பக்கம் எண் :

3

3. துன்பமிகுதி சுட்டல்

       மக்களின் தனிக் குடும்பவாழ்வையும் சமுதாயத்தில் கலந்து வாழும் வாழ்வையும் தனித்தனியாகப் பிரித்து நோக்கிய வடலூர் வள்ளலார் இரண்டையும் தொகுத்து மண்ணக வாழ்வென ஒன்றாக அமைத்து நோக்குகின்றார். அதன்கண் குழவிப் பருவத்தில் உணவும் உறக்கமுமின்றி வேண்டுவன வேறில்லை. பசித்தபோது உணவளிப்போரும், உறக்கம் வந்தபோது உறங்குவிப்போரும் உடனில்லையாயின் துன்புற்று அழுவது நிகழ்கிறது. பிள்ளைப் பருவத்து உணவும் உறக்கமுமேயன்றி விளையாட்டு வேண்டப்படுகிறது. விளையாட்டுக்கு வாய்ப்பில்லையாயின் மனத்தே வேதனையுற்று வருந்துவது இயல்பாகிறது. விளையாடுங்கால் பொருளருமை தெரியாமையால் விளையாட்டுப்பொருள் கெடின் துன்பமும், பெற்றோர் தடுத்தலால் துன்பமும் தோன்றுகின்றன. இளமைச் செவ்வி எய்துங்கால் வேட்கை பெருகுகிறது; பலப்பல பொருள் மேலும் இடத்தின் மேலும் விருப்பம் தோன்றுகிறது. தங்குதடையின்றி எங்கும் சென்று திரியும் உரிமையுணர்வு எழுந்து மனத்தை உந்துகிறது; பெற்றோர் மூத்தோர் ஆசிரியர் வழிநின்று அடங்கி ஒடுங்கி ஒழுகும் இன்றியமையாமை பிறந்து உரிமை வேட்கைக்கு ஊறு செய்கிறது; அது வாயிலாகத் துன்பம் தோன்றிக் கலக்குகிறது. பெண்ணை ஆணாம் ஆணைப் பெண்ணும் விரும்பும் காதற் காமவுணர்வு முளைத்துக் கருத்தை வருத்துகிறது. இதுகாறும் பெற்றோர் உழைப்பில் பயனை நுகர்ந்தவன், இனி அவர்க்குத் துணையாக உழைப்பை மேற்கொள்ள முற்படுகின்றான்; உழைப்புத் துன்பம் உள்ளத்தை அலைக்கிறது. காமவேட்கை பெருகிச் சூழ்நிலையின் கட்டுப்பாட்டால் கையற்றுக் கவலை மிகுவிக்கிறது. பின் கடிமணம் செய்து கொண்டு காதலின்பத்தை நுகரக் கருதும் கருத்து வேண்டுவன மிகுவது கண்டு கவலுகின்றது. தனக்கு வேண்டுவன நாடிய அறிவு, தன் துணைக்கு வேண்டுவனவும் பின்னர்த் தான் பெறும் மக்கட்கு வேண்டுவனவும் மிகுவதுபற்றி மிக்க உழைப்பையும் மேல் வருவன அறியும் சிந்தனையையும் ஏற்று உடலும் உள்ளமும் துன்புறுகின்றன. இடையில் செய்வினைக்குத் தடையும், உடலுக்குப் பிணியும், உள்ளத்துக்கு ஏமாற்றமும் போந்து துன்பத்தை மிகச் செய்கின்றன. இவற்றின் வேறாக உற்றார்க் குதவலும் உறவினரை யோம்பலும் பெற்றோரைப் பேணலும் பெற்ற மக்களைப் பேணிவளர்த்தலும் பிறவுமாகிய கடமைகள் தோன்றிக் கண்கலங்கச் செய்கின்றன. முதுமை எய்துங்கால் கண்பார்வை சுருங்குகிறது; காது கேட்கும் ஆற்றல் குறைகிறது; பற்கள் தளர்கின்றன; சொற்கள் சோர்வுபடுகின்றன; உடல் உழைப்பை மறுக்கிறது; கால்கள் கைக்கோலை நாடுகின்றன; உணவுக்கும், உடைக்கும் பிறர் உதவி வேண்டப்படுகிறது. இவ்வகையில் பொருளீட்டிப் பிறரைப் பேணி தான், பிறர் ஈட்டும் பொருட்குக் கேடாதலை நினைக்குபோது வாழ்வில் அச்சம் தோன்றி அவலம் செய்கிறது. உழைத்து ஓய்ந்து வலி குன்றிமையின் உடல் பல்வகை நோய்க்கு இரையாகிறது. அது தனக்கே யன்றித் தன்னைப் பேணுவார்க்கும் பெருவருத்தத்தை நல்குகிறது. இங்ஙனம் எண்ணுமிடத்து வாழ்க்கைபால் “துன்பமல்லது தொழுதகவு இல்லை” என்பது துணியப்படுகிறது. 

