224. துன்பி னாலகம்வெதும்பிநைந் தயர்ந்துநின்
துணையடி மலரேத்தும்
அன்பி லாதவிப் பாவியேன் செய்பிழை
அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பி லாதநின் னடியவர் தந்திரு
மனத்தினுக் கென்னாமோ
இன்பி னாற்சுரர் போற்றிடும் தணிகைவாழ்
இறைவனே எம்மானே.
உரை: இன்ப வுள்ளத்துடன் தேவர்கள் வழிபடும் தணிகைப் பதியின் எழுந்தருளும் இறைவனாகிய எம்முடைய தலைவனே, துன்பத்தால் மனம் வெந்து மெலிந்து தளர்ந்து உன்னுடைய திருவடி யிரண்டையும் துதிக்கும் நல்லன்பில்லாத பாவியாகிய என் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்வாயாயின் முரணுதல் இல்லாத நின்னுடைய அடியார்களின் திருவுள்ளத்துக்கு அஃது எவ்வாறு தோன்றுமோ, அறிகிலேன், எ. று.
வரம்பில் இன்ப வடிவனாகிய நீயல்லது இன்பம் அளிக்கும் முதற் பொருள் வேறு இல்லாமையால் தேவர்கள் இன்ப நினைவுடன் வழிபடுகின்றார்கள் என்பது விளங்க, “இன்பினால் சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே” என்றும் தமக்கும் அப்பெருமானுக்கு முள்ள தொடர்பு புலப்பட, “எம்மானே” என்றும் எடுத்தோதுகின்றார். துன்பம் சுடும் இயல்பிற்றாதலின், “துன்பினால் அகம் வெதும்பி” எனவும், வெதும்பிய பொருள் மெலிந்து வன்மை தளருமாதலின், “நைந்தயர்ந்து” எனவும், அதனால் உன் திருவடியை அன்புடன் வணங்குதலாகிய அற வினையைச் செய்யாத பாவியாயினேன் என்பார், “துணையடி மலரேத்தும் அன்பிலாத இப்பாவியேன்” எனவும், பாவிகள் வருந்துவது கண்டு இரங்குதல் நன்றாயினும், அவர்கள் செய்பிழைகள் யாவற்றையும் பொறுத்தருளுதல் பாவத்தை மறைமுகமாக வளர்ப்பதாய் முடியும் என அறிஞர் எண்ணுவர் என்பது உலகறிந்த உண்மையாதல், “பாவியேன் செய் பிழையனைத்தையும் பொறுப்பாயேல் நின் அடியவர் தம் திருமனத்தினுக்கு என்னாமோ” எனவும் கூறுகின்றார். அன்புக்கு மறுதலையாயது வன்பு; முரணுடைமையுமாம். அடியவர் திருவுள்ளம் வன்மையின்றி மென்மையே மிக்கிருக்குமாதலால் “வன்பிலாத நின் அடியவர்” எனச் சிறப்பிக்கின்றார். தாம் அந்நிலைமையை எண்ணாமைக்குக் காரணம் தம்மைச் சுட்டு அறிவை மெலிந்து அயரச் செய்யும் துன்பம் என்பதை வலியுறுத்தவே எடுத்துரையில் விதந்தோதுகின்றார்.
இதனால், துன்பமிகுதியால் விளைவை எண்ணாத தமது மனப்போக்கினை வெளிப்படுத்தவாறாம். (4)
|