4
4. இங்ஙனம் வேதாந்தம்
சித்தாந்தம் என்ற இருநெறியும் தாம் காணமாட்டா தொழியினும், பரம்பொருளின் உண்மையினை நன்கு
வற்புறுத்தும் மெய்ம்மையைக் கண்ட வடலூர் பெருமான், வேதாந்தம் சித்தாந்த நூல்களைப் புறக்கணிப்பதும்,
சித்தாந்தம் வேதாந்த நூல்களை வெறுப்பதும் நோக்குகின்றார். இரண்டையும் ஒப்ப நோக்கிய தாயுமானார்
போன்ற சான்றோர் இரண்டினையும் சமரசமாகக் கருதிச் சமரசமே மெய்யுணர்வுக்கு உண்மையான வாயிலென
உரைப்பதை மேற்கொண்டு, அந்நிலையினை வடலூர் அடிகள் வற்புறுத்துகின்றார்.
2074. வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
முதலாகி மனோதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
உரை: மகாதேவன், வேதாந்த நிலையாய், சித்தாந்த மெய்யாய், சமரச விவேகமாய், நாதாந்த வெளியாய், முத்தாந்த நடுவாய், நடுநிலைக்கு நண்ணாதாய், அண்ட கோடிகளைத் தாங்கி நிற்கும் முதலாய், மனாதீத முத்தியாய், சமய நெறிக்கு அமையாமல் மௌன வியோமத்திடை வயங்குகின்றான். எ.று.
'வேதாந்தம்' எனப்படும் உபநிடதங்கள் உரைக்கும் ஞானநிலை வேதாந்த நிலை எனப்படுகிறது. சித்தாந்தம், சிவகாமங்கள் உரைக்ககும் உண்மைகள். இவை மெய்ம்மை மாறாத இயல்பினவாகலின், 'சித்தாந்தத்தின் மெய்யாகி' என்று உரைக்கின்றார். கண்ணிரண்டும் ஒன்றையே நோக்குவது போல, ஒன்றாகிய பரம்பொருளையே இவை நோக்குதலை உணரவேண்டும் என்றற்குச் 'சமரசத்தின் விவேகம்' என்று இயம்புகின்றார். சித்தாந்தம் நாதாந்தம் என்றும், வேதாந்தம் பரவியோம நடுநிலை என்றும் வீட்டுநிலையை உரைப்பது பற்றி., 'நாதாந்த வெளியாகி முத்தாந்தத்தின் நடுவாகி' என்று இசைக்கின்றார். அருவம் உருவம் அருவுருவமாகும் ஒன்பது நிலையுமே தனக்கு உரிமையாகக் கொள்ளாமல் அவற்றையும் கடந்து போதலின், 'நவநிலைக்கு நண்ணாதாகிப் பரம்பொருள் இருக்கிற தென்கிறார். இத்தகைய பரம்பொருள், அண்ட கோடிகள் அனைத்துக்கும் அப்பாலாய் நின்று அவையனைத்தையும் நிலை பிறழாமல் தாங்கி நிற்பதெனப் புராண இதிகாசங்கள் உரைப்பதைச் சமரச விவேகத்தால் ஏற்குமாறு தோன்ற, மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற முதலாகி' என்று மொழிகின்றார். பொறிகளும் மனங்களும் காட்டும் பாச பசு ஞானங்களுக்கு அப்பால், பதிஞானத்தால் எய்தும் முத்தி நிலையை வற்புறுத்தற்கு, 'மனாதீத முத்தியாகி' என்றும், அளவை வகையாலும், தருக்க வாத வகையாலும் தெளியப்படாமை பற்றிக் கருவி கரணங்களைக் கழித்து மவுன நிலையில் இருந்து காணும் ஞானகாசத்தில் விளங்குமாறு தோன்ற, 'வாதாண்ட சமயநெறிக் கமையாது' என்றும் 'மவுன வியோமத்திடை வயங்கும்' என்றும் கூறுகின்றார். (4)
|