பக்கம் எண் :

10

       10. கண் காது முதலிய கருவிகளால் காணப்படும் பொருள்களை உடனிருந்து கண்டு தனக்குள் ஒடுக்கும் மனம், வேண்டும்போது உயிரறிவுக்குக் காட்டி உணர்வு பெருக்கி நுண்மையும் திண்மையும் வன்மையும், உரமும், கூர்மையும், சீர்மையும் பெறுவிக்கும். இச் செயலில் புறத்தே கண்டது சிறிதாயின் பெரிதாக்கியும், பெரிதாயின் சிறிதாக்கியும்; குறுகியதை நெடிதாக்கியும், நெடியதைக் குறுக்கியும், இவ்வாறே விரிந்ததைச் சுருக்கியும் சுருக்கியதை விரித்தும் தெரிவிப்பது மனத்தின் இயல்பு. இதனை மனக்கற்பனை என்பது வழக்கம். மனத்தின்கண் பொறிவாயிலாக நிறையும் காட்சிகளின் மிகுதி குறைவுகளையும், பெருமை சிறுமைகளையும், வன்மை மென்மைகளையும் பொறுத்துளது மனத்தின் கற்பனை வளம்; இதனை மானதக்காட்சி வளம் என்பர். அதன் வளமையையும் மெய்ம்மையையும் தூய்மையையும் சார்ந்து உயிருணர்வு நுட்பமும் ஒட்பமும் திட்பமும் எய்துகிறது; பொருளின் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றைத் தெரிந்து தெளிகிறது; அதன் ஆக்கக் கூறுகளைப் பிரித்தும் கூட்டியும் வகுத்தும் தொகுத்தும் நோக்குகிறது; இவ்வாறு தான் கண்ட உணர்வுகளை இடத்தோடும் காலத்தோடும், காரண காரியங்களோடும், இயைத்துத் தொடர்பு படுத்துகிறது. தொடர்புகளும்,செய்பவன் செயல் எனவும், செய்பவனும் செயப்படுபொருளும் எனவும், செய்வினையும் கருவியும் எனவும், காரணமும் காரியமும் எனவும், ஒப்பும் ஒம்பின்மையும் உடையது எனவும், இடமும் இடத்துநிகழ் பொருளும் எனவும் பலவேறு வகையில் இயலுகின்றன. இங்ஙனம்பெருகிச் சிறக்கும் உயிருணர்வு கல்வி கேள்விகளாலும் வாழ்க்கை யனுபவத்தாலும் பேருணர்வு எனப்படும் புலமையால் பொற்புடைய தாகிறது. கல்வி கேள்விகளால் பெறப்படுவன பிறர் வாழ்ந்து கண்டதும் கற்பனைக் காட்சிகளும் என்ற இரண்டு கூறுகளில் அடங்கிவிடும். கல்வி கேள்விகளால் உளதாகும் செயற்கையுணர்வும், வாழ்ந்து காண்பதால் உளதாகும் இயற்கையுணர்வும் கலந்து உயிருணர்வை உண்மை யுணர்வாக்குகின்றன. அதனை யுடையவனையே உலகம் அறிஞன் எனப் போற்றிப் புகழ்கிறது. எப்பொருள் எத்தன்மைத்தாயினும், யார் யார் வாய்க்கேட்பினும், மெய்ம்மை காண்பதிலேயே அறிஞன் அறிவு செயல்படுகிறது என்று திருவள்ளுவர் தெளியக் காட்டுகிறார். 

