பக்கம் எண் :

8

8. அருளின் இன்றியமையாமை

       22. உலகியிலில் பகலும் இரவும் மாறிமாறி வருகின்றன; பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வு தந்து உறக்கத்தால் மேலே உழைத்தற்குரிய ஊக்கத்துக்கும் துணைபுரிகின்றன. உழைப்புப் பொருளாக்கத்துக்கு இன்றியமையாது; நீடித்த திண்ணிய செவ்விய உழைப்புக்கு ஓய்வு இன்றியமையாததாகும். உழைப்புக்கு யான் எனது என்ற இருவகை உணர்வும் வேண்டப்படுகின்றன. யான் என்னும் உணர்வு பொருள் செய்தற்கும், எனது என்னும் உணர்வு பொருளைக் காத்து நல்வழியில் வகுத்து இன்பமும் புகழும் பெறுவதற்கும் துணைபுரிவன. யான் எனது என்னும் இருவகை உண்ரவும் இம்மையில் பொருள் பெற்றுப் புகழும் இன்பமும் நுகர்தற்கு இன்றியமையாதன என்பதைத் தெளிவதற்கே இறைவன் இவ்வுணர்வுகளின் வழி நின்று இயக்குகிறான் என்ற கருத்துப்பட, “யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி” நிற்கின்றான் என மணிவாசகரும் தெரிவிக்கின்றார். இங்ஙனம் மக்களை உலகில் வாழ்வித்தற்கென ஆட்டுவிப்பது இறைவன் திருவருட் செயலாதலால், பொருள்மேல் நிற்கும் உலகியலுக்கும் அருளே பொருளாவதை அறியலாம். 

பொருள் வழிச் செல்லும் உயிருணர்வு யான் எனது என்னும் வினையுணர்வாகி அதனால் விளையும் இன்பநுகர்ச்சியில் ஆழ்ந்து அறிவறை போகித் திருவருளை அறவே நினையாதொழுகிறது. உலகியலில் தோய்ந்து அதற்குரிய பொருள் வாழ்விலே மூழ்கிவிடுகிறது. பொருள் வாழ்வில் எய்தும் நுகர்ச்சிக்கண் திருவருள் கலந்து நிற்கும் திறத்தை மறந்து போகிறது. அம் மறப்பு, பொய்யும் வழுவும் தோற்றுவித்துத் துயரும் துன்பமும் விளைவிக்கிறது. இன்பத்திற் போலத் துன்பத்திலும் உயிர்கள் பொருளையே நினைந்து புலம்புகின்றனவேயன்றித் திருவருளை நினையாதொழிகின்றன. பொருளும் யான் எனது என்னும் இருவகைப் பற்றாய் காட்சிதருதலால் அவற்றால் பிணிப்புண்டு உயிர் மயங்குதல் கண்டே சான்றோர் என்றும் பொன்றாத இன்பவாழ்வு பெறவேண்டின். அவ்விருவகைப் பற்றினையும் ஒழித்தல் வேண்டும் என்றனர். இவை ஒழிந்தவழி இவற்றை உண்ணின்றியக்கும் முதற்பொருளாகிய திருவருள் காட்சிப்படும். அதன் உணர்வால் இருவகைப்பற்றும் கெடும்; கெடவே. பொருள் ஆம் போதுண்டாகும் கலக்கமும் இன்றி மனத்தின்கண் நிறையும் பொறையும் தோன்றி அமைதி நல்கும்; அறிவும் மறப்பும் மறைப்புமின்றித் தெளிவு பெறும். இவ்வாற்றல் இம்மை வாழ்வுக்கும் அருளே பொருள் என்பது தெளிவாம். ஆகவே, வற்றாத பேரூற்றாக இறைவனது திருவருளைப் பெறுவது உறுதியும் கடனுமாகும். அதன்வழி நின்று பெறும் பொருளே பொருள் என்ற உணர்வு தலைக்கொள்கின்றார் வடலூர் அடிகள்.

2192.

     அரும்பொரு ளேஎன் அரசேஎன்
          ஆருயிர்க் காகவந்த
     பெரும்பொருளே அருட் பேறே
          சிவானந்தம் பெற்றவர்பால்
     வரும்பொரு ளேமுக்கண் மாமணி
          யேநின் வழியருளால்
     தரும்பொரு ளேபொருள் என்றவந்
          தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.

உரை:

     முக்கண்மணியே அரும்பொருளாய், அரசாய் ஆருயிர்ப் பெரும் பொருளாய் அருட்பேறாய், சிவானந்தத்து வரும் பொருளாய் விளங்கும் பரமனே, நின் அருள் வழி எய்தும் பொருளையே பொருள் என்று கருதி வந்தேனாதலால் அடியேனைத் தாங்கிகொள்க. எ.று.

