பக்கம் எண் :

128

       128. வையை யாற்றில் பெருவெள்ளம் பெருகிவரக் கண்ட மதுரை மக்கள் உள்ளம் பதைத்து, மிகவும் அஞ்சி,

 

     “நங்கோமகன் செங்கோல் பிழைத்

           தன்னோ என நவில்வார்,

     அங்கோல்வ ளைபங்கன் விளையாட்

           டோஎன அறைவார்;

     இங்கார் இது தணிப்பார் என

           இசைப்பார்; இது தணிப்பான்

     பொங்கால முண்டருள் சுந்தரன்

           அலதுயர் எனப் புகல்வார்”

 

ஆயினும், பாண்டிவேந்தன் அமைச்சரை விடுத்து, ஆற்றின் கரையை உணர்ந்து அடைத்தற்கு விரைந்த ஏற்பாடு செய்க எனப் பணித்தார். நகரவர் அனைவர்க்கும் கரையை அளந்து கொடுத்து அடைக்குமாறு அமைச்சரும் சுணங்காது தொழில் புரிந்தனர். நகரவருள் பலர் தாமே சென்று தமக்குரிய பணியைச் செய்தார்கள். மாட்டாதார் கூலியாள் வைத்து உடைப்பை அடைத்தனர். அவருள் பிட்டுவணிகம் செய்யும் முதியவள் ஒருத்திக்குத் தான் கூலியாள் கிடைக்கவில்லை. “மன்னன் ஆணை மறுக்கற்பாலதன்றே; என் செய்வேன்” என அஞ்சினவளாய்ச் சொக்கநாதன் திருமுன் சென்று,

 

     “துணையின்றி மக்கள் இன்றித்

           தமர்இன்றிச் சுற்றமாகும்

     பணையின்றி ஏன்று கொள்வார்

           பிறர்இன்றிப் பற்றுக் கோடாம்

     புணையின்றித் துன்பத் தாழ்ந்து

           புலம்பறு பாவியேற்கு இன்று

     இணையின்றி இந்தத் துன்பம்

           எய்துவது அறனோ எந்தாய்”

 

என்று முறையிட்டாள். உண்மை அறிந்த பெருமானாதலின், சொக்கப் பெருமானே கூலியாள் உருவில் வந்தியாகிய முதியவள் முன் தோன்றினான். அவளும் தன் குறையைச் சொல்லித் தனக்குரிய பங்கை அடைக்குமாறும், அதற்குக் கூலி தான் விற்கும் பிட்டைத் தருவாகவும் உரைத்துக் களைப்புநீங்கப் பிட்டும் தந்து விடுத்தாள். அவள் தந்த பிட்டமுறைச் சொக்கநாதன் உண்டதை வியந்துரைக்கும் பரஞ்சோதியார்,

 

     “அன்னை முலைத் தீம்பாலின்

           அரிய சுவைத்து இஃதுஇந்தத்

     தென்னனாய் உலகாண்ட

           திருவால வாயுடைய    

     மன்னர்பிரான் தனக்கேயாம்

          என்றென்று வாய்ப்பெய்து

     சென்னியசைத்து அமுது செய்தார்

           தீவாய்நஞ் சமுது செய்தார்”

 

என்று பாடிப் பரவுகின்றார். இங்ஙனம் பிட்டுண்ட செயலை நினைக்கின்றார் வடலூர் வள்ளல். முதியவளான வந்தி மனம் குழைந்து சிவனை நினைந்து வந்தித்துக் கூலியாள் வேண்டுமென வருந்தியழைப்ப, அவர் அவள் விரும்பியவண்ணமே கூலியாளாய் வந்து, அவள் தரும் பிட்டையே கூலியாக இசைந்து உண்டது சிவபெருமானுடைய திருவருட் பெருக்கை உலகறிய வெளிப்படுத்துவதை எண்ணி மகிழ்கின்றார்.

2298.

     மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை
          வாழ்வித்த வள்ளல்உன்வெண்
     காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட
          மேனியைக் கண்டுதொழக்
     கூப்பிட்டு நானிற்க வந்திலை
          நாதனைக் கூடஇல்லாள்
     பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட
          போதினும் போவதுண்டே.

உரை:

     வந்தி தந்த பிட்டையுண்டு அவளை வாழ்வித்த நின் மேனியைக் கண்டு தொழல் வேண்டி நான் கூப்பிட்டு நிற்கவும், நீ வருகின்றாயில்லை; பூப்புற்ற காலத்தும் மனையவள் கூப்பிட்டபோது கணவன் சென்று சேர்வதுண்டன்றோ எ.று.

