பக்கம் எண் :

1

1. குற்றம் எடுத்துரைத்தல்

      இன்பத்தை விரும்புதலும் துன்பத்தை வெறுத்தலும் உயிர்கட்குப் பொதுவியல்பு. அவற்றுள் மக்கள் உயிர், இன்பம் தருவதனை விரும்பி மேற்கோடலும், துன்பம் தருவதனை வெறுத்துப் போக்குதலும், அவற்றிற்கெனத் தம் நினைவைச் செலுத்திச் சொல்லையும் செயலையும் ஈடுபடுத்துவதும் எவ்விடத்தும் எக்காலத்தும் ஒத்த செயலாகக் காணப்படுகிறது. இன்பத்தையே நாடும் உயிர்க்குத் துன்பம் ஏன் வருகிறது என்ற கேள்வி எழுந்து அறிஞர்கள் அறிவை அலைத்திருக்கிறது. அவருள் கௌதம புத்தர் உடம்பொடு கூடி உலகில் பிறப்பது தான் துன்பத்துக்குக் காரணம் என்று கண்டார்; பிறப்புத்தான் காரணமாயின் அப் பிறப்புக்குக் காரணமாவது யாதென எண்ணி, உயிர்கட்குத் தம் உடம்பின்மேலும் உலகில் மேலும் உளதாய பற்றே காரணம் என்று கண்டு, பற்றறுத்துப் பிறவாமைக்கு முயல்வது துன்பம் இலவாதற்கு நேரிய வழியென “நினையுமா நினைந்து” தெளிந்தார். தென்தமிழ் நாட்டு அறிவுடைச் செல்வர், “பிறப்பும் உலகும் துன்பக் காரணங்கள் அல்ல; பிறப்பிலும் உலகவாழ்விலும் இன்பம் நுகரப்படுகிறது; அதன் பெருகிய நுகர்ச்சிக்கே பிறந்த உயிரனைத்தும் நாட்டமும் முயற்சியும் கொண்டுள்ளன; பிறப்புக்குரிய உடம்பையும் உலகையும் படைத்தோன் உயிர்கள் துன்புறவேண்டுமென்றே கருதினாள் எனின், அவனினும் கொடுமையும் கீழ்மையும் உடையவன் இலனாவன்; உயிரனைத்தும் துன்பத்தை நாடாது இன்பமே விழைதலால், உயிர்கள் உடம்பொடு உலகில் தோன்றுவது பெரிய இன்பப் பேறு கருதியதென்பது யாரும் ஒரு சிறு தடையுமின்றி அறிய விளங்குகிறது; அதனால் உடம்பும் உலகும் இன்பப் பேற்றுக்கு வாய்த்த காரணங்களே” என்று தெளியவுரைத்தனர்.

 

