பக்கம் எண் :

6

5. சிவவுருச் சிறப்பு 

      சிவபரம் பொருளின் உருநிலையை இன்னதன்மைத்து என உணரவோ உரைக்கவே வாராதது என அருளறிவு முதிர்ந்த பெரியோர் பொதுவாகச் சொல்லியும் பாடியும் பரவுவர். அப்பெருமக்கள் பாடும் முறைறையும் நெறியையும் காண்போமாயின் ஒரு வகையில் அடங்குகிறதன்று. ஒரு முறை பற்றிப் பாடுவது போலத் தொடங்கும் அவரது உள்ளம், ஒரு சில பாட்டுக்கள் கடந்ததும், ஏதோ தேவுமால் கொண்டது போல மேற்கொண்டு போந்த நெறியினின்றும் மாறிப் பல தலையான போக்கில் பாட்டுக்களை அள்ளிச் சொரிகிறது. சொற்களே அடுக்கி வருவதும், அணி நலம் கனியும் முறையில் சொல்லணிகள் குழுமி நிற்பதும். சொல்லின் இனிய ஓசையே நோக்கிச் செல்வதும், பொருளுலகச் சுவை கனிந்த சொற்பொருளை வியந்து சொரியும் பாட்டுள்ளம் பொருளும் சொல்லும் கடந்து தத்துவ வானிற் புகுந்து கருத்துக்கு எட்டாத அளவில் பறந்து அங்கே தம் அருட் கண்ணுக்கல்லது திட்டவட்டமாகப் புலப்படாத பொருள்களை இருகையாலும் அள்ளியெடுத்து வழங்குவாரைப்போலச் சிறந்த செய்யுட்களை ஓதி உவகையுறுவதும் பெரிதும் காணப்படுகின்றன. படிக்கும் மனத்துக்கும் கேட்கும் செவிக்கும் தம்மயறியாத ஒரு பெருமிதம் தோன்றி இன்பம் செய்கிறது. மனக் கண்ணில் சில பாட்டுக்கள் சிவத்தின் உருநலத்தைக் காட்ட, சில உணர்வு வடிவாகச் சிறக்குமொரு திப்பிய வடிவத்தைக் காட்டுகின்றன. உணர்ந்தின்புறத் தகுவனவும் உரைத்து இன்புறத் தகுவனவு மாவன எனப் பெருகிவருவது இங்கே காணப்படுகிறது. 

      வடலூர் வள்ளலின் திருவுள்ளம் சிவனை நினைக்கின்றது. விண்ணுலகும் வெள்ளிமலையும் உள்ளத்தில் காட்சி தருகின்றன. அங்கே சிவனது திருவுருவம் தோன்றுகிறது. திருமுடியிற் செஞ்சடையும் திங்கட்பிறரையும் நெற்றியில் திருக்கண்ணும் தோன்றுகின்றன. எல்லாம் அருளுருவாய் மாறுகின்றன. கண்களில் திருவருள் ஒழுகுகிறது; எங்கும் எல்லாம் இனிய பண்ணும் இசையுமாய்ப் பரவி நிற்கின்றன; நாற்றிசையும் பட்டுடை பொலிகிறது. சிவன் திருமேனியில் இடப்பக்கலில் உமாதேவியின் அருளுருத் தோன்றுகிறது. அதே நிலையில் பிட்டினைப் பிசைந்து அன்பு தவழ நோக்கி ஆர்வத்தோடு நல்கும் வந்தியின் திருவுருவம், அதனை ஆவல் பெருக வாங்கியுண்ணும் அண்ணலின் வண்ணவுருவும் தோன்றி இன்பம் செய்கின்றன. இன்பம் நிறைந்த செல்வநிலை உள்ளத்தில் நிறைகிறது. இதனை ஆர்வமுடன் பாடுகின்றார் நம் அருட்சோதி அண்ணலார்.

2176.

     விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை
          யாய்மதி மேவுசடைக்
     கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை
          யாய்அருட் கண்ணுடையாய்
     பண்ணுடை யாய்திசைப் பட்டுடை
          யாய்இடப் பாலில்அருட்
     பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை
          யாய்என் பெருஞ்செல்வமே.

உரை:

     விண்ணுலகை யுடையவனே; வெள்ளிமலைமேல் இருப்பவனே; பிறை பொருந்திய சடையும் நெற்றியிற் கண்ணும் உடையவனே; அருளொழுகும் பொருட் கண்களையுடையவனே; பண்ணுறப் பாடுபவனே; பட்டுடையும் அணிபவனே; அருளுருவாகிய தேவியை இடப்பாலில் உடையவனே; வந்தி தந்த பிட்டை உண்பவனே; அடியார்கட்குப் பெருஞ்செல்வமாய்ப் பிறங்குபவஷேன, அருள்புரி எ.று.

