பக்கம் எண் :

11

       11. மண்ணுலகத்தில் மக்கள் செய்யும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு நலம் புரிவதில் சிவன் சிறப்புடையவன். ஞானசம்பந்தர் நாவுக்கரசர் திருநாளைப்போவோர் முதலியோர் தவறு செய்து பின் இறைவனை வேண்டி நலம் பெற்றனர்; அவர் வரலாற்றை யுரைத்துச் சுந்தரமூர்த்திகள் சிவபெருமானிடம் முறையிட்டு அருள் பெற்றார். அதனைப் படித்துணர்ந்த வள்ளலார் விண்ணுலகத் தேவர் குற்றம் செய்து வேண்டிக்கொண்டது கண்டு இரங்கி, சிவன் அருள் செய்த சிறப்பைப் பாராட்டுகின்றார்.

2181.

     தேன்சொல்லும் வாயுமைபாகா நின்
          தன்னைத் தெரிந்தடுத்தோர்
     தான்சொல்லுங் குற்றங் குணமாகக்
          கொள்ளுந் தயாளுவென்றே
     நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும்
          வாணிதன் நாண்சொல்லும்அவ்
     வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும்
          கைம்மலை மான்சொல்லூமே.

உரை:

     உமாதேவியைப் பாகத்தில் உடைய பெருமானே, நின் தலைமையைத் தெரிந்து நின்னை அடுத்தவர், சொல்வன் குற்றமாயினும் குணமாகக் கொண்டு அருள் புரியும் உன் வள்ளன்மையை நான் எடுத்துரைத்து வியந்து, “தயாளு” என்று சொல்லவேண்டா; திருமகள், வாணி, வானுலகத்தேவர், மலைமகள், யானை முதலியன உரைக்கும்-நான் சொல்லவேண்டா எ.று.

     தேன்போல் இனிக்கும் சொற்களைப் பேசுபவள் உமாதேவி என்றற்குத் “தேன்சொல்லும் வாயுமை” எனக் கூறுகின்றார். தேவர் பலருள்ளும் சிவனை நேரிலார் பிறர் இலர் என ஆராய்ந்து கண்டு புகல் புகுந்த பெருமைமிக்க சிவத்தொண்டர்களை “நின் தன்னைத் தெரிந்து அடுத்தோர்” எனவும், அவர் கூறும் சொற்களில் குற்றமுடையன இருப்பினும் அவற்றைக் குணமுடையனவெனக் கருதி அவரைக் தழீஇக் கொள்ளுவது சிவன் செயலாதல் கண்டு, “தான் சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளு” எனவும் மொழிகின்றார். குற்றம் புரிவது மக்கட்கு இயல்பு; குற்றமும் குணமும் உடையவர் மக்கள்; அதுபற்றியே பரிமேலழகியார் முதலியோர், “குணமேயுடையாரும் குற்றமேயுடையாரும் உலகத்திலர்” என்றனர். குற்றம் புரிவது சிறுமையையும் குணம் புரிவது பெருமையையும் நல்குதலால், குற்றம் செய்யும் சிறியவரைக் குணமே புரியும் பெரியோர் பொறுத்து அருள் புரிகின்றனர். “பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கடம் பொய்யினையே” (திருவா. நீத்தல். 6) என மணிவாசகர் கூறுவது காண்க. தயை-அருள்; அருளாளன், தயாளன் என வரும்; அது சொல்வடிவிற் சுருங்கித் தயாளு என வந்தது. சிவபெருமானைத் 'தயாளு' என என்போல்வார் சொல்வது வேண்டா என்பாராய், வள்ளலார், “தாயளு என்றே நான் சொல்வதென்னை?” என்று சொல்லிச் சொல்லத் தக்கவரை நிரல்படுத்து மொழிகின்றார். தக்கன் யாகத்திற்குச் சென்று குற்றப்பட்ட திருமால், பிரமன், தேவர்கள் முதல் பலரையும் சிவன் உயிருய்வித்து வாழச் செய்தார்; அதனால் அவர் மனைவியரான திருமகள் கலைமகள் இந்திராணி முதலிய தேவமகளிர் திருமங்கலம் இழந்து வருந்துதல் இலராயினர்; அது விளங்கவே, “பொன் நாண் சொல்லும், வாணி தன் நாண் சொல்லும், அவ்வான் சொல்லும்” என்று உரைக்கின்றார். மலைமான் - உமாதேவி. அவர் நேரிற்கண்டிரிந்தவராதலால் “எம் மலைமான் சொல்லும்” எனவும், இந்திரனின் அயிராவதம் என்ற யானையும் சான்று கூறும் என்றற்கு “கைம்மலைமான் சொல்லும்” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     இதனால், குற்றம் செய்தோம் என்பதற்காக வருந்திச் சிவனை வழிபடும் நற்குணத்தைக் கைவிடவேண்டா என வள்ளலார் அறிவுறுத்துவது கண்டு இன்புறத் தக்கது.

     (11)