43
43. இங்ஙனம் சிவஞானப் பேரின்பத்தில்
திளைக்கின்ற பெருமக்களைக் காணும் வடலூர் வள்ளல் ஞானம் வழங்கும் ஆசிரிய முதல்வனாகிய
பெருமானை நினைக்கின்றார். முன்னிலையில் மக்களில் ஒருவனாகக் காட்சி தருவது ஒருபுறம் இருக்கப்
பழுத்த ஞானிகட்கு அறிவுக்கறிவாய் மன்னி ஞானம் அருளும் திறத்தை எண்ணி எண்ணி மகிழ்கின்றார்.
சிவபரம் பொருளைக் கண்டார் வேட்கை கொண்டார் விரும்பிப் போற்றும் வேதங்களை நோக்குகின்றார்.
வேதாகமங்களின் நுண்பொருளை உணர்த்தும் முதல் ஆசிரியர் சிவன் எனச் சான்றோர் உரைப்பதை நினைக்கின்றார்.
வேதங்களை ஓதி உணர்ந்தவர்கள், அண்டமே யுடம்பாய், உடம்பெலாம் கண்ணாய் நோக்கினும், பரம்பொருளை
அணுவளவும் காண முடியாது எனக் கூறுகின்றனர்; காணமுடியாமையால் வேதங்கள் ஓலமிட்டுப் புலம்புவதையும்
நினைக்கின்றார்; பரமனும் உண்மை ஞானிகளின் மோனக் காட்சியாகிய பரவெளியில் அவ்வெளியேயாய்
நிறைந்து விளங்குவதை எண்ணுகின்றார். கண்டமும் அகண்டமுமாகிய பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து
உயிர்கட்கு அருள் வழங்கும் பரமசிவத்தின் அருள் நிலை புலனாகிறது. அதனை எய்துதற்குரிய
கருவிகளோடு கூடிநின்றும் பாச உலகியற் கட்டிலிருந்து விடுபடமுடியாமல் துன்புறு உயிர்கட்கும் அறிவொளி
காட்டி, உய்தி பெறுவிக்கும் ஞானகுரவனாய்ச் சிவஞானம் வழங்கும் அருளாசிரியனாய், ஆன்மா அலமரல்
இன்றிச் சாந்தநிலை மேவி இன்புறச் செய்வதை எண்ணி உவகை மிகுகின்றார்.
2113. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
கணுத்துணையுங் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
உரை: வேதம் காண்டல் கூடா என்று ஓலமிட்டுப் புலம்ப, மோன வெளிக்குள் வெளியாய் விளங்குகிற ஒன்றாய். கண்டவடிவாய், அகண்டமயமாய் எங்கும் நின்ற கருணைக் கடவுளாய், சின்மயத்தைக் காட்டும் சற்குருவாய், சிவகுருவாய்ச் சாந்தமயமாய் உள்ளவன் மகாதேவன். எ.று.
பரம்பொருளைக் காண்பார்க்கு கண்கள் இரண்டே இருத்தல் அமையாது என்று கருதுபவர் உண்டென்பாரும் உளர்; அவர்களை மறுக்கு முகத்தால், வேதங்கள், இரண்டுக்குமேல் எண்ணிறந்தன இருந்தாலும் காண்டல் இயலாது என்கின்றன என்பாராய் “அண்டமெலாம் கண்ணாகக்கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடாதென்று வேதம் புலம்ப” என்றார். சீதையின் மேனிநலம் கண்ட மண்ணக மகளிர் “இமையா நாட்டம் பெற்றிலம்” என்ன, இமையவர் மகளிர் அது கேட்டு “இருவிழியும் அமையா” என்றார் எனக் கம்பர் கூறுவது இங்கே நினைவு கூரத்தக்கது. இவ்வாறு கூறும் வேதம் ஒன்றிரண்டு அல்ல, பல என்றற்கு, “அனந்த வேதம்” என்று உரைக்கின்றார். ஞானிகளால் ஓதப்பெறும் ஞானப் பெருமையுடையேமாக இருந்தும், ஞானமுதலாகிய பரம்பொருளைக் காண முடியவில்லையே என்ற நிலைமை நோக்கி, வாய்விட்டு அலறி ஓலமிட்டுப் புலம்புகின்றன என்றற்கு, அனந்த வேதங்களூம் ஒருமுகமாக விண்டும் அலறியும். ஓலமிட்டும் புலம்புகின்றன என்று கூறுகின்றார். ஓலமிட்டுக் காண முயலும் தமக்குப் புலப்படாது மோனநிலையில் இருக்கும் மேலோர்க்கு அரனருள் மோனவெளியில் வெளியாய் நிறைந்து விளங்குவது வேதங்கள் அயர்தற்கு ஏது என இதனால் குறிக்கப்படுகின்றது. மோனவெளிக்குள் நிறைந்த வெளியாய் ஒன்றாய் விளங்கும் பரம்பொருள் மோனக் காட்சியளவாய் நிற்கும்போது கண்டமாய், ஆங்குத் தோன்றும் பரவெளி முற்றும் நிறைந்து விளங்குங்கால் அகண்டமாய், மேல்கீழ் நடு என்ற நிலைதோறும் நிலையில் உள்ள பொருள்தோறும் கலந்து நிற்பதும், அவ்வாறு நிற்றற்கு காரணம் அதன் பெருங்கருணையே என்பதும் விளங்க, “எங்கும் கலந்து நின்ற பெருங்கருணைக் கடவுளே” என்று இயம்புகின்றார். தனது பெருங்கருணையால் எங்கும் கலந்து நிற்கவும், காணமாட்டாது பிணித்துத் தடுக்கும் வினைச்சார்வு நீங்குதற்பொருட்டு, அதனை விளைவித்து அறயாமையைச் செய்யும் மலவிருளைப் போக்குதற்கு ஞான வொளியைக் காட்டுதலின் இன்றியமையாமை குறித்துச் “சண்டவினைத் தொடக்கறச் சின்மயத்தைக் காட்டும் சற்குருவே” என்று அறிவிக்கின்றார். அறியாமை நீக்கி அறிவு தந்து உய்விப்பவன் குரு. வினையால் அசத்து விளைதலால், அவ்வாசத்தைப் போக்கிச் சற்தாகிய ஞானம் நல்குமாறு தோன்ற. “சின்மயம் காட்டும் சற்குருவே” என்றும், சின்மயம் காட்டுதலால் ஆன்மாச் சின்மயனாகிச் சிவமாந்தன்மை எய்துவதை உரைத்தற்குச் சிவகுருவே என்றும் செப்புகின்றார். சிவமாந்தன்மை எய்திய உயிர் சாந்தி எனப்படும் பெருநிலை கண்டு பேரின்பம் பெறுவது பற்றிச் “சாந்தத் தேவே” என்று சாற்றுகின்றார். (43)
|