பக்கம் எண் :

6

6. உவகையார் உரையாடல்

      12. திருவருள் காட்சியையும் அதனிடைப் பெறலாகும் இன்பத்தையும் வேண்டி முறையிட்ட வள்ளற்பெருமான் திருவுள்ளத்தில் திருவருளின்பம் தோன்றிப் பெருமகிழ்ச்சி தருகிறது. தன்னை ஒரு முதலையாகவும், சிவத்தை அதனால் பற்றப்பட்ட பொருளாகவும் கொண்டு ஒரு நயவுரையாடுகின்றார். முதலை தான் கொண்ட பொருளை விடாது; அதுபோல மூர்க்கரும் தாம் கொண்டது விடார் என்பர். இரண்டையும் பிணைத்து உலகவர், “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என உரைப்பர். அதனை மனத்தே நினைந்த வள்ளலார், “முதலையை  எனக்கு ஒப்புரைத்தல் ஒண்ணாது; ஏனெனில் நான் இடையிடையே சிவமாகிய நின் பற்றை விட்டிருக்கிறேன்; நான் முதலையினும் மூர்க்கரினும் கொடியன்” என உரைக்கின்றார்.

2182.

     வென்றே முதலையும் மூர்க்கரும்
          கொண்டது மீளவிடா
     என்றே உரைப்பரிங் கென்போன்ற
          மூடர்மற் றில்லைநின்பேர்
     நன்றே உரைத்துநின் றன்றே
          விடுத்தனன் நாணில்என்மட்
     டின்றேயக் கட்டுரை மின்றேஎன்
          சொல்வ திறையவனே.

உரை:

     இறைவனே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடா என்றே உலகவர் உரைப்பர்; நான் மூடன்; நின் திருப்பேரைப் பற்றி உரைத்து இப்போது விட்டுவிட்டேன்; என்னைப் பொறுத்தவரை அவ்வுலகுரை மெய்யாகவில்லை; இதற்கு என்ன சொல்வது? எ.று.

     தனக்கு வேண்டும் பொருளை வென்று கொண்டபின், அதனை விடாது பற்றி நிற்பதில் முதலையும் மூர்க்கனும் ஒன்று என்பது பற்றி, “வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடா என்று உரைப்பர்” என உரைக்கின்றார். தான் கொண்டது மீளும்பொருட்டு எத்துணை முயற்சி செய்யினும் விடாது என்றற்கு “வென்று” என்றும், “மீளவிடா” என்றும் குறிக்கின்றார். மூர்க்கர் உயர்திணையாயினும், திணைவிரவிச் செய்யுளில் வருங்கால் அஃறிணை முடிபுபெறும் என்பது தொல்காப்பியம். நான் ஒரு மூடன்; ஆயினும் மூடன்பாற் காணப்படும் விடாப்பிடி என்பால் இல்லையே என்பாராய், “என் போன்ற மூடர் மற்றிலை” என உரைத்து அதனை மெய்ப்பிக்கின்றார். நின் திருப்பெயரை அரிது முயன்று பற்றிக்கொண்ட நான் சின்னாளில் விட்டுவிட்டேன்; மூடனாயினும் மூடர்கண்டு இகழத்தக்க வகையில் “கொண்டது மீளவிட்டேன்”, அதுபற்றி நாணுவதும் இல்லேன் என்பது தோன்ற, “நாணில் என் மட்டு அக் கட்டுரை இன்றே; இதற்கு என் சொல்வது” என இயம்புகின்றர். அக் கட்டுரை மெய்ம்மையுடையதன்று என்பதைச் சுருக்கி “அக் கட்டுரை இன்று” எனக் கூறுகின்றார்.

     இதனால், மூர்க்கனாகிய யான் மூர்க்கனுக்குரிய குணமும் இலனாய் அவரால் இகழப்படுவேனாகின்றேன் என உவகை தோன்ற உரைப்பது பயனாம்.

     (12)