பக்கம் எண் :

1

      1. “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்” என்று கூறுவர் அருணந்தி சிவனார். மகாதேவனாகிய பரம்பொருளையே நோக்கும் பான்மையரான வடலூர் வள்ளலார், அதன் பரமாந் தன்மையைக் காணப்படும் உலகிடை ஊடுருவிப் பார்க்கின்றார். உலகநிலை முழுதுமாய், அதன்கண் ஆங்காங்கு நிலவும் உயிர்களாய், உயிர்தோறும் அறிவுவிளக்கும் உயிரொளியாய், காணும் காட்சிக்குக் கலக்கம் உண்டு பண்ணாமல் காணப்படும் மேல் நிலைப் பொருளாய், பொருள்களின் உண்மையை யுள்ளவாறு காண்பதற்கு இன்றியமையாத மெய்ஞ்ஞானமாய்ப் பரம்பொருளைக் காண்கின்றார். அங்கே ஞான ஆகாசமாயும், அதற்குமேல் பரம ஆகாசமாயும் ஒரு நிலைதோன்றுகிறது. அதற்கு ஒப்புக்கூற ஒன்றும் இல்லாமை உணர்கின்றார். உணரும் அறிவின்கண் இன்பம் பிறக்கிறது. அதுவும் திரிபின்றி நிலைத்த காட்சி நல்குகிறது. நிலைபேற்றால் சத்தாயும், அறிவிற்படுதலால் சித்தாயும், இன்பம் சுரத்தலால் ஆனந்தமாயும் உணரப்படுவது தெரிந்து சச்சிதானந்த மயமானது என்று கூறுகிறார்.  

நூல்


 
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2071.

     உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
          உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகித்
     கலகநிலை அறியாத காட்சி ஆகிக்
          கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
     இலகுசிதா காசமதாய்ப் பரம காச
          இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
     அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
          தானந்த மயமாகி அமர்ந்த தேவே.

உரை:

      உலகமாய், உயிராய், உயிர்க்குயிராம் ஒளியாய், கலக மறியாத காட்சியாய், கதியாய், ஞானக்கண்ணாய், சிதாகாசமாய், பரமாகாசமாய்ச் சச்சிதானந்த மயமாய் அமர்ந்தவன் மகாதேவன் எ.று.

     உயிரறிவு தடைப்படும்போது உள்ளிருந்தே ஓர் உணவு தோன்றி ஒளி நல்கக் காண்கின்றோமன்றோ? அது பரம்பொருளின் அருட்செயல் என்பதுபற்றி 'உயிர்க்குயிராம் ஒளிதானாகி' என்று எடுத்துரைக்கின்றார். அவ்வொளியினைக் கண்டு ஆராயுமிடத்து ஆராய்ச்சி கலக்கமின்றி மெய்ம்மை காணச் செய்வதனால் அதனைக் 'கலக நிலை யறியாத காட்சி' என்று இயம்புகிறார். 'கதி' என்பது காட்சியின் முடிநிலை. இங்ஙனம் மெய்ம்மை காண்டற்கு அந்த ஞானவொளி கண்ணாய் நின்று காட்டுதல் பற்றி 'மெய்ஞ்ஞானக் கண்ணதாகி' என்றும், அவ்வழியே நின்று நோக்குங்கால் புறக்கண்களுக்குப் புலனாகும் பொருள் யாவும் உருவிழந்து அறிவு மயமாய் விளங்குதலால், 'இலகு சிதாகாசமதாய்' என்றும், இந்த அறிவு வெளியில் காணப்படாமை கண்டு, 'பரமாகாச இயல்பாகி' என்றும், அவ்வியல்பை அறியுமிடத்து இன்பம் தோன்றுவது கண்டு 'அறிவானந்தமாகி' என்றும் விளக்குகிறார்.

     (1)