      இங்ஙனம் வளர்ந்து சிறக்கும் உயிரறிவுக்கு வளர்ச்சி நல்கும் பெருங்கருவி உடம்பு; “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்; திடம் பெற மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்று திருமூலர் தெளிவுறுத்துகிறார். உடம்புக்கு வன்மை மென்மை, நலம் தீங்கு என இருவகை நிலை அதன் வளர்ச்சியிடை யுண்டாகின்றன. வன்மை மென்மைகட்கு ஈன்றோர் உடற்கூறும் உண்ணும் உணவு வகையும் பெருங் காரணமாகும். நலம் தீங்குகட்கு வளரும் முறையும் சூழ்நிலையமைவும் தலையாய காரணமாகும். இந்நிலைகள் உடம்பினுள் உறையும் உயிரின் உணர்வு வளர்ச்சியது மேன்மை கீழ்மை, பெருமை சிறுமை, திட்ப நுட்பங்கட்குத் துணை செய்கின்றன. உடல் வன்மை வினையாண்மையும், உடல்நலம் மெய்ம்மைக் காட்சியும் பெறச்செய்கின்றன. 

      மேலும், உடல்நிலை அதனை இயக்கும் உயிருணர்வுக்கு விளக்கம் துளக்கம் என்ற இருவகைப் பண்புகளை உண்டாக்குகிறது. நன்னிலை விளக்கமும், அன்னிலை (அல்லாத நோய்நிலை) துளக்கமும் தோற்றுவிக்கின்றன. விளக்க நிலையில் மன முதலிய கரணங்களும் கண் முதலிய கருவிகளும் நேரிய முறையில் இனிது தொழிற்படுகின்றன. துளக்க நிலையில் கரணங்களும் கருவிகளும் தெளிவின்றி நேர்மை பிறழ்ந்து குற்றம்படத் தொழிற்படுகின்றன. விளக்கம் துளக்கம் என்ற இரண்டிற்கும் இடைநிலை யொன்றுண்டு. அஃது உயிருணர்வுக்கு மயக்கம் தருவது. அதனால் கருவி கரணச் செயற்பாடு கலக்கமுற்றுச் சோர்வும் சோம்பலும் தூக்கமும் எய்துகிறது. காரணம்பற்றி மயக்க நிலை நீங்கி விளக்கத்திற் புகுதலும், துளக்கத்தில் வீழ்ந்து துளங்குதலும் உண்டு. அதனால் இதனை இடைநிலை என்றல் பொருத்தமாகிறது. இதனைத் ‘தாமதம்’ என நூலோர் நுவல்வர். 

      வாழ்வில் உளவாகும் துன்ப இன்பங்களுக்கு மேலே காட்டிய விளக்கம் முதலிய செயற்பண்புகள் காரணம். இவை, கரணங்களிலும் கருவிகளிலும் நின்று செயல்பட்டுத் தம் செயலிடைப் பிறக்கும் துன்ப இன்பங்களை உயிர்க்கு நல்குவனவாம். உயிர் உடலின் இயக்கத்துக்குத் தலைமைப் பொருளாதலால் செய்வினைப்பயன் செய்வோனுடைமை என்ற முறைமை பற்றி இத் துன்ப இன்பங்கள் உயிரால் நுகரப்படுகின்றன.

      நுகருங்கால், துன்பக் காலத்தில் மனம் உயிரின் வேறாய் துன்பத் தோடியைந்து நின்று அதனை நுகர்விக்கிறது. அந் நிலையில் மனம் தன் கற்பனைத் தன்மையால் கால வளவை மிகுதிப்படுத்திக் காட்டும்; இன்பக் காலத்தில் அஃது உயிரோடு நின்று நுகர்வதால் காலக்கழிவில் மன உணர்வு செல்லாமையின் இன்பம் சுருக்கமாகவும் சிறிதாகவும் தோன்றுகிறது. அதனால் இன்பம் நுகர்வோர் காலம் கழிந்தது தெரியவில்லை என்பதும், துன்ப நுகர்வோர் காலம் கழிந்தது தெரியவில்லை என்பதும், துன்ப நுகர்வோர் ஒரு நாளை ஏழு நாளாகக் குறை கூறுவதும் பேச்சு வழக்கில் பெரிதும் நிகழ்கின்றன. 

