97
97. வாழ்வில் நாம் நினைப்பதெல்லாம் நினைக்கின்றபடி நிகழ்வதில்லை.
இதனை நம் நாட்டவர் மாத்திரமன்று, உலக நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் உரைக்கின்றனர்.
ஏன் நடப்பதில்லை என்று எண்ணினோர் பலரும் “நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்”
என்று முடிவுக்கு வந்துள்ளனர். தெய்வவுணர்வு புகுந்ததும் காரணகாரிய ஆராய்ச்சி நின்றுவிடுகிறது. ஆராய்ச்சி
வேட்கையும் தணிந்து விடுகிறது. நமக்கு உதவி செய்வதே பண்பாகவுடைய தெய்வம் வேறு நினைப்பானேன்
என்ற எண்ணம் பலர் உள்ளத்தில் எழவில்லை; எழுவதும் இல்லை; மிகச்சிறந்து சான்றோர் சிலர்
எண்ணியுள்ளனர்; அவருள் திருவள்ளுவப் பெருமான் தலையாயவர், ‘எண்ணிய எண்ணியாங்கு எய்தும்; எண்ணுவோர்
திண்ணியராதல் வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். எண்ணியாங்கு எய்தும் என்பது, தெய்வமும் வேறு
நினையாமல் துணை செய்யும் என்று கருத்தையும் தோற்றுவிக்கிறது. எனவே எண்ணுவோர் திண்ணியராதல்
வேண்டும் என்றும் தெளிகின்றோம். திண்ணியராவது என்றால் எத்தனை இடையூறும் துன்பமும் வரினும்
மனம் சலியாது உழைப்பும் முயற்சியும் உடையராவதாகும். சலியா உழைப்புக்குச் சமயநூல் ‘தவம்’ என்று
பெயர் குறிக்கிறது. உலக வழக்கிலும் அரிய பொருள் ஒன்றை அரும்பாடுபட்டு ஒருவன் பெறுவானாயின்,
“அதனைப் பெறுவதற்கு அவன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தான்” என்று கூறுகின்றார்கள்.
ஆகவே, தவத்தால் (சலியாவுழைப்பால்) எண்ணியது எண்ணியாங்கு எய்தலாம் என்பது தெரிகிறது. திருவள்ளுவரும்
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்” என்று உரைக்கின்றார். ஆகவே திண்மையும்
தவமும் (சலியா முயற்சி), தெய்வம் வேறு நினைக்கினும் அதனைப் புறகணித்து நினைப்பது நினைக்குமாறே
முடித்துத்தரும் என்பது உறுதியாகிறது. இக்கருத்தெல்லாம் புலப்படுத்தற்கே, “தெய்வத்தால் ஆகாதெனினும்
முயற்சி தன் மெய் வருந்தக் கூலிதரும்” என்றும், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது
உஞற்றுபவர்” என்றும் திருவள்ளுவர் ஆங்காங்கு உரைத்துள்ளார். உலைவின்றித் தாழாது உஞற்றுவதுதான்
தவம்; இதனை வினையாண்மை தாளாண்மை ஆள்வினையுடைமை என்றன்றோ திருவள்ளுவர் கூறுகின்றார் எனின்,
அவ்வாறு அவர் வேறு சொற்களாற் கூறுவது மேற்கொண்ட வினைக்கண் முயற்சி கடைபோக நிகழவேண்டும்;
இடையூறும் இடுக்கணும் நோக்கலாகாது, அவற்றைச் செய்யும் உயிர்களைப் பொருளாக மதிக்கலாகாது என்றற்கேயாகும்.
தவமும் இவ்வியல்பிற்றே யாயினும், இடைபுகுந்து ஊறுசெய்யும் உயிர்கட்குத் தீங்கு செய்யாமையை ஒரு
கூறாகக் கொண்டுளது. தாளாண்மையும் ஊன் உயிர்கட்குத் ஊறு செய்யாமையும் கலந்துவிடின் தவமாம்.
ஆகவே திண்மையும் தவமும் உடையார் எண்ணிய எண்ணியாங்கும், வேண்டிய வேண்டியாங்கும் எய்தலாம்
என்பதாயிற்று.
எண்ணிய எண்ணியாங்கு எய்தும்போதும், வேண்டி வேண்டியாங்குப் பெறும்போதும் மனநிலை மாறாலாகாது.
எய்துங்காறும் உழைப்பின்கண் உறைப்புண்டிருந்த மனம் எய்தியதும் நெகிழ்கிற எய்தும்; நெகிழும்போது
செருக்கும் பிரிவுமாகிய குற்றங்கள் புகுந்துவிடும். வினைக்கண் வெற்றியுண்டாதற்குத் துணைபுரிந்தாருள்
வேற்றுமை காணும் நெறிபுகுந்து வேறுபடுத்தும். துணைவரையே வேறுபடக் காணச் செய்யும் எனின், பிறரை
இகழ்தற்கும் இடம் அமைந்துவிடும் “வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர்” எனத் திருவள்ளுவர்
எடுத்துரைப்பது காணலாம்.
