பக்கம் எண் :

41

      41. பராசத்தி, இறைவனுக்கு மூவகைச் சத்தியாய் விரிந்து மூவகைத் திருமேனி நல்க, அவற்றை இறைவன் மேற்கொண்டு ஆன்மாக்களின் தற்போத நிவிர்த்தி குறித்து உலகைப் படைத்தல் முதல் மூவகைத் தொழிலும், உயிர்கட்கு மறைத்தல் அருளால் ஆகிய இருவகைத் தொழிலும் புரிந்து அருள்நிலையத்தில் வீற்றிருக்கும் திறத்தை வடலூர் வள்ளல் வகுத்துக் கண்டு இறைவனை வாழ்த்துகின்றார்.

 

2111.

     அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
          அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
     நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
          நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
     தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
          தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
     மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
          வழித்துணையே விழித்துணையும் மணியாம் தேவே.

உரை:

      கடல், பூமி, அனல், கால், நீர், அந்தரம், அகிலாண்டம் யாவும் நிலை குலையாதவாறு அருள்வெளியில் நிரை நிரையா நிறுத்தி உயிர்கள் நிகழும்வண்ணம் தத்துவம் செய் திரோதை என்னும், ஆணை நடத்தி, அருள் தலத்தில் வீற்றிருந்தருளும் அரசும், முத்தி வழித்துணையும், விழிக்கு உள்துணையாம் மணியுமாகியவன் மகாதேவன். எ.று.

     கடலும் நிலமும் நெருப்பும் காற்றும் வானுமாகிய ஐந்துமேயன்றி ஏனை அண்டங்களும் நிலைகுலையாமல் நிறுத்தினன்றி உயிர் வாழ்வு செம்மையுறாமைபற்றி, இறைவனது அருட்சத்தியாகலின், அதனை அருள் வெளியினூடு நிரை நிரையா நிறுத்தியதை முதற்கண் மொழிகின்றார். உலகியல் அனுபவ ஞானம் பெருகுதல் வேண்டி மறைத்தலும், பெறுதல் வேண்டி விளக்குதலும் செய்வது திரோதான சத்தியாதலால் அதனைத் 'திரோதை என்னும் தனி ஆணை' எனவும் அதனை முறைப்படச் செலுத்தும் அருளரசன் இறைவன் என்றற்கு, 'தனியாணை நடத்தி அருள் தலத்தில் என்றும் வீற்றிருந்தருளும் அரசே' எனவும் கூறுகின்றார். உலகியல் வாழ்வு, முத்தி பெறுதற்கு வாயிலாதலால், 'முத்தி வழித்துணை' என்கிறார். வாழ்வில் அறிவுப் பேற்றுக்குரிய மானதக்காட்சி, யோகக்காட்சி, தன்வேதனைத் காட்சிகட்கு அடிப்படையான வாயிற்காட்சிக்கு இன்றியமையாமையின், 'விழித்துணையுள் மணியாம் தேவே' என்று விளக்குகின்றார். இறைவனுக்கு அருட்சத்தி ஆணையாவதை மெய்கண்டாரும் 'ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே' என்பது காண்க..

     (41)