     உயிர்ப்பொருள் உயிரில் பொருள் நிலைப்பொருள் நிலையில் பொருள் எனப்பகுத்து உணரப்படும் பொருள் எல்லாவற்றினும் மேலாய்ப் பெறற்கு அருமையாய் உள்ள பரம்பொருளாய் இருப்பதுபற்றி இறைவனை அரும்பொருளே என்று கூறுகிறார். நலங்கண்டவழி உவந்து சிறப்பித்தலும் குற்றம் செய்தவிடத்துத் திருந்துதல் வேண்டி ஒறுத்தும் முறைசெய்வது தோன்ற, 'என் அரசே' என்று மொழிகின்றார். உடலின் உள்ளும் புறமும் உணர்வடிவாய்க் கலந்து உறுதி எய்துதற்குரிய நெறியில் அவ்வுடம்பையும் பய்ன் கொண்டும் ஓம்பியும் வாழச் செய்வதுபற்றி உயிரை ஆரூயிர் என்று பாராட்டி, அது தன்னில் அனாதியே பற்றிநிற்கும் மலமாசு நீங்கி இன்பச் சிவஞானத்தால் உயிர்நிலை பெறுதலை நினைந்து, அதற்காக உடல் உலகுகளில் ஒன்றாயும் உடனாயும் நின்று உதவுவதை எண்ணி, ஆருயிர்க்காக வந்த பெரும் பொருளே என்று போற்றுகின்றார். உலகில் வாழும் உயிர்க்காக வரும் பொருள் பலவற்றிலும் உணர்வுக்கு உறுதுணையாகும் பெருமையுடைமையால் பெரும் பொருள் எனச் சிறப்பிக்கின்றார். உயர்வும் தாழ்வுமாகிய வேறுபாடுடைய உயிர்களிடையே உயுர்வுடையோரிடத்தன்றி நில்லாத திருவருள் பெற முயல்வார்க்கு அஃது உறையுமிடமாக இருத்தலால் அருட்பேறே என்று புகழ்கின்றார். ஏனைப் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் இருத்தலால், அருளே செல்வத்துட் சிறந்த செல்வம் என்று திருவள்ளுவனார் கூறுவர். அந்த அருட்குச் சிவனே முதல்வன்; சிவஞானசம்பந்தர், “அருளாய செல்வன்” என்று தெரிவிக்கின்றார். பொருட் பேற்றுக்கு பொருளுணர்வு போலத் திருவருட்பேற்றுக்குச் சிவஞானம் இன்றியமையாமையால் “சிவானந்தம் பெற்றவர்பால் வரும் பொருளே” என்று உரைத்து, நம்மை வடலூர் அடிகள் தெருட்டுகின்றார். பொருள் எய்துங்கால் உலகியல் இன்பம் உள்ளத்தில் ஊறுவது போலத் திருவருள் எய்தும்போது உணர்வின்கண் சிவானந்தம் தேக்கெறியுமாதலால் “சிவானந்தம் பெற்றவர்பால் வரும் பொருளே” என உணர்த்துகின்றார். ஒளிவகை மூற்றையும் கண்களாகக் கொண்டு உலகுக்கு நலம் பயப்பதனால் சிவனை முக்கண்மாமணியே என்று மொழிகின்றார். இருள் கலந்து தண்ணிய ஒளிபரப்பும் திங்களையும், இருள் கலவாது வெயில் செய்யும் ஞாயிற்றையும் ஒளிக்கு முழுமுதலாய் வெம்மை செய்யும் நெருப்பையும் சிவன் கண்களாக வுடையவன். அவனது அருளறிவு காட்டும் வழியல்லது அருட்பேற்றற்கு வழி வேறு இல்லாமையால் “நின் வழியருளால் தரும் பொருளே பொருள் என்று வந்தேன்” என்று உரைக்கின்றார். இதுகாறும் உலகில் தன்னைந் தாங்கி நின்ற பொருட் பற்றைக் கைவிட்டு அருளே பற்றாகப் பற்றி நின்றேன்; அதனை நல்கி மீளவும் வழுக்கிப் பொருள் வாயில் வீழாமல் காக்க வேண்டும் என்பாராய், “எனைத் தாங்கிக் கொள்” என்று முறையிடுகின்றார். தாங்குவதோடமையாது ஏன்று கொள்ளவும் வேண்டும் என்றற்குத் தாங்குக என்னாமல், தாங்கிக் கொள் என நயம்படவுரைக்கின்றார்.

     அருளே பொருள் எனக் கருதி வரும் தன்னைத் தாங்கி ஏன்று கொண்டு நின் அருளை நல்கவேண்டும் என்பது இத் திருப்பாட்டின் பயனாம்.

     (22)