4
4.
உலகநடையின் உயர்வின்மை உரைத்தல்
உலகில் வாழும் உயிரினத்துள்
மாவும் புள்ளும் மரமும் செடியும் புல்லும் பூடும் புழுவும் எனப் பல்வகை உயிர்கள் வாழ்கின்றன. மக்களினமும்
இவற்றின் சூழலில் உடலும் மனமும் உணர்வுமாகிய கருவிகளின் துணைகொண்டு நினைவன நினைந்து மொழிவன
மொழிந்து செய்வன செய்து உடம்பினின்று உயிர் நீங்குங்காறும் இருக்கிறது. இவ்விருப்பு உயிர்
வாழ்வு எனப்படுகிறது. இவ்வாழ்வின்கண், நில முதலிய ஐம்பூதங்களின் வைப்பில் காலந்தோறும்
மாற்றங்கள் உண்டாகின்றன; மாற்றங்கட்கேற்ப வாழ்க்கையும் மாற்றம் பெறுகிறது. மக்களுடைய நினைவும்
செயலும் அதற்கொப்ப மாற்றமடைகின்றன. பொருள் பெருக்க கிடைக்குங்கால் ஒருவகை நினைவும்,
சுருங்கி அருகுங்கால் ஒருவகை நினைவும் தோன்றுகின்றன. பொருட்கு பொருள் நுகர்ச்சிக்குக்
காப்பும் முறையும் செய்யும் அரசுகள் காலத்துங்கேற்ப மாறுகின்றன; மக்கள் வாழ்வும் கலக்கமும் தெளிவும்
மாறிமாறிப் பெற்று மாற்றம் உறுகிறது. இம் மாற்றங்கள் மக்களினத்தையே பெரிதும் தாக்குகின்றன.
காலமேயன்றி இடங்களும் வேற்றுமை எய்துகின்றன. காடு நாடாவதும், நாடுகள் அழிந்து காடாவதும்,
சீறூர் பேரூராவதும், பேரூர் பெரு நகரமாவதும், ஆகாது அழிவதும் இம்மாற்றங்களின் கூறாகும் இம்மாற்றங்கட்கேற்ப
நினைவும் நினைவுகட்கேற்பச் சொற்களும் மாற்றம் எய்தும்; உண்ணும் உணவு வகையும் உடுக்கும்
உடைவகையும் மாற்ற மெய்துகின்றன. இம் மாற்றங்களுக்குத் தக ஒழுக்கம், ஒப்புரவு முதலிய அறவகையிலும்,
பொருள் வினைகளின் செயல்வகை முதலிய பொருள்வகையிலும் பெருமாற்றங்கள் உண்டாகின்றன. இவ்வாற்றல்
மக்களின் உலகியல் வாழ்க்கை நடை இடந்தோறும் காலந்தோறும் வேறுபடுகிறது. இவற்றிற்கு ஒப்பக்
குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் அவரவர் தகுதிக்கும் பண்புக்கும் ஏற்றவாறு நடந்து கொள்வதுதான்
உலக நடை, இதனால் மக்களினத்தின் அறிவும் செயலுமேயன்றித் தொகையும் விரிவும் பெருக்கமும்
அடைகின்றன. நிலத்திடை அத்தகைய மாற்றமும் விரிவும் இல்லாமையால், மக்கட்கு வேண்டும்
விளைவிடைப் போதிய மாற்றம் பிறக்கவில்லை. உண்போர் பெருக்கத்துக் கொப்ப உண்பொருள்
பெருகவில்லை; பொருள் வேட்கையே பெருகி நிற்கிறது. அதனால் உலக வாழ்வில் அல்லலும் அரம்பும்
கவலையும் கையாறும் பெருகி இன்பம் பெறுதற்கு அமைந்த உலகினைத் துன்பநிலையமாக்கியுள்ளன. எல்லோரிடத்தும்
இன்பநாட்ட மிருக்கிறதேயன்றி அதனை இனிது பெற்று “அமைதியோடு உள்ளோம்” என்று நினைக்கும்
மனைநிறைவு இல்லாமை உலக நடையின் உண்மையுருவாக இருப்பதை வடலூர் வள்ளல் தமது அருட்கண்ணால் நோக்குகின்றார்.
தோற்றமும் கேடும், மாற்றமும் மறைவும், வளர்ச்சியும் தேய்வும் உலகியற்பொருளிடை நின்று மென்மைத்
தன்மையைப் போக்கி, நிலையாமையும் பொய்ம்மையும் உலக நடையின் பண்பும் தொழிலுமாதல் விளங்கக்
காண்கின்றார்.
2174. பொய்யாம் உலக நடைநின்று
சஞ்சலம் பொங்கமுக்கண்
ஐயாஎன் உள்ளம் அழலார்
மெழுகொத் தழிகின்றதால்
பையார் அரவ மதிச்சடை
யாம்செம் பவளநிறச்
செய்யாய் எனக்கருள் செய்யாய்
எனில்என்ன செய்குவனே.