இங்ஙனம் வாழ்வை நினைந்த வள்ளலார், இதனை அளித்த இறைவனை எண்ணுகின்றார். விரிந்த உலகைப் படைத்து, திருந்திய உடம்பைப் படைத்து, இதற்குள் உயிரைப் புகுத்தி வாழச் செய்யும் இறைவன், துன்பமே வடிவாகத் தோன்றும் வாழ்வைத் தந்து வருந்தச் செய்வானா? உயிர்கள் மேல் அவனுக்குப் பகையா? இன்பவடிவினன்; எல்லையற்ற அருளாளன்; எங்கும் எல்லாவற்றையும் முழுதுணரும் முற்றறிவினன்; “நீதிபலவும் தன்ன உருவாம்” தனித் தலைவன்; அவன் படைப்புத் துன்பம் தருவதாகாது; அவன் தந்த வாழ்வு, வாழ்வாங்கு வாழ்வார்க்குத் தெய்வ இன்பம் தரும் சிறப்புடையது என்று நல்லவர் பலரும் நன்கறிந்து உரைக்கின்றனர். ஆதலால், வாழ்க்கை துன்ப வடிவாய்த் தோன்றுதற்கு அவ்வாழ்க்கையும் காரணம் அன்று; அதனை வகுத்தளித்த இறைவனும் காரணமல்லன்; வாழும் உயிர்தான் அதற்குக் காரணமாதல் வேண்டும் எனக் கருதுகின்றார். 

உயிரை நோக்குகிறார், உடம்பொடு கூடாது தனித்த நிலையில் அதற்கு உருவில்லை; உணர்வில்லை; ஒருவகைச் செயலுமில்லை. உணர்வும் செயலும் ஆற்றல் வடிவில் அதனிடத்தே அமைந்துள்ளன. அந் நிலையில் அதற்கு நட்புமில்லை; பகையுமில்லை. “உருவில் ஓருயிர்க்கு உடலுநர் என்று இரு வேறு உரைப்பதை எவனோ” ( 35:9-10 ) என ஞானாமிர்தம் கூறுகிறது, எனவே, உயிர்தான் இல்வாழ்க்கையைத் துன்ப வுருவின தாக்குகிறது என்பதும் பொருந்தாது எனத் தெளிகின்றார். 

துன்பத்துக் காரணம் வாழ்க்கையுமன்று; அதனைப் படைத்த முதல்வனும் அல்லன்; வாழும் உயிர்களும் அல்லர் எனின், பின் என்னையோ காரணம்? என்ற கேள்வி எழுகிறது; மனம் என்ற ஒரு சொல்லால் உலக அறிஞர் அனைவரும் ஒருமுகமாக விடை கூறுகின்றனர். அம் மனத்தை நோக்குகிறார் நம் அருட்பிரகாச வள்ளல். அது உயிரறிவுக் கண்ணாய் நின்று பரும்பொருளும் நுண்பொருளும், உருவப்பொருளும் அருவப்பொருளுமாகத் தோன்றும் உலகத்தையும் அதனையுண்டு வளரும் உடம்பையும் அவ்விரண்டின் உள்ளீடுகளையும் காட்டுவது; உயிரின் வேறாய், நுண்ணிய ஆற்றல் வடிவாய், உலகுடம்புகளின் தோற்றத்துக்கு முதற்காரணமான வித்திலிருந்து ஆகியது. அதுதான் உயிரை உடம்பின் கண் நிறுத்திப் பிணித்து உலகில் வாழச் செய்கிறது. தன்னளவில் அறிவும் தொழிலும் என்ற இரண்டையும் செய்யமாட்டாது இருந்த உயிர் அறிவன அறியவும் செய்வன செய்யவும் உற்ற துணையாகும்; நல்லன காட்டி இன்புறுத்துவதும், தீயன காட்டித் துன்புறுவிப்பதும் இம் மனமே. இது பற்றியே “கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை எடுக்க வல்லதும் இம் மனம்” ( பிரபு ) என்று சிவப்பிரகாசர் தெரிவிக்கின்றார். ஒருமையுற்று ஒரு பொருட்கண் ஒன்றி நின்று உயிரறிவை உண்மை யுணரச் செய்வதும் பன்மைப்பட்டு பல பொருள்கள் மேற்செலுத்தி உண்மை காணாவாறு அலைவிப்பது இம் மனத்தின் இயல்புகளாகும். 

