பக்கம் எண் :

10

10. அருள் புரிந்த திறம் கூறி வேண்டல்

 

     127. இறைவன்பால் அருள் வேண்டி முறையிடுவதே வடலூர் வள்ளலின் செயலாக இருப்பது படிப்பவர் கேட்பவர் யாவர் உள்ளத்திலும் திருவருளின் பெருமையை உணரச் செய்கிறது. திருவருளைப் பெறுவது இன்றியமையாததென்றும் தெரிகிறது. இதனை வள்ளலார் தமது அருள் உள்ளத்தில் எண்ணுகிறார். அருள்பெற்றார் வரலாறுகளை நினைக்கின்றார். முதற்கண் திருமுறைகளை நோக்குகின்றார். அங்கே திருமால் இறைவனை வேண்டிச் சக்கரம் பெற்ற அருள் வரலாறு காணப்படுகிறது. காஞ்சிப் புராணம் முதலியனவும் இதைக் கூறுகின்றன. ஐம்படையேந்தும் அருளாளனாகிய திருமாலுக்கு அவற்றுள் ஒன்றான சக்கரப்படை சிவன் தரவந்தது என்னும் செய்தி சிந்தனையைத் தூண்டுகிறது. திருமாலின் வலத்திருக்கையில் இருந்து ஒளிவிட்டுத் திகழும் சக்கரப்படை அவர்க்கு வெற்றிதரும் நெறியில் சிறப்புடைப் படையாய் சீர்பெறுவதும், அது சிவபரம்பொருளின் திருவருளுருவாய் அடியவர் மனத்தின்கண் பெரு மகிழ்ச்சி தருவது கண்டு, வள்ளலார் உள்ளம் மகிழ்ந்து பாடுகின்றார்.

 

      திருமால் வழிபட்ட காலை, தான் கொணர்ந்து பூக்களில் ஒன்று குறையக் கண்டு தன் கண்ணை இடந்து இறைவன் திருவடிக்கண் இட்டு அருச்சித்தார் என்பது வரலாறு. அதன்கண் திருமால் தமது கண்ணையிட்டு வழிபடுவதை நினைந்த வள்ளலார், அவருடைய திருக்கண் சிவன் திருவடியைத் தீண்டிய நலத்தைப் பாராட்டி, அக் கண் என்ன தவம் செய்ததோ என வியந்து பாடுகின்றார்.

2297.

     பண்செய்த சொன்மங்கை பாகாவெண்
          பாற்கடல் பள்ளிகொண்டோன்
     திண்செய்த சக்கரங் கொள்வான்
          அருச்சனை செய்திட்டநாள்
     விண்செய்த நின்னருட் சேவடி
          மேற்பட வேண்டியவன்
     கண்செய்த நற்றவம் யாதோ
          கருத்தில் கணிப்பரிதே.

உரை:

     உமைபங்கனே, திருமால் தனக்குச் சக்கரப்படை வேண்டி அருச்சனை செய்தபோது, தன் கண்களில் ஒன்றைப் பெய்து வழிபட்டான். அவனது அக் கண் நின் திருவடியைத் தீண்டுதற்கு என்ன தவம் செய்ததோ, அதனை மனத்தால் அளவிடல் அரிது, காண் எ.று.

