பக்கம் எண் :

12

          13. உலகில் வாழப்பிறந்த உயிர்க்கு வாய்ப்பது உடம்பு ஒன்றே போல, மனமும் ஒன்றேயாகும்; அவ்வுடம்பு தீதாயவழி வேறு உடம்பாக மாற்றப்படுவதில்லை; அதுபோல மனம் துன்புடையதாயின், வேறொன்றாக மாற்றப்படுவது கிடையாதே; நீ கேட்பது ஆகுவதன்றே என்றொரு வினா அடிகளார் திருவுள்ளத்தே எழுகிறது. “அரிய என்ற ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்” என்று திருவள்ளுவர் அறிவுத்துவது நினைவில் எழுகிறது. திருவள்ளுவரைப் பண்டைய நாளைய சான்றோர் “பொய்யில் புலவன்” என்றும், அவரது அறிவுரையைப் “பொருளுரை” என்றும் போற்றுவதை நினைக்கின்றார். அதனை விளக்குவார் போல, வேம்பின் காய் இனிய கனியாதலும், விடம் அமுதாவதும், கானல் நீராவதும், பாவம் புண்ணியமாவதும், மண்ணோடு பொன்னோடாவதும் ஆகிய உலகியல் நிகழ்ச்சிகளைக் காட்டி, இவை மாறும் போதும், என் மனத்தை நன்மனமாக்குவது அரிதன்று என முறையிடுகின்றார்.

2183.

     கைக்கின்ற காயும் இனிப்பாம்
          விடமும் கனஅமுதாம்
     பொய்க்கின்ற கானலும் நீராம்வன்
          பாவமும் புண்ணியமாம்
     வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என்
          கெட்ட மனதுநின்சீர்
     துய்க்கின்ற நல்ல மனதாவ
          தில்லைஎன் சொல்லுவனே.

உரை:

     வேம்பின் காய்போலக் கைக்கின்ற காய் இனிய கனியாவதும், இறைவனாகிய நினக்கு அளித்த விடம் அமுதமாவதும், கடுவெயிலிற் காணப்படும் கானலிடத்துத் தோன்றும் நீர்நிலை விஞ்ஞானக் காட்சியுடையார்க்கு உண்மையாவதும், சண்டீசுரர் போன்றார் செய்த பாவம் புண்ணியமாவதும், நம்பியாரூரர் போன்ற திருவருட் செல்வர்க்கு மண் பொன்னாவதும் நிகழ்வதால், என் கெட்ட மனத்தையும் நின் சீர் கேட்டு நயக்கும் நன்மனமாக்குதல் வேண்டும்; அவ்வாறு இல்லாமையால் யான் யாது சொல்வேன். எ.று.

     வேம்பின் காய் கைக்கும் இயல்பிற்றாயினும் கனியுங்கால் இனிமையுறுவது கண்கூடு; வாழை முதலிய காய்கள் துவர்க்கும் இயல்பினவாயினும் செயற்கையால் கனிவித்து இனிமை பெய்துவிப்பதும் உண்டு. இருவகையும் புலப்பட. “கைக்கின்ற காயும் இனிப்பாம்” எனப் பொதுப்படப் புகழ்கின்றார். விண்ணவர் சாதற்கு அஞ்சித் தந்த கடல்விடத்தைச் சிவபெருமான் உண்டு அமுதமயின்றார்போல நிலைபெற்ற வரலாற்றை நினைவிற் கொண்டு, “விடமும் கன அமுதமாம்” என வுரைக்கின்றார். “விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” என இளங்கோவடிகள் இயம்புகின்றார். இனி, மக்களினத்தில் திருநாவுக்கரையனார்க்கு அமணர் தந்த நஞ்சு அமுதாயின செய்தியும், அதனை அவரே தமது திருப்பாட்டொன்றில் “வழக்கிலா அமணர் தந்த நஞ்சமுது ஆக்குவித்தார் நனி பள்ளி அடிகளாரே” எனவுரைப்பதும் ஈண்டு நினைவு கூரப்படும். கன அமுது- சிறப்புடைய அமுதம். வெட்ட வெளியில் கடுவெயிலில் காணப்படும் கானலில் தோன்றும் நீரும் நெடுமரமும் மாடமும் மாளிகையும் நெடுந்தொலையில் உள்ளவற்றின் நிழலேயென விஞ்ஞானம் கடுவெயிற் கானற் காட்சியை ஆராய்ந்து கூறுவது அதன் பொய்ம்மையைப் போக்கி மெய்ம்மையை வற்புறுத்துவதால் “பொய்க்கின்ற கானலும் நீராம்” எனவுரைக்கின்றார். சண்டேசுரர் தவறுசெய்த தந்தையின் தாளை வெட்டி வீழ்த்தியது பாவமாகவும், அவர்க்குச் “சிவபரம் பொருள் உண்ட கலமும் உடப்பனவும் சூடுவனவும்” ஆகிய அனைத்தும் பெறும் பெரும் புண்ணியமானது கருத்திற் கொண்டே வடலூர் வள்ளல் “வன் பாவமும் புண்ணியமாம்” என உரைக்கின்றார். தந்தை தாயரைக் கோறல் விலக்கற்கரிய கொடும்பாவ மென்பவாதலால் “வன் பாவம்” எனக் குறிக்கின்றார். பொன் வேண்டிய கருத்துடன் புகலூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டு இரவில் செங்கல் ஒன்றைத் தலைக்கு அணையாகக் கொண்டு உறங்கிய நம்பியாரூரர், விடியலில் விழித்தெழுந்து அணையாய் உதவிய செங்கல் செம்பொற்கட்டியானது கண்டு வியந்து பாடியது நாடறிந்த செய்தி; சேக்கிழார், “வெற்றிவிடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம்பொன் திண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி” வழிபட்டார் என உரைக்கின்றார். இங்ஙனம் ஆகாதன, தீயன என விலக்கப்படும் காயும் விடமும் பிறவும் ஆவனவும் நல்லனவுமாய் மாறுகையில் கெட்ட என் மனம் நன்மனமாவது ஆவதென்று; ஆக்கியருள்க என்பது பயன்.

     (13)