      மக்கள் எய்தி வருந்தும் துன்பங்களைத் தாம் மேற்கொண்டு தமது உள்ளத்தோடு இயைந்து நோக்கும் வள்ளற் பெருமானுக்கு, அத் துன்பம் மிகவும் பெருகித் தோன்றுவதால், சில விநாடிகளில் பல வரிகளை விரைந்தெழுதும் ஆற்றலுடையவர் பதினாயிரம் கற்பகாலம் எழுதினும் எழுதி முடியாத மிகுதியுடையது என மொழிகின்றார்.

2180.

     பொய்யோ அடிமை உரைத்தல்எந்
          தாய்என்னுட் போந்திருந்தாய்
     ஐயோநின் உள்ளத் தறிந்ததன்
          றோஎன் அவலமெல்லாம்
     கையோட வல்லவர் ஒர்பதி
          னாயிரங் கற்பநின்று
     மெய்யோ டெழுதினுந் தான்அடங்
          காத வியப்புடைத்தே.

உரை:

     எந்தையே, யான் எய்தி வருந்தும் துன்பத்துக்கு இரங்கி யருளுகின்றாய் இல்லை; யான் உரைப்பது பொய்யென்று கருதுகிறாய் போலும்; பொய்யன்று; என் உள்ளத்தே புகுந்திருக்கின்றாயாதலால் நின் திருவுள்ளம் நன்கறிந்த தாயிற்றே; ஐயோ, இரங்காமை கூடாதோ; விரைந்து கையெழுத வல்லவர் பதினாயிரம் கற்பகாலம் உடம்போடிருந்து எழுதினாலும் அடங்காது விரிந்து நிற்கும் மருட்கையுடையது காண். எ.று.