     உமா தேவியின் மொழிநலத்தை பாராட்டிக் கூறலுற்ற வடலூர் அடிகள் “பண்செய்த சொல் மங்கை பாகா” எனப் புகல்கின்றார்; மணிவாசகர், உமையம்மையைப் “பண்ணினேர் மொழியாள்” (வாழார்) எனப் பரிந்துரைப்பர். திருமால் பள்ளிகொள்ளும் இடம் திருப்பாற் கடல் என்பவாகலின், திருமாலை, “வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்” எனச் சிறப்பிக்கின்றார். போர்ப்படைகளில் ஒன்றாதல்பற்றிச் சக்கரத்தைத் “திண்செய்த சக்கரம்” என்று கூறுகின்றார். ஒருகால் சிவன், சலந்தரன் என்ற பெருவீரனுடன் போராடியபோது, அவனை, இச் சக்கரப்படையால் கொன்று மேன்மையுற்றார். அப்போது பெருவலிபடைத்த அவனை இரு துண்டாக வெட்டிய வீறுடையதாகலின் சக்கரப்படையைத் “திண் செய்த சக்கரம்” என்று கூறுகின்றார். திண்மை - உறுதியுடைமை. உலகம் காக்கும் முதல்வனாதலால் உலகிற்கு இடுக்கண் செய்வதே தொழிலாகவுடைய அசுரர்களைக் கோறல் விரும்பித் திருமால் அந்தச் சக்கரப் படையை வேண்டிப் பூக்கொண்டு சிவன் பொன்னடியை அருச்சித்து வழிப்பட்டான்; அவற்குச் சிவபெருமான் அதனை அளித்தான் என்பது புராண வரலாறு.

     “பெருமால் திண்படை வேண்டி நற்பூம்புனல்
     வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
     கருமாற்கு இன்னருள் செய்தவன்”

என்றும், திண்படை யென்றது சக்கரப்படையென்பது விளங்க

,      “துணிவண்ணச் சுடராழி கொள்வான் எண்ணி
          அணிவண்ணத் தலர்கொண் டடி அர்ச்சித்த
     மணிவண்ணற் கருள்செய்தவன் மாற்பேறு
          பணிவண்ணத் தவர்க் கில்லையாம் பாவமே”

என்றும் திருநாவுக்கரசர் உரைப்பர்..

     அந்த சக்கரப்படை பண்டு சலந்தரனைக் கோரற்குச் சிவபெருமான் ஏந்தி வெற்றி பெற்ற பெருமையுடையது என்பதை, மணிவாசகப் பெருமான்,

     “சலமுடைய சலந்தரன்தன்
          உடல்தடிந்த நல்லாழி
     நலமுடைய நாரணற்கன்
          றருளியவா றென்னேடீ
     நலமுடைய நாரணன் தன்
          நயனம்இடந் தரனடிக்கீழ்
     அலராக இட ஆழி
          அருளினன்காண் சாழலோ”

என்றும், கண்ணிடத்து அருச்சித்ததற்குக் காரணம் அருச்சனைக்குக் கொணர்ந்த பூக்களில் ஒன்று குறைந்தமை என்பதை,

     “பங்கயம் ஆயிரம் பூவினில்
          ஓர்பூக் குறையத்
     தங்கண் இடந்தான்
          சேவடிமேற் சாத்தலுமே
     சங்கரன் எம்பிரான்
          சக்கரம் மாற்கருளியவா
     றெங்கும் பரவி நாம்
          தோணோக்கம் ஆடாமோ”

என்றும் விளக்குகின்றார். பிறவித் தொடர்பறுத்தலை நாடாது, மண்ணுலக வாழ்வில் எய்தும் இன்ப மயக்கத்தால் வேள்வி முதலிய செயல்களால் மேலும் அவ்வின்பமே நுகரவிரும்புவோர் பொருட்டு, விண்ணுலகையும் அதன்கண் பெறலாகும் இன்ப வாழ்வையும் சிவன் தன் திருவருளால் படைத்தானாதல்பற்றி, சிவன் திருவடியை “விண் செய்த நின் அருட்சேவடி” என வள்ளலார் புகழ்கின்றார்.

     திருவடியைக் காணும் பேறுபெற்ற திருமாலின் செம்மலர்க்கண், அவன் முகத்தின் நீங்கிக் காணப்பட்ட திருவடிக்கண் ஒன்றியுடனிருக்கும் பேறு சிவப்பேறாதலின், “கண் செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிது” என்று இசைக்கின்றார். காணப்படும் பொருளும் காண்பதும் ஒன்றாய் உடனிருப்பது அத்துவிதநிலை; அந்தச் சிவாத்துவிதத்தைத் திருமாலின் கண் பெற்றது ஆராப்பெரும் தவம் என இத் திருப்பாட்டில் வள்ளலார் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

     (127)