பக்கம் எண் :

126

       126. விஞ்ஞான அறிவு பெருகிவரும் இந்நாளில், மக்களில் பலர் இதுகாறும் வாழ்விற் கண்டறியாத நுண்ணிய கருவிகளைக் காண்கின்றார்கள்; இயற்கைப் பொருள்களினூடே தமது நுண்ணிய உணர்வை நுழைத்து அரிய வுண்மைகள் பலவற்றைக் கண்டறிகிறார்கள். யாராலும் காணமுடியாதது, செய்ய முடியாதது என்று கருதிக் கைவிடப்பட்டிருந்த பொருள்களும் செயல்களும், மக்கள் அறிவெல்லையிலும் செயல் எல்லையிலும் வந்து அடங்கிவிட்டமை உலகு நன்கு கண்டு மகிழ்கிறது. “அரிய வென்று ஆகாத இல்லை” என்ற திருக்குறள் முற்றிலும் உண்மை கூறுகிறது என்று இந்நாளைய விஞ்ஞானம் விளக்கமாகத் தெரிவித்துவிட்டது. ஆண் தெய்வமென்றும் பெண் தெய்வமென்றும், பலராலும் பலகாலமாகவும் பலவகையாகவும் பேசப்பட்டு வந்த வெண்மதி இம் மண்ணுலகு போலும் ஒரு மண்ணுருண்டையென்று சொன்னதோடு நில்லாமல், அதற்கு நேரிற் சென்று கண்டு, அதன் மண்ணையும் கொண்டு வந்து காட்டிவிட்டது மக்களது நுண்புலம். இதனைக் கண்டதும் மெல்லிய அறிவினர் சிலர் “இனி இறைவனறிவினும் மக்களறிவு மேன்மையுடைத்து” என மொழிகின்றார். சுமார் நூறு ஆண்டுகட்கு முன்பு நிலவிய விஞ்ஞானத்தின் வியத்தகு செயலைக் கண்டவர் இவ்வாறு மொழிந்தனர். அவர்களையும் அவர்களது உரையும் கண்ட வள்ளற் பெருமான் இறைவன் செய்யும் அருளைக் காட்டிச் சிந்திக்கச் செய்கின்றார்.

2296.

     ஊர்தரு வார்நல்ல ஊண்தரு
          வார்உடை யுந்தருவார்
     பார்தரு வார்உழற் கேர்தரு
          வார்பொன் பணந்தருவார்
     சோர்தரு வார்உள் ளறிவுகெ
          டாமல் சுகிப்பதற்கிங்
     கார்தரு வார்அம்மை யார்தரு
          பாகனை யன்றிநெஞ்சே.

உரை:

     உமையம்மையை இடப்பாகத்துடைய பெருமானார் நமக்கு ஊரும் உணவும் உடையும் நிலமும் உழவுக்கு ஏரும் செலவுக்குப் பணமும் தருவார்; சலியா உண்மை யுழைப்பால் சோர்வுறுவார்க்கு உள்ளறிவு கெடாமல் இருந்து சுகம் பெறுதற்கு நல்லறிவு நல்கும் அவரையன்றி நெஞ்சமே. நமக்கு வேறு யார் தருவார் என நினைக்கின்றாய்; ஒருவரும் இல்லை. எ.று.

     நாடும் ஊரும் இருப்பினும் உழுதற்கு ஏர்ப்படையும் செலவுக்குப் பணமும் இருந்தாலன்றி வேளாண்தொழில் புரிதல் இல்லையாமாதலின், பார்தருவார் ஊர்தருவார் ஏர்தருவார் பொன் பணம் தருவார் என உரைக்கின்றார். நாடும் ஊரும் பெறுவது ஏரும் பொன்னும் கொண்டு உழுதொழில் செய்து உலகியல் வாழ்வு நடத்துதற்காகும். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்பது தமிழ் நூலார் முடிவு. பார் என்றது நாடு. கொடை வள்ளல்களாக வாழ்ந்தவர் இரவலர்க்கு நாடும் ஊரும் நல்கியதைத்தான் பழந்தமிழ் நூல்கள் சிறப்பித்துரைக்கின்றன. அவ்வள்ளல்கள் அனைவரினும் பெருவள்ளல் பரமசிவனாதலின், இவ்வாறு வடலுர் வள்ளல் கூறுகின்றார். பாரும் ஊரும் கூறுவது முறையாயினும் செய்யுளாதலின் மாறிக் கூறினார். கொடுப்பதன்கண் முன்னிற்பது ஊணும் உடையுமாதலால், “நல்ல ஊண்தருவார் உடையும் தருவார்” என்றுரைக்கின்றார். உழவுக்குரிய படையாதலின், “உழற்கு ஏர் தருவார்” என்றும், பல்லேர் கொண்டு பன்முறையுழுது புழுதி யுணக்கி, எருவிட்டு வித்திக் களைகட்டுக் காவல் புரிதற்குப் பிறர் உதவி வேண்டப்படும்; அவ்வுதவியைப் பொன்தந்து பெறல் வேண்டுதலின் “பொற்பணம் தருவார்” என இயம்புகின்றார். சலியா உழைப்புடையார்க்கு உடலிற் சோர்வுண்டாதல் இயல்பு; உடற்சோர்வு மிக்கவழிச் செய்தொழில் குற்றப்பட்டுக் கெடுமாதலின் அதனைத் தவிர்த்தல் வேண்டி இறைவன் அறிவு நல்குவன் என்பதற்குச் “சோர் தருவார் கெடாமல் சுகிப்பதற்கு உள்ளறிவு இங்கு ஆர்தருவார்” என்று உரைக்கின்றார். வாழ்வாவது அறிவும் செயலுமன்றி வேறின்மையின், செயற்கு இன்றியமையாத அறிவுதரும் அருட் செயலை, “அம்மை பாகனையன்றி உள்ளறிவு தருவார் பிறரில்லை” எனப் பேசுகின்றார்.

     இதனால், செய்தொழிற்குரிய இடமும் பொருளும் கருவியும் நல்கும் இறைவன் அறிவும் அருளுகின்றான் என அறிவுறுப்பது காணலாம்.

     (126)