பக்கம் எண் :

132

       132. திருஞானசம்பந்தர் காலத்தில் செந்தமிழ்ப்புலமையும் சமய ஞானப்புகழும் திருவருட் சிவஞானச் செல்வமும் உடையராய் முதியராய் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். அவர் சமணசமயத்துத் தருமசேனராயிருந்து சைவம்புகுந்த காலத்தில், சமண் சமயத்தவனான அந்நாளைய பல்லவவேந்தன் ஆணை கொண்டு சமணர் அவரைக் கல்லொடு பிணித்துக் கடலில் எறிந்தனர். அவரோ சிறிதும் அஞ்சாமல், சிவனையே நினைந்து,

 

            “சொற்றுணை வேதியன் சோதி வானவன்,

     பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்

     கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

     நற்றுணை யாவது நமச்சி வாயவே”

 

எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கரையேறினார். இந்நிகழ்ச்சியால் சிவத்தின் திருவருள் கருங்கல்லையும் தெப்பமாய் மிதப்பிக்கும் என்ற வுண்மை நாடெங்கும் பரவிற்று. இந்நாளிலும் அது சைவர்களால் மறக்கப்படுவதில்லை. அதனை நினைந்தருளுகிறார் வடலூர் வள்ளல். சிவஞானச் செயல்களும் சைவவுண்மைகளும் திருவருட் சிறப்புமே நிறைந்த திருவுள்ளமுடையராதலால் வள்ளலார் நாவரசைப் பிணித்த கல்லை எண்ணுகிறார். அஃது அவர்க்குத் துணையாய் கடலடிக்குக் கொண்டு செல்லாது, மிதவையாய் மாறியதும் தமது நெஞ்சம் அக்கல்லின் தன்மையும் கனமும் எய்தியிருப்பதும் கண்டு வருந்துகிறார். கல்லின் பண்பை மாற்றிய திருவருளல்லது துணையாவது வேறில்லை எனத் தெளிந்து அத்திருவருளை வேண்டுகிறார்.

2302.

     சொற்றுணை வேதியன் என்னும்
          பதிகச் சுருதியைநின்
     பொற்றுணை வார்கழற் கேற்றியப்
          பொன்னடிப் போதினையே
     நற்றுணை யாக்கரை ஏறிய
          புண்ணிய நாவரசைக்
     கற்றுணை யாதிந்தக் கற்றுணை
          யாமென் கடைநெஞ்சமே.

உரை:

     “சொற்றுணை வேதியன்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தை நின் திருவடிக்குரியதாகப் பாடி, அத் திருவடியே துணையாவது எனக்கொண்டு கடலினின்றும் கரையேறியருளிய நாவரசப் பெருமானுக்கு அக்கல் துணையாகாமல் என் கீழ்ப்பட்ட நெஞ்சுக்கன்றோ துணையாகிறது; அஃதாவது ஒப்பாகிறது; இதற்கு என் செய்வேன். எ.று.

     சுருதி என்னும் வடசொல், செவியிற் கேட்பது என்னும் பொருளது. பதிகச் சுருதி எனச் சிறப்பித்தலின், பதிகப் பாடல் என்பது பொருளாயிற்று. பொற்றுணை வார்கழல் - இரண்டாகிய தீண்ட பொற்கழல். அது கழலணிந்த திருவடியைக் குறிக்கிறது. கழல் - வீரர் அணியும் காலணி. இத் திருப்பதிகம் இறைவன் திருவடி பொருளாகப் பாடப்பட்டமையின் “பதிகச் சுருதியை நின் பொற்றுணை வார்கழற் ஏற்றி” என வுரைக்கின்றார். துணை - இரண்டு. சிவனது அழகிய திருவடி “பொன்னடி” எனப்படுகிறது. அத் திருவடியையே கடலில் ஆழும் தனக்குத் துணையாகக் கருதிக்கொண்டதனால், அஃது ஆழாமல் அவர்க்குத் தெப்பமாய் உயிர் உய்விக்கும் நற்றுணையாயிற்று. தன்னுடலோடு பூட்டப்பட்டது கல்லாயினும், அதனைச் சிவன் திருவடியென்றே கருதிக் கரைந்துருகிப் பாடியதனால், நாவரசர்க்கு அது தெப்பமாய் உயிர்த்துணையாயிற்று. அதனால், “பொன்னடிப் போதினையே நற்றுணையாக் கரையேறிய, நாவரசு” எனப் பரவிப் புகழ்கின்றார். ஆழும் இயல்புடைய கல், கடல் நீரில் மிதந்து உயிர்த் துணையாவது சிவபுண்ணியமாதல் பற்றி, “புண்ணிய நாவரசு” எனப் புகழ்ந்துரைக்கின்றார். கல் துணையாகாமற் போனதை, “கல்துணையாது” என்றார். துணையென்னும் பெயர்ச்சொல், துணையாது என வினயாயிற்று. “துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்” (குறுந். 326) எனவும், “வணர்குரல் வாரி வகைவகுத்து யான் போது துணைப்ப” (அகம். 117) எனவும் வினைப்படுத்துரைப்பது சான்றோர் செய்யுள் மரபு. நெஞ்சம் கல்துணையாம் - நெஞ்சம் கல் போன்றதாம்; என் நெஞ்சம் கல்லினும் கடைப்பட்டது; இதனைப் பூட்டியிருந்தால் கடலில் ஆழ்த்தியிருக்கும் என்றொரு நயம் தோன்றுதல் காண்க.

     நாவரசைக் கட்டிப் பிணித்த கருங்கல்லிற்கில்லாத கடைமை என் நெஞ்சிற்குளது என நொந்து, திருவருட்கு முறையிடுவது இப் பாட்டின் பயனாம் என வுணர்க.

     (132)