229. வாழ்வி லாஞ்சிறு களிப்பினால் உன்றனை
மறந்திறு மாக்கின்றேன்
தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வனென்
தன்மைநன் றருளாளா
கேழ்வி மேவிய வடியவர் மகிழ்வுறக்
கிடைத்தருள் பெருவாழ்வே
வேழ்வி யோங்கிய தணிகைமா மலைதனில்
விளங்கிவீற் றிருப்போனே.
உரை: கல்வி கேள்விகளாற் சிறந்த அடியார்கள் இன்பமுறப் பெற்ற திருவருட் பெருவாழ்வாகியவனே, வேள்விகளால் உயர்ந்த தணிகைப் பெருமலையில் விளங்கி வீற்றிருக்கும் பெருமானே, அருளாளனே, வாழுங் காலத்தில் உண்டாகும் சிறு மகிழ்ச்சியில் உன்னை மறந்து செருக்கில் மயங்குகின்ற யான் தாழ்வு எய்துங் காலத்தில் உன்னைச் சிறிது நினைந்து மனம் நொந்து தளரும் எனது தன்மை நன்றன்றே? மிகவும் தீது, எ. று.
கேள்வி, வேள்வியென்பன எதுகை நோக்கிக் கேழ்வியென்றும் வேழ்வியென்றும் திரிந்தன. “கற்றலிற் கேட்டல் நன்” றென்றும், “கற்றலனாயினும் கேட்க” என்றும் சான்றோர் கூறுதலால், “கேழ்வி மேவிய அடியவர்” என்கின்றார். அடியவர் பலரும் கற்றல் கேட்டல் உடையாராதலின், கல்வி பெய்துரைக்கப்பட்டது. அடியவர் மகிழ்வது திருவருட் பெருவாழ் வாதலால், “அடியவர் மகிழ்வுறக் கிடைத்த அருட் பெருவாழ்வே” என்று போற்றுகின்றார். வாழ்வளிப்பது காரணத்தால் “வாழ்வே” என்கின்றார். கிடைத்த என்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது. வேள்வி- விருந்தோம்பும் வேளாண்மை. “விருந்தோம்பி வேள்வி தலைப் படாதார்” (குறள்) என்று திருவள்ளுவர் கூறுவது காண்க. வைதிக வேதியர் செய்யும் யாகமும் வேள்வி யெனப்படுதலால், தணிகைப் பதியில் வேதியா யாகமும் வேளாளர் வேள்வியும் மிக்கிருப்பது பற்றி, “வேழ்வி யோங்கிய தணிகை மாமலை” என வுரைக்கின்றார். உலகறிய இனிது வீற்றிருப்பது புலப்பட, “விளங்கி வீற்றிருப்போனே” எனப் புகல்கின்றார். வீற்றிருத்தல் - சிறப்பால் மிக்கிருத்தல். மக்கள் வாழ்நாளில் செல்வக் காலத்தை வாழ்வு எனவும், அல்லற் காலத்தைத் தாழ்வு எனவும் கூறுவர். செல்வக் காலத்தில் நல்லறி வில்லாதார் செருக்குற்றுச் செய்தற்குரியதைச் செய்யாது மறந்து இறுமாப் பெய்தி வருந்துவது போல், யானும் இறுமாந்து வருந்துபவன் என்பாராய், “வாழ்விலாம் சிறுகளிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன்” என்றும், தாழ்வுக் காலத்தில் செருக்கின்றிச் சிந்தை ஓரளவு தெளிவுறுவதால் செய்யா தொழிந்த நல்வினையை நினைந்து வருந்தும் இயல்பு என் பால் உண்டு என்பாராய், “தாழ்விலே சிறிதுஎண்ணி நொந்து அயர்வன்” என்றும், இவை எனக்கு இயல்பாக அமைந்துள்ள வாயினும், எனக்கு நலம் தருவன வல்ல என்பாராய், “என் தன்மை நன்று” என்றும் உரைக்கின்றார். நன்று, தீது எனப் பொருள் பட வந்த எதிர்மறைக் குறிப்பு மொழி. இது பிறப்புத் தன்மை யேதுவாக உளதாகிய குற்றம் எனப் பொறுத்து அருளுதல் வேண்டும் என்றற்கு, “அருளாளா” என வேண்டுகின்றார்.
இதனால் வாழ்வில் செருக்குற்று இறுமாத்தலும் தாழ்வில் சிறிது நினைத்தலும் என் போக்கு என விளம்பியவாறாம். (9)
|