8
8. உலகியற் பொருளுடையார்க்கு ஆட்பட்டுழலுவதால் மனவமைதி பெறாது வருந்தும் மக்களைக் காண்கின்ற
வடலூர் வள்ளல், திருவருட் செல்வனாகிய சிவனுக்கு ஆட்படுவது நன்றென்று தெளிந்து, அம்மக்கள்
பொருட்டுத் தன்மை ஆண்டருள வேண்டுகின்றார்.
2178. கீளுடை யாய்பிறைக் கீற்றுடை
யாய்எங் கிளைத்தலைமேல்
தாளுடை யாய்செஞ் சடையுடை
யாய்என் தனையுடையாய்
வாளுடை யாய்மலை மானுடை
யாய்கலை மானுடையாய்
ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை
யாய்என்னை ஆண்டருளே.
உரை: கீள் உடையும், பிறைக் கீற்றும், திருவடியும், செஞ்சடையும், மலைமகளும், கலைமானும் உடையவனே, அடியார்களை ஆட்கொள்வதும் மன்றின்கண் ஆடுவதும் உடைய பெருமானே, அடியனாகிய என்னை ஆண்டருள்க. எ.று.
கீள் - உடுக்கும் உடையிற் கிழிந்த அரைஞாண் துணி; உடையின் கூறாதல்பற்றி அது “கீளுடை” எனப்படுகிறது. “சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீள்உடையும் கொண்ட உருவம் என்கொலோ” என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. கீறுபோல் நுணுகியிருக்கும் நிலையில் பிறைத் திங்கள் “பிறைக் கீற்று” எனப்பட்டது. பிறைக் கீற்றை முடியிற் சூடி மேலும் தேயாவாறு ஆட்கொண்ட செயலை நினைப்பிக்குமாற்றால், வள்ளலார், “பிறைக் கீற்று உடையாய்” எனப் பரவுகின்றார். சிவனது திருவடி நீங்காச் சுற்றமாய் அவனையே நினைந்தொழுகுவோர் திருமுடி மேற் பொலிந்திலங்கும் திருவடி என்றற்கு “என்கிளைத் தலைமேல் தாளுடையாய்” என மொழிகின்றார். அடித்தொண்டு மேற்கொண்டு பிரியாது சுற்றும் அன்பர்களை “இளங்கிளைச் சுற்றம்” என்று நம்பியாரூரர் கூறுவர். அது கொண்டு “எம்கிளைத் தலைமேல் தாளுடையாய்” எனவுரைக்கின்றார். கங்கையைத் தாங்கிய செம்மைப் பண்பும் நீங்காது விளங்குதல் தோன்ற, “செஞ்சடையுடையாய்” எனச் செப்புகின்றார். சிவனை நினைக்கையில் அவன் அடி நினைந்திருக்கும் தம்மை நினைவுறுத்தற்கு “என்தனையுடையாய்” என இயைக்கின்றார். வாள் - அருளொளி; மழுவாளுமாம். மக்களுயிரின் மலவிருள் கெடுத்தல் கடனாதலால் அதனை இடையறாதுடைமை விளங்க, “வாளுடையாய்” எனல் வேண்டிற்று. மலையரையற்கு மகளாகவும் மான்போல் விழியுடையளாகவும் விளங்குவது பற்றி உமாதேவியை, “மலைமான்” என்றும், கையிலோர் விலங்காகிய மானை ஏந்துவது நினைந்து “கலைமான் உடையாய்” என்றும் கூறுகின்றார். கீளுடை முதல் கலைமான் ஈறாகவுள்ள பலவும் கூறியது, ஆண்டு அருள் புரியும் நலம் குறித்தே என்பது மறவாமை விளங்க “ஆளுடையாய்” எனப் புகழ்கின்றார். மன்னுயிர்கள் மண்ணில் வாழ்வது வேண்டித் திருமன்றில் ஆடல் புரிகின்றானாதலின், “மன்றுள் ஆட்டுடையாய்” என மகிழ்ந்து பரவுகின்றார். இப் பாராட்டின்பத்தின்கண் தாம் வேண்டிய திருவருளை மறவாமை தோன்ற, “என்னை ஆண்டருள்” என வுரைக்கின்றார்.
இதனால், என் தலைமேல் தாளுடையனாகவும், என்னை உடையனாகவும் விளங்கினாயாதலால், என்னை அண்டு இடையறா இன்பம் எனக்கு உண்டாமாறு அருள்க என முறையிடுவது பயனாம். (8)
|