     ஒருவர் படும் துன்பம் மெய்யென்றுணரப்படின், உணர்வோர் உள்ளம் அருள்மேலிட்டு உருகும்; அத் துன்பத்தைத் துடைப்பதற்கு விரையும்; அது நிகழாமை விளங்க, “பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய்” எனப் புகல்கின்றார். யான் உரைப்பது பொய்யாயின் என் உள்ளத்திற் புகுந்து உரைகின்றாயாதலால், உனக்கு என் உரையின் மெய்ம்மை தெரியாமல் இராது; தெரிந்தும் அருளாயாவது கொடிது என்பாராய், “என்னுட் போந்திருந்தாய் நின் உள்ளத் தறிந்ததன்றோ” என்றும், “ஐயோ” என்றும் கவல்கின்றார். நின் பெருமை சான்ற திருவுள்ளத்திற்கு என் துன்பம் சிறிதாய்ப் புலப்படா தொழிந்த தெனின், அதன் மிகுதியை உரைக்கின்றேன் கேட்டருள்க என்பாராய், “என் அவலமெல்லாம் கையோட வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று மெய்யோடெழுதினும் தான் அடங்காத வியப்புடைத்தே” என்று புனைந்துரைக்கின்றார். அவலம் - துன்பம்; வள்ளலார் காலத்தில் எழுத்தாணி கொண்டு பனையோலையில் எழுவது பெரும்பான்மை; காகிதம் அருகி வந்து கொண்டிருந்தது. எழுதுகோல் கொண்டு மை தோய்த்துக் காகிதத்தில் எழுதுவது மக்களிடையே தோன்றி வளர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் சென்னையிற் பிறந்து வளர்ந்து கல்வி பயின்றவராதலின் காகிதத்தில் நன்கு எழுதும் திறம் பெற்றிருந்தார். ஏடெழுதுவார்க்கு இரு கை வேண்டும்; காகிதத்தெழுதுவார்க்கு ஒருகையே சாலும். ஏடெழுதுவோர் இடக்கையில் ஏட்டைப்பற்றி வலக்கையில் எழுத்தாணி பிடித்து எழுதுவர். தாமே நினைந்து எழுதுங்கால் பிறர் துணை வேண்டார்; எழுதப்பட்ட தொன்றை வேறோர் ஏட்டில் பெயர்த்தெழுவதாயின் ஒருவர் படிக்க ஒருவர் எழுத வேண்டுமாதலின், இருவர் வேண்டும். இவ்வகையில் ஏடெழுதுவது விரைந்து நடக்கும் செயலன்று; ஒரு ஏட்டில் இருபக்கமும் எழுதி முடித்தற்குள் எழுத்தாணி கூர் மழுங்கிவிடும்; அவ்வப்போது தீட்டிக்கொண்டால் ஒரு நாழிகைக்கு மிகச் சில ஏடுகளே எழுதமுடியும். தீட்டிய கூரிய எழுத்தாணி பல கொண்டு ஒரு நாளிற் பல ஏடுகள் எழுதுவோரைக் கையோடவல்லார் என்றும் எழுத்தாளர் என்றும் முன்னாளையோர் பாராட்டியுள்ளனர். 'கையோடவல்லான் காவிதி காரி' என்றும், 'எழுத்தாளான் சேந்தன்' என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஏட்டிலும் திரையிலும் முறையே எழுத்தாணியும் மைக்கோலும் (தூரிகை) கொண்டு எழுதப்படுவன எழுத்தெனப்படும். சிற்றுளியால் கல்லிலும் செம்பிலும் வெட்டப்படுவன வெட்டெழுத்து எனப்படும். இம்மரபு தெரியாமல், குண்டு குண்டாய் வெட்டப்படும் எழுத்தை வட்டெழுத்ததென்றும், மற்றவற்றை வெட்டெழுத்து என்றும் சிலர் கூறுகின்றார். காகிதத்தில் குண்டு குண்டாக நீட்டியும் சாய்த்தும் எழுதுவதுண்டு. இவற்றைக் குண்டெழுத்தென்றும் சாய்வெழுத்தென்றும் கூறுவர் போலும். எழுத்தாராய்ச்சி இந்த அளவில் நிற்பது முறை. சிலர், இவ்வெட்டெழுத்துக்களிலிருந்து தான் தமிழ்க்கு எழுத்துக்களே உருவாயின என்பர். வரலாற்றெண்ணம் சிறுதுமின்றிப் பேசுவோரும் எழுவோரும், அவரது அச் செயல் கண்டு மகிழ்வோரும் இருப்பதுதான் பெருநகை தருகிறது. ஏட்டிலெழுதும் முறை தோன்றி வளர்ந்து பன்னூறாண்டுகள் கழிந்த பின்பே வெட்டெழுத்துக்கள் நிலைபேறு குறித்துத் தோன்றின. கூரிய எழுத்தாணியால் எழுதுதற்கும் சிற்றுளியால் வெட்டுதற்கும் முறை வேறு வேறாகும். எழுத்தாணியால் எழுத்துக்களைச் சுழித்தலும் வளைத்தலும்போல உளியால் வெட்ட முடியாது. சுழியும் வளைவும் மிகாத வகையில் வெட்டெழுத்துக்கள் இருக்கும். இவை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தோன்றி நிலவிய தொன்மையுடையவை. சங்க காலத்துக்குப் பின்னும் பல்லவர் காலத்துக்கு முன்னுமாகிய காலத்தில் தமிழ் நாடு போந்த பௌத்தர் கொணர்ந்த பிராமி எழுத்தைப் பார்த்தே தமிழர் தமிழ் எழுத்துக்களைப் படைத்துக் கொண்டனர் எனச் சிலர் பறையறைவதும், அது வியந்து சிலர் தாளம் கொட்டுவதும், ஆராய்ச்சி நெறிக்கும் இழிவு விளைக்கின்றன, இது நிற்க.

     கற்பம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. அத்துணைக் காலம் எவரும் உடம்பொடு வாழ்தல் இல்லை; அதனால் “பதினாயிரம் கற்பம் மெய்யோடு இருந்து எழுதினும்” என வள்ளலார் உரைத்தருளுகின்றார். வியப்பு - மருட்கை.

     (11)