இத்தகைய குற்றம் தம்பால் உண்டானதாக வடலூர் அடிகள் உரைக்கின்றார். பிறர்க்கென
முயலும் பெருந்தகையாதலால் பலர்பால் உளதாய இப் பிழை தம்பால் உண்டானதாக ஏறட்டுக்கொள்கிறார்.
பிறர் செய்த குற்றத்துக்காகக் காந்தியடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டதை நாம் கண்கூடாகக்
கண்டோமன்றோ? இறைவன் திருவடிகளில் உறைத்த மனமுடையனாகியதால், எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்
என்ற நினைவு தோன்றியதும் நெஞ்சின்கண் செருக்கும் இறுமாப்பும் சேரத் தோன்றிவிட்டன. தம்மை
அணுகிய நன்மக்களை மதியாமல் இகழ்ந்தும் பொருந்தாத சொற்களைப் பேசியும் குற்றப்பட்டதை நினைக்கின்றார்.
குற்றத்தின் தன்மையை நோக்குகின்றார். அவற்றுள் பொறுக்கத் தகுவனவும் ஒறுக்கத் தகுவனவும் உண்டு.
ஒறுக்கத் தகுவதெனக் கருதிக் தன்னை வெறுத்துக் கைவிடுவானாயின், தனக்குப் போக்கிடம் இல்லை.
வேறு செயல் வகையும் இல்லை என்று அறிகின்றார்; இறைவனிடம் முறையிடுகின்றார்.
2167. எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
எம்பெருமான் என்றுமகிழ்ந் திருமாந் திங்கே
நண்ணியமற் றையர் தம்மை உறாமை பேசி
நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
தாண்டவஞ்செய் கின்ற பெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
உரை: மன்றுள் நின்ற எம்பொருமான் எண்ணிய யாவையும் முடித்தருளுவான் என்று மகிழ்ந்து, இறுமாந்து, மற்றவர்களை உறாமை பேசி மதியாதிருந்த நாயினேன் பிழைகுறித்துக் கைவிடுவையாயின், அருட்கடலே, பெருந்தகையே, புண்ணியனே, எங்கே சென்று என் செய்வேன்? எ.று.
எண்ணியவை எண்ணியவாறு எய்துவதில்லை; 'நாம் ஒன்று நினைக்கத்தெய்வம் ஒன்று நினைக்கும்' என உலகவர் கூறுவது நன்கறிந்தவராயினம், தெய்வம் துணைபுரியின் எல்லாம் செயல்கூடும் என்று திண்ணிய நெஞ்சினர் நம் வடலூர் அடிகள். “மேலும், “வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னை” (நாவுக். ஆலவாய்) எனச் சான்றோர் அறிவிப்பது அவர்க்கு ஊக்கம் மிகுவிக்கிறது. எல்லாம் கைகூடியது போலும் உணர்வு தோன்றி மகிழ்ச்சி நல்கவும், சிந்தை நெகிழ்ந்து செருக்கு முதலிய புகுந்து பிழை செய்வித்ததை எண்ணுகின்றாராதலால், “எண்ணிய நம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள் எம்பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து” என்று கூறுகின்றார். இறுமாப்பு, இங்கே செருக்கின்மேல் நின்றது. இதனால் விளைந்த குற்றம் இது என உரைக்கலுற்ற, “நண்ணிய மற்றையர் தம்மை உறாமைபேசி நன்கு மதியாது இருந்த நாயினேன்” என எடுத்துரைக்கின்றார். உறுவது தக்கது; இதன் மறுதலை உறாமை; பெறுவதும் பெறாமையும்போல. “திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உரைப்பனாய்த் திரிவேன்” என்று நம்பி ஆருரரும், (வடதிருமுல்லை 1) “தனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேன்” (நீத்தல். 38) என்றும், புலையனேனையும் பொருளென நினைந்து உன் அருள் புரிந்தனை புரிதலும்; களித்துத் தலையினால் நடந்ததேன் விடைப்பாகா” (செத்தி. 3) என்றும், மணிவாசகரும் உரைப்பது காண்கின்றோம். இக் குற்றம் பொறாது வெறுத்தற்குரியதெனத் தோன்றினமையின், வெறுத்து மறுத்துவிட்டால் வரும் துன்பத்துக்கு அஞ்சி, இறைவனை “தண்ணிய நல் அருட்கடலே, மன்றில் இன்பத் தாண்டவம்செய் பெருந்தகையே, எங்கள் புண்ணியனே” என்று புகழ்கின்றார். வெறுத்துக் கைவிட்டால் கதியும் செயல்வகையும் வேறில்லை என்பதை, “எங்குற்று என் புரிவேன்?” என்று இரங்கிப் புலம்புகின்றார்.
இதனால், பிழை நினைந்து உரைத்து வெறுத்தால் வேறு போக்கிடமின்மை விளம்பி வழிபடுவது பயன் என்று உணர்தல் வேண்டும். (97)
|