40
40. மௌன வெளியில் சிவனது
திருவருட்காட்சி பெறும் சான்றோர் பெறும் அனுபவம் எங்ஙனம் இருக்குமென்று இங்கே, நம் மனத்தில்
ஒரு கேள்வி எழுகிறது. நமது இந்தக் கருத்தறிந்து உரைப்பது வடலூர் வள்ளலின் வள்ளன்மை. ஒருவர் பெற்ற
அனுபவத்தை வெளியிடுவதற்குச் சொல்லும், பொருளும், மன முதலிய கரணங்களும், உணர்வும்
கருவிகளாகும். சிவஞான இன்ப அனுபவம் இவையனைத்தினும் அப்பாற்பட்ட நிலையில் உள்ளது. அந்நிலையில்
அனுபவம் பெறும் அனுபூதிமான்களுக்கு இரவென்றும் பகலென்றும் காலக் கூறுபாடு இல்லை. இன்ப நுகர்ச்சியின்
இடையறாத நிலைமை தவிர வேறில்லை. அவரவர் நனவு, கனவு, சுழுத்தி, துரியம் என்ற நிலைகளைக் கடந்து,
அதற்கு அப்பாலான அத்தகைய அப் பெருமக்களின் வாழ்வாகும். இவ்வாழ்வைக் கருதாமல் வேறுவேறு
கொள்கைகளை மேற்கொண்டு தமது சொல்வன்மையால் மக்களிடையே பரப்பி, வேறு நெறிகளைக் காட்டும்
மதவாதியர் உண்டு. அந் நெறிகளை நடுநின்று ஆராயுங்கால் குறையுடையவாய் இருப்பது காணது, பலர் சென்று
நெல்லைவிட்டுப் பதர் கொள்ளும் செயலினராகின்றார்கள். அவர்கட்கு இச் சிவஞான இன்ப அனுபவம்
ஏற்புடையதாவதில்லை; இதுப்பற்றி யுரைப்பவையும் அவர் கருத்திற் புகுவதில்லை; அவர் நெஞ்சம் கல்லாய்ச்
சமைந்திருப்பது தான் இதற்குக் காரணம். அவரின் வேறாய் இருந்து கேட்கும் மெய்யுணர்வும் இறைவன்
திருவடியே நினையும் நெஞ்சமுமுடைய மெய்யடியார் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகிச் சிவபோகம்
கலந்து மகிழ்கின்றமை தெரிகிறது. அதனை அடிகளார் இனிதெடுத்து இயம்புகிறார்.
2110. சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
சேர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
உரை: ஆனந்த அனுபவமாய், அதீத வாழ்வாய், மெய்யடியார் இதயமெல்லாம் கலந்து இனிக்கின்ற கருணைத் தேவன் மகாதேவன் எ.று.
ஆனந்த அனுபவம் உரைக்கப்படுதலால், அதனை நேர்பட நுகர்பவர் எடுத்துரைத்தற்குரிய சொல் இல்லாமை தோன்றச் “சொல்லொழிய” என்றும், பொருள் உணர்வுக்கு அகப்படாதவழிச் சொல்லின்மையின், “பொருள் ஒழிய” என்றும் கூறுகிறார். ஏனெனில் சொல்லெல்லாம் பொருள்மேல் நிற்பவை. நுகர்ச்சிக்கு அகப்பட்டது உணர்வுக்கு அகப்படாது போதற்கு இடமின்மையின், ஈண்டு உணர்வு செல்லாமைக்குக் காரணம் கூறுவாராய், உணர்ச்சி வாயிலாகிய மனமுதலிய கரணங்கள் அனுபவத்திற் கலந்து செயலற்றமை விளங்க, “கரணமெல்லாம் சோர்ந்தொழிய” என்றும், கரணங்கள் அனுபவப் பேற்றுக்காகச் சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து “ஒன்றி” னமையால், உணர்வும் செயலற்றுது என்றற்கு “உணர்வு ஒழிய” என்றும் உரைக்கின்றார். ஆனந்தானுபவத்தில் ஆன்ம சிற்சத்தி துள்ளித் துளங்குதலால், அமைதின்றிக் காலவரம்பு கழிவது உணரப்படாமை காட்டற்குத் “துளங்கா நின்ற அல்லொழியப் பகல் ஒழிய” என்றும், இவையாவும் இவ்வாறு செயலற்றொழிய, ஞானானந்தம் நடுநின்று துளக்கமின்றி இனிமை சுரந்தவண்ண மிருக்குமாறு கூறுவராய், “ஆனந்த அனுபவமே” என்றும் இசைக்கின்றார். கரணமும் உணர்வும் ஒழிந்த இடம் “அதீதம்” எனப்படும். இதனைச் சாக்கிராதீதம் என்று நூல்கள் கூறுகின்றன. இதன் இயல்பைப்
“பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவலாமைச் சொற்பெறும் அதீதம் வந்து தோன்றுமே தோன்றி நின்ற சிற்பரம் அதனால் உள்ளச் செயல் அறுத்திட உதிக்கும் தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதம் தானே”
என்று சிவப்பிரகாசம் தெரிவிப்பது காண்க. இதனால் சிவானந்தானுபவம் நிகழும் இடம் சாக்கிராதீதம் என்று குறிக்கவே, “அதீத வாழ்வே” என்று வள்ளலார் உரைக்கின்றார். இத்தகைய ஆனந்தானுபவத்தைப் பேற்றுக்கு நெறிகாட்டாது, வேறு வேறு கூறும் சமயநெறி நிற்பாரை, “இன்ப நிறை யொழியக் குறைகொள் மத நெறியோர்” என்று இயம்புகிறார். குறைவு குறையென வருவதுபோல, நிறைவு நிறையென வந்தது. அவர் முயற்சி பயனில் செயல் என்றற்கு, “நெல்லொழியப் பதர் கொள்வார் போல” என்றும், மெய்ந்நெறியை எத்துணைக் கூரிய சீரிய சொற்களால் உரைப்பினும், அவர் நெஞ்சிற் புகுதாமை பற்றி, “நெஞ்சக் கல்லொழிய” என்றும் கூறுகிறார். ஈண்டுக் கூறப்படும் “ஆனந்த அனுபவ அதீத வாழ்வு” பெறுபவர் மெய்யடியார் என்றும், அவரது இதயமுழுதும் கலந்து சிவானந்தம் பாய்ந்து இனிக்கின்றது என்றும் கூறுகின்றார். மெய்யுணர்ந்தோர் என்னாமல் மெய்யடியார் என்று வள்ளலாய் வாய் மலர்கின்றார்; அதற்குக் காரணம் உண்மையுணர்வால் சிவபரம்பொருளின் திரவடியின்றிச் சார்பாவது பிறிதில்லாமை உணர்ந்து, திருவடி ஞானமே சிறந்து, அதனைச் சிந்தையிற் கொண்டு இடையறாது சிந்திக்கும் சான்றோர் என்று அறிவிப்பது. 'பற்றற்றான் பற்று' எனத் திருவள்ளுவர் உரைத்தது இத் திருவடி ஞானமாகும். உயிர்கள் சிவத்தைப் பற்றுதற்குப் பற்றுக்கோடாகும் பான்மையுடையது என அறிதல் வேண்டும். (40)
|