பக்கம் எண் :

32

      32. மதுரையில் வாழ்ந்தவன் பத்திரன் என்ற பெயர் கொண்ட பாணன், சொக்கநாதப் பெருமான்பால் பேரன்பு பூண்டு நாளும் இன்னிசை பாடி வழிபடுபவன். பாண்டிவேந்தன் அவைக் களத்தில் சிறப்புடைய இசைப்புலவனாய் ஏற்றம் பெற்றவன். அந்நாளில் வடபுலத்திலிருந்து ஏமநாதன் என்ற இசை வல்லுநன் ஒருவன் மதுரைக்கு வந்து வேந்தனைக் கண்டு தனது இசை நலத்தால் மகிழ்வித்து வரிசைகள் பல தரப்பெற்றான். அதனோடு நில்லாமல் தனக்கு நிகராக இசைவல்ல பிறர் இல்லையெனச் செருக்குற்றும் பேசினான். இதனை அறிந்த பாண்டி மன்னன் மதுரைப் பாணனாகிய பத்திரனை வருவித்து, ஏமநாதன் செருக்கினை எடுத்து மொழிந்து, “அவனோடு பாடுவையோ?” என வினவலும்,

2202.

     சீர்க்கின்ற கூடலில் பாணனுக்
          காட்படச் சென்ற அந்நாள்
     வேர்க்கின்ற வெம்மணல் என்தலை
          மேல்வைக்கு மெல்லடிக்குப்
     பேர்க்கின்ற தோறும் உறுத்திய
          தோஎனப் பேசிஎண்ணிப்
     பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன்
          உள்ளம் பதைக்கின்றதே.

உரை:

     என் கண்போன்ற பெருமானே, கூடல் நகரில் பாணனான பத்திரனுக்கு ஆளாய் மண்மேல் அடிவைத்து நடந்தபோதும், அடிபெயருந்தோறும் வெவ்விய மணல் திருவடியை உறுத்தியிருக்குமே, அதனால் அத் திருவடி நொந்திருக்குமே எனப் பேசியும் எண்ணியும் என் உள்ளம் பதைக்கின்றது. எ.று.

     நாளும் வளரும் புகழ்படைத்த நகரமாதலால் “சீர்க்கின்ற கூடல்” என வுரைக்கின்றார். கூடல், மதுரை, ஆலவாய் என மூன்று கூறுகளைக் கொண்டது மதுரை. அது குறித்துப் பாடற்புலவர் மதுரையெனவும் கூடல் எனவும் ஆலவாய் எனவும் பொதுப்பட மொழிவது உண்டு. அவ்வகையில் வள்ளலார் கூடல் என்று கூறுகின்றார். பாணன் - பத்திரன் என்ற பெயருடைய பாணன்; பாணன், குடிப்பெயர். “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந் நான்கல்லது குடியுமில்லை” (புறம். 335) என்பர் சான்றோர்; இப்பாணர் வழிவழியாக இசைத் தமிழ்ப்புலமை பெற்று அதனை வளர்த்து வருபவர். பழந்தமிழ் வேந்தர், புலவர்களைக் கொண்டு இயற்றமிழையும், பாணர்களால் இசைத்தமிழையும், கூத்தரால் நாடகத் தமிழையும் வளர்த்தனர். இம் மூவரையும் வேண்டுவன கொடுத்து ஆதரிப்பது செல்வர்கட்கும் வேந்தர்கட்கும் கடன் என்பது தமிழர் வாழ்வியல். கால மாறுதலால் இக் கடமைகள் தலைதடுமாறி மறைந்து போயின. பாணபத்திரன் வாழ்ந்த காலம், தமிழ் மரபு கெடாது நிலவிய காலம். பத்திரன் மதுரைச் சொக்கநாதன்பால் பேரன்பு பூண்டவன்; அவனது அன்புக்கு அடிமையானவன் மதுரைச் சொக்கநாதப் பெருமான். அதனால், அவன் பாணப்பத்திரனுக்கு உரியன் என்பது புலப்பட,த ஏமநாதனுடன் உரையாடுகையில், “கனியிசைக் கிழவன் பத்திரன் தன் கீழ்க்கற்பவர் அநேகர் தம்முள், நனியிசைக் கிழமை வேட்டு நானும் அவ் வினைஞனானேன், தனியிசைக் கிழவன் (அப்பத்திரன்) நோக்கித் தசையெலாம் ஒடுங்க மூத்தாய், இனி இசைக் கிழமைக்காகாய் என்றெனைத் தள்ளிவிட்டான்” என்று தான் உரைக்கின்றான். ஆயினும், அவன் பொருட்டுச் சொக்கப்பெருமான் சென்றதை பரஞ்சோதி முனிவர், “படி மிசை நடந்து பாடிப் பாணன் தன் விறகாளாகி அடிமை யென்றடிமை கொண்ட அருள் திறம்” என்று பாராட்டிக் கூறுகின்றார். இதனையறிந்ததும் பாண்டி மன்னன், வேந்தனாகும் தனது தலைமையைப் பொருளாக மதியாது, பாண்மகனை நோக்கி, “தேவரும் தவமுனிவரும் தேவரிந் சிறந்தோர், யாவரும் தமக்கு ஆட்செய இருப்பவர் இருதாள் நோவ வந்து உமக்கு ஆட்செய்து நும் குறை முடித்தா, ராவரேல் உமக்கு அனைவரும் ஏவலரன்றோ” என்றும், “ஆதலால் எனக்கு உடையர் நீர், உமக்கு நான் அடியேன், ஈதலால் எனக்கு உம்மொடு வழக்கு வேறிலை” என்றும் மொழிந்தான். அவ்வுரைகளை நன்கு எண்ணி யுரைக்கின்றாராதலால், “கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற நாள்” என்று வள்ளற் பெருமான் உரைக்கின்றார். வெம்மை நிலத்தில் நடக்கும்போது மண்ணவர்க்கே வியர்வை பெருகுமாதலால், சிவபெருமானுக் குரைக்கும்போது “வேர்க்கின்ற வெம்மணல்” என்று கூறுவது பொருத்தமாகும். மணல் மேல் அடி வைத்து நடந்தார் என்பதை நினைக்கின்றது வள்ளலார் திருவுள்ளம். மக்கள் தேவர் முனிவர் ஆகியோர் தலைமேல் மலர்தற்குரிய இறைவன் திருவடி மணல்மேல் பொருந்துவதா என ஆராமை மேற்க்கொண்டு, “என் தலைமேல் வைக்கும் மெல்லடி” என விளம்புகின்றார். தலைமேல் வைக்கும் மெல்லடி, தலைமேல் வைத்தற்குரிய மென்மையான திருவடி. மென்மைப் பண்புக்கு எல்லையே அத்திருவடி என்றற்கு “மெல்லடி” என்றார் எனக் கொள்க. மென்மையான திருவடி மணல் மேல் அடிவைத்து நடந்தபோது சிறுகற்கள் அத் திருவடியை உறுத்தியிருக்குமே என எண்ணுகிறார். எடுத்து மற்றவர்க்கு உரைக்கின்றார். மனம் அன்பால் குழைகிறது; கண்ணீர் சொரிகிறது. அந்நிலையைப் “பேசி எண்ணிப்பார்க்கின்ற தோறும் உள்ளம் பதைக்கின்றதே” எனப் பரிந்து பாடுகின்றார்.

     இதனால், இறைவன் திருவடி நினைந்து மெலிவுற்ற திறம் கூறி அருள் வேண்டி முறையிடுவது இப்பாட்டின் பயனாதல் காண்க.

     (32)