23
23. இன்னலுறும் பிறிதோருயிரைக் கண்டதும் உள்ளத்தே இரக்கம் மீதூர்தலும், அதற்கு அப்போதே
உதவ முந்துதலும் மனிதப் பண்பு ஆகும். அங்ஙனம் இரங்காதே அகலப்போவார் மிகக் கொடியவர். அப்படிப்பட்டவருக்கோர்
அல்லல் வந்தடுக்குங்காலத்தே, பிறரும் ‘இவன் இரங்கான்; இவனுக்கு யாமும் இரங்க வேண்டுவதின்று’
என்றே சொல்லி ஒதுங்குவர். ஆயின், இறைவனே பரம கருணையாளனாதலின், அவ்வாறு, அவரது இரக்கமற்ற
கொடிய பண்பினைக் கருதியும் வெறுத்து நீக்குவானல்லன்; இரக்கமற்ற கொடிய பண்பினைக் கருதியும்
வெறுத்து நீக்கவானல்லன்; இரங்காத அவர்பொருட்டும் தான் இரக்கமிக்கு உதவுவான். இந்தப்
பேரருளை நினைந்து வியக்கின்றார் அடிகள். ‘நீயே துணை’ என்று அடுத்திடுபவரைத்த தாங்கிக் காத்தலே
பெரியோர் மரபு. ‘மனக் குரங்கின் ஆட்டத்தைக் கட்டுக்கு உட்படுத்த இயலாதே, மெலிந்து சோர்ந்து
நின் நாமமே துணையாகப் பற்றிக் கொண்டேன். பரம கருணாகரக் கடவுளே, நீ என்னையும் ஒதுக்காது தாங்கிக்
காத்து அருள்வாயாக’ என்று இறைஞ்சுவாரான அடிகள், இந்தச் செய்யுளைக் கூறுகின்றனர்.
2193. சரங்கார் முகந்தொடுத் தெய்வது
போலேன் றனையுலகத்
துரங்கா ரிருட்பெரு வாதனை
யால்இடர் ஊட்டுநெஞ்சக்
குரங்கால் மெலிந்துநின் நாமந்
துணையெனக் கூறுகின்றேன்
இரங்கார் தமக்கும் இரங்குகின்
றோய்எற் கிரங்குகவே.
உரை: நெஞ்சக் குரங்கானது, என்னை உலக மாயையாகிய வலிய பேரிருளிலே சிக்கிப், பெரிய வேதனையாலே துன்பம் அடையுமாறு, வில்லிலே தொடுத்து எய்யும் அம்பைப்போல என்னையும் செலுத்திக் கொண்டிருத்தலாலே மிகவும் மெலிவுற்று, 'இனி நின் நாமமே துணை' என்று பற்றிக்கொண்டு, அதனையே சதா சர்வமும் கூறிக்கொண்டிருக்கின்றேன். இரக்கமே இல்லாக் கொடியருக்கும் இரங்கியருளும் பரம தயாளனாகிய பெருமானே, நீ எனக்கும் இரங்கி அருள்புரிவாயாக. எ.று.
சரம் - அம்பு. கார்முகம் - வில்; வில்லில் தொடுத்து எய்த அம்பானது குறி தப்பாதே சென்று படுதல்போல, யானும் மனம் என்னை உலக போகத்திலே செலுத்த, சென்று சென்று எய்த்தேன் என்பார். 'சரங் கார் முகம் தொடுத்து எய்வதுபோல' என்று கூறுகின்றார். உரங்காரிருள் - வலியதான காரிருள்; இது சிற்றின்பம் மயக்கம் போல்வதும், உலகின் பிற பிற ஆசை மயக்கம் போல்வதுமாம். அதனில் செலுத்தப்பெற்ற யான் உற்றதெல்லாம் பெரிய வேதனையேயன்றி இன்பம் சற்றேனுமில்ல என்பார், 'பெரு வாதனையால் இடர் ஊட்டும்' என்கின்றார். இதனைச் செய்வது என் கொடிய நெஞ்சமே என்று அதனைப் பழிப்பார். 'நெஞ்சக் குரங்கால்' என்று சுட்டுகின்றார். இதன் விளைவாலே யான் பெற்றது தளர்ச்சியே என்பார் 'மெலிந்து' என்கின்றனர்; மெலிவு உடற்கும் உள்ளத்திற்கும் என்க. அதனின் நீங்க வழிகாணேதேயும், வேதனை தாளாதேயும், துணையாக என்னை விடுவித்து உதவுவார் வேறு பிறர் மனித்தரிலும் தேவரிலும் இன்மையுணர்ந்து, நின்னையே புகல் என்று கதறுவேன் என்பார், 'நாமம் துணையெனக் கூறுகின்றேன்' என்கின்றனர். 'எற்கு இரங்குகவே' என்று வேண்டுவார், இரங்காதவர்க்கும் இரங்கும் தயாளுனான நீதான், அவர்போல் அல்லாதே இரங்கிக் கசியும் உளத்தவனாகிய எனக்குத் தவறாமல் உடனே உதவ முன்வரவேண்டும் என்றும் விண்ணப்பிக்கின்றார்.
என் மனமே எனக்குப் பகையாகி இத்தனையும் இடர்தந்து மெலிய விடும்போது, என்னால் என்னை எப்படி உயர்த்த இயலும்? நீதான் கை தூக்கிவிடல் வேண்டும் என்பது இதன் கருத்தாகும். 'வாடிய பயிரைக்க கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று தம்மைப்பற்றிப் பிறிதோரிடத்திற் கூறும் வள்ளலார், இப் பாட்டிலே தமது வாட்டத்தைத் தீர்த்து வாழ்வருள இறைவனருளை வேண்டிப் பாடுகின்றார். 'துணையென நின் நாமம் கூறுகின்றேன்' என்றது அந்த நாம செபமே தன்னை வாழ்விக்கும் என்னும் நம்பிக்கை மிகுதியையும் புலப்படுத்தும். இனி, 'இரங்கார்' என்றது பிறரைக் துன்புறத்தியும் நலிவித்தும் இன்புறங் கொடுமனத் தாரையும்; பிற உயிர்கட்கு வாதனைபுரிந்து ஊனுண்டு களித்தலிலேயே விருப்பமிக்க இயல்பினரையும் எனினும் ஆம். (23)
|