      ‘இன்பத்துக்குக் காரணமாகிய உடம்பும் உலகவாழ்வும் துன்பம் தருவானேன்? விரும்புவாரில்லாத துன்பம் எவ்வாறு விளைகிறது?’ என்ற கேள்விகள் எழக் கண்டனர் அறிஞர்; இன்பமும் துன்பமும் தாமாகத் தோன்றுவதில்லை. இன்பப் பேற்றுக்காக உடம்மை வளர்த்துச் செயற்படுத்துவதும் அதன் வாயிலாக அறிவு பெறுவதும் உயிரின் பொதுப்பணி; உயிரினுடைய அறிவுக்கும் செயலுக்கும் கருவியாவது உடம்பு. அவ்வுடம்புக்கு உணவாய் வளர்ப்பதும் அறிவு விளக்கத்துக் கேதுவாகிய பொருளுண்மைகளை நல்குவதும் உலகமாகும். இவையிரண்டும் உயிர்போலத் தமக்கெனத் தனியுணர்வும் செயலும் உடையவையல்ல. இவை உயிர் விழையும் இன்ப வாழ்வுக்குக் கருவியும் இடமுமாவனவே தவிர வேறல்ல. இக் கருவிகளைச் செயற்படுத்திப் பயன்கொள்ளும் உயிரே இன்பம் நாடி முயலுங்கால் துன்பத்தை எதிர்ப்படுகிறது. துன்பம் யாது? அஃது எங்கே உளது? எனின், துன்ப இன்பத்துக்கு மறுதலையாய் இருளும் ஒளியும் போல் உயிருணர்வில் இடம் பெற்றுளது; இரண்டிற்கும் இடமாவது உணர்வு என்றே ஒன்றே; இரண்டும் ஒரிடத்தில் இருத்தல் ஒன்றினுள் ஒன்று ஒடுங்கியிருக்கும் இயைபினால் அமைகிறது. இரண்டினுள் ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்; ஒன்று தடைப்படில்  ஒன்று வெளிப்படும்; இன்பம் மேலிடுதற்கு உணர்வின்கண் விளக்கமும் உடலின்கண் அயரா வுழைப்பும் காரணங்களாகும். துன்பம் மேலிடுதற்கு உணர்வின்கண் தெளிவின்மையும் உடம்பில் மடிமையும் காரணம்; துன்பம் வெளிப்படுதற்கு மறதியும் நோயும் மூப்பும் சாக்காடும் காரணம்; இவற்றின் வேறாக, இன்ப நுகர்ச்சி மிக்கவிடத்து உணர்வின்கண் மயக்கமும், துன்பம் மிக்கவிடத்து உணர்வின்கண் தெளிவும் தோன்றுவதுண்டு. இன்பத்தின்மிக்க நுகர்ச்சி துன்பவேதுவாதலை “இகழ்ச்சியிற்கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து”; என்றும், துன்பத்தால் தெளிவுண்டாதலை “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு” என்றும் திருவள்ளுவர் உரைப்பது காண்க.

 

      நுண்ணுணர்வால் உயர்ந்தோர்க்குத் துன்பமும் அறிவின் மாசுபோக்கி ஒளி திகழ்விக்கும் என்பது விளங்கலாம்; அது கொண்டு துன்பத்தை விரும்புவர் உலகில் இல்லை. இன்ப நாட்டமே உயிரியல்பாதாலால், மறுதலையாய துன்பத்தை விளைவிக்கும் நினைவு சொல் செயல்களை எவரும் மேற்கொள்வதில்லை. துன்பம் பயப்பனவற்றைக் குற்றமெனப் பெயரிட்டு விலக்கவே முயல்கின்றனர். நல்லறிஞர் குற்றமாயினவற்றைக் கண்டு தவிர்ப்பதற்கே தமது அறிவாற்றலைச் செலுத்துகின்றனர். திருவள்ளுவரும் “குற்றமே காக்க பொருளாக் குற்றமே அற்றம் தருஉம் பகை” என அறிவுறுத்துகின்றார்.

 

      இக்குற்றங்களைச் செருக்கும் சினமும் சிறுமையும் இவறலும் மானமும் உவகையும் என ஆறு வகையாகத் திருவள்ளுவர் கண்டறிந்துரைக்கின்றார். செருக்கு என்பதைச் ‘செல்வக்களிப்பு’ என்பர் பரிமேலழகர். சிறுமையாவது, நிலையினின்றும் தாழ்வு படுத்தும் சொல்லும் செயலுமாகும். இவறல். கடும்பற்று நிறைந்து மனமுடைமை. விதிவிலக்கு கட்குப் பணியாமை மானமாகிய குற்றம். குற்றவகையான உவகை என்பது பிறர் துன்புறக்கண்டு மகிழ்தல். இவற்றுள் முற்பட மொழிந்த மூன்றும் ஒருவனுடைய உயர்ச்சிக்கும் ஆக்கத்துக்கும் தடை செய்வனவாம். அதனால் “செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து” எனத் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

 

