21
21. உலகில் வாழும் செல்வர்களே பிறராற் கேட்கப்படுதற்கும் கேட்டார்க்கு ஒன்று கொடுத்தற்கும்
உரிய நிலையில் உருவும் திருவும் உடையாராகவுள்ளனர். அவரை நேரிற் கண்டு இரத்தலும் பெறுதலும்
பொருத்தமாக இருக்க, உருவாய்க் காணமுடியாத சிவபெருமானை நினைந்து கேட்பது எங்ஙனம் அமையும் என
எழும் வினாவுக்கு விடை கூறுபவர்போல, வடலூர் வள்ளல், சிவபரம்பொருளை முன்னிலைப்படுத்தித் தாம்
வேண்டுதற்குரிய காரணங்களை விளக்கிக் கூறுகின்றார். தம்போல் உடலொடு கூடிவாழும் செல்வமக்களையே
யன்றிக் கண்ணிற் காணப்படாத தெய்வங்களை வழிப்பட்டுத் தமக்கு வேண்டுவரை அருளுமாறு கேட்பது
உலகமக்களிடையே வழக்கமாக உளது. இத் தெய்வங்களில் ஊன் விரும்பும் இரக்கமில்லனவும் உண்டு;
அவற்றைச் சிறுதெய்வம் எனவும், ஆடு கோழி முதலிய உயிர்களைப் பலியுண்ணும் இயல்பின எனவும்
கூறுவர். பண்டைநாளில் எல்லாத் தெய்வங்கட்கும் உயிர்ப்பலி நல்குவது இயற்கையாக இருந்தது. மிகப்
பழைய வேதங்களை நோக்கின், அவற்றிற் காணப்படும் இந்திரன் முதலிய தேவரனைவரும் வேள்வி
வாயிலாகவும் வழிபாடு வாயிலாகவும் மக்களையுள்ளிட்ட உயிர்களை உண்ட செய்தி காணப்படுகிறது. காலப்போக்கில்
மக்கட்கு உண்மையுணர்வு பெருகப்பெருக உயிர்ப்பலி வழங்கும் கொடுமை ஒழியத் தலைப்பட்டது. நல்லறிவு
இன்னும் நன்கு பரவாமையால், கொலைத் தெய்வ வழிபாடு நம்நாட்டில் முற்றும் தொலைந்தபாடில்லை.
ஒரு சில நாடுகளிலும் இடங்களிலும் மக்கள் உயிர்ப்பலி கொடுத்து அச்சிறு தெய்வங்களைத் தமக்கு
வேண்டுவன நல்குமாறு இரந்து கேட்கின்றனர்; அத்தெய்வங்களும் வேண்டுவன நல்குகின்றன என்பது,
பலவும் பலவிடங்களில் பலகாலமாகத் தொடர்ந்து வழிபடுவதால் தெரிகிறது. அருளறியாது உயிர்க்கொலையே
பொருளாக விழையும் அச்சிறு தெய்வங்களும் வணங்கி வழிபடுவார்க்கு வேண்டுவன உதவுகின்றனவாதலால்,
பரம்பொருளாகிய உன்னை நான் அடைந்து பரவுகின்றேன்; தெருளும் அருளும் நீ அருள் புரிக என வேண்டுகிறார்.
2191. அருளறி யாச்சிறு தேவருந்
தம்மை அடுத்தவர்கட்
கிருளறி யாவிளக் கென்றாலும்
நெஞ்சம் இரங்குகின்றார்
மருளறி யாப்பெருந் தேவேநின்
தன்னடி வந்தடுத்தேன்
தெருளறி யாச்சிறி யேன்ஆயி
னுஞ்செய்க சீரருளே.
உரை: சிறு தெய்வங்களும் தம்மை அடுத்து வழிபடுவோர்க்கு இரங்கி அருள்கின்றன; யானோ நின் திருவடி வந்தடுத்தேன்; சிறியேனாயினும் எனக்கு நின் சீரருளைச் செய்தருள்க. எ.று.
