99
99.
இங்ஙனம் சிவபரம்பொருளைப் பல வேறுவகைகளாற் பரவி அருணலம் வேண்டி நின்ற வடலூர் அடிகள், தேவர்
தலைவருள் ஒருவர் நிலையில் வைத்து எண்ணமிடுகின்றார். மாயாகாரியமான உலகுடம்புள் பொருளாக எழும்
எண்ணமே நிரம்பியிருக்கும் தமது நிலையை நினைக்கின்றார். அவை யாவும் மாயையாதலால், அது
வாயிலாக மனத்தின்கண் வஞ்சமும் களவும் மல்கியிருப்பதாகக் கருதுகின்றார்; மாயையின் மயக்கம்
தமது உண்மையறிவை மறைப்பதும், அதனால் தாம் மயங்கிப் பேதுறுவதும் நோக்குகின்றார். இறைவனை நோக்கி
நீயும் மயக்குடையாரைப் போலப் பொன்போன்ற அழகிய மேனியின் நலத்தை நினையாமல் புற்றில்
வாழும் பாம்புகளை அணியாக மேனி முழுதும் அணிந்து கொள்கின்றாய். பொன்னும் மணியும் கலந்த அணிகளை
வேண்டாமல் பாம்பை மேற்கொண்ட செயலை நோக்கின், சிவஞானமும் திருவருள் உணர்வும் கொள்ளாமல்
மாயையால் உளவாகும் வஞ்சனையும் களவுமாகிய நினைவே கொண்டு உழலுகின்றே னாதலால், என்னை ஆண்டருளுவது
உனக்கு ஏற்றதேயாகும். வேறு தெய்வத் தலைவர்களை நாடலாமே எனின், அவர்கள் பொற்பணியும்
பொன்னாடையும் பூண்டு புகழ்வேண்டும் உள்ளத்தாராக இருக்கின்றார்கள்; ஆதலால், அவற்றை வேண்டாத
என்னை விரும்பி ஏற்கமாட்டார்கள்.
மேலும், கலை பலவும் கற்று உயர்ந்தோ னொருவனாயின், அவன் மனத்து வஞ்சனையும் களவுமான நினைவுகள்
நிறைந்து கிடப்பினும், அவன் மனவியல்பு நோக்காமல், கல்வியுணர்வே நோக்கி ஏன்று கொள்வதை
எங்கும் காண்கின்றேன். யான் கல்வியால் உயர்ந்த அறிவுடையாவனுமல்லன்; பலவற்றைக் கற்பனையால்
விரித்தோதும் திறமும் என்பால் இல்லை; அவ்வாறு கற்பித்துப் பலபட உரைக்கவேண்டும் என்ற
கருத்தும் எனக்கு இல்லை. ஆதலால் நீ எனக்கு உன் திருவருளை வழங்கவேண்டும் எனக் கேட்கின்றார்.
2169. புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
உற்றோங்கு வஞ்சமனக் கள்வனேனை
உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
வன்மனத்தர் எனைவேண்டார் வள்ளலே நான்
கற்றோங்கு அறிவறியேன் பலவாச் சொல்லும்
கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
உரை: பாம்புகளை அணியாகப் பூண்ட பரம்பொருளே, மாயை நிறைந்த மனமுடைய கள்வனாகிய என்னைந் தொண்டனாகக் கொண்டு பணிகொள்வது உனக்குத்தான் ஒத்ததாகும். பிறரெல்லாம் பெருமை விரும்பும் மனமுடையவராதலால் என்னை விரும்பமாட்டார். வள்ளலே, கற்பனை கற்று ஓங்கும் அறிவில்லேன்; பலபடக் கற்பித்துப் பேசும் கருத்துடையவனும் அல்லன்; எனக்கு அருள் புரியவேண்டும். எ.று.
புற்றில் வாழ்பவை யாதலால், “பாம்புகளைப் புற்றோங்கும் அரவம்” என்று கூறுகிறார். மாயை மயக்கம் செய்யும் என்று பெரியோர் கூறுவது உண்மையாதலால், “மாயையுற்று ஓங்கும் மனம்” என்று உரைக்கின்றார். மன முதலிய கருவிகள் யாவும் மாயா காரிய மாதலால், மனம் மாயை மயக்கில் அழுந்தி மாயம் பெருகுமாறு தோன்றவே, “மாயை உற்று ஓங்கும் மனம்” எனவும் அதன்கண் முன்னணியில் நிற்பவை வஞ்சமும் களவுமாவது பற்றி, “வஞ்சமனக் கள்வனேன்” எனவும் உரைக்கின்றார். வேண்டாத பாம்பை மேற்கொண்டருளும் உனக்கு வேண்டாத குற்றங்களைக் கொண்டுள்ள என்னை ஆட்கொண்டு பணிகொள்வது பொருத்தம் என்பதை உளங்கொண்டு பணிகொள்வது “உனக்கே ஒக்கும்” என்று உரைக்கின்றார். “உனக்கே” என்று பிரிநிலை யேகாரம் பெய்து கூறியது, ஏனைத் திருமால் பிரமன் முதலிய தேவதேவர்களை நோக்கி என அறிக. பெருமைக்குரிய பண்பும் செய்கையுமுடையோரை ஏற்றுக்கொள்வதும் பிறரை இகழ்ந்து புறக்கணிக்கும் வன்கண்மையுடையவர் என்று விளங்குதற்கு, “மற்று ஓங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும் வன்மனத்தார்” என்றும், அவ்வியல்பால் என்னை ஏற்க மறுப்பர் என்பது தோன்ற, “எனைவேண்டார்” என்றும் குறித்துரைக்கின்றார். வருவோர் குறை நோக்காது வள்ளன்மை ஒன்றே கொண்டு அருள் வழங்குபவன் நீ என்பாராய், “வள்ளலே” என்று புகழ்கின்றார். வேண்டும் குறைகளைக் கேட்போர் விரைந்து உளங்கொள்ளுமாறு கற்பனைவகையால் புனைந்துரைக்கும் திறம் கற்றறிவுடையோர்க்கு இயலுவது; யான் அஃது இல்லாதவன்; அதனால் பலபடியாகப் பாரித்துரைக்கும் வன்மையில்லாதவன் என்று உரைக்கலுற்று, “கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும் கருத்தறியேன்” என்று உரைத்து, எனக்கு அருள்புரிக என வேண்டுகின்றார்.
எனவே வஞ்சம் களவு முதலிய விரும்பத்தகாத குறையுடையேனாயினும் வள்ளலாகிய நீ என்னை ஆட்கொண்டு பணிகொண்டு அருள் புரியவேண்டும் என்பது இப்பாட்டின் பயன். (99)
|