33
33. உலகவுயிர்கட்கும் இறைவனுக்கும் தொடர்புண்மை காட்டி அது வாயிலாக இறைவன் அருள்வேண்டுவது முறையாம்
என உலகவர்க்கு வள்ளலார் அறிவிக்கின்றார். படைப்பவனுக்கும் படைப்புப் பொருள்கட்கும் உள்ள
தொடர்பு, உயிர்கட்கும் உடம்பு தந்து உலகில் வாழச் செய்த இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு.
தந்தையும் தாயும் உடம்பு தந்து உயிர்களை வாழ்வித்தல்போல் இறைவனும் செய்தலின், இறைவனைத்
தந்தையென்றும் தாயென்றும் தொடர்புபடுத்தி அன்பு செய்வது மக்களுயிர்க்குப் பொருத்தமாகிறது.
இத் தொடர்பறிவு உலக முற்றும் நன்கறிந்தது. அதனால் வள்ளற்பெருமானார் “என்னைக் கைவிடின் உன்னை
உலகம் சிரிக்கும்” என வுரைக்கின்றார்.
2203. நீயேஎன் தந்தை அருளுடை
யாய்எனை தேர்ந்துபெற்ற
தாயேநின் பாலிடத் தெம்பெரு
மாட்டிஇத் தன்மையினால்
நாயேன் சிறிதுங் குணமிலன்
ஆயினும் நானும்உங்கள்
சேயே எனைப்புறம் விட்டால்
உலகஞ் சிரித்திடுமே.
உரை: அருளுடைய பெருமானே, நீ எனக்குத் தந்தை; நின் இடப்பால் உறையும் எம்பெருமாட்டியே எனை நேர்ந்து பெற்ற தாய்; இத் தன்மையினால், யான் சிறிதும் குணமில்லேனாயினும், உங்கள் சேய்; என்னை அருளாது புறக்கணித்தால் அறிஞர் உலகம் எள்ளிச் சிரிக்கும் எ.று.
அருளே திருமேனியும் செயலுமாக உடையனாதலின், இறைவனை “அருளுடையாய்” என உரைக்கின்றார். அறிவறிந்து ஆவன செய்தற்கேற்பக் கருவிகரணம் இயக்கி உதவுவது தெளிந்து “நீயே என் தந்தை” என உரைக்கின்றார். “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன்” என்பர். சங்ககாலச் சான்றோர். இறைவனுடைய இடப்பாகத்தில் அவனது அருட் சக்தியாய்ப் பிரியாது உறைவது பற்றி “நின்பால் இடத்து எம்பெருமாட்டி” என எடுத்துரைக்கின்றார். பெறுதல் வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் உடையராய், உலகு உடம்புகளையும் உடம்பிற் கருவிகரணங்களையும் படைத்தவராதலால், “நேர்ந்து பெற்ற தாய்” என உரைக்கின்றார். இங்ஙனம், சிவபெருமானும் உமையம்மையும் தந்தையும் தாயுமாகவும் முறைமைப்படுவதுபற்றி, “இத் தன்மையினால்” என்று கூறுகின்றார். சிவனுக்கும் உமைக்கும் உலகுயிர்கட்குமுள்ள உறவின் முறை கண்டுரைத்த வள்ளலார், தனக்கும் அவர்கட்கும் உள்ள முறைமையைக் காட்டற்கு “இத் தன்மையினால் நானும் உங்கள் சேயே” எனக் கூறி, தன்பால் உள்ள குறை பெற்றோர் மனம் விரும்பா நிலைமையைப் பயந்திருப்பது காட்டி வருந்துமாறு தோன்ற, “நாயேன் சிறிதும் குணமிலனாயினும் நானும் உங்கள் சேய்” என மொழிகின்றார்.
இங்ஙனம் தனக்கும் உமைபங்கனாகிய சிவனுக்கும் உள்ள தொடர்பு உலகு நன்கு தெரிந்ததொன்று; தன்னைச் சிவபெருமான் கைவிட்டால், மகனைக் கைவிட்டு விலக்கிய தந்தையைப் பழிப்பது போல உலகம் சிவனைப் பழிக்கும் என்று குறிப்புப் புலப்பட, “எனைப்புறம் விட்டால் உலகம் சிரித்திடுமே” எனச் செப்புகின்றார்.
இதனால் சிவனுக்கும் தனக்கும் உள்ள உறவின் முறை காட்டி அருள் புரிவது வேண்டல் கருத்தாதல் அறிக. (33)
|