உயிரறிவுத் தன்னளவில் சிறுமையுடையது; குறையுடையது; இறைவன் ஒருவனே சிறுமையும் குறையும் இல்லாதவன். பதினாறாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த பீனட்பாதிரியார் (Father Benet) தாம் எழுதிய நூல் ஒன்றில் குறையுடைமை உயிர்ப்பண்பு (Imbecity is the nature of the Soul) என்று கூறினார். அவர்க்குப் பன்னூறாண்டு கட்கு முன்பே தமிழர் தக்காங் குணர்ந்து உரைத்தனர். பதின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணந்தி சிவனார் இறைவனையும் உயிரையும் காட்டி, இரண்டிற்குமுள்ள வேற்றுமையை, “சிவன் சீவன் என்றிரண்டும் சித்து; ஒன்றாம் என்னில், சிவன் அருட்சித்து இவன் அருளைச் சேரும் சித்து; அவன்தான் பவம் கேடு புத்தி முத்தி பண்ணும் சித்து, அவற்றிற்படியும் சித்து; அறிவிக்கப்படும் சித்தும் இவன்தான்; அவன் தானே அறியும் சித்து; ஆதலினால் இரண்டும் அணைந்தாலும் ஒன்றாகா அநந்நியமாய் இருக்கும்” என்று அறிவிக்கின்றார். இங்ஙனம் உயிர் குறையுடையி சித்தாதல் பற்றியே, சித்தின் தன்மை வாய்ந்த மனம் உயிர்க்குக் கண்ணாடி போலும் காட்சிக் கமைந்த நுண்கருவியாக அமைந்துள்ளது. 

இம் மனம் கண் காது மூக்கு வாய் என்ற நான்கு பொறிகளையும் இடமாகக் கொண்டு ஒளி, ஓசை முதலிய புலன்களைப்பற்றி உலக முழுவதையும் அறிகிறது; மெய்யை இடமாகக் கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஓரிடமும் ஒழிவன்றி உள்ளமும் புறமும் பரந்து நிற்கும் ஊறு என்னும் புலனைப்பற்றி உறுவதனைத்தையும் உற்றறிகிறது. அறிதற்கண் ஒரு நொடிப்பொழுதும் ஓய்ந்திராது பொறிதோறும் புலனொடு பொருந்திச் சுழன்ற வண்ணம் இருக்கிறது. பொறிவாயிற் செல்லாது மடங்கி உயிரறிவின் முன்னின்று சிந்தனை புரிவதும் அதன் செய் தொழிலாகும். சிந்தனை விரிவதும் குவிவதும் நீளுதலும் சுருங்குதலும் உயர்தலும் ஆழ்தலும் வேண்டுதல் வேண்டாமை அடிப்படையில் நடைபெறும். சிந்திக்குங்கால் எழுகின்ற எண்ணங்கள் எண்ணிறந்தனவாகும்; அவற்றை அங்ஙனமே போற்றி வையாமல் மறப்பதும் மீள நினைப்பதும் மேலும் பல எண்ணுதலும் மனம் செய்கிறது. 

