடியேனுக்குச் சிறிது தெரிந்துவிட்டது; என்னையெனின், எண்ணும் இயல்புடைய நெஞ்சின்கண் உள்ள என்வினைகள் அத்தனையும் நீங்கி ஒடுங்குதற்கு அண்டங்கள் அத்தனையிலும் இடம் போதாமை என்பது. எ.று.
என்பாலுள்ள வினைத்தொகுதிகளை நீக்கியொடுக்குதற்கு அண்டங்கள் அத்தனையும் இடம் போதா என்பது கருத்து. ஒன்றிலும் நிலையாது காற்றாடிபோற் சுழலுதல்பற்றி என் நெஞ்சின்கண் திண்மையில்லை; அது சிறிது அருளுக என வேண்டினால் நின் சித்தம் இரங்குகிறதில்லை; அருளேயுருவாகிய நின் திருவுள்ளம் இரங்கியருளாமைக்குக் காரணம் யாதாகலாம் என எண்ணினமை கூறுவாராய், “திண்மை சற்று ஈந்திட நின் சித்தம் இரங்காதவண்ணம்” என எடுத்துரைக்கின்றார். திண்ணம்; ஈண்டு அறிவின் திண்மை மேற்று. திண்மை தந்து ஆண்டருளிய நலத்தை மணிவாசகனார், “திண்ணமே யாண்டாய் சிவப்புரத்தரசே, திருப்பெருந்துறையுறை சிவனே” (வாழா) என வுரைப்பது காண்க. அடிபரவும் எனக்குத் திண்மையருளினால், வல்வினைகள் எல்லையின்றிப் பெருகிவிடும்; பின்னர் அவற்றை யொடுக்குதற்கு அண்டங்கள் எண்ணிறந்தனவாயினும் இடம் போதாவாம் என்பது கருத்து என்றற்கு “என்வினைகள் இத்தனையும் நீங்கில் இருக்க அண்டம் எத்தனையும் போதாமை யென்று” என்று கூறுகின்றார். “என்றுஎன் கிளவியும் அதனோரற்றே” (தொல். சொல். இடை. 11) என்பதனால் என்று என்பது எனப் பெயர்ப்பொருண்மை கொண்டது. மாயாகாரிய வுலகமாகிய அண்டத்தில் மாயையிற்றோன்றிய கருவி கரணங்களைக் கொண்டு உயிர்களாற் படைக்கப்படுவனவாய வினைகட்கு மாயை இடமாமேயன்றித் திருவருள் ஆகாமையின், “அண்டம் அத்தனையும் போதாமை” என உரைத்தருளுகின்றார். 'சித்தம் திரும்பாத' என்றும் பாடம்.
இதனால், தன்பால் உள்ள வினைமிகுதி சுட்டிக் கூறியவாறு.
|