     எந்நிலத்தில் வாழும் எத்திறத்தோரும் இறைவனை நினைக்கும் போதும் அவன் திருவருளைப் பெற விழையும்போதும் தம்மை அறியாமலே வானத்தை நோக்கி வழிபடுவது இயல்பாகவுளது. இருகையும் எடுத்துத் தலைமேல் உயர்த்தி விண்ணகத்தையே நோக்குகின்றனர். இறைவன் மேலே வானத்தில் இருக்கிறான் என்றோர் உணர்வு எல்லோர் மனத்திலும் இருப்பதே இதற்குக் காரணமாகும். அதனால் எல்லாமாய் அல்லதுமாய் இருக்கின்ற உன்னை இறைவனே யான் என் சொல்லி வாழ்த்துவேன் என முறையிடும் மணிவாசகப் பெருமான் “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி,” என்றே தொடங்கிப் பாடுகின்றார். அதுபோலவே அடிகளார், “விண்ணுடையாய்” என வேண்டுகிறார். நிலவுலகின் நடுவில் நிற்கும் பெருமலை இமயமலை என்பதாம். அதன் குழுவில் பொன்னிறங்கொண்ட நெடுமுடியும் வெண்ணிறங் கொண்ட கொடுமுடியும் உடைய மலைகள் உள்ளன. வெண்பனி மூடியதை வெள்ளிமலை என்றும், பொன்பனி மூடியதைப் பொன்மலை என்று பௌராணிகர் கூறுவதுடன், பொன்மலையடியில் நின்று காண்பவர், அவர்கள் மொழியில் காஞ்சன சிருங்கம் என்றே கூறுகின்றார்கள். வெண்பனியே மூடி உயர்ந்து தோன்றும் நெடுமுடியைக் கயிலைமலை எனவும் வெள்ளி வெற்பெனவும் வியந்து புகழ்கின்றனர். வானத்தைத் தொடுவதுபோல நிற்கும் இம் மலைகளின் நினைவு வானத்தை அடுத்து மண்ணை நோக்குவார்க்கு வருவது பற்றி விண்ணகத்தே நினைந்த மனம் வெள்ளி வெற்பில் தங்குதலால் “வெள்ளி வெற்புடையார்” என விளம்புகின்றார். வெள்ளிமலைமேல் வீற்றிருக்கும் சிவன் திருமுடிமேற் சடையும் அதன்மேல் திங்கட்பிறையும் தோன்றுவது மனக்கண்ணில் மாண்புற்றுக் காட்சி தருவதுபற்றி, “மதி மேவு சடைக் கண்ணுடையாய்” எனப் பாராட்டுகிறார். கண்ணுடைமை போலப் புரிக்கப்பட்ட சடையாதலால், “சடைக்கண் உடையாய்” எனல் வேண்டிற்று. ஏனை யாவர்க்கும் இல்லாமல் எல்லாவற்றையும் எஞ்சாமல் அறியும் இரு கண்ணும் போலவன்றி நெற்றியின்கண் இருந்து செயற்கறிய செய்யும் செவ்விழியாய் விளங்குவதுபற்றி, “நெற்றியிற் கண்ணுடையாய்” எனச் சிறப்பிக்கின்றார். “கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம்” என்பர் திருவள்ளுவர். அக்கண்ணோட்டமும் மிக்க வழிக் கழிகண்ணோட்டமாய்த் தீங்கு பயக்கும் என்பர்; ஆனால் அன்பின் முதிர்வாற் பிறந்து அனைத்துயிர்க்கும் தன் அருள் மிகுதியால் அறமும் இன்பமும் பயக்கும் அருளையே கண்களாகவுடைய முதல்வர் சிவன் எனல் வேண்டி “அருட்கண் உடையாய்” எனப் பரவுகின்றார். தமிழ் இசைக்குப் பண் அகம் என்றும், பாட்டுப் புறவுரு என்றும் கருதுமாறு “பண்ணுளீராய்ப் பாட்டு மானீர்” என நம்பியாரூரர் கூறுவர். பாட்டின் அகமாய பண்ணைத் தனக்குக் கோயிலாகக் கொண்டமையின், “பண்ணுடையாய்” என அடிகளார் உரைக்கின்றார். தோலாடையும் தோற்போர்வையுமுடையராயினும் “பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன்றார்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம் சிட்டராய்த் தீயேந்திச் செல்வர்” எனவும், “பட்டுடுத்துப் பவளம்போல் மேனியெல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு” எனவும் நாவுக்கரசர் கூறுவது நினைவுகூர வேண்டுவதாம். திசை நான்கும் ஒளிதிகழ விளங்குதலின் “திசைப்பட்டுடையாய்” என்றார். இனி, திசையுடையாய், பட்டுடையாய் எனப் பிரித்துரைத்தலும் ஒன்று, திசையெட்டும் அப் பெருமானுக்குக் கைகளாக உரைக்கபடுவதுண்மையின் திசையைக் கூறினார் என்பதும் உண்டு. சிவபெருமானுக்கு, “உயர்வான் விசும்பே உடம்பு, வேதம் முகம், திசை தோள், மிகுபன் மொழி கீதம்” (பொன்வண். 19) எனப் பெரியோர் உரைப்பது காண்க. உமையம்மையொடு ஒருங்கிருந்து புகழ்பரப்பும் பரமன் மண்ணகம் போந்து வந்தி யொருத்தியின் பிட்டுக்கு நயந்து மனம் வைத்தான் என்பதை நினைந்து உருகுகின்றராதலால், வள்ளலார் மனம் கனிந்து, “வந்திப்பிட்டுடையாய் என் பெருஞ்செல்வமே” என வேண்டுகின்றார்.

     இதனால், பரம்பொருளை நினைந்து உருகிப் பெருகி வரும் அன்பு நீர் வடிவில் இப்பாட்டைப் பாடி வள்ளலார் நமது மனத்தை இறைவன் திருவருளில் தோய்விக்கும் திறம் சிறந்து நிற்பது காண்க.

     (6)