பக்கம் எண் :

5

               6. திருவருள் விளக்கம் எய்தாமைக்கு காரணம் யாதாகலாம் என எண்ணிய வடலூர் வள்ளல், தம்பால் உள்ள குறைகளை நாடியறிகின்றார். சைவ விரதங்களை நினைக்கின்றார்; அவற்றைத் தாம் மேற் கொள்ளமாட்டமை புலனாகிறது; அதற்குக் காரணம் நோக்கினவர், அதற்குரிய செறிவும் தமது உள்ளத்தில் இல்லாமை அறிகின்றார்; நெஞ்சத்தில் திண்மையும் தெளிவும் இறைவன் திருநடனத்தால் உண்டாவன; அவையின்வையால் திருக்கூத்தின் நிகழ்வில்லை எனக் கருதுகிறார். திருக்கூத்து நிகழவேண்டுமாயின் இறைவன்பால் எனக்கு மிக்க நட்பிருத்தல் முறையாகும்; அஃது இல்லாமையால் இறைவனை நாடுதற்கு இடம் வாயாதாயிற்று; இறைவனே, இதனைச் சிறிதும் நின் திருவுள்ளத்தில் எண்ணி வருந்தி இரக்கம் கொள்ளவில்லை என இரங்குகின்றார்.

2175.

     விடமிலை யேர்மணி கண்ணாநின்
          சைவ விரதஞ்செய்யத்
     திடமிலை யேஉட் செறிவிலை
          யேஎன்றன் சித்தத்துநின்
     நடமிலை யேஉன்றன் நண்பிலை
          யேஉனை நாடுதற்கோர்
     இடமிலை யேஇதை எண்ணிலை
          யேசற் றிரங்கிலையே.

உரை:

     கடல்விடத்தை அருந்தினமையால் அழகிய நீலமணி போன்ற கழுத்தையுடைய இறைவனே, நின் அருட்பேற்றுக்குரிய சைவ விரதங்களை மேற்கொண்டு ஆற்றுதற்கு எனக்கு உடலில் திடமில்லை; உள்ளத்தில் அடக்கமில்லை; என் சிந்தையாகிய மன்றின்கண் நினது ஒளிமிக்க திருநடனம் இல்லை; இவ்வாற்றால் உன்னையே நாடி அருள் பெருதற்கு இடமில்லை; ஆகவே, பெருமானே எனது இந்நிலையை நீ எண்ணவில்லை; அதனால் திருவுள்ளத்து ஏசறவுற்றுச் சிறிதும் இரங்கினாயில்லை; யான் என் செய்வேன். எ.று.

     கடல்விடத்தை உண்ணுதலின்றித் திருமிடற்றின் கண் தங்கி நீலமணிபோல நிறமும் ஒளியும் கொண்டு அழகு செய்யும் குறிப்புப் புலப்பட “விடம் மிலையேர் மணிகண்டா” எனச் சிறப்பிக்கின்றார். மிலைதல் - அணிதல். மணிக்கு ஏர், ஒளியும் நிறமும் உடைமை. “நலத்தகை நல்லவர்க்கு ஏர் புலத்தகை” (1304) எனத் திருக்குறள் ஒதுவது காண்க. சைவ விரதம், சிவநெறிக்குரிய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தொழுகல், நீறணிதல், அக்குமணி யணிதல், திருவைந்தெழுத் தோதல், சிவபூசை செய்தல், திருமுறை யோதல், திருக்கோயில் வழிபாடு முதலியனவாகும். இவற்றை நாடோறும் வழுவாமற் செய்தற்கு உடல் வளமை இன்றியமையாமையின், “சைவ விரதம் செய்யத் திடமில்லை” எனத் தெரிவிக்கின்றார். இவ் விரதங்கள் இழுக்காது இடையறவின்றி நடத்தற்கு மனத்தின்கண் திண்மையும் அடக்கமும் வேண்டப்படுகின்றன; இல்லாதார் மேற்கொள்ளும் சைவ விரதம் போலியாய் ஆகுல நீரவாகின்றன. அது கருதியே, “உட்செறிவலை” என இசைக்கின்றார். மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணுதலும், அவர்பால் உயர்வு தாழ்வு கருதாது அவரது உள்ளத்தே சிவத்தைக் காண்டலும் உற்றுழி யுதவுதலும் அவரால் உறுகண் உண்டாயவழிப் பொறுத்தலும் உடையார் உள்ளத்தே அருளொளியும் அறம்புரி தூய்மையும் நிறைந்து அறிவம்பலமாதலின், அங்கே சிவபரம் பொருள் திருநடம் புரிந்து ஞானநலம் புரிவது உண்மையாதலால், “என்றன் சித்தத்து நின் நடம் இலையே” என விளம்புகின்றார். தமது சிவபூசை முடிவில் சேரமான் பெருமாள் சிவபெருமான் திருவடிச் சிலம்போசை கேட்டார் என்ற வராலறு இதற்கு எற்றதொரு மெய்ம்மைச் சான்றாகும், “புரிந்தவன் ஆடின் புவனங்கள் ஆடும்; தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை” (திருமந். 2786) என்பது சித்தத்து நடனம். சித்தத்தில் சிவத்தின் திருநடம் நிகழ்வது இயற்கை நிகழ்ச்சி; உயிர்கள் அறியினும் அறியா தொழியினும் அந் நடனம் நடந்து கொண்டேயிருப்பது. அன்புடையார், அன்புக் கண் கொண்டு நோக்குமிடத்து அறிவர். அந்த அன்பு என்பால் இல்லையே என்ற அலமரல் புலப்பட, “உன்றன் அன்பில்லை” என உரைக்கின்றார். அன்பும் அதனால் உளதாகும் தொடர்பாகிய நண்புமே சிவனை நாடியடைதற்குப் பற்றுக்கோடு; அஃது இன்மையுரைத்தற்கு, “உனை நாடுதற்கு ஒர் இடமிலையே” என இரங்குகின்றார். என் இந்த அவல நிலையை நின் திருவுள்ளத்தில் எண்ணவில்லை என வெளியிடுதலால் “இதை எண்ணிலையே” என இயம்பி, சிறிது அருள் புரியவேண்டும்; அது செய்யாமை நன்றறெனற்குச் “சற்று இரங்கிலையே” எனக் கூறுகின்றார். இதனால், எனது எளிய நிலையைத் திருவுள்ளத்திற் கொண்டு அருளுதல் வேண்டுமெனப் பரவுகின்றார்.

     (5)