பக்கம் எண் :

3

      3. மாதேவனே எல்லாமுமாக விரிந்து அமைந்து இயங்குகின்ற தன்மையினைத் தம்முடைய மெய்ஞ்ஞான சித்தியினாலே அறிந்துணர்ந்து வியப்புடன் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுப் பாடி மகிழ்கின்றார் வள்ளலார். இவற்றின் மேலாகச் சத்தாகியும் சித்தாகியும் இன்பமாகியும் அமையும் அவனுடைய சதானந்தப் பெருநிலையில் பெருநிலையிலே தம்மை இழந்து நின்று அதனை வியந்தும் எடுத்தோதிப் பரவுகின்றார். எவ்வுயிர்க்கும் சாட்சியாகி நிற்கும் பரம்பொருள் தன்மையினை நினைந்து, அதன் பெருங்கருணைத் திறத்தையும் வியந்து முத்தாகி மாணிக்கமாகி என்று சொல்லி மகிழ்கின்றார். எத்துணைத் தெய்வங்கள் பேசப்பட்டபோதும் அவற்றைப் போலாது முழுவயிரத் தனிமணியாய் முளைத்த பெருமானின் ஆதித்தன்மையையும் அகம் களிப்பப் பாடிப் பரவி ஏத்துகின்றார்.

2073.

     வித்தாகி முளையாகி விளைவ தாகி
          விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
     கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
          குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
     சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
          சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
     முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
          முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.

உரை:

     வித்தாகியும், அதனின்றும் எழுகின்ற முளையாகியும்., அதனிடத்தே விளைகின்ற விளைவாகியும், அப்படி விளைவிக்கும் பொருளாகியும், அதன் மேலும் ஆகியும், கொத்து பயன் அவற்றைக் கொள்வோன் என்றாகியும், குறைவு நிறைவு என விளங்கியும் தானே சத்தாகியும் சித்தாகியும் இன்பமாகியும் சதா நிலைபெற்றுள்ள சிறப்பினதாகியும், எவ்வுயிருக்கும் உள்ளிருந்து விளங்கும் சாட்சியாகியும், முத்து, மாணிக்கம் போன்ற நவமணிகளாகியும், தெய்வ முழுவயிரத் தனி மணியாய் முளைத்த தேவன். எ.று.

     சிவத்தினின்று சத்தி தோன்றிப் பின் பலப்பலவாக விரிந்து உலகத்துப் பொருள்களாக அமைந்து, உயிர்கள் வாழ்ந்து பலவகை அநுபவங்களையும் பெற்றுத் தெளிந்து முடிவிலே பரிபூரணத்தின் நினைவிலே சிந்தை செலுத்தி, மெய்ஞ்ஞானத்தை அறிந்து, சச்சிதானந்த போகத்திலே திளைப்பதற்கும் உதவி நிற்கின்றவன் மாதேவனே என்று அடிகள் எடுத்துக் கூறி வற்புறுத்துகின்றார். தெய்வங்கள் பலவாகப் பேசப்படினும் முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவன் அவனே எனவும் அவனது மூலமுதலாம் தன்மையைக் கூறுகின்றார்.

     (3)

.