பக்கம் எண் :

7

    7. இறைவனது திருவருட்கு உண்மை நிலைமாய் இருப்பது அவனுடைய திருவடி; அருள் வேண்டுவார்க்கு அதுவே பற்றுக் கோடாதலை வற்புறுத்துகிறார் வடலூர் வள்ளல்; அதுவன்றி வேறின்மை தோன்ற ஆர்வமொழிகள் பல தொடுத்துப் பாடுகின்றார்.

2177.

     விடையுடை யாய்மறை மேலுடை
          யாய்நதி மேவியசெஞ்
     சடையுடை யாய்கொன்றைத் தாருடை
          யாய்கரம் தாங்குமழுப்
     படையுடைய யாய்அருட் பண்புடை
          யாய்பெண் பரவையின்பால்
     நடையுடை யாய்அருள் நாடுடை
          யாய்பதம் நல்குகவே.

உரை:

     விடையும், மறையாகிய உடையும், நதிமேவிய சடையும், கொன்றைத்தாரும் மழுப்படையும் உடைய பெருமானே, அருட்பண்பும் பெண்ணாகிய பரவைபால் தூது நடக்கும் அருள் நடையும் அருள் நாடும் உடையாய், உன் திருவடியை நல்குக. எ.று.

     ஏறுதற்கு ஊர்தியாகக் கொண்டது எருதாதலின், சிவனை ஆர்வத்தோடு பரவுகின்றவர், “விடையுடையாய்” என உரைக்கின்றார். மறை - வேதங்கள். அவற்றின் உட்பொருளாவதுடன் உச்சியிலும் இருந்து ஞானவொளி தருவது விளங்க “மறைமேல் உடையாய்” எனக் கூறுகின்றார். நதியென்றது கங்கையாற்றை, மின்போல் ஒளி செய்வதாயினும், சிவனது சடை கங்கையின் பெருக்கைச் சுருக்கி ஆற்றலை ஒடுக்கித் தனக்குள் அடக்கி உலகு இன்புற்று வாழ்தற்கமைந்த செந்நெறிக்கண் நிறத்த செம்மையுடைமை விளங்க, “நதி மேவிய செஞ்யுடையாய்” எனப் புகழ்கின்றார். தன் மேனியின் பொன்னிறத்துக்கும் சடையினது மின்னிறத்துக்கும் ஒப்ப, மாலையும் கிடந்து அழகு செய்வதை விரும்பினான் போலச் சிவன் கொன்றையை அணிந்து கொண்டான் என்றற்குக், “கொன்றைத் தாருடையாய்” எனவுரைக்கின்றார். தார் - சிவனுக்கு அடையாளமாலை. கைகளிற் சூலப்படை யேந்துவது ஒரு பாலாக மழுப்புடையேந்துவது ஒருபால் இயற்கையாகும். அது மாறாமை புலப்பட “கரம் தாங்கு மழுப்படையுடையாய்“ எனக் கூறுகின்றார். விடை முதலாக மமுப்படை யீறாக இதுகாறும் பொருளே மொழிந்த வடலூர் வள்ளலார் அப் பெருமானுடைய பண்புடை நலங்களை எடுத்துரைக்கின்றார். சிவனுக்கு 'ஈசன்' என்பது சிறப்புடைப் பெயராகும். எல்லாத் தேவர்களையும் பொதுவாக ஈசன் என்பது உண்டு, ஐசுவரியம் உடையவன் ஈசுவரன். அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் என்பர் திருவள்ளுவர். அச் செல்வத்தாற் சிறப்பது குறித்துச் சிவனை ஈசன் என்பர். அருட்செல்வம் பொருள்மேல் நில்லாது பண்பாதலின், “அருட் பண்புடையாய்” என அறிவிக்கின்றார். மக்களினத்தில் அருட்பேற்றுக்கு எளிதில் உரியராகுபவர் பெண்மக்கள். அவருள்ளும் ஒருவற்க்கு உரிமை மனைவியாகுபவர் பிறரின் மேன்மையும் வன்மையும் உடையவர். பரவையார் அவ்வினத்த வராகாது உருத்திர கணிகையாராயினமையின், அவர் புலவியால் மெலிவுற்றமை கண்டு, இறைவன் அருள் பெருகிக் தூது நடந்தமைப் புலப்பட, “பெண் பரவையின்பால் நடையுடையாய்” என நவில்கின்றார். நடந்தது, நடை; புலவிமிகுந்து அன்புறவுகெடாமை மனைவாழ்வு அமைவது நன்னடை என்ற நயம் புலப்பட “நடையுடையாய்” என வள்ளலார் வழங்குவது இன்பம் செய்கிறது.

     நாடா வளமுடைய நாடு அருள்விளையும் நாடு; அதற்குரிய செல்வத்தலைவன் சிவன். ஆதலால், “அருள் நாடு உடையாய்” என அறிவிக்கின்றார். எல்லாவுயிர்க்கும் தலைவனாய் அவற்றால் எஞ்ஞான்றும் விரும்பப்படுவது அவற்கு இயல்பாதல்பற்றி, “அருள் நாடு உடையாய்” என்று இரட்டுற மொழிதலாக உரைத்தார் என்பதும் உண்டு. இங்ஙனம் ஆர்வத்தோடு பலவகையாற் பரவியது திருவருள் நிலையமாகிய திருவடியாகலின், “பதம் நல்குகவே” எனப் பரவுகின்றார். அது சிவபதமாதலும் விளங்க இவ்வாறு கூறுகிறார். இதனால், திருவடியே வேண்டப்படும் திறம் கூறியவாறாம்.

     (7)