      உலகியல் வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதாகலின், அதனைச் செய்தற்குரிய நான் என்னும் முனைப்பும், செய்த பொருளைப் போற்றிக்காத்தற்கு எனது என்னும் பற்றும் வேண்டப்படுவன; ஆயினும் அப்பொருளைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படச் செலவிட்டு இருமைக்கும் நலம் செய்து கொள்வதை விடுத்துச் செய்த பொருள்மேல் கடும்பற்றுக் கொண்டு செலவிடாது இறுகப் பற்றிப் பேழையிற் புதைத்தல் இவறுதல்; வாழ்வில் அறிவு ஆண்மை ஒழுக்கம் ஆகியவற்றால் உயர்ந்தார் பால் பணிவும் வணக்கமும் கொண்டு அவரோடு இணங்கி யொழுகுவது மாண்புடைய மானமாகும்; பணிவும் வணக்கமும் பெருமை தருவன. பணிய வேண்டுமவர்க்குப் பணியாமல் தாழவேண்டுமிடத்துத் தாழாமல் ஒழுகுவது மாண்புக்கு மாறாதலால், அக் குற்றத்தை “மாண்பிறந்த மானம்” எனத் திருவள்ளுவர் விளக்குகிறார். பிறர் துன்புறக் கண்டு “அருள் சுரந்தொழுகும்” உள்ளத்தாராய், அவர்பால் பரிவுகாட்டி அவர் துன்பத்தைத் துடைக்கும் நற்செயலைக் கைவிட்டு உவகையும் பெருமிதமும் கொண்டு எள்ளி நகைப்பது குற்றமாதலால், அதனை “மாணாவுவகை” என்று குறிக்கின்றார். வீடு தீப்பற்றி யெரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கிடைத்தது என மகிழும் இழிசெயல் என உலகவர் கூறுவர். மேனாட்டவர் ரோம் நகரம் தீப்பற்றி வேகும்போது நீரோ வீணையிசைத்து இன்புற்றதுபோல என இகழ்வர். இக் குற்றங்களை வேந்தர்க்கும் ஆகாதவை என்றற்காகவே “ஏதம் இறைக்கு” என எடுத்துரைக்கின்றார்.

 

      திருவள்ளுவர் உரைக்கும் குற்றங்கள் ஆறினுக்கும் நேராக வடநூலார் காமம் குரோதம் லோபம் மதம் மாற்சரியம் என்று கூறுவர். ஆனால், இக் காமம் முதலிய ஆறும் திருவள்ளுவர் காட்டும் செருக்கு முதலிய ஆறினுக்கும் ஒத்தவையல்ல என்பது படிக்கும்போதே யாவராலும் அறியப்படுகிறது.

 

      இக் குற்றங்களில் செல்வம் எய்திய வழி, அறிவால் உயர்ந்தோர் அறிவுக்கண்ணுக்கும் தெரியாமல், அவர் உள்ளத்தில் இடம்பெற்று மயக்கும் இயல்புடையது செருக்கு. அன்றியும், இடம் பெற்றுவிடின், அச்செருக்கு ஏனைக் குற்றம் பலவும் தன் வாயிலாக இடங்கொள்ளச் செய்வது. அதுபற்றியே “வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை” என வுரைக்கின்றார். தன்னை வியத்தலாகிய குற்றம் நன்றி பயவாததொன்று; அதனை விரும்பாதே என அறிவுறுத்தவே, “நயவற்க நன்றி பயவா வினை” எனத் திருவள்ளுவர் தெருட்டுகின்றார். “ஏதம் இறைக்கு” என காட்டிய குற்றவகையில் தலையாயது இவறன்மை. அக்குற்றம் உளதாகுமாயின் செயற்குரியவற்றையும் செய்யவிடாது சீர்குலைக்கும்; உரியன செய்யாவழிக் கேடு தோன்றிச் செல்வம் பலவும் பல்வேறு நெறியில் கழிந்துபோம் என்பதற்காகவே திருவள்ளுவர் “செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலதன்றிக் கெடும்” என்றும், “பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று” என்றும் உரைக்கின்றார்.

 

      எவரும் தம்மில் சிறியரும் எளியரும் ஆகியவர் தாம் விரும்பத்தக்க வகையில் செலய்களைச் செய்யத் தவறினால் அவர்மேல் சினம் கொள்கிறன்றார்கள். இச் சினம் குணமென்னும் குன்றேறி நிற்கும் சான்றோரிடத்தும் உளது; களங்கமில்லாத வெள்ளையுள்ளம் படைத்த சிறு பிள்ளைகளிடத்தும் காணப்படுகிறது. நம்மால் வளர்க்கப்படுகிற விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் இருக்கிறது. ஆகவே சினம் எனப்படும் குற்றம் உயிர்கட்கே பொதுவியல்பு எனல் பொருத்தமாகும்.

