15. போக்குரையீடு
போக்கு உரையீடு என்பது முருகன் திருவருட் பேற்றுக்கும் திருவருளின்ப வாழ்வுக்கும் உரிய நெறிகளின்கண் செல்லாமலும் நில்லாமலும் இயங்கும் கருவி கரணங்களின் போக்கினை எடுத்துரைப்பது. போக்கு-போகும் இயல். உரையீடு-உரைப்பது; விளக்கிடுவதை விளக்கீடு என்பது போல. “தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ” (பூம்பாவை) என ஞானசம்பந்தர் பாடுவது காண்க.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
221. கற்கி லேனுன தருட்பெய ராம்குக
கந்தஎன் பவைநாளும்
நிற்கி லேனுன தாகம நெறிதனில்
நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமி லடியவர் அன்பினுள்
தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தருந் தணிகையா ரமுதமே
ஆனந்த அருட்குன்றே.
உரை: நிலை பேற்றால் மிக்குறும் தணிகையில் வீற்றிருந்தருளும் அமுதமே, ஆனந்தம் நல்கும் அருள் மலையே, சொல்வகையிற் குறைபாடில்லாத அடியார்கள் அன்பின்கண் தோய்ந்து இனிக்கும் பசிய தேன் போல்பவனே, உனது திருவருட் பெயர்களாய குகன், கந்தன் எனப் புகந்தோதப் படுவனவற்றை நாடோறும் ஓதிப் பயில்கின்றேனில்லை; உனக்குரிய ஆகம வழியில் யான் நிற்பதுமில்லை; நீசனாய யான் உய்தி பெறுவேனோ? எ. று.
அற்கு - நிலைபெறுதல்; அல்குதல் என்பதன் முதனிலை, எதுகை நோக்கி வலித்தது. “அதற்குப வாங்கே செயல்” (குறள்) என்றாற் போல. நிலை பேற்றால் எழுச்சி மிகும் மலை என்றற்கு, ‘அற்கில் ஏர்தரும் தணிகை’ எனக் குறிக்கின்றார். தணிகையார் அமுதே எனவும், தணிகை ஆரமுதே எனவும் இயையும். ஞானக்கண் கொண்டு காண்பார்க்கு “அமுதமா”யும் ஞானவின்பத்தை நுகர்வார்க்கு அருள் நிறை குன்றமாயும் விளங்குமாறு புலப்படத் “தணிகையாரமுதமே, ஆனந்த அருட் குன்றே” எனவுரைக்கின்றார். கிலேசம்- குறைபாடு. முற்றவும் எடுத்தோதிப் புகழ்தற்குச் சொல்லில்லையே எனக் குறைபடுதலின்றி ஆரவுரைக்கும் அறிவு நிறைந்த அடியவர் என்றற்குச் “சொற்கிலேசமில் அடியவர்’ எனவும், அவரது ஆழ்ந்தகன்ற அன்பினுள் படிந்து இன்பச் சுவை மல்குவிக்கும் சிறப்பு விளங்க, “அன்பினுள் தோய்தரு பசுந்தேனே” எனவும், பழந்தேனாய் ஓரிபாய்வதின்றிப் புதியதிற் புதியதாய் இன்பம் செய்வது புலப்படப், “பசுந்தேனே” எனவும் இயம்புகின்றார். குகன், கந்தன், குமரன், முருகன் என எண்ணிறந்த திருப்பெயருடையனாதலின், அப்பெயர்களைக் கற்றுப் பயின்றிலேன் என வருந்துவார், “உனதருட் பெயராம் குக கந்தவென்பவை நாளும் கற்கிலேன்” என்றும், அப்பெயரனைத்தும் கற்பார்க்கு அருள் ஞானம் வழங்குவன் என்றற்கு, “அருட்பெயர்” என்றும் கூறுகின்றார். குமரக் கடவுளின் திருவருட் பெருமைகளையும் வழிபாட்டு நெறிமுறைகளையும் உரைக்கும் குமாரசங்கிதை, காந்தம் முதலாய நூல்களை “ஆகமம்” என்று குறிக்கின்றார். ஆகமம் என்ற சொல் வந்ததென்னும் பொருளில் பிற மொழிகளிலிருந்து சமற்கிருதமாகிய வட மொழியில் ஆக்கப்பட்ட நூல்களைக் குறிப்பது என அறிக. அவ்வுண்மை யறியாதார் பொருந்தாதன கூறிப் பொய்படுவர். இவற்றை நாளும் கற்றுப்பயின்று அதற்குத் தக நிற்பது கடனாகவும், அது செய்கின்றிலேன் என்பாராய், “உனது ஆகம நெறிகளில் நிற்கிலேன்” எனவும், இவ்வாற்றால் யான் கடையனாயினேன் என்பாராய், “நீசனேன்” எனவும், இவ்வகையால் யான் உய்தி பெறுவேனோ என அஞ்சுகிறேன் என்பார், “உய்வேனோ” எனவும் உரைத்து வருந்துகிறார்.
இதனால் வடலூர் வள்ளற் பெருமான் கல்லாப் போக்கும் முருகனது ஆகம நெறி நில்லாப் போக்கும் உரைத்து உய்தி பெறுவேனோ என ஏங்குவது வெளியிட்டவாறாம். (1)
|