225. என்செய் கேனினுந் திருவருள் காண்கிலேன்
எடுக்கருந் துயருண்டேன்
கன்செய் பேய்மனக் கடையனே னென்னினும்
காப்பதுன் கடனன்றோ
பொன்செய் குன்றமே பூரண ஞானமே
புராதனப் பொருள்வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ்
வள்ளலே மயிலோனே.
உரை: பொற் குன்றம் போல்பவனே, குறையிலாது நிறைந்த ஞான வடிவினனே, பழமைப் பொருளின் இருப்பிடமே, நிலை பெற்ற மாணிக்க விளக்கே, தணிகைப் பதியில் வாழும் வள்ளற் பெருமானே, மயில் மேல் ஊர்பவனே, இன்னும் உன் திருவருள் எய்தக் காண்கிலேனாதலால் யான் என்ன செய்வேன்; தாங்குதற்கு மாட்டாத பெருந்துன்பம் உற்றேன்; களவு புரியும் பேய்த்தன்மை பொருந்திய மனத்தையுடைய கீழ் மகனாயினும் என்னைக் காப்பது உனக்குக் கடமையன்றோ, எ. று.
பொன்னிறம் கொண்ட திருமேனி யுடையனாதலால், “பொன்செய் குன்றமே” எனவும், முழுத்த ஞான மூர்த்தியாதல் பற்றிப் “பூரண ஞானமே” எனவும், பழையரிற் பழையன் எனப்படுவது பற்றிப் “புராதனப் பொருள் வைப்பே” எனவும், நான் பட்ட வழி ஒளி குன்றும் உலகத்து மணி போலாது நித்தப் பொருளாம் என்பது விளங்க, “மன்செய் மாணிக்க விளக்கமே” எனவும் சொல்லி ஏத்துகின்றார். திருவருட் பேற்றை எதிர்பார்த்த வண்ணமிருத்தலின், “இன்னும் திருவருள் காண்கிலேன்” என்றும், காணப் பெறுதற்குள் துன்பம் மிக்குற்றுப் பொறுக்க மாட்டாத துயர் செய்கிற தென்பாராய், “எடுக்கரும் துயருண்டேன்” என்றும், மாற்றாக வேறு யாதும் செய்யும் வல்லமை யில்லை என்பார், “என் செய்கேன்” என்றும், உரைக்கின்றார்.
கன், களவுப் பொருட்டாய கன்னம் என்பதன் முதனிலை. நினைவு சொற் செயல்கள் வேறு வேறாமாறு திரிவித்தல் பற்றிக், “கன்செய் மனம்” எனவும், கண்ட பொருளில் ஆசை வைத்து அலையும் இயல்பு கண்டு, “பேய் மனம்” எனவும், இம்மனத்தால் தமது வாழ்வு கடைப்படுவது புலப்படக், “கடையனேன்” எனவும், “காக்கும் முதல்வனாதலால் என்னை எப்படியும் காத்தல் உனக்குக் கடமையாகும் என்பாராய்க், “காப்பது உன்கடன் அன்றோ” எனவும் இயம்புகின்றார். “தன்கடன் அடியேனையும் தாங்குதல்” என்பர் திருநாவுக்கரசர்.
இதனால் களவும் வஞ்சனையும் நிறைந்து பேய்த்தன்மை யுற்றுக் கடையனாவது என் போக்கு என முறையிட்டவாறாம். (5)
|