 

      இக் குற்றத்தால் கடுஞ்சொல்லும் வன்செயலும் தோன்றிச் சினந்தார்க்கும் சினவப்பட்டார்க்கும் தீங்கும் துன்பமும் செய்கின்றன. இதனால் செயற்பாலது செயலுறாது கெடுவதும், பெறற்குரியது பெறப்படாது கெடுதலும் நேர்கின்றன. இவ்வாற்றல் துன்பம் தோன்றி உள்ளத்தையும் உடல் நலத்தையும் கெடுக்கின்றன. முடிவில் உள்ளத்தில் தளர்ச்சியும் உடலில் அயர்ச்சியும் உண்டாவது காண்கின்றோம். இதனை வடலூர் வள்ளல் காண்கின்றார். சினம் போன்ற பிற குற்றங்களையும தெரிந்து எண்ணுகின்றார்.

 

      அறிவு விளங்கி இன்புறுதற்குரிய மக்கள் சின முதலிய குற்றங்களால் துன்புறுவது கண்டு, இறைவன்பால் இக்குற்றத்தால் விளைவது கூறி, அவற்றைக் கடிந்து விலக்குதற்கு அருள்புரியுமாறு முறையிடுகின்றார். துன்பக் காரணமாக நிற்கும் குற்றங்களின் தோற்றத்தையும் விளைவிக்கும் கேடுகளையும் நினைப்பதும் எடுத்துச் சொல்வதும் குற்றத்தை விலக்கும் வாயில்களாகும். இவற்றைப் பிறர்பால் உரைப்பதிலும் இறைவனிடம் எடுத்துரைப்பது சிறப்பு. ஏனெனில் பிறர் நம் உள்ளத்தில் எழும் நினைவு வகை அறியமாட்டுவாரல்லர். இறைவன் உள்ளமே இடமாகக் கொண்டு எல்லாம் அறிபவன். “பற்றி நின்ற பாவங்கள் மாற்ற வேண்டில், பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில், சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்கவேண்டில், சொல்லுகேன் கேள் நெஞ்சே” என்று முன் மொழிந்து, “உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லாம் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்” மனங்கொண்டு பரவி முறையிடுக எனத் திருநாவுக்கரசர் முதலியோர் பல இனிய பாட்டுக்களால் பாடி அறிவுறுத்துகின்றார். மேனாட்டு அறிஞரான வில்லியம் லா என்பவரும் இக்கருத்து விரித்துரைத்துள்ளனர்.

 

            இக் குற்றங்களில் சினத்தால் உளதாகும் தீங்கை நினைக்கின்றார் வடலூர்ப் பெருமான். சினம் மிக்க வழி உள்ளம் தளர்ந்து நிலைகலங்கிச் சுழலுகிறது; வெவ்விய எண்ணங்கள் தோன்றி அலைக்கின்றன. அவற்றின் வெப்பத்தால் நரம்புக்கால் தோறும் பரந்து பாய்ந்து ஆற்றலையும் ஊக்கத்தையும் நல்கும் குருதி உருகி நீராய்க் கழிகிறது; உடல் அயர்கிறது; அதனால் மனம் சோர்வடைகிறது நீ அருள் கூர்ந்து இக் குற்றத்தின் வாயில் வீழாதவாறு அடியேற்கு அருள் புரிதல் வேண்டும். நீ அருளாதிருப்பது முறையன்று என்கிறார். அருள் வள்ளலாகிய நீ அருளாமைக்குக் காரணம் யாதாகலாம்? என நினைக்கின்றேன்; “வினையால் அசத்து விளையும்” எனச் சான்றோர் கூறதலால், எனது வினைதான் போந்து நின் சித்தத்தின்பால் அருள் பிறவாவண்ணம் மாறாவன சொல்லி மயக்கியிருக்குமோ? அங்ஙனமாயின் யான் என் சொல்வேன் என எடுத்துச் சிறிது கற்றாரும் இனிது விளங்க எளிய நடையிற் பாடுகிறார்.

2171.

     துனியால் உளந்தளர்ந் தந்தோ
          துரும்பில் சுழலுகின்றேன்
     இனியா யினும்இரங் காதோநின்
          சித்தம்எந் தாய்இதென்ன
     அனியாய மோஎன் அளவின்நின்
          பால்தண் அருளிலையோ
     சனியாம்என் வல்வினைப் போதனை
          யோஎன்கொல் சாற்றுவதே.