தெய்வங்கட்குச் சிறுமையும் பெருமையும் கற்பிப்பவர் இருதிறத்தர். இரக்கப் பண்புடையவர் அருளாற்றல் மிக்க தெய்வங்களைப் பெருந் தெய்வமென்பர்; அஃது இல்லாத அரக்கப் பண்புடையவர், கொலைக்குரிய செயற்குத் துணைபுரிவதைப் பெருந்தெய்வம் எனக் கருதுவர். இப்பெற்றியோர் வழிபடும் தெய்வத்தை, வியந்துபோற்றும் தேவரை அடிகளார் இப்பாட்டில் “அருள் அறியாச் சிறுதேவர்” எனக் குறிக்கின்றார். உயிர்கட்கு உறுதியென அருளறம் ஒன்று உளது என்பதைக் கேட்டும் அறியாமல் சிறுமையுற்ற தெய்வங்களை ஈண்டு “அருளறியாச் சிறுதேவர்” என இழிக்கின்றார். அச் சிறுதேவர்பாலும் இவ்விரக்கப் பண்பு ஒரளவு காணப்படுகிறது; மூர்க்கனும் முதலையும் கொண்டதுவிடா என்பர்; உலகில் முதலையும் தம்மை அன்புடன் பேணுபவர்பால் அருளொடு உறைகிறது; அதுபோல் இச் சிறுமையுடைய தேவர்களும் தம்மை வழிபடுவார்க்கு அருள் புரிகின்றார்கள் என்பாராய், “தம்மை அடுத்தவர் கட்கு நெஞ்சம் இரங்குகின்றார்” என உரைக்கின்றார். தேவர்கள் மக்களின் உயர்ந்தோராகலின் அவர்பால் அருட்பண்பில்லாதொழிவ தெங்ஙனம் எனின், இருளும் ஒளியும் என்ற இரண்டும் உளவாயினும், ஒளிக்குள் இருக்கும் ஒட்பமும் உடையதாயினும் இருள் ஒளிக்குள் நின்றும் அதனைக் காணாது; அதுபோல் தேவரினத்தவராயினும் ஒளியுடைய அருளறம், அவர்தம் இருள்நிறை நெஞ்சாற் கண்டு மேற்கொள்ளப்படுவதில்லை என்றற்கு “இருளறியா விளக்கு என்றாலும்” எனவுரைக்கின்றார். சிறுதேவர்பால் காணப்படும் இரக்கமும் ஏரல் எழுத்துப்போல்வதொரு விழுக்காடாகுமேயன்றி உண்மைப் பொருளாகாது என்ற கருத்துப்பட “இருள் அறியா விளக்கு என்றாலும்” எனவுரைக்கின்றார். உம்மை; எதிர்மறை. மருள் - பொருளல்ல ததைப் பொருளாகக் கொள்ளும் மயக்கவுணர்வு. அருளும் தெருளுமே சிவத்தின் உருவும் பண்புமாதலால் “மருளறியாப் பெருந்தேவே” என்று பரவுகின்றார். தெருள் - தெளிந்த அறிவு. சிறுதேவர் பெருந்தேவர் எனப்பகுத்தறிந்து பெருந்தேவரையே அடைந்து வழிபடும் தெளிவுடைய நன்மக்களோடு கூடி உண்மை தெளிந்து உன்னை வழிபடுதலை மேற்கொள்ளாமல், சிறியரோடு கூடி அவர் காட்டும் சிறுநெறியே செல்லும் சிறுமைப் பண்பின்னாயினும் அடியேன் பால் அருள் புரிக என்பாராய் “தெருள் அறியாச் சிறியேனாயினும் சீரருள் செய்க” என வேண்டுகிறார், தெருள் அறியாச் சிறுமை - சிவத்தைத் தெருண்டுணரும் ஞானமின்மை.
இதனால், ஞானக்குறைவுடையேனாயினும் அடியேனுக்கு அருள் புரிக என்பது கருத்தாயிற்று. (21)
|