உரை: முக்கண்களையுடைய ஐயனே, படமுடைய பாம்பையும் பிறைமதியையும் தாங்கும் சடையனே; செம்பவள மன்ன மேனியையுடையவனே, பொய்யையே பண்பாகவுடைய உலகநடையை மேற்கொண்டு சஞ்சலம் மேன்மேலும் பெருகுவதால் என் உள்ளம் அனலிற்பட்ட மெழுகுபோல உருகித் திண்மை இழக்கின்றது; திண்மையும் செம்மையும் சீரழியாவாறு நீ அருளுதல் வேண்டும்; அருளாயாயின் யான் செய்வகை ஒன்றுமில்லே னாவேன். எ.று.
உலகைப் படைத்து அதன்கண் வந்து வாழச் செய்பவனாதலின் சிவனை “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” என்று மணிவாசகப்பெருமான் கூறிக்காட்டுதலால், அடிகளார் “முக்கண் ஐயா” என்று குறிக்கின்றார். உலகியல் வாழ்வு இனிது இயலுதற் கின்றியமையாத ஞாயிறு திங்கள் நெருப்பு ஆகிய மூன்றையும் கண்களாகக் கொண்டானாதலால் உலக நடைக்கும் முதல்வன் என்று குறிப்புப் புலப்பட இவ்வாறு கூறுகின்றார். உலக நடையிற் காணப்படும் மாற்றமும் மறைவும் மெய்பெறப் பற்றற்கின்றிப் பொருளனைத்தும் பொய்யெனச் செய்தலின் “பொய்யாம் உலகநடை” என்று புகல்கின்றார். “கண்டன மறையும் உண்டனமலமாம் பூசினமாசாம், புணர்ந்தன பிரியும், நிறைந்தன குறையும், உயர்ந்தன பணியும், பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்றொன்று ஒருவழி நில்லா” என்று உலகநடையின் பொய்ம்மையைப் பட்டினத்தடிகள் (கோயில். நான் 28) கூறுவது காண்க. சலம் என்பது சலித்தல் என்னும் பொருளது; சஞ்சலம் தங்குதடையின்றி நன்கு அசைவது; மனத்தின் சஞ்சலம் மிக்க பெருந்துன்பத்தை விளைத்தல்பற்றி துன்பமிகுதியைச் சஞ்சலம் என்பது வழக்காயிற்று. கணந்தோறும் மாறும் உலகநடையில் நிற்பார்க்கு மனநினைவில் மாற்றம் தோன்றி மாளாத் துன்பம் எய்துவித்தலால் “பொய்யாம் உலகநடை நின்று சஞ்சலம் பொங்க” என்று கூறுகின்றார். குளிர்ப்பால் நன்கு இறுகியாதாயினும், அழல்பட்டதும் மெழுகு திண்மையிழந்து நீராய் உருகியோடுவதுபோல “என் உள்ளம் அழலார் மெழுகு ஒத்து அழிகின்றதால்” என்று இயம்புகின்றார். துன்பம் சுடும் இயல்பிற்றாதலால், “சஞ்சலம் பொங்க” உள்ளம் திண்மையிழந்து அழிகிறது என்று உரைக்கின்றார். “துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” (குறள்) என்பதால், துன்பத்தின் சுடுதற் றன்மையறிக. உள்ளம் உருகுகிற தென்னாமல் “அழிகின்றதால்” என்றுது, “அழிந்தது பயன்படாது” என்ற உலகுரை பற்றி மெழுகு குளிர்ப்பால் கற்போல் இறுகியிருப்பினும் என்ற உவமையாற்றலால் மனம் கல்வி கேள்வி அறிவுகளால் திண்மை பெற்றிருப்பினும் சஞ்சலம் பொங்கியவழித் திண்மையழிந்து சிதைவுறும் என அறிக. இங்ஙனம் சிதைவுறாமல் உள்ளம் செம்மை நெறிக்கண் நிற்றற்குத் தண்ணிய நின் அருளே வேண்டியது என்றற்கு எனக்கு அருள் செய்க என்று வேண்டுகிறார். அருள் செய்யாவிடின் சிந்தை சிதையும்; செம்மை சீர்குலையும்; நினைவு தடைப்படும்; அதன் வழி நிற்கும் மொழியும் மெய்யும் செயல்படா; வேறு கருவி இல்லாமையால் ஒன்றும் செய்யேன் என்பாராய், “என்ன செய்குவேன்” என்று முறையிடுகின்றார். பவளத்தின் செம்மை சிவமாந் தன்மையை யுணர்த்த, விடந்தங்கிய பாம்பையும் மெல்லிய பிறையையும் முடியில் தாங்கியது கொடும்பாடரையும் எளியரையும் அருள்செய்தருளும் பெருஞ்செயலைக் சுட்டி நிற்கின்றன.
இத்தகைய பெருவள்ளலாகிய நீ எளிய எனக்கு அருளல் வேண்டுமென்பது இதனாற் போந்த பயன். (4)
|