உரை:

     வெகுளியென்னும் குற்றதால் உட்கருவியாகிய மனம் தளர்ந்து சுழற் காற்றிலகப்பட்ட துரும்புபோல் சுழலுகின்றேன்; இக் குற்றத்தினின்றும் நீக்குதற்கு நின் அருளல்லது பற்றுக்கோடு இல்லை. அருள் துணைபிரிதற்கு இப்பொழுதாகிலும் நின் திருவுள்ளம் இரங்குமோ? இரங்காத இது என்ன அநியாயம்? என்னளவில் நின் தண்ணருள் இல்லையோ? என் வல்வினையின் போதனையால் இந்நிலை ஏற்பட்டதோ? என்னென்று கூறுவேன். எ.று.

     காதலர் புலவிக்கண் தோன்றும் பிணக்கம் முறுகியவழித் துனியாம் எனச் சங்ககாலம் வழங்கிற்று. பிற்காலத்தேது வெகுளிப் பொருளதாயிற்று; ஆதலால் வெகுளியாகிய குற்றத்தைத் 'துனி' எனக் குறிக்கின்றார். உள்ளத்தின் வழியழித்து அறிவை அயர்விப்பதகாலின் “துனியால் உளம் தளர்ந்து சழலுகின்றேன்” என வுரைக்கின்றார். உள்ளதன் உண்மை தெளியாவாறு அறிவு சுழலுங்கால் உணர்வு தடுமாறி உடலும் நடுக்கமுறுதல் பற்றி, “அந்தோ துரும்பின் சுழலுகின்றேன்” என்று இயம்புகின்றார். சினம் மிக்கவிடத்துச் செய்வதறியாமையும், கேட்பது தெளியாமையும், செப்புவது விளங்காமையும், கண்சிவப்பேறிக் காட்சியில் புலனில்லாமையும் தோன்றி, முகத்தில் வெம்மையும் வாயிதழில் துடிப்பும் உடலில் நடுக்கமும் உண்டாகிச் சினக்கும் தனக்கும் சினக்க்ப்பட்டார்க்கும் தீங்கு செய்வதால், “அந்தோ துரும்பின் சுழலுகின்றேன்” என வள்ளலார் வருந்துகிறார். இறக்கும் காலத்தும் நீங்காக் கொடுமையுடையது இச் சினம்; மேலும் இது முற்றவும் கடியப்படாத வன்மையுடயது; ஆதலால் நீ அறிவுக்கு அயர்விலாத் தினண்மையும் உள்ளத்துக்கும் உரனும் அருள் கொண்டு வழங்கினாலன்றி இக் குற்றத்தைத் துடைத்துப் போக்கலாகாது; நின் திருவுள்ளம் இந்நிலையைக் கண்டதும் இரங்கி அடக்கும் ஆற்றலும் அறிவில் தெளிவும் அருளும் இயல்பிற்று; ஏனோ அது இப்போதும் இரங்கவில்லையே என முறையிடுவாராய், “இனியாகிலும் இரங்காதோ நின் சித்தம்” என இசைக்கின்றார். இரங்கியருள வேண்டியவிடத்து இரங்காமை நேர்மையன்று எனத் தெரிவிப்பாராய், “எந்தாய் இது என்ன அநியாயம்?” எனப் புலம்புகின்றார். என்றும் எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் அருள் பெருகிப் பாயும் நின் திருவுள்ளம், என்பால் அஃது இல்லாமல் போயிற்றோ என்றற்கு “என் அளவில் நின்பால் தண்ணருள் இலையோ” எனக் கேட்பவர், இவ்வாறு ஆவதற்குக் காரணம் யான் செய்த வினையாக இருக்குமோ? அது தவிர என்னை நீங்காமல் நிழல்போல் ஒட்டியிருக்கும் பகை வேறில்லை என்ற கருத்துப்பட, “சனியாம் என வல்வினைப் போதனையோ? என் கொல் சாற்றுவது” என்று சொல்லுகிறார். இதனால் சினம் என்னும் குற்றம் தன்னிடத்து இல்லாமல் இருக்க அருளவேண்டும் என முறையிடுவது பயன்.

     (1)