பக்கம் எண் :

7

      7. இனி வேதாந்திகள் கூறும் கருத்துக்களை ஆராய்கின்றார். வேதநெறி தத்துவக் கூறுகளைத் தொடக்கமாகக் கொண்டு படிப்படியாச் சிந்திக்கும் இயல்பினதாகையால், முன்னணியில் நிற்கும் இந்திரியங்களைக் காண்கின்றார். பின்பு மன முதலிய கரணங்களை நோக்குகின்றார். அவற்றிற்கு மேலாய் நின்று இந்திரியங்களும் நல்கும் பொருளை யுற்று அனுபவிக்கும் புருடதத்துவத்தைப் பார்க்கின்றார். புருடனுடைய நுகர்ச்சி காலதத்துவத்தின் வயப்பட்டு நிற்பது தெரிகிறது. காலம் என்னும் தத்துவம் நிலவும் பரதத்துவ்த்தையும், அதற்கப்பால் பரமும் அபரமுமாய் அண்டபிண்டம் அனைத்தையும் அடக்கி நிற்கும் விசுவத்தையும் உண்முகமாக ஆராய்ந்து உணர்கின்றார். அந்நிலை உபசாந்தமாய் வாக்கு மனம் கடந்து போதலின் மௌனநிலையும், மகா மௌன நிலையும் புலப்படக் காண்கின்றார். இந்திரியமுதல் மகாமௌனமாகிய நிலை ஈறாக உள்ள தத்துவக்கூறுகள் யாவும் பிரமப்பொருளின் கூறாய்த் தோன்றதலைக் காட்டி, இவற்றைக் கண்டும் தோய்ந்தும் நிற்கும் சீவனுக்கு ‘அது நீ ஆகிறாய்’ என்ற உபதேசக் கருத்தமைந்த ‘தத்துவமசி’ என்னும் மகாவாக்கியத்தைச் சிந்தித்து, அது தத்துவம் அசி என்று முப்பதமாய் விளங்குவது கண்டு பரம்பொருள் அப் பதங்கட்கும் பதப்பொருட்கும் அப்பால் இலங்குவது உணர்கின்றார்.

2077.

     இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
          இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
     பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
          பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
     வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
          மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
     அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
          அசிபதமாய் அதீதமாய் அமந்த தேவே.

உரை:

     இந்திரியங்களாய், கரணம் முதலிய அனைத்துமாய், புருடனாய், காலபரமாய், வியோமபரமாய், பரம்பரமாய், விசுவமுண்ட பான்மையாய், உபசாந்தமாய், மௌனமாய், மகாமௌனமாய், துவம்பதமாய், அது என்னும் பதமாய், அசிபதமாய், அதீதமாய் அமர்ந்தவன் தேவதேவன். எ.று.

     காணப்படும் பிரபஞ்சத்தை அறிவதும், அதன்கண் தங்கிச் செயல்புரிவதும் என்னும் இருவகைத் தொழிலையும் புரிவது தவிர, உடம்பொடு தோன்றிய உயிர்க்கு வேறு செயல் இல்லை; இவ்விரண்டிற்கும் அமைந்த உடலின் புறக்கருவி இந்திரியம். இந்திரியம், இந்தியம் என வந்தது. இது, ஞானேந்திரியம் கன்மேந்திரிய மென்ற இருவகைப்பட்டுப் பத்தாய் விரியும். கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐந்தும் அறி கருவி எனப்படும் ஞானேந்திரியம்; வாய், கை, கால், பாயுரு, உபத்தம் ஆகிய ஐந்தும் செயற்கருவி எனப்படும் கன்மேந்திரியம். இந்திரியம் தந்த அறிவுகளை உணர்வு வடிவாக்கி உயிர்க்குத் தருவது உட்கருவியாகிய கரணம்; அது மனம், சித்தம், அகம், புத்தி என நான்கு வகையாகும். சுகதுக்கங்களாகிய போக நுகர்ச்சிக்குரிய ஆன்ம பாவம் புருடதத்துவமாகும். காலம் கடந்த நிலை காலபரம்; இது வானவெளியில் நிலவெல்லைக்கு அப்பாலுள்ள கால நிலை. வியோமம் - காலபரமான ஆகாசவெளி. இதனை “வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” என்று சங்கச் சான்றோர் கூறுவர். வியோமபரம், அந்த நீத்தத்துக்கு அப்பாலுள்ளது. பரம்பரம்- மேன்மேலாய் உள்ளது. அண்டங்கள் அத்தனையும் தன்னுள் அடக்கி நிற்கும் பரம நிலை, விசுவமுண்ட நிலையாகும். சிவ ஞாயிறு நின்று திகழும் சிவாகாசம் உபசாந்தம். உணர்வு நிறைந்து உரைக்க வொண்ணாத நிலை மௌனம்; உணர்வும் செயலுமற்று ஒடுங்குநிலை மகாமௌனம். துவம்பதம், நீ என்னும் பொருளைக் குறிக்கும் சொல். ஆசி என்னும் பதம், சீவன் பிரமப் பொருளில் ஒடுங்குவதை உணர்த்தும் சொல். இந்த முழுப்பதங்களால் இயன்ற வாக்கியப் பொருட்கு அடங்காது மேம்படும் பரசிவநிலை, இங்கே அதீதம் எனக் காட்டப்படுகிறது.

     (7)