பக்கம் எண் :

102

      102. முடிந்த முடிபாக இறைவன்பால் முறையிடுகின்ற வள்ளலார்,. “பெருமானே நான் நின்னடிக்கே அடைக்கலம்; இவ்வுடலின் நீங்கி நின் திருவடி நீழலை யடையுங்காறும் நின் திருப்புகழைக் கேட்கும் சிறப்பே பெற அருள்க” என்று இப் பாட்டால் வேண்டிக் கொள்கின்றார்.

2069.

     இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
     அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
     நானினது தாணீழல் நண்ணுமட்டும் நின்னடியர்
     பானினது சீர்கேட்கப் பண்.

உரை:

     எனக்கு அப்பனாகிய பெருமானே, நின் திருவடிக்கண் அடைக்கலமாயினேனாதலால், இவ்வுலகில் யான் செய்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க; இப்பிறப்பில் நான் நின்னுடைய திருவடி நீழலையடையுங்காறும், நினக்கு அடியவர் பக்கல் நின்று நின் சீர்களையே கேட்டு இன்புறச் செய்தருள்க, எ.று.

     இத் திருவெண்பாவோடு இந்நூலை முடிக்கின்றாராதலால், முடிந்தது முடித்தலாக, “நான் நினது தாணீழல் நண்ணுமட்டும் நின்னடியார்பால் நினது சீர்கேட்கப் பண்” என்று தெரிவிக்கின்றார். இப்பார் - பிறந்து வாழும் இவ்வுலகு. பிறந்தவர் வாழும் வாழ்க்கையிடைப் பிழைகள் அனைத்தும் உண்டாதல் பற்றி, “இப் பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்தருள்” என்று புகல்கின்றார். பொறுத்தருளும்போது பெரியன வல்ல என்று சிலவற்றை விடுத்தலாகா தென்றற்கு, “எல்லாம்” எனக் கூறுகின்றார். எல்லாம் என்றது “எஞ்சாப் பொருட்டாயதோர் இடைச் சொல்” எனத் தொல்காப்பிய உரைகாரர் கூறுவர். கேடுறாது காக்கப்படுதற்குரிய பொருள் அடைக்கலம்; அதனை ஒத்தல் தோன்ற “அடைக்கலம் காண்” என்கின்றார். காண்; முன்னிலையசை. “இப் பாரில் நான்” என்ற விடத்து, இப்பார், இப்பிறப்பு என்பது தோன்ற நின்றது. வீடுபேறு எய்தும்வரை என்றற்கு, “தாணீழல் நண்ணுமட்டும்” என்று கூறுகின்றார். வீடுபேற்றின் மேல் வேண்டத்தக்கது யாதும் இல்லை என்பது குறிப்பு. சிவனடியார் மெய்ம்மையல்லது மொழியார் என்பது பற்றி “நின்னடியார் பால்” என்றும், சீர்களைக் குறைபடவும் மிகைபடவும் கூறாமையோடு கேட்போர் உள்ளம் மேன்மேலும் கேட்டற்கு விழையுமாறு உரைக்கும் உரை வல்லுநர் என்றற்கு, அவர்பால் “சீர்கேட்கப் பண்” என்றும் வேண்டுகின்றார். “எனைத்தானும் நல்லவை கேட்க” எனப் பெரியோர் கூறுதலால், “சீர் கேட்கப்பண்” என்றார் என்றும், அதனால் மீளாப் பிழைக்குரிய நினைவும் சொல்லும் செயலும் உளவாகா என்றும் குறிக்கின்றார்.

     இதனால், பிழை பொறுத்தருளுவதோடு நில்லாமல், மேற்கொண்டு அப் பிழை நிகழாவாறு காத்தற்கு அடியார் கூட்டமும் கேள்வியும் அருள வேண்டியவாறாம்.