     அரிசி மாவால் செய்யப்படுவதாகலின், வந்தி தந்த பிட்டை, மாப்பிட்டு எனப் புகழ்கின்றார். தேவர் முதலியோர்க்கு அமுதளித்து வாழ்வு தந்த பெருமானாகிய சிவன், தானே தன் வாயிற்பெய்து உண்ட பெருமையுடையதாகலின், வந்தியின் பிட்டை “மாப்பிட்டு” என்றார் எனினும் பொருந்தும். மனமார வரவேற்று விரும்பியுண்டமை பற்றி, “நேர்ந்துண்டு” என்றும் உண்டு வந்தியின் பங்கை அடைத்து, அவட்கு அரச தண்டம் போந்து துயருறுத்தாதபடி உய்வித்தது நினைந்து, “வந்தியை வாழ்வித்த வள்ளல்” என்றும் உரைக்கின்றார். வெண்காப்பு - வெண்மையான திருநீறு. அணிகின்றவர் உடற்கும் உயிர்க்கும் திருவருள் செய்யும் காப்பாதல் பற்றி, திருநீற்றை “வெண்காப்பு” எனக் குறிக்கின்றார். குழவிப் பருவத்தில் ஞானசம்பந்தர்க்குக் காப்பிட விரும்பிய பெற்றோர், “வேறு பல காப்பு மிகை என்றவை விரும்பார், நீறுதிரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்” என்று சேக்கிழார் தெரிவிப்பது காண்க. பாம்பு, பாப்பு என வந்தது. சிவனைப் பெரியோர், “பாம்பலங்காரப் பரன்” (திருக்கோவை) என்பராதலால், “பாப்பிட்ட மேனி” எனப் பாராட்டுகின்றார். வந்தியாகிலும் கூலிக்கு ஆள் வேண்டுமெனக் கூப்பிட்டாள்; யானோ நின் திருமேனியை கண்டு அன்புடன் தொழவேண்டி அழைக்கின்றேன்; நீ வருகின் றாயில்லை என்ற கருத்துப்பட “மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை.” எனவுரைக்கின்றார். மகளிர்க்குப் பூப்புக்காலத்தில் காதல் வேட்கை பெருகி நிற்கும்; அக்காலத்தே காதற் கணவன் பிரிந்திருக்கலாகாது என்பர். தொல்காப்பியரும், “பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும் நீத்தகன் றுறையார்” இல்லிருந்து மகிழும் மக்கள் எனவுரைக்கின்றார். பூப்புக் காலத்தில் கணவன் மனைவியர் கூட்டம் கூடாது என்றோர் விலக்கு விதி மக்களினத்தில் சிலரிடையே இருக்கிறது. தொல்காப்பியர் காலத்திலில்லாத இவ்விலக்கு விதி பிற்காலத்தே புதிது நுழைந்துள்ளது. பூப்பின் இயல்பு தெரியாத காலத்தே இஃதொரு விலக்கத்தக்க வெளியீடு என்று நினைந்து மகளிரைப் புறங்கடையில் ஒதுக்கிவைக்கும் வகையில் இயன்று வந்தது. பூப்பின் புறப்பாடு கண்டு அஞ்சியோடும் மக்கள் இன்றும் உள்ளனர். உயிர்நூல் ஆராய்ச்சிகளும் விளக்கங்களும் இப்போது நன்கு பரவியுள்ளன. பூப்பு என்ற சொல்லே பூத்தல், இன்பம்பெருக்கல் என்ற இனிய பொருளில் அமைந்துள்ளது. பெண்களின் கருப்பையில் தோன்றும் முட்டைகள் காய்த்துப் பழுத்துக் கருவாய் உருவாகும் வாய்ப்பில்லாதபோது தாமே உடைந்து 28, 30 நாட்களுக்கொருமுறை பூப்பென்ற பெயரால் வெளி வந்து விடுகின்றன. அவை வெளிவருவதால் கேடொன்றும் எய்துவதில்லை என ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றார்கள். இளமைக் காலத்தே கற்கப்படும் கல்வியோடு இவற்றைக் கற்பிக்கும் முறை இன்னும் நம் நாட்டில் இடம் பெறவில்லை; பூப்பின் பண்பும், கருத்தோற்றம் வளர்ச்சி முதலியவற்றின் இயல்புகளும் மாணவ நிலையில் ஆடவரும் பெண்டிரும் இளமையிலேயே அறிந்து கொள்வார்களானால், குருட்டு நம்பிக்கையாளாரின் கொடுமை அடிபட்டொழிந்து போகும். இவர்களின் கொடுமையால் மகளிர்க்குண்டாகும் நோய்கள் தொலைந்துபோம். மார்க்கு என்றி பிராங்கு, மிசாவரி பல்கலைக் கழகத்து எட்கார் ஆலன் முதலியோர் எழுதியுள்ள நூல்கள் இக் கல்வி முறைக்கு ஏற்றவையாகும். பூப்பின் இன்றியமையாமையும் அதன் பண்பும் பயனும் நன்கு அறிந்தமையின் வள்ளலார், “பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும்” என்று புகல்கின்றார். வடலூர் வள்ளலின் அருட்புலமையை எண்ணாமல் தமிழறிஞர் ஒருவர் என்பால் வந்து இப் பாட்டை எடுத்துக்காட்டிக் குற்றம் கூறினார். அவரது அறியாமையை வெளிப்படுத்தியபின், “பெரியோர்களின் கருத்தறியாமல் குற்றம் கூறுவது மடமை என உணர்கிறேன்” என்று சொல்லிச் சென்றார். விஞ்ஞான வுண்மைகள் பெருக வெளிப்பட்டிருக்கும் இந்நாளிலும், அறிவைப் பரக்கப் பயின்று விரிவு செய்து கொள்ளும் எண்ணமின்றி மடிந்துகெடும் மக்கள் நிலை அறிஞர்க்கு அவலத்தையே உண்டுபண்ணுகிறது.

     இதன்கண் வந்தியின் அன்பின் பெருக்கைப் புலப்படுத்தும் வகையில் இறைவனது அருள் நிலையை விளக்குவது பயனாதல் காண்க.

     (128)