பக்கம் எண் :

218.

    அழியாப் பொருளே யென்னுயிரே
        அயில்செங் கரங்கொ ளையாவே
    கழியாப் புகழ்சேர் தணிகையமர்
        கந்தா வுன்ற னாறெழுத்தை
    ஒழியா மனத்தி னுச்சரித்திங்
        குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
    பழியா வின்ப மதுபதியும்
        பனிமை யொன்றும் பதியாதே.

உரை:

     கெடாத புகழ் பொருந்திய தணிகைப் பதி மேவும் கந்தனே, நித்தப் பொருளே, என் உயிர் போன்றவனே, வேலேந்திச் சிவந்த கையையுடய ஐயனே, ஒழிவின்றிச் சிந்திக்கும் இயல்புடைய மனத்தினால் உனது ஆறெழுத்தை உச்சரித்துத் திரு வெண்ணீற்றை யணிந்து கொண்டால் குற்ற மில்லாத ஞானனந்த முண்டாகும்; நடுக்கம் செய்யும் துன்பம் யாதும் வந்தடையாது, காண், எ. று.

     முருகப் பெருமான் அனாதி நித்த சித்துருவனாகலின், “அழியாப் பொருள்” என வுரைக்கின்றார். “பெம்மான் முருகன் பிறவான் இறவான்” (கந்த) என அருணகிரி நாதர் உரைப்பது காண்க. உயிர்க்குயிராயிருந்து வாழச் செய்தலால், “என்னுயிரே” என்றும், துன்பம் கடியும் சத்திவேற் படையை ஏந்தும் தகைமையுடைய பெருமானாதல் இனிது விளங்க, “அயில் செங் கரங்கொள் ஐயாவே” என்றும் போற்றுகின்றார். உலகம் பொன்றுங்கால் உடன் பொன்றி யழியும் இயல்புடையது உலகர் புகழாதலால் முருகன் புகழைக் “கழியாப் புகழ்சேர் தணிகையமர் கந்தா” என்று சிறப்பிக்கின்றார். எஞ்ஞான்றும் யாதானுமொன்றைச் சிந்திக்கும் தன்மையதாகலின், மனத்தை நெறிப்படுத்தி எப்போதும் முருகன் ஆறெழுத்தை நினைத்தல் இன்றியமையா தென்றற்கு, “ஒழியா மனத்தின் உச்சரித்து” எனப் புகல்கின்றார். மனம் நினைப்பதும், மெய் திருநீற்றை யணிவதும் உடனிகழ்ச்சி யாதலைப் புலப்படுத்தற்கு, “உயர்ந்த திருவெண்ணீ றிட்டால்” என அடுத்துவரக் கூறுகிறார். தீ நெறி வந்த சிற்றின்பம் பழிக்கப்படுதல் பற்றி, முருகனது திருவருளின்பம், பழியா இன்பம்” என்றும், அது கணிகமாய் நின்று நீங்குவதின்றி நிலையுறும் என்றற்கு, “இன்ப மது பதியும்” என்றும் இயம்புகின்றார். பனிமை - துன்பத்தால் உளதாகும் நடுக்கம். “நரைமுக வூகம் பரர்ப்பொடு பனிப்ப” (குறுந். 249) என வருவதறிக. முனிதல், முனிமை (சீவக. 1609) என வழங்குவது போலப் பனித்தல் பனிமை என வந்தது.

     இதனால் ஆறெழுத்தை ஓதித் திருவெண்ணீ றிட்டால் பழிப்பில்லாத ஞான வின்பம் உண்டாகும் என்பதாம்.

     (8)