213. வாரா விருந்த அடியவர்தம்
மனத்தில் ஒளிரும் மாமணியே
ஆரா வமுதே தணிகைமலை
யரசே யுன்ற னாறெழுத்தை
ஓரா மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஏரார் செல்வப் பெருக்கிகவா
இடும்பை யொன்று மிகந்திடுமே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் அருளரசே, வந்திருந்து வழி பட்டிருக்கும் அடியவர் மனத்தின்கண் ஞான வொளி திகழும் பெரிய மாணிக்க மணி போல்பவனே, உண்ணப்படாத ஞானாமிர்தமே, உனக்குரிய ஆறெழுத்தை ஓதும் நெறியைச் சிந்தித்து மானதமாய் உச்சரித்து உயர்ந்ததாகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டால் அழகிய செல்வ மிகுதி கெடாது; துன்ப மெதுவும் நீங்கி விடும், எ. று.
வாரா, ஓரா என்பன செய்யா வென்னும் வினை யெச்சங்கள் தணிகைப் பதிக்குப் போந்து வழிபட்டிருக்கும் அடியார்களை, “வாராவிருந்த அடியவர்” என்று குறிக்கின்றார். செம்மை நிறமுடைய திருமேனி கொண்டவனாதலின் முருகனை, “மாமணியே” எனவும், உண்ணப்படாத ஞான வமுதம் என்பது தோன்ற, “ஆராவமுதே” எனவும் இயம்புகின்றார். மனத்தின்கட் சிந்திப்பதை, “மானதம்” என்பர். ஏர்- அழகு; பெருமிதமுமாம். இகத்தல் - நீங்குதல். இடும்பை - துன்பம்.
இதனால் ஆறெழுத்து மந்திரத்தை மானதமாக ஓதுபவர்க்குச் செல்வம் பெருகும்; துன்ப மொழியு மென்பதாம். (3)
|