பக்கம் எண் :

100

    100. இந்த மகாதேவமாலை வாயிலாக இறைவனிடத்தில் செய்த முறையீட்டை முடிக்கக் கருதுகின்றார். நம் வடலூர் அடிகள். சிவத்தின் பரமாம் தன்மையையும் தமது சிறுமையையும் தம்பாலுள்ள பிழைகளையும் எண்ணுகின்றார். பரமாகிய பெருமான் தமது பிழையை நோக்கிக் கை விடுவாராயின், பிறவிக்கடலினின்றும் கரையேறும் திறம் தமக்கு இல்லையாம் என்று விண்ணப்பிக்கின்றார். அவன் எல்லாம் கடந்த பரமாயினும்,அவன் அருட்கடலாய் விளங்குவது அடிகளாரின் ஞானக் கண்களுக்கு தெரிகிறது. அதனை முதற்கண் நிறுத்திப் பாடுகின்றார்.

2170.

     அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
          ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
     தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
          சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
     மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
          வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
     இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
          ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.

உரை:

     அருட் பரம்பொருளே, ஆனந்தப் பெருவாழ்வே அன்புடையோர் உள்ளமுற்றும் கோயில்கொண்ட சிவமே, மெய்யறிவே உருவாய் அமைந்த தெய்வமே, மருணிறைந்த மனத்தையுடைய பேதையாகிய நாயேன் செய்துள்ள பிழைகளைச் சிறிதே திருவுளத்தே நினைத்தாயாயினும் யான் பிறவிக்கடலை விட்டுக் கரையேறும் வாய்ப்பு இலனாவேன்; ஆதலால், இன்பத் தேவனாகிய நீ என்னைக் கரையேற்றற்கு எண்ணம் கொண்டருளுக. எ.று.

     மண்ணும் விண்ணுமாகிய எல்லா உலகங்கட்கும் மேலாய் அவற்றுள் உள்ள பொருட்கட்கெல்லாம் மேலாய் விளங்கும் பரம்பொருளாயினும், அருளே பொருளாகவுடைய தென்றற்கு “அருளுடைய பரம்பொருளே” என்று இயம்புகின்றார். பரம்பொருளாகிய தான் உலகுயிர்கள் உய்தற்பொருட்டுத் தில்லைப் பெருமன்றில் திருக்கூத்தியற்றி இன்பம் தருகின்ற அருட்செயலை விளக்குதற்கு, “மன்றில் ஆடும் ஆனந்தப் பெரு வாழ்வே” என்று உரைக்கின்றார். இறைவன்பால் உண்மையன்பு உளத்தில் நிறைந்தபோது, திருவருள் ஞானம் பெருகி அவர்களுடைய அறிவைத் தெளிவுறுத்தும்; “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார்” எனச் சேக்கிழார் கூறுவது இதனை வலியுறுத்துகிறது. அதனால் தான், “அன்புள்ளோர்தம் தெருளுடைய உளம்” என்று அன்பர் உள்ளத்தைச் சிறப்பித்துக் காட்டுகின்றார். அவ்வுள்ளம் ஞான வுருவாகிய சிவம் கோயில் கொள்ளுதற்கு வாய்த்த இடமாவதால், “உளம் முழுதும்கோயில் கொண்ட சிவமே” எனச் செப்புகின்றார். “ஞானத்திரளாய் நின்ற பெருமான்” என்று ஞானசம்பந்தர் முதலியோர் கண்டுரைப்பதால், “மெய்யறிவுருவாம் தெய்வமே” எனக் கிளந்து கூறுகின்றார். சிவத்தின் அருணிலையையும் ஆனந்தக் கூத்தையும் அன்பர்களது தெருணிலையையும் ஞானவுருவத்தையும் நினைக்கிறபோது தமது மனத்தின்கண் மருட்சியும் பேதைமையும், தம்பால் கீழ்மையும் காணப்படுகின்றன. இந்நிலையில் தம் நினைவு சொல் செயல் மூன்றினும் பிழையே பெருகி வன்மையுற்றிருப்பது காண்கின்றார். இவற்றைச் சிவபெருமான் சிறிது நினைத்தாலும் வெறுப்புத் தோன்றி விலக்குதற்கேற்ற எண்ணமே அவர் திருவுள்ளத்தில் எழும் என்ற அச்சத்தால், “நாயினேன் செய்வன்பிழையை மதித்தல் கூடாது” என்று வேண்டுகிறார். நினைத்தால் விளைவு யாதாம் எனின், நான் பவக்கடலில் அழுந்திக் கரையேறுதற்கு வாய்ப்பே இல்லாது போகும் என்பாராய், “மதித்தியாயின் பவக்கடல் விட்டுக் கரையேறேன்” என்று கூறிகின்றார். பவக்கடல், அறியாமையாகிய இருள்நிறைந்தது என்றற்கு, “இருளுடைய பவக்கடல்” என்று உரைக்கின்றார். ஆகவே, முடிந்த முடிபாகக் கேட்டுக் கொள்வது, பவக்கடல் விட்டு அடியேன் கரைஏறுதல் வேண்டும் என்பது; அதனை வற்புறுத்தற்காகவே, “ஏற்றுவதற்கெண்ணுக என் இன்பத் தேவே” என்று மொழிகின்றார்.

     இதனால், உயிரிகளின் பிழை நோக்காது பவக்கடல் ஏறக்கடைக் கண் பார்க்க வேண்டும் என்பது பயனாம்.

     (100)