      இவற்றைச் செய்யும்போது தான் மனமும் பொல்லாத துன்பம் தரும் பொருளாகிறது. இயல்பிலே குறைபாடுற்று மலவிருளால் மங்கியிருக்கும் உயிர்க்கு (ஆன்மாவுக்கு) துணையாக வந்தமை கருதாமல், சுழன்றாடும் செயற்பண்பால் பிறழ்ச்சி (Distractions) என்னும் குற்றம் ஒன்றையுடைத்தாகிறது. ஒன்றை நினைக்குங்கால் அதனோடு நில்லாமல் பல பொருள்களின்மேற் பாய்ந்து நெறி பிறழ்ந்து தாவித் தாவிச் செல்வது பிறழ்ச்சியாகும். உலகவர் இதனைச் சஞ்சலம் என்பர். பிறழ்ச்சி வேறு புரட்சி. புரட்சி நிலையில் மாறுதல்; பிறழ்ச்சி நிலை வேறுபட்டு நெறி விலகிக் கண்டபடி செல்லுதல். ஒர் அழகிய பூவொன்றைக் கண்டு சிந்திக்கத் தொடங்குபவன், சிறிதுபோது கழிந்தபின் நோக்கினால் பொருத்தமில்லாத, தொடர்பில்லாத பொருளொன்றில் நினைவு ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். இக் குற்றத்தால் எண்ணங்கள் குறைப்பட்டுச் செயல்வகைகளில் புரையும் வழுவும் குறையும் குற்றமும் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் மனம் பேய்கொண்டது போலவும் தேள் கடியுண்டு கள்ளருந்திப் பித்தேறித் திரிபவன் போலவும் தோற்றமளிக்கும். இவ்வாற்றால் அறிவு விளக்கத்துக்கும் இன்பப்பேற்றுக்கும் அமைந்த வாழ்க்கை துன்பமாய்க் குற்றக்கொள்கலமாய் மாறிவிடுகிறது. குற்றம் பெருகிக் குறை நிறைந்து வறுமையும் பிணியுமுற்று வாடிய நிலையை வாழுமுயிர் எய்துகிறது. காண்பவரும் அதனைக் கேள்வியுறுபவரும் மனம் கரைந்து இரக்கப்படுகின்றனர்.

2173.

     தண்டாத சஞ்சலங் கொண்டேன
          நிலையைஇத் தாரணியில்
     கண்டார் இரங்குவர் கேட்டார்
          உருகுவர் கங்கைதிங்கள்
     துண்டார் மலர்ச்சடை எந்தாய்
          இரங்கிலை தூய்மையிலா
     அண்டார் பிழையும் பொறுப்போய்
          இதுநின் அருட்கழகே.

உரை:

     எந்தாய், பொறுப்போய், நீங்காத சஞ்சலம் கொண்டு வருந்தும் என நிலையைக் கண்டவர் இரங்குவர்; கேட்டவர் நெஞ்சுருகிக் கண்ணீர் விடுவர்; நீ இரங்குகின்றாய் இல்லை; நின்னை நினையாமல் விலகிச் செல்பவர் பிழையையும் பொறுத்தருளும் நின் அருளியலுக்கு இஃது அழகாகாது, அருள் புரிக. எ.று.

     தண்டாத சஞ்சலம் - குறைதலில்லாத துன்பம். சலம் - சுழற்சி; 'சஞ்சலம்' மனத்தின் சுழற்சி காரணமாக உண்டாகும் கலக்கம். அதனால் மொழியும் செயலும் குற்றப்பட்டு விளைவிக்கும் துன்பத்தின் மேலதாயிற்று. சஞ்சலம் என்பது நல்ல சுழற்சி என்று பொருள்படும் வட சொல். தண்டுதல் - குறைதல். அதற்குரிய காரணங்களை விளக்கிக் கூறினால் கேட்குமவர் நெஞ்சுருகிக் கண்ணீர் சொரிவர்; அதுபற்றியே “கேட்டார் உருகுவர்” என்கிறார். உருக்கம் கண்ணீராய் வெளிப்படும் என உணர்க. சஞ்சலத்துக்குக் காரணமான நிகழ்ச்சிகளைக் கண்ணிற் காண்பவர் இரக்கம் மேலிடுவர். திங்கள் துண்டு - தேய்ந்து சிறுகிய பிறைமதி. சஞ்சலம் நீங்காது நிற்றலின் “இரங்கிலை” என்றும், தாயிற் சிறந்த தயாவுடைய நீ அது செய்தற்குரியை என்பார், “எந்தாய்” என்றும் மொழிகின்றார். அண்டுதல் - அணுகுதல்; நின்னை அணுகாமல் விலகிச் செல்பவரை “அண்டார்” என்றும், அண்டாமைக்குக் காரணம் தூய்மையில்லாமை யாதலால், “தூய்மையிலா அண்டார்” என்றும் இயம்புகிறார். காரணகாரியம் நோக்காது துன்பம் கண்டுழிப் பெருகி வெளிப்படுவது அருட்கு அழகாகும். அருளாது தாழ்ப்பது அழகன்று என்பர் “அருட்கு அழகே” என விண்ணப்பிக்கின்றார்.

     (3)