பக்கம் எண் :

2

2. அருள் வேண்டல் 

      சிவத்தின் திருவருள்தான் உலகின் அமைப்புக்கும் இயக்கத்துக்கும் காரணம் என்பதும், உலகில் உடம்பொடு தோன்றும் உயிர்களின் வாழ்வுக்கும் காரணம் என்பதும் சைவநூற் கொள்கை. “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” என்றும், “என் வாழ் முதலாகிய பொருளே போற்றி” என்று மணிவாசகப் பெருமான் விளங்க உரைத்துள்ளனர். இக் கருத்தும் கொள்கையும் உண்ணின்று இயக்க அத் திருவருளை முறையிட்டுப் போந்த வடலூர் வள்ளல், திருவருள் விளக்கத்தை, ஞானவுணர்வை, வாழ்வுக்கு முதலாகிய பொருள்களை வழங்குமாறு வேண்டுகின்றார். மிகப்பல திருப்பாட்டுக்காளால் இறைவன் அருணலத்தை வியந்து முறையிட்டவர், தாம் விரும்பிய அளவில் அருள் விளக்கம் எய்தாமை காண்கின்றார். காரணம் அறியக் கருதுகிறார். அருளை வேண்டி முறையிடும் தம்மையும், அதனை வழங்கும் செல்வனாகிய சிவனையும் ஒப்ப நோக்குகிறார். வழங்குதற்குரியவன் வழங்கானாயின் யாவரிடம் கூறுவது? சிவனை தவிர அருட்கு முதலாயவர் பிறர் எவரும் இலர்; அதனையும் எண்ணுகிறார். அருளாளனாகிய நீ எம்மனோர்க்கு அருள் வழங்குவதற்கு உரியவன்; “என்னை முன் ஆள் ஊழுடையான்” எனத் திருவாதவூரர் தெளிவாகக் கூறியிருப்ப, வழங்காமைபற்றி உன்னைக் கேட்பார் இலையோ? தாழ்த்தல் கூடாது காண் என உரைக்கின்றார்.

2172.

     என்னே முறையுண் டெனில்கேள்வி
          உண்டென்பர் என்னளவில்
     இன்னே சிறிதும் இலையேநின்
          பால்இதற் கென்செய்குவேன்
     மன்னேமுக் கண்ணுடை மாமணி
          யேஇடை வைப்பரிதாம்
     பொன்னேமின் னேர்சடைத் தன்னே
          ரிலாப்பரி பூரணணே.

உரை:

     மன்னே, முக்கண்ணுடைய மணியே, பொன்னே, தன் நேர் இல்லாத பரிபூரணனே, செய்யப்படும் செயல்வகைகட்கு முறை யுண்டெனில் கேள்வியுண்டு என்பது அறிவு நெறி; என் அளவில் சிறிது கேள்வி முறை காணேன்; இதற்கு என் செய்வேன்? எ.று.

     நிலைபேறுடைமைபற்றிச் சிவனே “மன்னே” என உரைக்கின்றார். கண் மூன்றுடையார்க்கு மணியும் மூற்றாதல் விளங்க “முக்கண்ணுடை மாமணியே” என கூறுகின்றார். முதல் இடை கடை என வைப்புமுறை மூன்றனுள் முதலும் கடையுமல்லது இடை வைத்தற்கு ஆகாமை தோன்ற “இடைவைப் பரிதாம் பொன்னே” எனப் புகல்கின்றார். கடையும் ஒரொருகால் முதலாம் இயைபுண்டு. ஆனால் இடையாவது எவ்வாற்றானும் முதலாகாமைபற்றி, இடைவைப் பரிதாம் பொன்னே என்கிறார். மின்போல் ஒளிதிகழ்வதைச் சிவதரிசனம் பெற்ற தொண்டர் பலரும் பாராட்டிப் பாடுவர். அதுபற்றியே “மின்னேர் சடை” என விளம்புகிறார். ஒரு குறையுமின்றி நலம் அனைத்தும் நிறைந்து குறைவிலா நிறைவாகிய தனி முதல்வனாதல் பற்றி, “தன்னேரிலாப் பரிபூரணன்” எனப் புகழ்கின்றார். முதல்வனாகிய சிவபரம்பொருளின் படைப்பின்கண் யாவும் ஒருவகை நெறியும் முறையும் கொண்டே இயங்குகின்றன. உயிர்ப்பொருள் உயிரில் பொருள் அனைத்தும் தமக்கென அமைந்த நெறியும் முறையும் பிறழாமல் இயங்குவதை அறிஞர்கள் கண்டிருக்கின்ற அறிவு நூல்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன; அவற்றின் முறை பிறழாமை, புதிய புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கட்கு ஆதரவு செய்துள்ளது. எவ்வகைச் செயல்கட்கும் இயக்கங்கட்கும் முறையுண்மை கண்டமையின் “முறையுண்டு எனில்” என்கிறார். முறை தவறுமிடத்து, அறிந்தோர் அதற்குக் காரணம் கேட்பது இயல்பு. குறையுற்றவர் அதனைத் தீர்த்தற்குரியாரைக் கண்டு முறை வேண்டுவர்; முறை செய்தல் அவரது கடனாகும். முறைசெய்து காத்தல் இறைமையாகும்; “முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையொன்று வைக்கப்படும்” என்பர் திருவள்ளுவர்; முறை செய்யவேண்டுமிடத்து அஃது இல்லையாயின், அதற்குக் காணப்படும் காரணம் கேள்வியாம்; கேள்வி பிறந்தவிடத்துக் கராணமும் கழுவாயும் உடன் ஆராய்ந்து செய்யப்படும்; இது நெறியும் முறையும் நிறுத்தும் உலகியல் அறம். இதுபற்றியே, “என்னே முறையுண்டு எனில் கேள்வி உண்டு என்பர்” எனப் புகல்கின்றார். தமது நினைவு செயல்களையும், அவற்றால் தமக்கு எய்தும் குறைகளையும் எண்ணிய வடலூர் வள்ளல் அக்குறைகள் நீங்கி இன்பம் எய்தாமை நினைத்து இந்நிலை தம்மளவில் அமைந்திருப்பதற்கு வருந்தி “என் அளவில் இன்னே சிறிதும் இலையே” என்று இரங்குகின்றார். அருள் செய்யும் வள்ளற்பெருமான் முறை நெகிழ்வனாயின் கேட்பாரிலராவர்; முறை பெறார்க்கு முடிவில் துன்பமே பயனாகமாதலின். “இதற்கு என் செய்குவேன்” என மொழிகின்றார்.

     இதனால், அருளுதலே முறையாம் என இறைவன்பால் வற்புறுத்துவது பயனாம்.

     (2)