209. செய்வ துனது திருவடிக்காம்
திறனே சிந்தை நின்பாலே
வைவ துன்னை நினையாத
வஞ்ச கரையே வழுத்திநிதம்
உய்வ துனது திருநாமம்
ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வ தறியேன் திருத்தணிகை
எந்தாய் எந்தாய் எளியேனே.
உரை: திருத்தணிகையில் எழுந்தருளும் எந்தையே, எளியனாகிய யான் நின்னுடைய திருவடிக்காம் நினைவுகளையே கொள்கின்றது; உன்னை நினைப்பதில்லாத வஞ்சகர் கூட்டத்தையே யான் வைதுரைப்பது; உன்னுடைய திருப் பெயர்களில் ஒன்றை உறுதியாகப் பற்றிக் கொண்டு நாடோறும் வழிபட்டு ஓதுவது யான் உய்யும் வழியாகும்; வேறு எதனாலும் செய்வதறியாது கலங்குகிறேன், எ. று.
முருகப் பெருமானுடைய திருவடிகளைச் சிந்திப்பதினும் சிறப்புத் தரும் செயல் வேறு இல்லாமை பற்றிச் “சிந்தை செய்வது உனது திருவடிக்காம் திறனே” என்கின்றார். நினது திருவடிக்கு ஆளாகும் திறம் சிந்திப்பதாகிய நற்செயல் இன்றியமையாத தென்பதாம். வஞ்ச மனத்துப் படிறு உடையவரை வைதலால், அவர் செயலின்கண் “வெறுப்பு விளைந்து மனந் துயராக்குவது பற்றி, “உன்னை நினையாத வஞ்சகரையே வைவது” என வுரைக்கின்றார். முருகனுக்குரிய பன்னூறு பெயர்களில் ஒன்றை யுறுதியாகப் பற்றி இடையறாது ஓதுவது உய்யும் நெறியாவதால் “உனது திருநாமம் ஒன்றைப் பற்றி நிதம் வழுத்தி யுய்வது” எனவும், வேறு எந்நெறியையும் நன்னெறியாக அறிகின்றே னில்லை என்பாராய், “மற்றொன்றில் எய்வதறியேன்” எனவும் இயம்புகின்றார். எய்தல், ஈண்டு அறிவின் மேல் நின்றது.
இதனால், செய்வதும் உய்வதும் எய்வதும் விளங்கக் கண்ட திறம் உரைத்தவாறாம். (9)
|